Published : 03 Apr 2018 01:15 PM
Last Updated : 03 Apr 2018 01:15 PM

யானைகளின் வருகை 154: வந்தாரய்யா மதுக்கரை மகராஜ்

தூவைப்பதியில் கொம்பன் வருகையால் ஏற்பட்ட திடீர் பதட்டம், ஆழியாறு குரங்கருவி அருகே குழு யானைகளுக்கு வழிகாட்டியாக நின்ற ஆண்யானை கொடுத்த அனுபவம் போல் யானைக் கூட்டங்களுக்கு ஆண்தான் தலைமை என சொல்ல இன்னும் பல சம்பவங்களை உதாரணம் காட்ட முடியும். அதையேதான் ரமேஷ் பேடி தன் நூலில் பல இடங்களில் விவரிக்கிறார்.

ஆனால் தற்போது நம்முள் நிறைந்திருக்கும் வனவர்கள், வனத்துறை அலுவலர்கள், சூழலியாளர்கள், கானுயிர் ஆர்வலர்கள், வனத்துறையில் பணிபுரியும் அனுபவம் மிக்க கால்நடைத்துறை மருத்துவர்கள் யாவருமே, ‘ஒவ்வொரு யானைக்கூட்டங்களுக்கும் தலைவி பெண் யானையே என உறுதிபடவே உரைக்கிறார்கள். அதையே இபான் அமைப்பின் நைஜில் ஓட்டரும் தொடர்ந்து சொல்லி வருகிறார். அதில் எனக்கு அவ்வளவு உடன்பாடில்லை .

மேற்சொன்ன சில சம்பவங்களை சொல்லி, ரமேஷ் பேடியின் ஆய்வு நூலில் உள்ள விஷயங்களையும் படித்துக் காண்பித்துவிட்டு கேட்டேன். ‘இப்போது சொல்லுங்கள் யானைக்கூட்டத்துக்கு தலைவன் ஆணா, பெண்ணா?’ என்று.

அப்போதும் அவர், ‘ஒரு கூட்டத்தில் எத்தனை யானைகள் இருந்தாலும் அதில் பாட்டி, அம்மா, மகள்கள், பேரன், பேத்திகள் என சகலமும் காணப்படும். அதில் முதிர்ந்த வயதுள்ள பெண் யானையே மற்றவற்றை வழிநடத்தும். ஒரு பெண் யானை பிரசவ வேதனையில் அவதிப்படும்போது அதில் தாய், சகோதரி, பாட்டி உள்ளிட்ட பெண் யானைகளே சுற்றி நின்று பிரசவம் பார்க்கும். அந்த பிரசவ காலத்தில் 6-7 மாதங்களுக்கு அவை எங்கும் செல்ல முடியாது. எனவே ஆறேழு மாதங்களுக்கு தனக்கு உணவு, தண்ணீர் கிடைக்கும் இடமாகத் தேர்வு செய்து அங்கே நிறைமாத கர்ப்பிணி யானையை நிலைநிறுத்தி வைப்பது கூட தலைவி யானைதான். அதேசமயம் பருவம் வந்த ஆண் யானைகள் அந்த கூட்டத்தை விட்டு விலகி 3 முதல் 5 கிலோமீட்டர் தொலைவிற்கு கூட செல்லும். அதில் உறவு கொள்ளத் துடிக்கும் ஆண் யானையை அனுமதிப்பது கூட தலைவி யானையின் அனுமதியின்றி நடக்காது!’ என்றெல்லாம் விவரணைகள் நிறையவே சொன்னார்.

‘அதுவே எப்படி இறுதி முடிவாகும்? அதை மேலும் ஆய்வுக்குட்படுத்த காரண காரியங்கள் இருக்கத்தான் செய்கின்றன!’ என சொல்லி அவர் கூற்றை இப்படி மறுதலித்தேன்.

‘மனிதகுலத்திற்கு கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறையை கற்றுக் கொடுத்ததே காட்டுயானைக் கூட்டங்கள்தான் என்பதை மனிதகுல வளர்ச்சி குறித்த ஆராய்ச்சியாளர்கள் பல இடங்களில் சொல்லியுள்ளார்கள். அப்படியே இதை எடுத்துக் கொள்வோம். இந்த மனிதகுலம் உணவு, உடை, இருப்பிடத் தேடலில் இன்னமும் பெண்ணையே சார்ந்துள்ளது. என்னதான் ஆண்கள் வெளியில் சென்று பொருள் சேகரிப்பில் ஈடுபட்டு வந்தாலும், அதைக் கொண்டு வந்து சேர்ப்பது வீட்டிற்குத்தான். அதை உணவு தயாரித்து பங்கீட்டு குழந்தைகளுக்கும், சகோதர, சகோதரிகளுக்கும் பங்கீட்டுக் கொடுப்பது அந்த வீட்டில் தலைமை வகிக்கும் தாய்தான். மேலோட்டமாகப் பார்த்தால் வெளியே சென்று பொருள் தேடலில் அதிகாரத் தேடலில் ஈடுபட்டு வரும் ஆண் ஒரு நாளைக்கு ஒரு நேரப்பொழுது மட்டும் வீட்டுக்கு வருகிறான்.

சில சமயங்களில் சில நாட்கள் கூட குடும்பத் தேவைக்காக வெளியூர் செல்கிறான். அதுவும் குடும்பத் தேவைக்கும், இந்த சமூகத் தேவைக்குமானதாகவே இருக்கிறது. அவனின் வருகையை எதிர்பார்த்தே குடும்பத்தின் மொத்த உறுப்பினர்களும் காத்திருக்கிறார்கள். இவன் ஆறறிவு படைத்த மனிதன் என்பதால் தாய்வழி சமுதாயத்திலிருந்து மாறி தந்தை வழி சமுதாயத்திற்கு ஆட்பட்டு, அதிகாரத்தை பெண்கள் மீதும் செலுத்தி இதை ஆணாதிக்கமாக மாற்றிவிட்டான். என்றாலும் பெண் இல்லையேல் அவனுக்கு ஒருங்கிணைவதற்கும், ஒருங்கிணைப்பிற்கும் சக்தியில்லை. தலைவியோ, தான் நிர்மாணித்திருக்கும் குழுவோ சேதப்படும்பொழுது அவன் பைத்தியம் பிடித்த நிலைக்கு ஆட்படுகிறான். அதுவே பொரும் தேடப்போன தலைவன் காணாமல் போனால் இந்தக்குழுவே கவலையில் ஆழ்கிறது. திக்குத் தெரியாமல் தவிக்கிறது. வேறொரு தலைவனை இவர்கள் இக்குழுவிலிருந்தே தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும் என்ற நிலை இருந்தாலும் கூட, அந்த தேர்வுக்கு இடைப்பட்ட காலகட்டத்திலான துவழ்ச்சி எல்லோருக்குமானதுதானே? அது கூட்டுக்குடும்ப வாழ்வை பின்பற்றும் யானைக்கூட்டத்திற்கும் பொருந்தித்தானே தீர வேண்டும்.

குழுவுடன் தலைவி இருப்பதாலேயே, அதுவே அந்தக் குழுவுக்கு எல்லா பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பதாக கருதவிடக்கூடாது அல்லவா? தூரத்தில் நிற்கும் அதன் குழுவைச் சேர்ந்த கொம்பனுக்கும், இந்தக் குழுவின் பாதுகாப்பில் பெரும்பங்கு இருக்கத்தானே வேண்டும். வேண்டுமானால் இப்படி வைத்துக் கொள்ளலாம். ஒரு குழு என்றால் தலைவி, தலைவனும் இருப்பார்கள். தலைவியினுடையது கிட்ட இருந்து குழுவைப் பராமரிப்பது, பாதுகாப்பது, தலைவனின் கடமை எட்ட இருந்து குழுவுக்கு தீங்கு வராமல் கண்காணிப்பது என்று கொள்ளலாமா?’ என்றெல்லாம் வாதம் செய்திருக்கிறேன். ஒரு கட்டத்தில், ‘யானைக்கூட்டத்திற்கு ஆணும், பெண்ணும் இரண்டுமே கூட தலைவன், தலைவியாக இருக்கலாம்!’ என்ற கூற்றை அவரும் அதை ஏற்றுக் கொள்ளத்தான் செய்தார். அவரை அப்படி ஒப்புக் கொள்ள வைக்க மதுக்கரை மகாராஜ் யானையும், அதனுடனான என்னுடைய அனுபவமுமே துணை புரிந்தது.

கோவை மதுக்கரையில் 2016 ஆம் ஆண்டு ஜூன் 19-ம் தேதி மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட காட்டு யானைதான் மகாராஜ். பல பேரை கொன்ற போக்கிரி யானையாக அது விளங்கியதால் அதை சுட்டுக் கொல்ல வேண்டும், அல்லது பிடித்து வனத்துறை முகாமிற்கு கொண்டு போக வேண்டும் என்ற கோரிக்கையை செய்து வந்தனர் விவசாயிகள். அதனையடுத்து இது மயக்க ஊசி போட்டு டாப் ஸ்லிப் - வரகளியாறு முகாமில் ‘டிரெயினிங் கிரால்’ எனப்படும் பயிற்சிக் கூண்டில் அடைக்கப்பட்டது.

தொடர்ந்து அடுத்தநாளே இந்த யானை பிடிக்கப்பட்ட இடத்தில் குழுவுடன் வந்த பெண் யானை ஒன்று ரயிலில் அடிபட்டு இறந்தது. அதற்கடுத்த நாள் டாப் ஸ்லிப் கராலில் அடைக்கப்பட்டிருந்த மகராஜ் யானையும் மரணத்தை எய்தியது.

‘வனத்துறை பிடித்தது வழிகாட்டி யானையே ஒழிய போக்கிரி யானையே அல்ல. அது ஒரு குழுவைச் சேர்ந்த வழிகாட்டி யானை. அதை போக்கிரி யானை மகராஜ் என வனத்துறை கருதி மாற்றிப் பிடித்துச் சென்று கூண்டில் அடைத்துவிட்டார்கள். அதில் வழிகாட்டி யானை இல்லாது தவித்த 4 யானைகள் கொண்ட குழுதான் அடுத்த நாள் திக்கு தெரியாமல் பதட்டத்தில் ரயில் பாதையில் சென்றிருக்கின்றன. அதில் தாய் யானை மட்டும் சிக்கிக்கொள்ள மற்ற யானைகள் தெய்வாதீனமாக தப்பியிருக்கின்றன. அதே போல் மகராஜ் என தவறுதலாகப் பிடிக்கப்பட்டு கராலில் அடைக்கப்பட்ட ஆண் யானை மயக்க ஊசி மருந்து டோஸ் அதிகம் போட்டதால் பரிதாபமாக உயிரை இழந்தது என்று ஒரு பக்கம் சர்ச்சைகள் கிளம்பின.

ஆனால் வனத்துறையோ தாங்கள் பிடித்து கராலில் அடைத்தது போக்கிரி யானை மகராஜ்தான். அது எந்தக் கூட்டத்தையும் சேர்ந்ததல்ல; வழிகாட்டி யானையும் அல்ல. அந்த யானை இறப்புக்குக் காரணம் தற்கொலை என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டனர் . அதற்கு முன்தினம் அடிப்பட்ட யானை வேறொரு குழுவைச் சேர்ந்தது. மகராஜ் பிடிப்பட்ட நாளில் இந்த விபத்தும் நடந்து விட இந்த யானையுடன் மகராஜையும் தேவையில்லாது முடிச்சுப்போட்டு புரளி கிளப்புகின்றனர் சிலர்!’ என்றும் தெரிவித்தனர்.

இதில் வேடிக்கை என்னவென்றால் எந்த இடத்தில் மகராஜ் பிடிபட்டதாகச் சொன்னார்களோ, அதே இடத்தில் அந்த நாள் இரவே இவர்கள் ஏற்கெனவே தேடிய மகராஜ் யானை பொதுமக்களின் பார்வையில் பட்டது. அதற்கு சில மாதங்கள் கழித்து மறுபடியும் இங்குள்ள தோட்டங்காடுகளை துவம்சம் செய்ய ஆரம்பித்தது. பிறகு அந்த யானையையும் மயக்க ஊசி போட்டு கூண்டில் அடைத்தது வனத்துறை.

இதை முகாமில் வைத்திருந்தால் எங்கே மேலும் ஒரு யானை இறப்பு நிகழ்ந்து சர்ச்சைக்குள்ளாகி விடுவோமோ என்ற எண்ணத்திலோ என்னவோ, இதைப் பிடித்தவுடனே டாப் ஸ்லிப்பிற்கு மேலே உள்ள சோலைக்காடுகளில் விட்டுவிட்டதாக கைகழுவிக் கொண்டது வனத்துறை.

இந்த இரண்டு யானை பிடி சம்பவத்திற்கும் எங்களுக்கும் நிறைய அனுபவம் உண்டு. அந்த அனுபவம் யானைகளைப் பற்றிய அறிதலையும், புரிதலையும், ஏன் உணர்தலையும் கூட கூடுதலாக்கி அடுத்தகட்ட எல்லையில் என்னைக் கொண்டு சென்று அமர வைத்தது என்றே சொல்ல வேண்டும். எப்படி? அது ஓர் அற்புத அனுபவப்பூர்வமான கதை. அது எல்லோருக்கும் வாய்க்குமா என்பது சந்தேகமே. அந்த கதையையும், அதைச்சுற்றி நிகழ்ந்த பல்வேறு நிகழ்வுகளையும் முழுமையாக மேலும் சில அத்தியாயங்கள் விவரிப்பதே இந்த தொடர் முழுமையாக முற்றுப் பெற உதவும். அது இந்த யானைகளின் வருகை தொடரை தொடர்ந்து சுவாசித்து வரும் வாசகர்களுக்கு உச்சபட்ச உணர்தலையும் ஏற்படுத்தும்.

-மீண்டும் பேசலாம்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x