Published : 08 Nov 2018 01:01 PM
Last Updated : 08 Nov 2018 01:01 PM

“எங்களுக்கு என்ன பலன்? எல்லாம் பணக்காரர்களுக்கு தான்” - பணமதிப்பு நீக்க நாளை நினைவுகூரும் தொழிலாளர்கள்

பண மதிப்பு நீக்க ‘நடவடிக்கை’யின் முதலாம் ஆண்டு நிறைவில் பிரதமர் நரேந்திரமோடி இப்படிச் சொன்னார். “கறுப்புப் பணத்திற்கும் ஊழலுக்கும் எதிராக 125 கோடி இந்திய மக்களும் உறுதியாக போரிட்டு வென்றுள்ளனர்” என்றார். இன்றைக்கு இரண்டாம் ஆண்டும் நிறைவடைந்து விட்டது.

இந்த கட்டுரை வெளியாகும் வரை பிரதமர் நரேந்திர மோடி பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் மூன்றாம் ஆண்டு தொடக்கம் குறித்து எதுவும் கூறவில்லை. அவருடைய ட்விட்டர் பக்கத்தில், அத்வானிக்கு பிறந்த நாள் வாழ்த்தும், உத்தரகாண்டில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய புகைப்படங்களுமே உள்ளன. பாஜக முக்கிய தலைவர்களும் இதனை வெற்றியாக கொண்டாடவில்லை.

நவம்பர் 8, 2016 அன்று இரவு பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த நொடியிலிருந்து, அரசாங்கத்தின் மாறுபட்ட அறிவிப்புகள், பண தட்டுப்பாடு, சில்லறை தட்டுப்பாடு, ஏடிஎம் முடக்கம் இவற்றால் உடல், மன வேதனைகளை அனுபவித்த சாதாரண அடித்தட்டு வியாபாரிகளும், தொழிலாளர்களும், உயிரிழந்தவர்களின் உறவினர்களும் இன்னும் அந்நாளையும், அதனால் ஏற்பட்ட தாக்கங்களையும் மறக்கவில்லை.

இங்கே சில தொழிலாளர்கள் அந்நாளை நினைவுகூறுகிறார்கள்.

வியாசர்பாடி மகாகவி பாரதிநகரைச் சேர்ந்த முன்னாள் ஆட்டோ ஓட்டுநர் காசி, பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் பெருமுதலாளிகளே ஆதாயம் அடைந்ததாக குற்றம்சாட்டுகிறார்.

“500, 1,000 ரூபாய் செல்லாது என அறிவித்தவுடன் ரொம்ப அதிர்ச்சியாக இருந்தது. இரவில் திடீரென அறிவித்ததால் எல்லோருக்கும் அதிர்ச்சியாகத்தான் இருந்திருக்கும். மறுநாளில் இருந்து சவாரியே இல்லை. ரொம்ப கஷ்டமாக இருந்தது. அன்றிலிருந்து ஆட்டோ ஓட்டுவதால் பெரிய வருமானம் இல்லாததால் டிபன் சென்டரில் வேலைக்கு செல்கிறேன். அதில் ஆட்டோ ஓட்டுவதை விட குறைவான வருமானம் தான். ஆனால், என்ன செய்வது? இந்த அறிவிப்பால் முதலாளிகளுக்குத்தான் பலன். தொழிலாளிகளுக்கு வறுமைதான் மிஞ்சியது”, என்கிறார்.

பணமதிப்பு நீக்கத்தால் கறுப்பு பணத்தை ஒழிப்போம் என பாஜக அரசு கூறியது இன்னும் நிறைவேறவில்லை எனவும், அவை வெற்று வாக்குறுதிதான் எனவும் கூறுகிறார் காசி. “பணமதிப்பு நீக்கத்தால் கருப்பு பணம் எங்கே ஒழிந்தது? கறுப்பு பணம் அதிகமானது போன்றுதான் தெரிகிறது. 3,800 கோடி ரூபாய்க்கு படேலுக்கு சிலை வைத்தார் பிரதமர் மோடி. இப்போது மஹாராஷ்டிராவில் வீர சிவாஜிக்கு சிலை எழுப்புகின்றனர். அவரவர்களின் சொகுசுக்காகவும் சாதியத்திற்காகவும் இதனை செய்கின்றனர். சிலையால் ஏதேனும் பிரயோஜனம் இருக்கிறதா?” என வெறுமையுடன் சொல்கிறார் காசி.

பண தட்டுப்பாடு, வருமானம் இன்மை ஆகியவற்றால் குடும்பத்திலும் பல பிரச்சினைகள் ஏற்படுவதாகவும், பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் சரிந்த தங்களின் குடும்ப பொருளாதாரம் இன்னும் நிமிரவில்லை எனவும் கவலையுடன் தெரிவிக்கிறார் அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பழநி.

“இந்த பணமதிப்பு நீக்கத்தால் எங்க பொருளாதாரம் சரிஞ்சிடுச்சு. பிள்ளைகளை சரியாக படிக்க வைக்க முடியவில்லை. சாப்பாட்டுக்கே வீட்டுக்கு காசு கொடுக்க முடியவில்லை. எங்கள மாதிரியான உதிரித் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். பணமதிப்பு நீக்கத்திலிருந்து 6 மாதங்கள் ரொம்ப கஷ்டப்பட்டோம். இந்த பாதிப்புகளிலிருந்து நாங்கள் இன்னும் தலை நிமிர முடியவில்லை. பெரும்பாலான ஆட்டோக்களுக்கு வாடகை செலுத்த முடியாததால் பறிமுதல் செய்யப்பட்டது.

நிறைய பேரு ஆட்டோ ஓட்டும் வேலையையே இழந்தனர். வாட்ச் மேன் வேலைக்கு நிறைய பேர் சென்றனர். பெரும்பாலானோரிடம் பணமே இல்லாத சூழல். மக்கள் எங்களிடம் 2 ஆயிரம் ரூபாய் தருவாங்க. இதனால் சவாரியே வராது. சில்லறை தட்டுப்பாடு இன்னும் சரியாகவில்லை. சேர்த்து வைத்திருந்த சிறுசிறு தொகையை கூட பயன்படுத்த முடியாமல் எங்களை அலைக்கழித்து அலங்கோலமாக்கி விட்டனர்.

வீட்டிலும் பல பிரச்சினைகள். வெளியில் சொல்ல முடியவில்லை. பாமர மக்களுக்கு இதனால் நஷ்டம்தான். மக்களே கஷ்டப்படும்போது எப்படி ஆட்டோவில் செல்லுவார்கள்? எங்களுக்கு ஒரு நாளுக்கு 500 ரூபாய் வருமானம் வருவது கூட சிரமமாக உள்ளது” என்கிறார் பழநி.

பணமதிப்பு நீக்க நடவடிக்கையையடுத்து பெரும் பணக்காரர்கள், பாஜக தலைவர்கள், அரசு ஒப்பந்ததாரர்கள் என பலரின் வீடுகளில் புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் கோடிக்கணக்கில் சிக்கின. தமிழகத்தில் சேகர் ரெட்டி விவகாரத்தை நாம் இன்னும் மறந்திருக்க மாட்டோம். பணக்காரர்களுக்கு மட்டுமே இது பலனளித்ததாக பழநி விமர்சிக்கிறார்.

“பணத்திற்கு அந்த சமயத்தில் மிகுந்த தட்டுப்பாடு ஏற்பட்டது. ஆனால் பெரும் பணக்காரர்களின் வீடுகளில் இருந்து கோடிக்கணக்கில் பணம் சிக்கியது. ஆனால், அதற்கு பிறகு அவையெல்லாம் என்ன ஆனது, அவர்கள் என்ன ஆனார்கள் என்பது குறித்து செய்தியே இல்லை. இதனால், கறுப்பு பணத்தை ஒழித்த மாதிரியே தெரியவில்லை. கருப்பு பணத்தை வைத்திருப்பவர்களின் பட்டியலையும் அரசு வெளியிடவில்லை”, என்கிறார்.

பணமதிப்பு நீக்கம் தவிர்த்து அதைத்தொடர்ந்து குறுகிய காலத்திலேயே அமலுக்கு கொண்டு வரப்பட்ட ஜிஎஸ்டி, தற்போது பெட்ரோல்-டீசல் விலை உயர்வு என தொடர்ந்து ஆட்டோ ஓட்டுநர்களின் நிலைமை பாஜக ஆட்சியில் கவலைக்குரியதாகவே உள்ளது என பழநி தெரிவிக்கிறார்.

“இதுதவிர பெட்ரோல்-டீசல் விலை உயர்வாலும் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். அதன் தொடர்ச்சியாக , ஜிஎஸ்டி எங்களுக்கு பெரும் பாதிப்பு. டீ குடிப்பதற்கும் ஜி.எஸ்.டி. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு இவற்றால் நிம்மதியை இழந்திருக்கிறோம்.

மோடியின் ஆட்சி பூஜ்ஜியம்தான். அடித்தட்டு மக்கள் உயரவில்லையே. ஏழைகளுக்காகத் தான் இருக்கிறேன் என்கிறார் மோடி. ஆனால், எங்களுக்கு அப்படி தெரியவில்லை” என தன் மனதில் பட்டதை வெளிப்படையாக சொல்கிறார்.

ஆட்டோ ஓட்டுநர்கள் மட்டுமின்றி, காய்கறி வியாபாரிகள், தெருவோர வியாபாரிகள் பெருமளவில் இன்றும் பணமதிப்பு நீக்கத்தால் பாதிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றனர்.

வியாசர்பாடியிலுள்ள சர்மாநகர் மார்க்கெட்டுக்குள் சென்றேன். அங்கு சிறியளவில் காலணி கடை வைத்து நடத்திவரும் ஷகினா பானுவிடம் பேசினேன். நவம்பர் 8 ஆம் தேதி அறிவிப்புக்கு மறுநாள் வியாபாரத்தில் என்னென்ன சிரமங்களை எதிர்கொண்டோம் என பேச தொடங்கினார்.

“அன்றைக்கு நல்ல வியாபாரம். காசு நிறைய இருந்தது. திடீர்னு நைட்டு 500, 1000 ரூபாய் செல்லாது என்றவுடன் என்ன செய்வதென்றே தெரியவில்லை. அதிலிருந்து மீள பல மாதங்கள் ஆகின. பொருளே விற்காது. பலர் 2,000 ரூபாயுடன் கடைக்கு வருவார்கள். சில்லறை இல்லை என்று சொன்னவுடன் பொருளே வாங்காமல் சென்று விடுவார்கள். 2, 3 மாதங்களுக்கு வியாபாரம் மந்தமாகத்தான் இருந்தது.

2-3 மாதங்களுக்கு முன்பே இப்படி அறிவிக்க இருக்கிறோம் என சொல்லியிருந்தால், நாம் கொஞ்சம் முன் ஜாக்கிரதையுடன் இருந்திருக்கலாம். அறிவித்த மறுநாள் எங்களிடம் 20 ஆயிரம் வரை இருந்திருக்கும். அதனை கொஞ்சம் கொஞ்சமாக வங்கிக்கு சென்று மாற்றினோம்” என்கிறார் ஷகினா பானு.

பக்கத்தில் இருக்கும் வியாபாரிகளும் பலவிதங்களில் இந்த அறிவிப்பால் பாதிக்கப்பட்டனர் என்கிறார் ஷகினா.

“மோடி மீண்டும் தேர்தலில் ஜெயிக்க முடியாது என்றுதான் வியாபாரிகள் பேசிக்கொண்டு இருப்பார்கள். பலரது தொழிலே போய்விட்டது என நிறைய பேர் சொன்னார்கள். அடுத்தது காலணிக்கு ஜிஎஸ்டி. அதனால் இன்னும் கஷ்டம் ஏற்பட்டது. 2,000 ரூபாய் மாற்றுவதற்கு சிரமம். பக்கத்து கடைகளில் தான் பெரும்பாலும் மாற்றுவோம்” என்றார்.

அவருக்கு எதிர் கடையில் 22 ஆண்டுகளாக சிறியளவில் காலணி கடை நடத்தும் மரியம் பீவியிடம் பேசினேன்.

“அன்றைக்கு இருந்த பணத்தில் சரக்கு எடுப்பதற்கு சிரமப்பட்டோம். நாம் உழைத்து சம்பாதித்த பணத்தையே பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. 2-3 மாதங்களாக வருமானமே இல்லை. அப்போது குறைந்தது, இன்னும் சரியாகவில்லையே. 2,500 ரூபாய் வருமானம் முன்பு வரும். இப்போது ஆயிரம் ரூபாய்க்கு கூட வருமானம் வருவதில்லை. இந்த கடைக்கே மாதம் 1,000 ரூபாய் வாடகை. செருப்புகளுக்கு ஜி.எஸ்.டி. 50 ரூபாய் செருப்பை விற்பதற்குள் சோர்வடைந்து விடுகிறோம். 2 ஆயிரத்திற்கு யார் சில்லறை கொடுப்பார்கள்?” என்கிறார்.

காய்கறி கடை வைத்திருக்கும் பிரமிளா, பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் மூலம் கறுப்பு பணம் வைத்திருந்த பணக்காரர்கள் உஷார் ஆகி விட்டனர் என்கிறார்.

“எல்லா நடுத்தர மக்களுக்கும் இதனால் கஷ்டம் தான். பண புழக்கம் குறைந்து விட்டதால் வருமானம் இல்லை. முன்பெல்லாம் 8 ,000 ரூபாய் வருமானம் வரும். இப்போது 5,000 கூட வரவில்லை. ஏழைகள் பிச்சைக்காரர்களாகி விட்டனர். இருப்பவர்களுக்கு பிரச்சினை இல்லை. இல்லாதவர்களுக்குத்தான் பிரச்சினை.

கறுப்பு பணம் வைத்திருப்பவர்கள் எல்லாம் உஷாராகி விட்டனர். சில்லறை தட்டுப்பாடு. 2 ஆயிரத்தை மாற்ற 10 கடைகளுக்கு செல்ல வேண்டியுள்ளது. மோடியின் ஆட்சியில் எந்த திட்டமும் ஏழைகளுக்கு நன்மை இல்லை. நல்ல திட்டம் என்று சொல்பவர்கள் வசதி படைத்தவர்களாகத்தான் இருக்கிறார்கள்” என்கிறார்.

அடித்தட்டு, சாதாரண மக்கள் தங்களுக்கு தெரிந்த மொழிகளில் பணமதிப்பு நீக்கத்தால் ஏற்பட்ட தீவிரத்தை உணர்த்திக் கொண்டேதான் இருக்கின்றார்கள்.

பாஜக தலைவர்கள் இன்று ஒன்றும் சொல்லாமல் இருந்தாலும், தாங்கள் உழைத்து சம்பாதித்த பணத்தைக் கூட அடிப்படை தேவைகளுக்கு பயன்படுத்த முடியாமல் இறந்துபோனவர்களின் குடும்பத்தினரும், தொழிலாளர்களும் “நாங்கள் இன்னும் மீளவில்லை” என சொல்லிக்கொண்டுதான் இருக்கின்றனர்.

தொடர்புக்கு: nandhini.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x