Last Updated : 15 Feb, 2019 03:59 PM

 

Published : 15 Feb 2019 03:59 PM
Last Updated : 15 Feb 2019 03:59 PM

ஆண்களுக்காக 6: அவள் அப்படித்தான் இருக்க வேண்டுமா?!

அந்தப் பெண்ணுக்கு நடுத்தர வயதுதான் இருக்கும். பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலின் எஸ்-8 பெட்டிக்குள் புன்னகையோடு ஏறியவர் அங்கிருந்த சிலரிடம் குதூகலமாக பேச்சுக் கொடுத்தார். உறவினர்கள் போலும். அவரைப் பார்த்தவுடன் 10-க்கும் மேற்பட்ட படுக்கைகளில் இருந்தவர்கள் அவர் பெயரைச் சொல்லி இன்முகத்துடன் நலம் விசாரித்தனர். சாப்பிட்டாச்சா? இட்லி, தக்காளி சட்னி இருக்கு சாப்பிடுகிறாயா? என்றெல்லாம் உபசரித்தனர். சம்பாஷணைகள் தொடர்ந்தன.

அவர்கள் உரையாடலில் இருந்து அந்தப் பெண்மனியின் கணவர் சில மாதங்களுக்கு முன்னர்தான் தவறியிருந்தார் என்பதும் அந்தப் பெண் அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார் என்பதும் தெரிந்தது.

அரை மணிக்கும் மேலாக சிரிப்பும், சில விசாரிப்புகளுமாக அந்தப் பக்கம் சலசலக்க சக பயணிகள் படுக்கைகளை கீழ் இறக்கி தூங்க ஆயத்தமாகினர். அந்தப் பெண்ணும் விடைபெற்றார்.  எனது கோச் டி-6 என்று சொல்லிக்கொண்டே அவர் அங்கிருந்து நகர ரயிலில் இருந்த அவரது உறவினர்கள் சிலர் "எப்பவும் போலவே பொட்டு வைத்துக்கொண்டு இருக்கிறதப்பாரேன்? என்றனர். அவ்வளவு நேரம் அன்பாகப் பேசியவர்களா இப்படி எனத் தோன்றிற்று. என்னால் திரும்பாமல் இருக்க முடியவில்லை. அதனால் அந்த முகங்களை திரும்பிப் பார்த்தேவிட்டேன். அது சமூகத்தின் முகம். ஆணாதிக்கம் இயல்பாக விதைப்பட்ட சமூகத்தின் முகம்.

இந்த சமூகம் பெண்கள் மீது நிறைய கற்பிதங்களைப் புகுத்தி வைத்திருக்கிறது. ஏதோ ஒரு காலகட்டத்தில் ஆணாதிக்க சிந்தனை கொண்ட ஆண் அதனை உருவாக்கியிருந்தாலும்கூட அதை வழிவழியாகக் கொண்டு செல்வதில் இப்படிப்பட்ட சில பெண்களின் பங்களிப்பும் இருக்கிறது என்பது வெட்கத்துக்குரியது.

இப்படி சமூகத்தில் பெண்கள் மீது ஏகப்பட்ட கற்பிதங்கள் இருக்கின்றன. ஒரு பெண் என்ன சாப்பிட வேண்டும்? எப்படி சாப்பிட வேண்டும்? அவள் எதை அணிய வேண்டும்? தொடங்கி அவள் மறுமணம் வரை சமூகம் மூக்கை நுழைத்துக் கொண்டேதான் இருக்கிறது. அவள் முற்போக்காக பேசினால் நடந்தால் உடனே அவளை குற்றப்படுத்திப் பார்க்கிறது ஆண் சமூகம். அவள் அப்படித்தான் இருக்க வேண்டும் என்று நிர்பந்தித்துக் கொண்டே இருக்கிறது.

அப்படிப்பட்ட நிர்பந்தங்கள் சிலவற்றைப் பற்றி உங்களோடு பேச விரும்புகிறேன்.

அவள் அப்படித்தான் சாப்பிட வேண்டுமா?

சமீபத்தில் ஒரு செய்தியைப் படித்தேன். துருக்கியில் உள்ள நகரம் ஒன்றில், பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இரண்டு மாதம் பயிற்சி வகுப்பை நடத்தியது செய்தி அது. பயிற்சி வகுப்பைவிட அதில், பெண்கள் இனி ஐஸ்க்ரீமை நாக்கால் சாப்பிடக்கூடாது என்று விதிமுறை விதித்தது கோபத்தைக் கிளர்வதாக இருந்தது.

சக மனிதி எப்படி நடக்க வேண்டும் என்று பாடம் எடுப்பதே தவறு அதில் இப்படி கட்டுப்பாடு விதிப்பது கொடூரம். அவள் எதை செய்தாலும் குற்றப்படுத்தும் மனப்பான்மை இந்த ஆண்களுக்கு எங்கிருந்து வருகிறது?!

 

 

ஆனால், துருக்கியின் பெண்கள் அமைப்புகள் இதைக்கேட்டு தலையாட்டி சென்றுவிடவில்லை. நாங்கள் ஐஸ்கிரீமை எப்படி சாப்பிட வேண்டும் என்று கூற நீங்கள் யார்?  நாங்கள் எப்படி இருகிறோமோ அப்படியே எங்களை ஏற்றுக் கொள்ளுங்கள்.. என்று குரல் எழுப்பியுள்ளனர்.

சரியான கோஷம்தானே! அவள் எப்படி சாப்பிட வேண்டும் என ஏன் நீங்கள் முடிவு செய்கிறீர்கள்?

அவள் தனித்துதான் இருக்க வேண்டுமா?

இன்னொரு செய்தி, ராதிகாவின் மகள் ரயான் பதிவு செய்த ட்வீட் தொடர்பானது. ராதிகா, சரத்குமார், ரயான், அவரது மகன் என குடும்ப சகிதமாக புன்னகைக்கும் அந்த புகைப்படம் சில வக்கிர மனங்களுக்கு இரையானது பற்றியது.

அந்தப் புகைப்படத்துக்கு வக்கிரபுத்திக்காரர் ஒருவர் விளக்கம் கொடுத்திருந்தார். அதில்.. "சரத்குமார் தனது இரண்டாவது பொண்டாட்டியின் முதல் புருஷனின் மகளோட பையனோடு ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறார்" என்று பதிவிட்டிருந்தார். அந்தப் படம் ட்ரோல் செய்யப்பட, விதவிதமான விமர்சனங்கள் வக்கிர வார்த்தைகள் தாக்கத் தொடங்கியிருந்தன.

 

 

அந்த வேளையில் சரியாக சாட்டையை சுழற்றினார் ரயான்.

"பொதுவாக இது போன்ற ட்ரோல்களை எதேச்சையாக கவனித்தால்கூட அவற்றை நான் இரண்டாவது முறையாக பார்ப்பதில்லை.

இதுபோன்று நிறையவே வந்துவிட்டன. நான் சிறு பிள்ளையாக இருந்தபோதே இத்தகைய விமர்சனங்களை சந்தித்துவிட்டேன். அது என் கல்யாணத்தின்போதும் நீண்டது. இப்போது, எனக்கு குழந்தை பிறந்திருக்கிறது. இப்போதும் அதையே சொல்கிறார்கள். இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்.

ஒரு திருமண பந்தத்தை முறித்துக் கொண்டு வெளியேற நிறையவே சுயமரியாதையும், துணிச்சலும் தேவைப்படுகிறது. அதுவும் கைக்குழந்தையுடன் அத்தகைய பந்தத்தை முறித்துச் செல்வது என்பது எளிதானதல்ல. அதற்கு தன்னம்பிக்கை அதீதமாகத் தேவைப்படுகிறது. அத்துடன் மனத்திடமும் தேவைப்படுகிறது.

ஒரு தொழிலை அடிமட்டத்திலிருந்து கட்டமைத்து அதை வெற்றிகரமாக தொழிலாளாக மாற்றிய என் தாய் ஒரு சூப்பர்வுமன்.

அதேபோல் எல்லா ஆணும் பிள்ளை பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் அடுத்தவர் குழந்தையையும் தன் குழந்தையைப் போலவே பாசம் காட்டி வளர்க்க உண்மையான ஆணால் மட்டுமே முடியும். அவர்தான் எனது தந்தை.

என் தாய் வேண்டும் என்றால் என்னையும் சேர்த்தே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிர்பந்தத்தில் ஒரு பேக்கேஜ் டீல் போல் அவர் என்னை ஏற்கவில்லை. அவரது கண்களில் நான் எப்போதுமே சுமையாகத் தெரிந்ததில்லை. மாறாக அவர் கண்களில் நான் போனஸாகத் தெரிந்தேன். ஒரு வலிமையான ஆண்மகனால் தான் அப்படி எண்ண முடியும்.

பந்தம் என்பது யாருடைய டிஎன்ஏ, யாருடன் சேர்க்கப்பட்டிருக்கிறது என்பதல்ல அது முற்றிலும் அன்பால் நிறைந்தது. உறவுக்குத் தரும் உத்திரவாதத்தால் நிறைந்தது. எல்லாமே தவறாகும்போது நான் இருக்கிறேன் என்று துணை நிற்றலில் இருக்கிறது.

குடும்பம் என்பது எப்போதும் ரத்த பந்தம் சார்ந்ததாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. உங்களை தனது சொந்தமாக ஏற்றுக்கொண்டு உங்களது மகிழ்ச்சியை உறுதி செய்ய தன்னை முழுமையாக அர்ப்பணித்து என்ன நடந்தாலும் உங்கள் மீது அன்பை செலுத்தும் உறவுகள் நிறைந்ததே குடும்பம். நாங்கள் அப்படிப்பட்ட உணர்வால் ஒன்றிணைந்த குடும்பம். நாங்கள் மகிழ்ச்சியாகவும் உறுதியாகவும் இருக்கிறோம்.

அதனால், என்னை இப்படி கலாய்க்கும் ட்ரோல்களே ஒருநாள் நீங்கள் உங்கள் பாதுகாப்பற்ற உணர்விலிருந்து மீண்டு வெறுப்புக்குப் பதிலாக அன்பை பரப்புவீர்கள் என்று நினைக்கிறேன்" எனப் பதிவிட்டார்.

அடுத்தவரை ட்ரோல் செய்வதற்காகவே மீம்களை உருவாக்கும் அளவுக்கு நேரத்தை சேமித்து வைத்திருப்பவர்களுக்கு ஒரு சவுக்கடியோடு தனது ட்வீட்டை ரயான் முடித்திருந்தார்.

ரயானின் பதிலால் பதறிப்போன விரல்கள், வக்கிரத்தைப் பரப்ப கீபோர்டை நாடிய கைகள் எல்லாம் வாய் மீது விரல் வைத்து நகர்ந்து போயின.

முதன்முதலில் இந்த ட்வீட்டை நான் மொழிபெயர்த்தபோது அவ்வளவு ரசித்தேன். காரணம் ரயானின் ஒவ்வொரு வார்த்தையும் மனமுதிர்ச்சியின் சாட்சி. அவரது வார்த்தைகள் ஆணாதிக்க மனோபாவத்தை நிர்வாணமாக்கியிருந்தன. உண்மையான ஆண்மகன் என்று தனது தந்தை சரத்குமாருக்கு அவர் வழங்கியிருந்த நற்சான்றிதழ் ஆணாதிக்க சமூகத்துக்கு அவர் கற்றுக்கொடுக்க முற்படும் பாடம். மனமிருந்தால் கற்றுக்கொள்ளுங்கள்.

மறுமணம் என்பது ஆணுக்கு மட்டுமே உரித்தான சுதந்திரம் அல்ல என்பதை தோலுரித்துக் காட்டியிருக்கின்றன ரயானின் வார்த்தை தெரிவுகள். துணிவிருந்தால் அதனை அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள்.

பிப்ரவரி 14 அன்றுகூட அதே படத்தைப் பகிர்ந்துதான் அன்பின் வாழ்த்துகளை ரயான் பகிர்ந்திருந்திருக்கிறார்.

ஆனால் இந்த சமூகம் அவ்வளவு எளிதாகத் திரிந்திவிடுமா என்ன? அவரை டிஸ்சார்ஜ் செய்துவிட்டு இவரை அட்மிட் செய் என்ற மனோபாவத்திலிருக்கும் நெட்டிசன்களுக்கு கிடைத்தது சவுந்தர்யா ரஜினிகாந்தின் திருமணம்.

வாழும் சாட்சி ரஜினிகாந்த்

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கையிலிருக்கும் மெஹந்தியை மகனிடம் காட்டி ரசிக்கும் சவுந்தர்யாவின் புகைப்படம் மறுமணம் செய்து கொள்ளத் தயங்கி துவண்டு கிடக்கும் பெண்களின் வாழ்க்கைக்கு அர்த்தம் தரும் சாட்சி.

திருமண அழைப்பிதழை தேடித் தேடிச் சென்று கொடுத்து, மகளை ஆரத் தழுவி நிற்கும் தந்தை ரஜினிகாந்த், உங்கள் மகளோ, சகோதரியோ தன் மண வாழ்வில் ஏற்பட்ட கசப்பனுபவத்தால் தனித்து நின்றால் அவரை அப்படியே வெம்பவிடாமல் மறுவாழ்வு அமைத்துத்தரும் தூணாக இருங்கள் என்று ஆண்களுக்கு வாழும் சாட்சியாக நிற்கும் அடையாளம்.

 

 

ஆனால், அப்படி ஒரு பரந்துபட்ட பார்வை நம் சமூகத்தில் இன்னும் வரவில்லை.

இரண்டாவது கல்யாணத்துக்கு இப்படி அழைப்பு தேவையா? இவ்வளவு பணம் செலவழிக்க வேண்டுமா? இப்படியொரு பிரம்மாண்டம் தேவையா? என்றெல்லாம் குற்றப்படுத்திக் கொண்டிருக்கும் சமூகமாகவே இருக்கிறது. மறுமணம் நோக்கி சிந்திக்கும் பெண்களை குற்ற உணர்ச்சிக்கு உள்ளாக்கும் சமூகமாகவே இருக்கிறது. இதில் ஆண்களுக்குப் பெரும் பங்கிருக்கிறது.

அவள் அப்படித்தான் படத்தில் ஸ்ரீபிரியா ஒரு வசனம் பேசுவார். தன்னைப் பற்றி புறம்பேசுபவர்களை "பாத்ரூம் சுவரில் எழுதும் கோழைகள்" எனத் திட்டுவார்.

 

 

இங்கே சமூகவலைதளங்களில் வாய்க்கு வந்தபடியெல்லாம் வசைபாடுபவர்களையும் மஞ்சு (ஸ்ரீபிரியா) திட்டியதுபோல் கோழைகள் என்றே திட்டத் தோன்றுகிறது.

"என்னுடைய இந்த நிலைமைக்கு நான் காரணமல்ல நான் இந்த நிலைமைக்கு விரட்டப்பட்டிருக்கிறேன்" என்று ஆதங்கப்படும் அளவுக்கு மஞ்சுக்களை சமூகம் உருவாக்கியிருக்கிறது. எத்தனை எத்தனை மஞ்சுக்கள் ஆண்களால் மட்டுமே பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்பதை ஆவணப்படுத்த முயன்றால் தினமும் ஒரு அவள் அப்படித்தான் எடுக்கலாம்.

அவள் ஒல்லியாக வெண்ணிற மேனியுடன் அழகாக மட்டும்தான் இருக்க வேண்டுமா?

அவளைக் குற்றப்படுத்திக் கொண்டே இருக்கும் சமூகம் அவள் உடல் வாகும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற போலி பிம்பத்தை உருவாக்கி வைத்திருக்கிறது.

அதற்கான சான்றுதான் அண்மையில் கேரளாவில் நடந்த சம்பவம். ''பெண்ணின் வயது 48. ஆணின் வயது 25. பெண்ணின் சொத்து மதிப்பு ரூ.25 கோடி, 101 சவரன் தங்கம், 50 லட்ச ரூபாய் ரொக்கம்.. இன்னும் இருக்கிறது.. நம்முடைய செருபுழாவில் நடைபெற்ற கல்யாணம்'' என்று வாட்ஸ் அப்பில் நீங்கள் பரப்பிய வதந்தி கன்னூரைச் சேர்ந்த அனூப் செபாஸ்டின் (29), ஜூபி ஜோசப் (27) புதுமணத் தம்பதியின் மனதை சுட்டுப் பொசுக்கியிருக்கிறது. அவர்கள் இருவரும் போலீஸில் புகார் செய்திருக்கின்றனர்.

 

 

பெண்ணானவள் இப்படித்தான் நடக்க வேண்டும், குரலை உயர்த்திப் பேசக் கூடாது, இந்த ஆடைதான் அணிய வேண்டும், இதைத்தான் சாப்பிட வேண்டும், மறுமணம் செய்யக் கூடாது, கணவரை இழந்தால் பொட்டுவைக்கக் கூடாது, திருமணச் சந்தைக்கான தன் உடலை அழகாகப் பேண வேண்டும் என்ற கட்டுக்குள் அடைத்து கலாச்சாரக் காவலர்கள் பதாகையை தூக்கிப் பிடிக்காதீர்கள் ஆண்களே.

அப்படி கலாச்சார காவலர்களாக அடையாளப்படுத்தும் ஆண்களுக்கு அடிமைப்பட்டு அவர்கள் தவறான கருத்தியல்களை உள்வாங்கி சக மனிதிக்கு எதிரானவராக நீங்கள் திருப்பப்படும் சூழலுக்குள் சிக்கி விடாதீர்கள் பெண்களே.

புரிதலும் நேர்மையும் இல்லை..

பெண்களை இப்படிப்பட்ட கற்பிதங்களுக்குள் புகுத்தும் அவர்களைக் குற்றப்படுத்திக் கொண்டே இருக்கம் ஆண்களின் மனோபாவம் பற்றி சமூக செயற்பாட்டாளர் ஓவியாவிடம் கருத்து கேட்டோம்.

பெண்கள் பற்றிய புரிதல் இல்லாமையும் பெண்ணியம் கடைபிடிக்கும்போது நேர்மை இல்லாமையுமே இதற்குக் காரணம் என்கிறார் ஓவியா.

"இன்றைய காலகட்டத்தில் ஆண்களின் மனோபாவம் மாறியிருக்கிறது. மாற்றமே இல்லை மறுக்க முடியாது. ஆனால் இந்த மாற்றம் விரல்விட்டு எண்ணும் அளவுக்கு இல்லாமல் மிகப்பெரிய சமூக மாற்றமாக உருவெடுக்க வேண்டும்.

 

 

மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்பதற்கு மகளின் மறுமனத்தை பிரம்மாண்டமாக நடத்திக் காட்டிய ரஜினிகாந்த் ஒரு நற்சான்று. ஆனால், இந்திய சமூகத்தில் இந்த மாற்றம் பரவ வேண்டும் என்றால் அது வீட்டிலிருந்துதான் ஆரம்பிக்க வேண்டாம். ஆனால் ஆண் பிள்ளைகளுக்கு அம்மா தோழியாவதில்லை. அம்மாவின் கழுத்தைக் கட்டிக்கொண்டு கொஞ்சும் பருவம் கடந்தவுடனேயே ஆண்பிள்ளைகள் அந்நியப்பட்டு விடுகிறார்கள். அதற்குப் பின் அம்மா என்பவர் சேவை செய்பவராக மட்டுமே இருக்கிறார். வளர்ந்த பின்னர் ஆண்பிள்ளைகளை தங்கள் முடிவுகளை அப்பாக்களைப் பார்த்தே வடிவமைக்கின்றனர். அப்படித்தான் ஆணாதிக்க மனோபாவம் தலைமுறை வழியாக ஊடுருவுகிறது.

பெண்ணினத்தின் உரிமைகளைப் பேண பெண்கள்தான் முன்னெடுப்புகளை செய்ய வேண்டும். அதை குடும்பத்திலிருந்தே செய்யத் தொடங்கலாம். மகனுக்கு பெண் சிநேகிதியாக வேண்டும். அங்கு புரிதல் ஏற்படும். புரிதலில் இருந்து மாற்றங்கள் தொடங்கும்.

இது ஒருபுறம் இருக்க பெண்ணியத்தில் நேர்மையின்மையும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. சவுந்தர்யாவின் திருமணத்தை திருமணம் என்று கவுசல்யாவின் திருமணத்தை மறுமணம் என்று பார்க்கும் சிலர் பெண்ணியத்தில் அறமற்றவர்களாக இருக்கிறார்கள். இரண்டையுமே திருமணம் எனச் சொல்லியிருக்கலாம். அல்லது இரண்டையுமே மறுமணம் என சொல்லியிருக்கலாம். இப்படியான அறமற்ற பார்வை பெண்ணியத்திற்கு சறுக்கல் ஏற்படுத்தும்.

எனக்கு முழு மதிப்பு கொடுக்கும் பெண்ணியம் பேசும் சில ஆண்கள்கூட மாற்று கட்சிப் பெண்களை தரக்குறைவாக பேசும் மனோபாவம் நேர்மையற்றதுதானே.

புரிதலும் நேர்மையும் ஏற்படும்போது பெண்களை இப்படி ட்ரோல் செய்யும் மனோபாவங்கள் மாறும்" என்று நம்பிக்கையைப் பதிவு செய்தார் ஓவியா.

முழுவானில் ஒரு பாதி..

முழுவானில் ஒரு பாதி.. 'அவள் அப்படித்தான்' படத்தில் கமல்ஹாசன் எடுக்கும் ஆவணப்படத்துக்கு அவர் சூட்டியிருக்கும் பெயர்தான் இது. அந்த தலைப்புக்கு கமல் ஒரு விளக்கமும் கொடுத்திருப்பார். "ஜன சமுதாயம் ஒரு ஆகாயம்னா அதுல பாதி பெண்கள்" என்று கூறியிருப்பார்.

இதை ஒட்டுமொத்த ஆண் சமூகமும் எப்போது உணர்ந்து கொள்கிறதோ அப்போது அவள் அப்படித்தான் இருக்க வேண்டும் என்று யாரும் கட்டளையிடமாட்டார்கள். அவளுடைய சுதந்திரத்தை யாரும் அவளுக்கே தானமாகத் தரத் தேவையில்லாத நிலை உருவாகும்.

- தொடர்புக்கு: bharathi.p@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x