Last Updated : 27 Apr, 2018 10:19 AM

 

Published : 27 Apr 2018 10:19 AM
Last Updated : 27 Apr 2018 10:19 AM

இவர்கள் சிறப்பு குழந்தைகள்!: வியக்க வைக்கும் விருத்தாசலம் பள்ளி

மிழகத்தில் 2002 முதல் அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் இயலாக் குழந்தைகள் பயில, தமிழகம் முழுவதும் பகல் நேர ஆதார மையங்கள் உருவாக்கப்பட்டன. அதில் காதுகேளாத, மனவளர்ச்சி குன்றிய, கை-கால் செயலிழந்து தசைத் தளர்வு நோயால் (Muscular Dystrophy) பாதிக்கப்பட்ட, மூளை முடக்குவாதம் பாதித்த, ஆட்டிசம் மற் றும் கற்றல் குறைபாடு என 8 வகை பாதிப்புடைய ஒன்று முதல் 18 வயது வரையிலான சிறப்புக் குழந்தைகள் உள்ளனர்.

இவர்கள் தங்கள் உடலை தூய்மையாக பராமரிப்பது, உடைகள் அணிதல், கழிப்பறையை பயன்படுத்துவது, பேச்சு மற்றும் எழுத்துப் பயிற்சி, தசைப் பயிற்சி போன்றவை சிறப்பாசிரியர்கள் மூலம் அளிக்கப்படுகின்றன. இப்படி, மாநிலம் முழுவதும் 430-க்கும் மேற்பட்ட மையங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்புக் குழந்தைகள் பயில்கின்றனர்.

அப்படி ஒரு பயிற்சி மையம் விருத்தாசலத் தில் அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்திலும் இயங்கி வருகிறது. 1 முதல் 18 வயது வரையிலான 24 குழந்தைகள் இங்கு உள்ளனர்.

பின்தங்கிய பகுதியில் போதிய விழிப்புணர்வு இல்லாத ஏழைக் குடும்பத்தில் சில பிரச்சினைகளோடு பிறக்கும் குழந்தைகளை பராமரிப்பதில் பெற்றோர் படும் சிரமம் துயரமானது. வழக்கமான பள்ளிக் குழந்தைகளுடன் அவர் கள் இணைந்து இயங்க முடியாது. அவர்களை அணுகி இந்த மையங்களைப் பற்றிச் சொல்லி இங்கே அழைத்து வருகிறார்கள் பயிற்றுநர்கள். குழந்தைகளை கையாள்வது குறித்து பெற்றோருக்கும் பயிற்சி அளிக்கின்றனர். இதுதொடர்பாக அப்பள்ளி யின் பயிற்றுநர் புஷ்பலதாவை சந்தித்தோம். அவர் கூறும்போது, “சில தன்னார்வ அமைப்புகளின் உதவியுடன் பள்ளியில், வகுப்பறையின் சுவர்களை அலங்கரித்து, சில விளையாட்டு உபகரணங்களை பெற்று அவற்றின் மூலம் சிறப்புத் திறன் உடைய இக்குழந்தைகளிடம் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறோம்.

ஆட்டிசத்தில் ஹைபர், ஹைபோ என இருவகைகள் உள்ளன. இங்குள்ள 3 மாணவர்கள் ஹைபர் வகையைச் சேர்ந்தவர்கள். ஒரு இடத் தில் இருக்க மாட்டார்கள். தனி ஆசிரியர் ஜெயக்குமார் மூலம் மாணவர்களுக்குப் பயிற்சி கொடுத்தோம். மற்ற மாணவர்களோடு பழக விட்டோம். இதுபோலத்தான் அனைத்துக் குழந்தைகளையும் கையாள்கிறோம். அவர்களிடம் தெரியும் மாற்றங்களைப் பார்த்து புது நம்பிக்கை உண்டாகி இருப்பதாக பெற்றோர் மகிழ்ச்சி பொங்க கூறும் வார்த்தைகளே நாங்கள் முழு ஈடுபாட்டோடு பணியாற்ற காரணமாக இருக்கிறது’’ என்கிறார் புஷ்பலதா.

“இப்பள்ளியில் பயிலும் 63 செமீ உயரமே கொண்ட ஜெயஸ்ரீ எனும் 8 வயது சிறுமி துருதுருவென அனைவரிடத்திலும் சகஜமாக பேசுவதும் ஆடுவதும் என அவளது செயல்களை பார்த்துக் கொண்டே இருக்கலாம். குறுகிய வயிற்றுப்பகுதியைக் கொண்ட அந்தச் சிறுமி யால் ஒரு இட்லி கூட சாப்பிட இயலாது. வலுவற்ற எலும்புகளால் நீண்ட நேரம் பென்சிலை பிடிக்கக்கூட முடியாது. ஆனால் அவரது தோழியான காதுகேளாத, பேசமுடியாத ஆர்த்திக்கு செய்கை மூலம் பாடம் நடத்துகிறாள் ஜெயஸ்ரீ. இது உழைப்புக்கு கிடைத்த பெருமையாகத்தான் பார்க்கிறார்கள் பயிற்றுநர்கள்.

இது கடலூர் மாவட்டத்திலேயே சிறந்த மையமாக மட்டுமின்றி மாநில அளவிலும் சிறந்த ஆதார மையமாக தேர்வு பெற்றிருக்கிறது. புஷ்பலதா, அருள்மொழி, ராஜேஸ்வரி ஆகிய 3 ஆசிரியைகளின் தன்னலமற்ற பணியால்தான் இந்த கவுரவம். இவர்கள் இயலாக் குழந்தைகள் அல்ல; சிறப்புக் குழந்தைகள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x