Published : 08 Nov 2018 04:55 PM
Last Updated : 08 Nov 2018 04:55 PM

மோடி-அமித்ஷா- 5 பெருமுதலாளிகள் தொடுத்த தாக்குதலே பணமதிப்பு நீக்கம்: ஜோதிமணி பேட்டி

எந்தவொரு ஆர்ப்பாட்டமும், கொண்டாட்டங்களும் இன்றி, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், பாஜக தலைவர்கள் உள்ளிட்டோர் பணமதிப்பு நீக்கத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்க நாளைக் கடந்துகொண்டிருக்கிறார்கள். கறுப்புப் பணம் ஒழிக்கப்படும், கள்ள நோட்டுகள் அழிக்கப்படும், தீவிரவாதம் கட்டுப்படுத்தப்படும் என்ற காரணங்களை பணமதிப்பு நீக்க அறிவிப்பு வந்ததிலிருந்து இன்று வரை பாஜக தலைவர்கள் அனைவரும் கூறி வருகின்றனர்.

ஆனால், பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளில் 99 சதவீதம் மீண்டும் ரிசர்வ் வங்கிக்கே வந்து சேர்ந்து விட்டது எனவும், சொற்பப் பணமே மீண்டும் வரவில்லை எனவும் ஆர்பிஐ சமீபத்தில் தெரிவித்தது. இதனால், கறுப்புப் பணத்தின் நிலைமை என்ன ஆனது என்ற கேள்வி எழுந்தது. புதிய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க ஆன செலவுகள், ஆர்பிஐயின் வருவாய் குறைவு-செலவீனம் அதிகரிப்பு, ஆர்பிஐ முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜனின் விலகல் ஆகியவை பண மதிப்பு நீக்கத்தின் தோல்வியையே காட்டுவதாக பொருளாதார அறிஞர்கள் பரவலாக குற்றம் சாட்டுகின்றனர்.

அதுமட்டுமல்லாமல், பணமதிப்பு நீக்க நடவடிக்கையை எதிர்த்து காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் நாளை (வெள்ளிக்கிழமை) கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது. பண மதிப்பிழப்பால் இந்தியா அடைந்தது என்ன, அதன் நோக்கம் நிறைவேற்றப்பட்டதா என்பது குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜோதிமணியிடம் பேசினோம்.

பாஜக அரசு ஆர்பிஐயை சற்றும் மதியாமல் சாதாரண மக்கள் மீது தொடுத்திருக்கும் தாக்குதல் தான் பணமதிப்பு நீக்க நடவடிக்கை என்று விமர்சிக்கிறார் ஜோதிமணி.

“ஆர்பிஐயுடன் அலசி ஆராய்ந்து மக்களுக்கு நல்லதா இல்லையா என்பது குறித்து எல்லாம் ஆலோசிக்காமல் மத்திய பாஜக அரசு இந்த விஷயத்தில் அலட்சியமாகச் செயல்பட்டிருக்கிறது. ஆர்பிஐ கவர்னர் அறிவிக்க வேண்டியதை பிரதமர் மோடி தொலைக்காட்சிகளின் வழியாக அறிவிக்கிறார். கறுப்புப் பணம் ஒழிப்பு, கள்ளப் பணம் ஒழிப்பு, தீவிரவாதம் மட்டுப்படுத்துதல் என 3 காரணங்களைச் சொல்லித்தான் இதனை அறிவித்தனர்.

ஆனால், சாதாரண மக்களை நினைக்கவேயில்லை. அன்றைய ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் இதனை எதிர்த்தார். ஆர்பிஐ ஒன்றரை ஆண்டுகளாக வங்கிகளுக்கு வந்த பணத்தை எண்ணவில்லை என்றது, கணக்கு காட்டவில்லை. பாஜகவினர் புதிய 2,000 ரூபாய் நோட்டுகளுடன் பிடிபட்டனர். பாஜக மிகப்பெரிய சொத்துள்ள கட்சியாக மாறியது. பாஜகவின் அதிகப்படியான பணப்புழக்கத்திற்கும் சாதாரண மக்களிடம் இருந்து கொள்ளையடிப்பதற்கும் நிச்சயம் பண மதிப்பு நீக்கத்துடன் தொடர்பு இருக்கிறது. மக்களின் பணத்தைக் கொள்ளையடிப்பதற்காக மோடியால் கொண்டு வரப்பட்ட திட்டம் இது” என்றார்.

சிறு, குறு தொழில்கள் மிகப்பெரும் வீழ்ச்சியை இதனால் அடைந்திருப்பதாக ஜோதிமணி குற்றம் சாட்டுகிறார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “சிறு, குறு தொழில்கள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டு விட்டது. கொங்கு மண்டலத்தில் டெக்ஸ்டைல்ஸ் மற்றும் அதனைச் சார்ந்த தொழில்கள் பாதிக்கப்பட்டு விட்டது. 100 ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட தொழில் நகரங்கள் ஒரு இரவில் சிதிலமாகி விட்டன. இது மக்கள் சம்பாதித்ததை அடித்துப் பிடுங்குவதற்கு சமம்.

குறிப்பிட்ட சிலரின் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்குவதற்கும், மக்களின் பணம் பாஜகவுக்கு சேர்வதற்கும் உண்டான திட்டம் இது. இதனால், ஒரு நாடு அழியும் என்ற கவலை அரசுக்கு இல்லை” என்கிறார்.

அதேபோன்று, உடல், மனச் சோர்வால் இறந்தவர்களையும், வங்கிகளில் கால்கடுக்க நின்று இறந்துபோனவர்களின் குடும்பத்திற்கும் பாஜக என்ன செய்தது என்று ஜோதிமணி கேள்வி எழுப்புகிறார்.

“இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்து தெரியவில்லை. பாஜகவினர், பெரும் பணக்காரர்கள் யாராவது வரிசையில் நின்று இறந்திருக்கிறார்களா? சாதாரண மக்களுக்கு வாழ்க்கை இழப்பு, உயிரிழப்பு. இப்படி இறந்து போனவர்களின் குடும்பங்கள் என்ன ஆகின? அவர்கள் ஏன் வரிசையில் நிற்கப்பட்டு கொல்லப்பட வேண்டும்? அரசாங்கம் செய்த கொலை இது. பணமதிப்பு நீக்கம் கொலைகார ஆயுதம். இதற்கெல்லாம் ஒரு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. இறந்துபோனவர்களின் வீடுகளுக்குச் சென்றார்களா? இது ஒரு இதயமற்ற அரசாங்கம். ஒரு நிவாரணம் கூட அறிவிக்கவில்லை. இத்தகைய கொடூரமான அரசாங்கம் பற்றி நாம் படித்திருக்கிறோம். ஆனால், இப்போதுதான் கண்கூடாகப் பார்க்கிறோம். பண மதிப்பு நீக்கத்தால் ஏற்பட்ட இழப்புகளைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல் அடுத்து உடனடியாக ஜிஎஸ்டி கொண்டு வருகின்றனர். குற்றுயிரும் கொலையுயிருமாய் இருக்கும் மக்களை முற்றாக அழித்துவிட்டனர். மோடி-அமித்ஷா- 5 பெருமுதலாளிகள் தொடுத்த தாக்குதல் இது. இதனை ஒரு துயர நாளாகத்தான் பார்க்க வேண்டும்.

ஆட்சி நடத்த வேண்டுமென்றால் தான் நிறுவனங்களை மதிக்க வேண்டும். கொள்ளையடிக்க வேண்டும், கொடுங்கோல் ஆட்சி நடத்த வேண்டும் என்றால் அவற்றை மதிக்கத் தேவையில்லை. ஆர்பிஐ, சிபிஐ, உச்ச நீதிமன்றம் என எல்லா அமைப்புகளும் பாஜக அரசை எதிர்க்கிறது” என்கிறார் ஜோதிமணி.

மோடியை வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தூக்கியெறிய மக்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்கிறார் அவர்.

பணமதிப்பால் என்ன ‘நன்மைகள்’ விளைந்தன என்பது குறித்து பாஜக ஏன் இந்த ஆண்டு குறிப்பிடத்தக்க அளவில் பிரச்சாரம் ஏதும் செய்யாமல் அமைதி காக்கிறது என்பது குறித்துப் பேசுவதற்காக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் ஆகியோரை பலமுறை தொடர்புகொண்டும் அவர்களின் கருத்தை அறியமுடியவில்லை.

ரிசர்வ் வங்கியின் இயக்குநர் குழுவில் பகுதி நேர உறுப்பினரான ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி தன் ட்விட்டர் பக்கத்தில் இப்படி குறிப்பிட்டிருக்கிறார்.

“ஒருவர் தங்களுடைய கொள்கை, அரசியல், வெறுப்பு ஆகியவற்றிலிருந்து விலகி நின்று பார்த்தால்தான் பணமதிப்பு நீக்கத்தைப் புரிந்துகொள்ள முடியும். ஆனால், நம்முடைய விவாதத் தளத்தில் அது சாத்தியமில்லை” என்று பதிவிட்டிருக்கிறார்.

எது எப்படியோ, பணமதிப்பு நீக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நோக்கி அடுத்த தேர்தல் வந்து கொண்டிருக்கிறது.

தொடர்புக்கு: nandhini.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x