Published : 05 Aug 2018 07:34 am

Updated : 05 Aug 2018 16:12 pm

 

Published : 05 Aug 2018 07:34 AM
Last Updated : 05 Aug 2018 04:12 PM

பெற்றோர் நலன்: தமிழக அரசு - பின்பற்றுமா..? பின்தங்குமா...?

அவ்வப்போது, ஆங்காங்கே நாம் கண்கூடாக பார்த்து வரும் ஒரு சமூகப் பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு காண முயன்றுள்ளது அசாம் மாநிலம். இதற்காக ஒரு சட்டம் இயற்றி இருக்கிறது.

முதியவர்கள் முன் இருக்கும் மிகப் பெரிய பிரச்சினையே, ‘சம்பாத்தியம்' இல்லை. தான் சம்பாதித்ததை எல்லாம், பிள்ளைகளின் படிப்பு, ஆரோக்கியம், நல்வாழ்வுக்காகச் செலவு செய்து விட்டு, முதிய வயதில், வருமானத்துக்கு வழியின்றி, தமது அடிப்படைத் தேவைகளுக்குக் கூட பிள்ளைகளை சார்ந்து வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ள பெற்றோர்கள் ஏராளம்.


பிள்ளைகளும் ஆதரிக்காதபோது, தள்ளாத வயதில் ஒரு வேளை சாப்பாட்டுக்கும் மருத்துவ செலவுக்கும் என்னதான் செய்வார்கள்? யாரிடம் போய்க் கேட்பது? இந்தச் சிக்கலுக்கு விடை காணும் முயற்சிதான் அசாம் அரசின் ‘பிரணாம்' சட்டம். இரு கரம் கூப்பி, சற்றே குனிந்து, பெரியவர்களுக்கு ‘வணக்கம்' சொல்கிறோம் அல்லவா...? இதுதான் வட மொழியில், ‘பிரணாம்' எனப்படுகிறது. வரும் அக்டோபர் 2-ம் தேதி, மகாத்மா காந்தி பிறந்த நாள் முதல், இச்சட்டம் அமலுக்கு வருகிறது.

மாநில அரசு ஊழியர்களை மட்டுமே கட்டுப்படுத்தும் இந்தச் சட்டம் நாளடைவில், பொதுத்துறை மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கும் விரிவுபடுத்தப்படும். ஓய்வூதியம் அல்லது வருமானம் இல்லாத பெற்றோர், தம் பிள்ளை பணிபுரியும் துறையின் உள்ளூர் தலைமை அதிகாரி முன்பு கோரிக்கை வைக்க இந்தச் சட்டம் வழி வகுக்கிறது.

அவர், இரு பக்க நியாயங்களையும் கேட்டறிந்து, இறுதி முடிவு எடுப்பார். பெற்றோரின் கோரிக்கை நியாயமானதாக இருப்பின், பிள்ளைகளின் மாத சம்பளத்தில், 10 முதல் 15 சதவீதத் தொகை பிடித்தம் செய்யப்பட்டு, பெற்றோரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

நாட்டிலேயே முதன் முறையாக அசாம் மாநிலத்தில்தான் இது அறிமுகம் ஆகிறது. இந்த நோக்கத்துக்காக, ‘பிரணாம் ஆணையம்' அமைக்கப்படும். கூடுதல் முதன்மைச் செயலாளர்நிலையில் உள்ள ஒருவர், முதன்மை ஆணையராக நியமிக்கப்படுவார். இவருடன் சமூக சேவகர்கள் (அ) ஆணையர் நிலையில் ஓய்வுபெற்ற அதிகாரிகள் இரண்டு பேரும், ஆணையர்களாக நியமிக்கப்படுவார்கள். இந்த ஆணையம், ஒரு ‘குவாஸி’ நீதிமன்றம் போன்றது. அதாவது, நீதிமன்ற அதிகாரங்களுடன், முழுவதும் தன்னிச்சையாக செயல்படும் நிர்வாக அமைப்பு.

பிள்ளைகள் பணிபுரியும் அலுவலகத்தில், சம்பளம் வழங்கும் அலுவலரிடம் மனு கொடுத்தால் போதுமானது. ஒரு மாதத்துக்குள் அவர் முடிவு எடுக்க வேண்டும். தவறினால், அல்லது சரியான நிவாரணம் கிடைக்கவில்லை என்று கருதினால், அந்தத் துறையின் இயக்குநரிடம் முறையிடலாம். இதன் மீது அவர், 2 மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும்.

இங்கும் நியாயம் கிடைக்கவில்லை என்றால், ‘பிரணாம்' ஆணையத்திடம் மேல்முறையீடு செய்யலாம். மூன்று மாதங்களுக்குள் ஆணையம், இறுதி முடிவை எடுத்தாக வேண்டும். இந்தச் சட்டத்தின் மூலம், சுமார் 4 லட்சம் பேர் (பெற்றோர்) உடனடியாக பலன் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் திட்டம் (சட்டம்) காரணமாக, அரசுக்கு கூடுதல் நிதிச் சுமை எதுவும் இல்லை. சமூக நலத் திட்டங்களை வடிவமைப்போர் இதுபோலதான் சிந்திக்க வேண்டும். தனி நபர்கள் ஆற்ற வேண்டிய கடமைக்கு அவர்களையே பொறுப்பாக்குவதுதான் ஆரோக்கியமான வழிமுறை. இதை தமிழக அரசும் ஏன் இதனைப் பின்பற்றக் கூடாது? என்ற கேள்வி நம் மனதில் எழுகிறது. மிக அதிக எண்ணிக்கையில் அரசு ஊழியர்களைக் கொண்ட மாநிலம் தமிழகம். அதேபோல, பிள்ளைகளால் கைவிடப்படும் முதியோரின் எண்ணிக்கையும் மிகுந்துள்ள மாநிலம்.

எந்தவொரு சமூக நலத் திட்டமாக இருந்தாலும், அதை முன்னெடுப்பதில், முனைப்புடன் செயல்படுத்துவதில், தமிழ்நாடு எப்போதுமே முதலிடம் வகித்து வருகிறது. ஆகவே, தமிழக அரசும் உடனடியாக, ‘பிரணாம்' சட்டத்தின் தமிழ் வடிவத்தைக் கொண்டு வந்து, முதியோர்களின் வாழ்க்கையில் நம்பிக்கை ஒளி ஏற்றலாம்.

கல்வித் துறையில் பல நல்ல முயற்சிகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. முதியோர் நலன் சார்ந்த சட்டத்துக்கும் முன்னுரிமை தந்து நிறைவேற்றினால் சிறப்பாக இருக்கும். ஆதரவற்ற முதியோருக்கு உதவும் இலவசத் திட்டம் ஏற்கெனவே இருக்கிறது. ஆனால் போதாது. காரணம், பல முதியவர்களின் தன்மானம், இலவச திட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் தடுக்கிறது.

‘பிரணாம்' சட்டம், இதிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. தாம் வளர்த்த, தாம் மிகவும் நேசிக்கிற, பிள்ளைகளிடம் இருந்தே, வருமானம் பெற்றுத் தருகிறது; அவர்களின் கடமையை, ஒரு வகையில், சட்ட உரிமை ஆக்குகிறது. இதுதான் இந்தச் சட்டத்தின் ஆகப் பெரிய வெற்றி. தொழில் துறையில் நன்கு முன்னேறிய, தனியார் துறையில் கணிசமானோர் பணிபுரியும் மாநிலமாக நாம் உள்ளதால், அசாம் மாநிலம் போல் அல்லாது, தொடக்க நிலையிலேயே, பொதுத்துறை, தனியார் ஊழியர்களையும் உள்ளடக்கியதாக தமிழகச் சட்டம் அமையலாம்.Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x