Published : 09 Feb 2018 10:13 am

Updated : 09 Feb 2018 11:01 am

 

Published : 09 Feb 2018 10:13 AM
Last Updated : 09 Feb 2018 11:01 AM

பூமிக்கு குடை பிடிப்போம்: 5 மாணவர்களின் ஆச்சரிய ஆய்வு

5

 

21


00-ம் ஆண்டில், அதாவது இன்னும் 82 வருடங்களில் புவியின் வெப்பம் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என்றும் அதன் விளைவாக கடலின் நீர்மட்டம் உயரும் கடுமையான வறட்சி, விளைச்சல் குறைவு, இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பு போன்ற விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என எச்சரிக்கின்றன சர்வதேச ஆய்வு முடிவுகள்.

எதிர்வரும் தலைமுறைகளை காக்க வேண்டி ஆக்கப்பூர்வமான செயல்களில் இறங்கியுள்ளது புதுச்சேரி அரசுப்பள்ளியின் 5 பேர் கொண்ட மாணவர் படை ஒன்று.

புதுச்சேரி அடுத்துள்ள பனித்திட்டு அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் முகுந்தன், மகாவிஷ்னி, சுவேதா, பரணிதரணி, ஹரிணி, ஆகியோர்தான் இந்த மாணவர் படை. ஆசிரியை ஜான்சி லாவண்யா வழிகாட்டுதலில் புவியின் வெப்பத்தை குறைக்கக்கூடிய மரங்களை கண்டெடுக்கும் ஆய்வு திட்டத்தை தயாரித்தனர். இந்த ஆய்வில் மரங்களைக் கொண்டே பூமிக்கு குடை பிடிக்கலாம் என்ற உண்மையை அறிந்தனர்.

இவர்களின் ஆய்வு திட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற 25-வது தேசிய சிறார்கள் அறிவியல் மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டது. புதுச்சேரி சார்பில் தேர்வாகிய 6 ஆய்வுத் திட்டங்களில் இதுவும் ஒன்று.

இதுகுறித்து ஆசிரியை ஜான்சி லாவண்யா நம்மிடம் பேசும்போது, “வளரும் தலைமுறைக்கு இந்த புவியை, அதன் இயற்கைத் தன்மை கெடாமல் பாதுகாக்க சொல்லித் தருவது அவசியமாகிறது. இதன்படி, புவியின் வெப்பத்தை பெருமளவு குறைக்கக்கூடிய மரங்களை கண்டெடுக்கும் ஆய்வை பனித்திட்டு கிராமத்தில் மேற்கொண்டோம். அதிக எண்ணிக்கையில் உள்ள மரங்கள் மற்றும் அதிக நிழல் தரும் மரங்களைத் தேர்வு செய்து, அந்த மரங்களின் கீழ் நிலத்தின் வெப்பநிலை மற்றும் காற்றின் வெப்ப நிலை, காற்றின் ஈரப்பதம் போன்றவற்றை பதிவு செய்தோம்.

இதேபோன்று திறந்தவெளியில் நிலத்தின் வெப்பம், காற்றின் வெப்பநிலை, ஈரப்பதம் பதிவு செய்து இரண்டையும் ஒப்பிட்டோம். எந்தெந்த மரங்கள், தாவரங்கள், பூச்சிகள் போன்ற உயிரினங்கள் வாழ ஏற்ற சூழ்நிலையை அளித்திருக்கிறது என்பதை அறிய ‘ஃப்ளோரா (தாவர வாழ்வியல் சூழலை அறிவது) மற்றும் ஃபானா (பூச்சியினங்கள் வாழ்வியல் சூழலை அறிவது) ஸ்டடி’ என்கிற முறையில் இந்த ஆய்வை மேற்கொண்டோம். மேலும் காற்றிலுள்ள தூசுகளை சுத்தப்படுத்தும் திறனை அறிய ‘பெர்டிகுலேட் மேட்டர்’ என்ற ஆய்வை செய்தோம்.

இந்த ஆய்வின் முடிவில், சுற்றுச்சூழலுக்கு உகந்த, புவியின் வெப்பத்தை பெரிதும் குறைக்கக்கூடிய மரங்களாக ஆலமரம், அரசமரம், மாமரம், வேப்பமரம், மகிழமரம், பூவரசமரம் போன்றவை கண்டறியப்பட்டன.

உலகத்தை மாற்ற நினைத்தால் முதலில் உன் ஊரில் இருந்து தொடங்க வேண்டும் என்பதற்கு ஏற்ப பனித்திட்டு கிராமத்தின் தரிசு நிலங்கள் மற்றும் சாலையோரங்களில் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க தொடங்கியுள்ளோம். இந்த 5 மாணவர்களும் இதுவரை 125-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டுள்ளனர். இவர்களுடன் அதே கிராமத்தைச் சேர்ந்த தன்னார்வலர் சிவசக்கரவர்த்தியும் இணைந்துள்ளார் என்றார் ஜான்சி லாவண்யா.

இன்றைய தலைமுறையின் பணி எதிர்வரும் சந்ததிகளை காக்கும் என்பதை உணர்ந்து மரங்களை வளர்த்து அதை காப்பதன் மூலமே பூமிக்கு குடை பிடிக்க முடியும்.


Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author