Published : 28 Feb 2018 09:31 AM
Last Updated : 28 Feb 2018 09:31 AM

‘‘துணிமணி.. துண்டு.. பருப்பு வடை.. பணியாரம்..’’: இப்படியும் கற்கலாம் கணிதம்!- ஒரு அரசு பள்ளியின் ஆச்சரிய முயற்சி

குப்பறையில் மாணவர்கள் சத் தம் போட்டுக் கொண்டிருந்தால், ஆசிரியர் கோபத்தோடு ‘‘இது பள்ளிக்கூடமா, சந்தைக்கடையா?’’ என்பதைக் கேட்டிருப்போம். திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம் கே.கள்ளிக்குடியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உண்மையாகவே சந்தைக்கடை ஆகியிருந்தது.

‘‘பருப்பு வடை, உளுந்து வடை, பணியாரம்..’’

‘‘டீ.., காப்பி.. டீ.. காப்பி..’’

‘‘தக்காளி, வெண்டக்கா, கத்ரிக்கா.. உருளைக் கிழங்கு’’

என்ற மாணவ, மாணவிகளின் குரல் திரும்பிய பக்கமெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தது. பள்ளி முழுவதும் அவர்கள் கடை பரப்பி பலவிதமான பொருட்களை விற்று கொண்டிருக்க.. முகம் முழுவதும் பெருமிதத்தோடும், மகிழ்ச்சியோடும் ஒவ்வொரு ‘கடை’ வாசலில் நின்றும் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தனர் பெற்றோரும், ஊர் மக்களும்..

ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் கடலை உருண்டை, எள் மிட்டாய், தேங்காய் பர்பி என ஆளுக்கொன் றாய் வைத்து பிஸியாக வியாபாரத்தை கவனித்துக் கொண்டிருந்தனர். ‘கல்லருண்ட.. கல்லருண்ட.. பர்பி.. பர்பி’ என மழலை மாறாமல் அவர்கள் கூவுவதைக் கேட்க கூட்டம் அதிகம் திரண்டிருந்தது.

பள்ளிக்குள் சென்றால், ‘பாஸ்கரா துணிக்கடை’, ‘ஆரியபட்டா பேன்சி ஸ்டோர்’, ‘காந்திஜி புத்தகக் கடை’ என ஆங்காங்கே பல்வேறு கடைகள் முளைத்திருந்தன. துணிமணிகள், சுடிதார், துப்பட்டா, வேஷ்டி, துண்டு என தள்ளுபடி விற்பனை கனஜோராக நடந்தது.

பள்ளி வளாகத்துக்கு வெளியே சில மாணவர்கள் தேநீர், வடை, சுண்டல் என சிற்றுண்டிக் கடைகள் அமைத்திருந்தனர். காய்கறிக் கடையில் தக்காளி, வாழைப்பூ, கீரை கட்டு ஆகியவை ஜரூராக விற்பனையாகின.

மக்கள் கேட்கும் பொருட்களை எடை போட்டுக் கொடுத்து, அதற்கான பணத்தை வாங்கி கல்லாவில் போட்டு, மீதி பணத்தை எண்ணிக் கொடுத்து.. அமர்க்களப்படுத்திக் கொண்டிருந்தனர் மாணவர்கள்.

இன்னொரு பக்கம், உயரம் அளக்கும் கருவி, எடை காட்டும் கருவியை வைத்துக்கொண்டு ஒருசில மாணவர்கள் உட்கார்ந்திருந்தனர். அங்கு வருவோரிடம் ஒரு ரூபாய் நாணயத்தைப் பெற்றுக்கொண்டு அவர்களது உயரத்தையும், எடையை யும் அளவிட்டு அதை ஒரு சிறிய துண்டுச் சீட்டில் குறித்துக் கொடுத்த னர்.

மாணவர்கள் வியாபாரத்தை கவனிப்பதும், ஊர் மக்கள் இங்கும் அங்குமாக சென்று தேவையான பொருட்களை வாங்குவதுமாக அசல் சந்தையாகவே மாறிப்போயிருந்தது பள்ளி வளாகம். இப்படி ஒரு யோசனையை வழங்கி, இந்த திட்டத்துக்கு வழிகாட்டியாக இருந்தவர் கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் மருத நாயகம்.

‘‘வாழ்க்கையில் கணக்கு மிகவும் அவசியம். அதனால் மாணவர்கள் அதை நன்கு புரிந்து படிக்க வேண்டும். ரூபாய், பைசா, கிலோ கிராம், கிராம், மீட்டர், சென்டிமீட்டர், லிட்டர், மில்லி லிட்டர் என்று வகுப்பறையில் பாடமாக சொல்லிக் கொடுத்தாலும், மாணவர்கள் மனதில் நன்கு பதிவதில்லை. கடைக்குப் போய் ஏதாவது வாங்கிக் கொண்டு வா என்று பெற்றோர் அவர்களை அனுப்பினால், பொருட்கள் வாங்கியது போக மீதி சில்லறை எவ்வளவு, எவ்வளவு எடையில் பொருட்கள் வாங்கினோம் என்று அவர்களுக்கு தெரிவதில்லை. ஒரு கிலோவுக்கு எத்தனை கால்கிலோ, ஒரு மீட்டருக்கு எத்தனை சென்டி மீட்டர் என்று கேட்டால் குழம்புகிறார்கள். அதனால்தான், வாழ்வியலோடு இணைந்து அவர்களுக்கு இதையெல்லாம் சொல்லித் தரும் முயற்சியாக ஒரு விடுமுறை நாளன்று, இந்த சந்தைக்கு ஏற்பாடு செய்தோம்’’ என்றார்.

தொடர்ந்து மாணவர்களின் டீக்கடைக்கு நம்மை அழைத்துச் சென்றவர், ‘‘ரெண்டு டீ’’ என்று சொல்லிவிட்டு, 50 ரூபாய் நோட்டை கொடுத்தார். 2 டீக்கு ரூ.10 எடுத்துக்கொண்டு, மீதி பணம் ரூ.40-ஐ திருப்பித் தந்தனர் மாணவர்கள்.

பள்ளி தலைமை ஆசிரியர் கோ.திலகம் கூறியபோது, “இப்பள்ளியில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை 131 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இந்த சந்தை திட்டத்தை செயல்படுத்துவது குறித்து பெற்றோரிடம் பேசியபோது மிகவும் சந்தோஷப்பட்டனர். கணிதத் தை பலரும் கடினம் என நினைக்கின் றனர். அதை வாழ்வியலுடன் பயன்படுத்தினால் எளிதாக புரிந்துகொள்ள முடியும் என்பதை மாணவர்களுக்கு இந்த சந்தை மூலம் கற்றுத் தந்துள்ளோம். இதில் அனைத்து வகுப்பு மாணவ, மாணவிகளும் பங்கேற்றது கூடுதல் சிறப்பு” என்றார் மகிழ்ச் சியுடன்.

t1

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x