Last Updated : 14 Nov, 2018 07:29 PM

 

Published : 14 Nov 2018 07:29 PM
Last Updated : 14 Nov 2018 07:29 PM

மீண்டும் ஒரு ‘96’ கதை!

தலைப்பைப் படித்ததும் மீண்டும் ஒரு காதல் கதையோ என்று நினைத்துவிடாதீர்கள். இது அரசியல் கூடல் கதை. ஆந்திராவுக்கும் தேசிய அளவிலான அணி உருவாக்கத்துக்கும் தொடர்பைச் சொல்லும் கதை.

பல்வேறு காலகட்டங்களில் தேசிய அளவில் அணிச் சேர்க்கைகளின் தொடக்கப் புள்ளியாக ஆந்திராவே இருந்திருக்கிறது. முப்பது ஆண்டுகள் தேசிய அரசியல் வரலாற்றில் ஆந்திராவை மையப்படுத்தி உருவான கூட்டணிகள் இரண்டு முறை மத்தியில் ஆட்சி அமைக்கும் அளவுக்கு உயர்ந்திருக்கின்றன.

முதன் முறையாக 1989-ம் ஆண்டில்தான் தேசிய அளவில் ஓர் அணிக்கு அச்சாரமிடப்பட்டது. அன்றைய காலத்தில் அசுர பலத்துடன் இருந்த ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸை எதிர்க்க இந்த அணி உருவானது. ‘தேசிய முன்னணி’ என்ற பெயரில் உருவான இந்தக் கூட்டணியை அன்றைய தெலுங்கு தேசக் கட்சித் தலைவரும் ஆந்திர முதல்வருமான என்.டி. ராமாராவ்தான் முன்னெடுத்தார். போர்ப்ஸ் ஊழல், விபிசிங்கின் எழுச்சி ஆகியவற்றை மையப்படுத்தி அகில இந்திய அளவில் என்.டி. ராமாராவ் இதற்கான விதையை விதைத்தார். இந்த முயற்சிக்கு திமுக, அசாம் கனபரிஷத், இடதுசாரிகள் போன்ற கட்சிகள் தோள் கொடுத்தன. 1988-ம் ஆண்டில் சென்னை மெரினா கடற்கரையில் பிரம்மாண்ட பேரணியுடன் தேசிய முன்னணி உருவானது. தேசிய முன்னணியின் ஒருங்கிணைப்பாளராக என்.டி.ராமாராவ் இருந்தார்.

1989-ம் ஆண்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 150-க்கும் மேற்பட்ட இடங்களை தேசிய முன்னணி பெற்றது. பாஜகவும், இடதுசாரிகளும் வெளியே இருந்து தேசிய முன்னணி அரசை ஆதரித்தன. வி.பி.சிங் தலைமையிலான அரசு, 11 மாதங்கள் மட்டுமே நீடித்தது.  ஆனால், அந்தக் காலகட்டத்தில் கடிவாளமில்லாத குதிரையாக இருந்த காங்கிரஸ் கட்சிக்கு தேசிய முன்னணிதான் குடைச்சல் கொடுக்கும் அணியாக இருந்தது. அப்போது நடந்த தேர்தலில் ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி தோல்வியடைந்தபோதும், அகில இந்திய அளவில் தேசிய முன்னணியால் தெலுங்கு தேசக் கட்சி அந்தஸ்தைக் கூட்டிக்கொண்டது.

தேசிய முன்னணியைப் போலவே 1996-ம் ஆண்டிலும் தேசிய அளவிலான அணிச் சேர்க்கை உருவானது. ஆனால், இது தேசிய முன்னணியைப்போல தேர்தலுக்கு முன்பே உருவான கூட்டணி அல்ல. தேர்தல் முடிவுக்குப் பின்னர் உருவான கூட்டணி. குறிப்பாக பாஜக ஆட்சி அமைவதைத் தடுக்கும் வகையில் உருவான கூட்டணி. இந்தக் கூட்டணியை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகித்தார் அப்போதைய ஆந்திர முதல்வரும் தெலுங்கு தேசக் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு. மாநில கட்சிகளை ஒருங்கிணைக்க அவர் தீவிர முயற்சி மேற்கொண்டார்.

ஜனதா தளம், சமாஜ்வாடி, திமுக, தெலுங்கு தேசம், தமாகா, மகாராஷ்டிரா கோமந்தவாடி கட்சி, இடதுசாரிகள் போன்ற கட்சிகளை உள்ளடக்கி இந்தக் கூட்டணி உருவானது. ‘ஐக்கிய முன்னணி’ என்ற பெயரில் உருவான இந்தக் கூட்டணிக்கு சந்திரபாபு நாயுடுதான் அமைப்பாளராக இருந்தார். காங்கிரஸ் கட்சி வெளியே இருந்து ஆதரிக்க, ஐக்கிய முன்னணியின் ஆட்சி 20 மாதங்கள்வரை நீடித்தது. என்.டி.ராமாராவுக்குப் பிறகு அவரது மருமகன் சந்திரபாபு நாயுடுவும் இந்தக் கூட்டணி உருவாக்கத்தின் மூலம் தேசிய அளவில் தனி கவனம் பெற்றார். பிரதமருக்கான ரேஸில் இவரது பெயரும் அந்தக் காலகட்டத்தில் அடிபட்டது.

இந்த இரு பெரும் கூட்டணிகளுக்குப் பிறகு பாஜக தலைமையில் கூட்டணி ஆட்சி, காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி என்றுதான் இந்தியாவின் முகம் மாறியது. கடந்த 20 ஆண்டுகளாக இந்தக் கட்சிகளின் தலைமையில் அமைந்த கூட்டணிகள்தான் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கின்றன. ஆனால், இடையிடையே தேசிய முன்னணி, ஐக்கிய முன்னணி போல கூட்டணியை உருவாக்க வேறு பல கட்சிகள் முயன்றாலும், அந்த முயற்சி கைகூடவில்லை. இதற்குக் காரணம். ஒரு காலத்தில் தேசிய முன்னணி, ஐக்கிய முன்னணியில் இடம் பிடித்த கட்சிகள் பலவும் காங்கிரஸ், பாஜக கூட்டணியில் இடம் பிடித்ததுதான். தெலுங்கு தேசம் கட்சியும் பெரும்பாலும் பாஜக கூட்டணியில் இடம் பிடித்து வந்தது.

2018-ம் ஆண்டு தொடக்கத்திலிருந்தே மம்தா பானர்ஜி, தெலங்கானாவின் சந்திரசேகர ராவ் ஆகியோர் காங்கிரஸ், பாஜக அல்லாத அணியைக் கட்டமைக்க முயன்றார்கள். அதற்காக பல்வேறு மாநில கட்சித் தலைவர்களையும் சந்தித்தார்கள். ஆனால், அந்த முயற்சி மேற்கொண்டு முன்னேற்றம் காணவில்லை.

திடீர் திருப்பமாக பரம எதிரியாக பார்க்கப்பட்ட காங்கிரஸ் கட்சியுடன் தெலுங்கு தேசம் கூட்டணி சேர்ந்து, பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் அணி அமைக்கும் முயற்சியில் இறங்கிய பிறகு, ஆந்திரா மீண்டும் முக்கியத்துவம் பெறத் தொடங்கியிருக்கிறது. கடந்த காலங்களில் காங்கிரஸுக்கு எதிராக கூட்டணி அமைத்த, கூட்டணியில் இடம் பெற்ற தெலுங்கு தேசம், இந்த முறை காங்கிரஸ் அணியுடன் இணைந்து பிற கட்சிகளையும் அந்தக் கூட்டணியில் சேர்க்க எடுக்கும் முயற்சியின் மூலம் மீண்டும் தேசிய வெளிச்சத்தைப் பெற்றிருக்கிறார் சந்திரபாபு நாயுடு.

2004, 2009 ஆகிய ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியே ஐக்கிய முற்போக்குக் கூட்டணி உருவாக்கி வளர்ப்பதில் அக்கறை காட்டியது. ஆனால், இந்த முறை காங்கிரஸ் கூட்டணிக்குள் மற்ற கட்சிகளைக் கொண்டுவரும் பொறுப்பை அக்கட்சி எடுக்கவில்லை. மாறாக இப்போது சந்திரபாபு நாயுடு அதற்கான முயற்சியைத் தொடங்கியிருப்பதன் மூலம் தேசிய அரசியலில் அவரது முக்கியத்துவம் கூடியிருக்கிறது. திமுக, மஜத, தேசிய மாநாட்டுக் கட்சி, தேசியவாத காங்கிரஸ், இடதுசாரிகள், சமாஜ்வாடி ஆகிய கட்சிகளின் தலைவர்களையும் அடுத்தடுத்து சந்தித்து, தேசிய பார்வை முழுவதும் ஆந்திரா பக்கம் சந்திரபாபு குவியச் செய்திருக்கிறார். திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜியையும் சந்திக்க சந்திரபாபு உத்தேசித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து டெல்லியில் நவம்பர் 22-ம் தேதி பாஜகவுக்கு எதிரான கட்சிகளுடனான கூட்டத்துக்கும் சந்திரபாபு ஏற்பாடு செய்திருக்கிறார். அவரின் இந்த முயற்சி 1996-ம் ஆண்டில் நடந்ததைப் போல சுபத்தில் முடியுமா அல்லது சந்திரசேகர ராவ், மம்தா பானர்ஜி ஆகியோர் எடுத்த முயற்சிகளைப் போல பேச்சுவார்த்தையோடு சுருங்கிவிடுமா என்பது அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளில் தெரிந்துவிடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x