Published : 15 Feb 2019 02:53 PM
Last Updated : 15 Feb 2019 02:53 PM

‘‘சின்னதம்பி ஸ்டாப் ஒண்ணு கொடுங்க!’’ - கரும்புக் காட்டுக்குள் சின்னத்தம்பியின் கடைசிநேரம்

சின்னத்தம்பி யானையை மயக்க ஊசி செலுத்தி வெள்ளியன்று பிடித்தது வனத்துறை. ‘யானையை  காயமில்லாமல் பிடிக்க!’ நீதிமன்றம் அனுமதி அளித்ததற்கு அடுத்த நாள் வியாழக்கிழமையே அதற்கான ஸ்பாட்டில் பரபரப்பும் தொற்றிக் கொண்டது. அன்றைய தினமே  உடுமலை மடத்துக்குளத்திலிருந்து கொமரலிங்கம் போற பஸ்ல எக்கச்சக்க கூட்டம். ‘சின்னத்தம்பி ஸ்டாப் ஒண்ணு கொடுங்க!’ என்றுதான் ஜனங்க கண்டக்டரிடம் டிக்கெட் கேட்டார்கள். 

மடத்துக்குளத்திலிருந்து 2 மைல் தூரம். சேம்பர் ஸ்டாப், ச்சீ சின்னத்தம்பி ஸ்டாப். அங்கே கிழக்குமுகமா திரும்பற வண்டிப் பாதையில் திடீர் போலீஸ் தடுப்பு. அங்கே நுழையும்போதே ரொம்ப சூடா இருந்தார் ஓர் ஏட்டய்யா.

‘‘அஞ்சறிவு இருக்கிறதை  கூட சமாளிச்சுக்கலாம்; நாலறிவு கூட அழுகறது இருக்கே, பெரும்பாடு!’’

‘‘என்ன சார் ஆறறிவுதானே, நாலறிவுங்கிறீங்க?’’

‘‘ஆறறிவு இருந்தாத்தான் சொன்னா கேட்குமே, போய்யா, போவியா, எத்தனை கேள்வி, எத்தனை நொட்டை, நொசுக்கு. அஞ்சறிவு பிராணி இப்படியா கேள்வி மேல கேட்ட்டு நிற்குது?!’’

‘‘ஏனுங்க, சின்னத்தம்பியை புடிச்சுட்டாங்களா?’’ கிராமத்துப் பெண்கள் குழு ஒன்று கேட்க, ‘ஆமா புடிச்சு இதுக்குள்ளே வச்சிருக்கேன். வந்து பார்த்துட்டு போ!’’ சட்டைப் பாக்கெட்டை அவர் விரித்துக் காட்ட, ஓட்டம் பிடித்தனர் கேட்ட பெண்கள்.

திரும்பின பக்கமெல்லாம் கரும்புத்தோட்டம். ஆங்காங்கே சின்ன, சின்னதாய் வாழைத்தோப்பு, தென்னந்தோப்பு. நடுவே சின்னதாய் செங்கல் சேம்பர். அங்கே கும்கி யானைகள் கலீமும், மாரியப்பனும் 50 மீட்டர் இடைவெளியில் கட்டி வைக்கப்பட்ட நிலையில்  அங்கிருந்து அரை மைல்.  சின்னத்தம்பி பதுங்கியிருந்த கரும்புக் காடு. ஓயாமல் தண்ணீர் பாயும் வாய்க்கால். அது கொடுக்கும் பசுமைவெளி.

‘‘கோர்ட் ஆர்டர் வந்தது சின்னத்தம்பிக்கு தெரியுமா?’’

‘‘தெரிஞ்சிருக்கும்போல. இல்லீலண்ணா அது எதுக்குண்ணே இன்னேரமாகியும் வெளியே வராம கரும்புக் காட்டுக்குள்ளேயே ஒளிஞ்சிருக்கு?’’

கரும்புக் காட்டுக்குள் இரண்டு கிராமத்தவர்களின் சம்பாஷணை. காலையில் பத்து மணிக்கு தோப்பில் உட்கார்ந்து சாயங்காலம் நாலு மணி வரைக்குமே கூட சின்னத்தம்பியின் கரும்புக் காட்டில் சின்ன அசைவு கூட காணோம். மக்கள் வருகை மட்டும் கூடுதலாகிக் கொண்டேயிருந்தது. குறிப்பிட்ட நேரத்தில் அங்கே வளைந்து நெளிந்து சென்ற வாய்க்கால் ஏரியின் மீது சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் மனித்தலைகள்தான். அவர்களிடமிருந்து திடீரென்று கூச்சல்.

‘‘அதோ தலை தெரியுது... தலைதெரியுது!’’

உற்றுப் பார்த்தால் கரும்புக் காட்டுக்கு நடுவே யானையின் முதுகு மட்டும் தெரிந்தது. மேலும் பதினைந்து நிமிடம் காத்திருப்பு. சல,சலக்கும் கரும்புப் பயிர்கள்.

‘‘வந்துருச்சு.. வந்துருச்சு...!’’

ஒரு வரப்பில் கால்வைத்து கரும்புத் தோகைகளை பிளந்து கொண்டு ஒரு வரப்பின் மீது ஏறி ஒய்யாரமாக நிற்கிறான் சின்னத்தம்பி. வெட்ட வெளியாக தெரியும் வெங்காயப்பயிர் காடு. அங்கே  ஒரு விஐபியை நிற்கிறான். கேமராக்களுக்கு போஸ் கொடுக்கிறான்.

துதிக்கையை தூக்கி ஒரு ஆட்டு. வன ஊழியர் குழு ஒன்று குறுக்கே பாயும் ஜனங்களை விரட்டுகிறது. இரண்டு வனஊழியர்கள் பலாப்பலத்தை வெட்டி, வெட்டி அதன் முன்னே வீசுகிறார்கள். அது சாப்பிட்டுக் கொண்டே அவர்கள் பின்னால் செல்கிறது. அவர்களும் வீசிக் கொண்டே வழிகாட்டுகிறார்கள். பெரிய வாய்க்கால் ஓரம் மேடேறுகிறது. ஐம்பதுக்கும் மேற்பட்ட கேமராக்கள் வெளியில்  பயணம்.

இன்னொரு கரும்புக்காடு. வாழைத்தோப்பு. பிறகு கரும்புக்காடு, அதற்குள் ஒரு வீடு. அடுத்தடுத்து நுழைகிறது.

அங்குள்ள விவசாயிகள், ‘ஆய்.. ஊய்...!’’ கூச்சல் போடுகிறார்கள். பதிலுக்கு ஒரு பிளிறல். 15 நிமிடம் அசைவேயில்லை. பிறகு அந்த கரும்புக் காட்டிலும் பெரிய சல,சலப்பு. வந்த வழியே வெளியே வருகிறான் சின்னத்தம்பி. மிளகாய் நாற்றுக்கள் பயிரிடப்பட்ட நிலம். அங்கே ஒரு பெரிய பாலீதின் சாக்குப்பை. அதை தும்பிக்கையில் தூக்கி வீசுகிறான். ‘பாலீதீன் ஒழிப்பில் கூட விவரமா இருக்கான் பாரேன்!’’ பின்னாலிருந்து ஒரு கிண்டல் குரல். அப்படியே நகர்கிறது சின்னத்தம்பி. அது நடமாடிய இடத்திலிருந்து கிழக்கே, மேற்கே, வடக்கே, தெற்கே என எங்கே திரும்பினாலும் மனிதத்தலைகள்.

‘‘சார் சார், யானை வந்துடுச்சு. எப்ப சார் பிடிப்பீங்க?’’ வன அதிகாரி ஒருவர் முன் மைக்கை நீட்டி கேள்வி கேட்கிறார்கள் மீடியாஸ்.

‘‘யானை வந்துருச்சு. கோர்ட் ஆணை கைக்கு வரலையே!’’ எதுகை மோனையோடு பேசிவிட்டதான நினைப்பில் சிரித்துக் கொண்டு ஜீப் ஏறுகிறார் அதிகாரி.

‘‘சின்னத்தம்பி இதோ வெளியே வந்து விட்டது. மக்களோடு மக்களாக பழகுகிறது. பாகன்கள் அதற்கு பலாப்பழத்தை அரிந்து வைக்கிறார்கள். அது காட்டுயானையை போல அல்லாது, பழகின யானையை போலவே சாப்பிட்டபடி பின்னால் வருகிறது. கனம் கோர்ட்டார் அவர்கள் சின்னத் தம்பியை காயமில்லாமல் பிடிக்கும்படி உத்தரவிட்டிருப்பதால், மயக்க ஊசி செலுத்தாமல், கும்கி வைத்து கும்மாமல் பலாப்பழம் வைத்தே பிடித்து வண்டியில் ஏற்றும் உத்தியில் இருக்கிறார்கள் வனத்துறையினர்!’’ ஏதோ ஒரு சேனலுக்கு செய்தியாளர் லைவ் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

அதைப் பார்த்து ‘‘போட்டோ, எடுத்து எடுத்து டீவியில போட்டுப் போட்டு ஜனங்களை தூங்க விடாம பண்ணீட்டீங்க. இனி எப்பத்தான் தூங்க விடுவீங்களோ!’’ என அங்கலாய்த்துக் கொண்டே சென்றார் ஒரு வழிப்போக்கர்.

‘‘ஐஸ், ஐஸ்.. குச்சி ஐஸ்...!’’

‘‘பால்.. தேங்காய்பால்... பத்துரூபா தேங்காய் பால்...!’’

ஏழெட்டு ஐஸ்காரர்கள். ஒன்றிரண்டு தேங்காய்பால் விற்பவர்கள்.

அதில் தேங்காய்ப்பால் விற்பவரை மடக்கியதில், ‘‘எம்பேரும் சின்னத்தம்பிதானுங்க. 20 வருஷமா தேங்காய்ப் பால் வியாபாரம்தான். உடுமலையில் ஒர்க்ஷாப், மில்லுன்னு போவேன். தினம் ஆயிரம், ஆயிரத்து நூறு ரூபாய் வியாபாரம் ஆகும். ஒர்க் ஷாப்புகள்ல பதினைஞ்சு நாளா ஒரு குஞ்சு இல்லை. ஆணை பாக்க வந்துடறாங்க. அதுதான் நானும் இங்கே வந்துடறேன். அங்கே விட ஜோரா விற்குது. ஒரு நாளைக்கு ஆயிரத்து ஐநூறு ரூவாலிருந்து ரெண்டாயிரம் கூட கிடைச்சுடுது. என்ன சார், இன்னெய்க்கு புடிச்சுருவாங்களா?’’ அவர் கேள்வியில் வருமானம் போய்விடும் சோகம்.

யானை பார்க்க வந்தவர்களில் நிறைய பேர் டாஸ்மாக் சரக்கு பிரியர்களாக இருந்தார்கள்.  நிறையபேர் காட்டிலேயே மட்டையாகிக் கிடந்தார்கள். சிலரோ மட்டையாகத் தயாராக இருந்தார்கள்.

அதிலொருவர், ‘‘எல்லாம் ஏமாத்தறானுக. இது காட்டு யானையே அல்ல. எங்கியோ ஒரு  யானையை பழக்கப்படுத்தி கொண்டுட்டு வந்து கரும்புக் காட்டுல உட்டுட்டு சீன் காட்டறாங்க. அரசாங்கப் பணம் கரியா செலவாகுது!’’ பக்கத்திலிருந்தவரிடம் புலம்பிக் கொண்டிருந்தார்.

கேமராவும் கையுமாக என்னைப் பார்த்ததும், ‘சார், டீவியா, பேப்பரா? எதுல வேண்ணா போடு சார். எப்படி வேண்ணா படம் புடிச்சு ரெக்கார்டு பண்ணிக்கோ. நான் ஸ்டெடியாத்தான் பேசறேன். நீ டீவிக்காரன்தானே? ஒனக்கு தெரியும்ல, சொல்லு. இது உண்மையிலேயே காட்டு யானையா இல்லியா?’’ பிடித்துக் கொண்டார். அவரிடம் விடுபட பார்த்தால், இன்னொரு சரக்குப் பார்ட்டி குறுக்கீடு போட்டார். 

‘‘நாளைக்காவது பிடிப்பாங்களா, மாட்டாங்களா சார்!’’

‘‘காலையில கண்டிப்பா புடிச்சுருவாங்க!’’ இது நான்.

‘‘எப்படி புடிப்பாங்க. அதுதான் கரும்புக்காட்டுக்குள்ளிருந்து சாயங்காலம்தானே வெளியே வருது?’’

‘‘கும்கிய வச்சு, உள்ளே போய் மயக்க ஊசி போட்டு..!’’ என நான் நீட்டி முழங்குவதற்குள் கப,கபவென சிரித்தார் ‘காட்டு யானை அல்ல’ என்ற சரக்கு பார்ட்டி.

‘‘அட போய்யா...அதுக கும்கிகளா? பேடிக. முந்தா நாள் பார்த்துக்கணும்.  அதை கரும்புக் காட்டுக்குள்ளேயிருந்து வெளியே விரட்டப் போய், அது முட்டுன முட்டுல தலை தெறிக்க ஓடி வந்து  சேம்பர்ல நின்னதுதான். இப்பவும் சின்னத்தம்பின்னு பேரைக் கேட்டாலே அதுகளுக்கு (கும்கிகளுக்கு) தொடையெல்லாம் கிடு, கிடுன்னு நடுங்குது. அதுக இதை விரட்டி, ஊசி போட்டு...ம்... ஒண்ணு சொல்றேன் கேளுங்க. இந்த யானை கொண்டு போய் திரும்ப காட்டுக்குள்ளே விட்டாலும் அங்கிருக்காது. நேரா எங்கூரை தேடித்தான் வரும்பாருங்க. ஏன்னா எங்கூரு கரும்புக்கு அத்தனை ருசி’’

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x