Last Updated : 04 Feb, 2019 05:32 PM

 

Published : 04 Feb 2019 05:32 PM
Last Updated : 04 Feb 2019 05:32 PM

ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருமானத் திட்டம்: ராகுலின் வாக்குறுதி சாத்தியமாகுமா?

“காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், நாட்டின் கிராமப்புறங்களில் உள்ள ஏழைகளுக்குக் குறைந்தபட்ச வருமானத்தை உறுதி செய்யும் திட்டத்தைச் செயல்படுத்துவோம்”கடந்த வாரம் சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட இந்த அறிவிப்புதான் இப்போது நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது, முக்கியத்துவம் பெற்று பேசு பொருளாக மாறியுள்ளது.

பாஜக சார்பில் பொருளாதார ரீதியாகப் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் அஸ்திரம் விடப்பட்ட பின், அதற்குப் போட்டியாக பிரியங்கா காந்தியை காங்கிரஸ் கட்சி களமிறக்கியது. பட்ஜெட்டில் மக்களைக் கவரும் வகையில் பல புதிய அறிவிப்புகளை, கவர்ச்சித் திட்டங்களை பாஜக அரசு அறிவிக்கும் என்பதால் முந்திக்கொண்ட ராகுல் காந்தி, கிராமப்புற ஏழைகளுக்கு வருமானத்தை உறுதியளிக்கும் திட்டத்தை முன்மொழிந்தார்.

இந்த திட்டம் ஒன்றும், காங்கிரஸ் கட்சிக்கு புதிதானது அல்ல, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தேர்தலில் போட்டியிட்ட காலத்தில், 1960களில் கரீபி ஹடாவோ(வறுமையை ஒழிப்போம்) என்ற முழக்கம் எழுந்தது செயல்பாட்டுக்கு வரவில்லை. இப்போது ராகுல்காந்தி மூலம் மீண்டும் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

உண்மையில் இந்தத் திட்டத்தின் மூலாதாரம் பிரேசில் நாடுதான். பிரேசில் நாட்டின் அதிபராக இருந்த லூலா டி சில்வா(2003-2010) அந்நாட்டில் வறுமையை ஒழிக்க “போல்ஸா ஃபேமிலா”(Bolsa Famila)என்ற பெயரில் திட்டத்தைக் கொண்டுவந்தார். ஏழ்மையை ஒழிக்கக் கொண்டுவரப்பட்ட இந்தத் திட்டத்தில் முழுக்க பெண்களை மையமாக வைத்து, அவர்களின் வங்கிக்கணக்கிற்கு நேரடி பணப்பரிமாற்றம் செய்யும் திட்டமாகும்.

இந்த திட்டத்தின்படி நிதியுதவி பெறும் ஏழைக் குடும்பத்தில் குழந்தைகள் இருந்தால், குழந்தைகள் கட்டாயம் பள்ளிக்கூடம் செல்ல வேண்டும், நோய்த் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், பள்ளிப்படிப்பைப் பாதியில் நிறுத்தினால் உதவித்தொகை நிறுத்தப்படும். இந்த போல்ஸா ஃபேமிலா திட்டம் பிரேசில் நாட்டில் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு நாட்டில் வறுமையைப் பெருமளவு குறைக்கப் பயன்பட்டது.

உலக அளவில் இந்தத் திட்டம் பேசப்பட்டது, அதிபராக லூலா டி சில்வா 2-வது முறை தேர்வு செய்ய உதவியது. இந்த திட்டத்தைப் பார்த்துதான் மெக்சிகோ, கனடா, வங்கதேசம், பின்லாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளில் செயல்படுத்தப்பட்டது. இதில் தோல்வியும் உண்டு, வெற்றியும் உண்டு.

இந்தத் திட்டத்தின் பிரதிபலிப்பாகக் கடந்த 2016-17ம் ஆண்டு பொருளாதார ஆய்வறிக்கையில் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் ஏழைகளுக்கு வருமானத்தை உறுதியளிக்கும் இந்தத் திட்டத்தை அறிவித்தார். அப்போது இந்தத் திட்டத்தின் சாத்தியங்கள் ஆலோசிக்கப்பட்டு அத்துடன் நின்றுவிட்டது.

“டேக் ஆப் பொஷிசன்” என்று சொல்லக்கூடிய வளர்ச்சிப்பாதையை நோக்கி நம்நாடு இருக்கும்போது வறுமையை ஒழிக்க காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி முன்னெடுத்துள்ள இந்த அறிவிப்பு அந்த கட்சியினர் மத்தியில் வரவேற்கப்பட்டாலும். திட்டத்தின் சாத்தியங்கள்தான் மலைப்பாக இருக்கின்றன.

இந்தத் திட்டம் குறித்து ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் ஆய்வு நடத்தி இதை அறிக்கையாக அரவிந்த் சுப்பிரமணியன் வெளியிட்டுள்ளார். “குவாசி-யுனிவெர்சல் ரூரல் இன்கம்: தி வே பார்வர்ட்”( "Quasi-Universal Basic Rural Income (QUBRI): The Way Forward" ) என்ற தலைப்பில் இந்த அறிக்கை குறித்து ஆங்கில நாளேடு ஒன்றில் செய்தி வெளியானது.

இந்த அறிக்கையின் முக்கிய அம்சம், நாட்டில் உள்ள 75 சதவீத கிராமப்புற ஏழைக் குடும்பத்தினருக்கு மாதந்தோறும் ரூ.1500 அல்லது ஆண்டுக்கு ரூ.18 ஆயிரம் வரை குறைந்தபட்ச வருமானமாக வழங்க முடியும். இந்தத் திட்டத்துக்குத் தோராயமாக ரூ.2.34 லட்சம் கோடி, அதாவது ஜிடிபியில் 1.3 சதவீதம் செலவாகும். இந்த திட்டத்தில் பயனாளிகளைக் குறைக்கும்போது குடும்பத்துக்கு ரூ.25 ஆயிரம் வரை ஆண்டுக்கு வழங்க முடியும் என்று அரவிந்த் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டத்துக்கு தேவையான நிதியை ரிசர்வ் வங்கியிடம் இருந்து பெறத் தேவையில்லை. மாறாக மத்திய அரசு தற்போது செயல்படுத்தி வரும் திட்டங்களை ஒருங்கிணைத்தல், அல்லது படிப்படியாகக் குறைத்தல் மூலம் பெற முடியும் என்கிறார். பயிர்க்கடனுக்கான வட்டி தள்ளுபடி (ரூ.15 ஆயிரம் கோடி), பசல் பிமா யோஜனா (ரூ.11 ஆயிரம் கோடி),கூடுதல் ஆதார விலைத் திட்டம் (ரூ.10 ஆயிரம் கோடி), உரமானியம் (ரூ.70 ஆயிரம் கோடி) ஆகியவற்றை ஒருங்கிணைக்கும்போது, குடும்பத்துக்கு ரூ. 6 ஆயிரத்தை வழங்க முடியும். மேலும், மாநில அரசின் பங்களிப்பு, மத்திய அரசின் கூடுதல் நிதி அளிப்பு ஆகியவை மூலம் ரூ.18 ஆயிரம் வரை வழங்க முடியும் என்கிறார்.

அரவிந்த் சுப்பிரமணியன், கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழைக் குடும்பங்களுக்கு மட்டும்தான் இத்திட்டம் என்று தனது அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். அப்படியென்றால், நகர்ப்புறங்களில் வசிக்கும் ஏழைக் குடும்பங்களின் அடிப்படை வருமானத்துக்கு என்ன செய்வது என்கிற கேள்வி எழுகிறது. கிராமப்புறங்களில் உள்ள ஏழைகளுக்குச் செலவிட ரூ.2.64 லட்சம் கோடி செலவாகும் என்றால், நகர்ப்புறங்களைச் சேர்க்கும் போது, அது மிகப்பெரிய திட்டமாகவும், மிக அதிக செலவு பிடிக்கும் திட்டமாகவும் மாறும்.

மக்களை எஜமானர்களாகக் கொண்ட குடியாட்சி நிலவும் நம்முடைய தேசத்தில் வளங்களைச் சரி சமமாக பிரித்துக்கொடுக்க வேண்டியது ஆளும் அரசின் கடமை. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக நாட்டில் ஏழைகளுக்கும், பணக்காரர்களுக்கும் இடையிலான இடைவெளி தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.

’இந்தியாவின் 50 சதவீத சொத்துகள் 9 கோடீஸ்வரர்களிடம் மட்டும் இருக்கின்றன, 10 சதவீத கோடீஸ்வரர்கள் 77 சதவீத சொத்துகளை வைத்துள்ளனர். இந்தியாவில் கோடீஸ்வரர்களுக்கு அளிக்கப்படும் வரிச்சலுகைகள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதும், ஏழைகள் ஆண்டுக்கு ஆண்டு இன்னும் ஏழைகளாக மாறி வருவதும் அதிர்ச்சி அளிக்கிறது. இது ஆரோக்கியமானதல்ல’ என்று உலகப் பொருளாதார மாநாட்டில், ஆக்ஸ்ஃபாம் எச்சரித்துள்ளது.

ஆக நாட்டின் வளங்கள் ஒரு சாரருக்கு மட்டும் தொடர்ந்து ஒதுக்கப்பட்டு, மற்ற தரப்பினர் தொடர்ந்து புறக்கணிக்கப்படும் நிலையால்தான் இந்த ஏற்றத்தாழ்வு அதிகரித்து, ஏழ்மையும் வளர்ந்து வருகிறது. ஆதலால் வறுமை ஒழிப்புதற்கும், அடித்தளத்தில் இருக்கும் மக்களைக் கை தூக்கிவிட இதுபோன்ற திட்டம் தேவைதான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

அதேசமயம், தேசம் சுதந்திரமடைந்து 50 ஆண்டுகள் வரை காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது, பல்வேறு அரசியல் கட்சிகள் ஆட்சி செய்தன. ஆனால் இன்னும் நாட்டில் வறுமையை ஒழிக்க ஸ்திரமான நடவடிக்கைகளை போதுமான அளவில் எடுக்காமல், மக்களை இன்னும் உதவித் தொகை பெற வைத்துள்ளதும் விமர்சனத்துக்குரியதுதான்.

முற்றிலும் அரசைச் சார்ந்து வாழ்பவர்களாக மக்களை மாற்றாமல், அவர்களை தற்சார்பு உள்ளவர்களாக எப்போது அரசியல் கட்சிகள் மாற்றப் போகிறார்கள்? ஆண்டுக்கு ஆண்டு நாட்டில் வேலையின்மை தொடர்ந்து அதிகரித்து வருகிறது, வேலையின்மை அளவைக் குறைக்க என்ன திட்டங்களை அரசியல் கட்சிகள் முன்வைக்கப் போகிறார்கள் என்பது அரசியல் விமர்சகர்களின் கேள்வியாக இருக்கிறது.

உதவித் திட்டங்களையும், மானியங்களையும் நம்பி இருக்கும் சூழலில் இருந்து மக்களை மீட்டெடுக்க வேண்டியது ஆள்பவர்களுக்குரிய பொறுப்புகளில் பிரதானமானது. எதிர்காலத்தில் வேலையின்மை என்பது மிகப்பெரிய சிக்கலாக எழும், அதைத் தீர்க்க மாற்று வழிகளை அரசியல் கட்சிகள் முன்வைக்க வேண்டும்.

விவசாயம் லாபகரமான தொழிலாக இல்லை எனக் கருதி அதில் இருந்து விவசாயிகள் வெளியேறி வேறு தொழிலுக்குச் செல்வது அதிகரித்து வருகிறது. அதைத் தடுத்து விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்றி, விவசாயம் சார்ந்த வேலைவாய்ப்புகளை உருவாக்க என்ன திட்டங்கள் இருக்கின்றன?

மக்கள் மானியங்களையும், உதவித் திட்டங்களையும் அறிவிப்பதாகக் கூறும் அரசியல் கட்சிகள் அதைத் தொடர்ந்து தங்கள் வாக்கு வங்கிக்காக, தேர்தல் நேரத்தில் அளிக்கும் கவர்ச்சி வாக்குறுதிகளாக இருக்கின்றன என்ற விமர்சனமும் அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் முன்வைக்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x