Published : 11 Jan 2018 04:36 PM
Last Updated : 11 Jan 2018 04:36 PM

யானைகளின் வருகை 116: துன்பக்கேணியான புதிய வலசை!

முதலில் சரணாலய விஸ்தரிப்பு என்று அச்சுறுத்தினார்கள். பிறகு புலிகள் காப்பகத்திற்கு என பயப்படுத்தினார்கள். அதற்கெல்லாம் பதிலடியாக போராட்டங்கள் செய்து எங்கள் நிலங்களை காப்பாற்றினோம். இப்போது அப்படியெல்லாம் முடியாதாதல் இதை யானைகளின் வலசை என சொல்லி எங்களிடமிருந்து நிலங்களைப் பிடுங்கி புலிகள் பெயரால் தனியாருக்கு தாரை வார்க்க திட்டமிட்டிருக்கிறார்கள் அதிகாரிகள் என்பதே இங்குள்ள விவசாயிகளின் கோபமாக அப்போது வெளிப்பட்டது.

பொக்காபுரத்தில் குரும்பர், இருளர் என 400 பழங்குடியின குடும்பங்கள் உள்ளன. மற்ற இனத்தைச் சேர்ந்த சுமார் ஆயிரம் குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்களில் பலர் ஆங்கிலேயர் காலத்திலிருந்தே விவசாயம் செய்து வருகின்றனர். இவர்களுக்காக 24 ஆயிரம் ஏக்கர் காட்டுப்பகுதி வருவாய்த்துறை நிலமாக மாற்றப்பட்டு இருக்கிறது. இந்த நிலங்களில் அடிக்கடி யானைகள் புகுந்து பயிர்களை மேய்வது வழக்கம். இருந்தும் யானைகளுக்குப் போக தங்களுக்கு ஏதாவது மிச்சம் இருந்தால் போதும் என்ற நினைப்பில்தான் இங்குள்ள விவசாயிகள் வாழ்கிறார்கள்.

யானைகளிடமிருந்து காக்க, அது உண்ணாத பயிரான உருளைக்கிழங்கு, கேரட், பூண்டு, வெங்காயம் போன்ற பயிர்களை பயிரிடுகிறார்கள். இங்கே காலம் காலமாக யானைகள் பயன்படுத்தும் வழித்தடங்களை இண்டியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் போன்ற அமைப்புகள் அறிவியல் ரீதியாக கணித்து வைத்துள்ளன. அதாவது பொக்காபுரம், மசினக்குடிக்கு இடையே விபூதி மலை அடிவாரத்தின் வலதுபக்கமாக மக்கள் வசிக்கிறார்கள். இதைத்தாண்டி இன்னொரு பக்கம் 2 முதல் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு அடர்ந்த மரங்களும், புல்வெளிகளும் உள்ளன.

அதற்குள்ளும், அதற்கு அப்பாலும்தான் அன்றாடம் யானைகள் வரும் போகும். அதேபோல் மசினக்குடி அருகே உள்ள உப்பல்லா பாலம், கல்லல்லா பாலம், பொக்காபுரம், மாவனல்லா, மரவங்கண்டி அணை, மாயார் பாலம் போன்றவைதான் மக்களாலும், வனத்துறையினாலும் ஒப்புக் கொள்ளப்பட்ட யானைகளின் வழித்தடங்கள். இன்றும் அந்தத் தடங்கள் பாதுகாக்கப்படுகின்றன. யானைகளைப் பொருத்தவரை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் தன் மூதாதைகளின் வழித்தடத்தை மாற்றிக் கொள்ளாத இயல்புடையது. அது விஞ்ஞானிகளுக்கு மட்டுமல்ல, மக்களுக்கும் தெரியும்.

மழைக்காலங்களில் காடுகளுக்குள் ஆறுகள், காட்டருவிகள் திடீரெனத் தோன்றி ஓடும். மழைக்காலம் முடிந்ததும் அவை காணாமல் போய்விடும். ஆறு தன் பாதையில் பழையபடி பயணிக்கும். அதுபோலத்தான் யானைகளும். ருசியான தீவனத்தை கண்டால் தங்கள் வழித்தடங்களை விட்டு சற்று விலகி, அவற்றை மேய்ந்துவிட்டு மீண்டும் தங்கள் வழித்தடங்களுக்கு திரும்பிவிடும். அந்த மாதிரி இடங்களை எல்லாம் புதிய வழித்தடங்கள் என்றால் எப்படி?

யானைகளை அவற்றின் வழித்தடங்களில் போக வைக்க வேண்டிய மேய்ப்பர்கள் வனத்துறையினர். திடீர், திடீரென எங்கள் விவசாய நிலங்களில் புகுந்து நான்கு தலைமுறைகளாக நாங்கள் பயிர் செய்யும் இடங்களை யானைகளின் புதிய வழித்தடம் என்கிறார்கள். பொக்காபுரத்தில் 22 பழங்குடியின குடும்பங்களை அதிகாரிகள் காலி செய்யச் சொல்லி இருக்கிறார்கள். எதிர்த்தால் சந்தனக்கட்டை, மான்கறி வழக்கு போடுவோம் என்று மிரட்டுகிறார்கள்.

யானைகளின் வழித்தடம் எது என்பதை யானைகளோ அல்லது இங்கு வாழும் மக்களோ, அல்லது விஞ்ஞானிகளோதான் தீர்மானிக்க வேண்டும். அதை விடுத்து ஒன்றும் அறியாத அதிகாரிகளும், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என்ற போர்வையில் அதகாரிகளின் கைக்கூலிகளாக செயல்படும் சில அமைப்புகளும் எப்படி தீர்மானிக்கலாம் .இதுவே விவசாயிகள் அப்போது வைத்த வாதமாக இருந்தது.

இதைப்பற்றி முதுமுலை பொக்காபுரம் பழங்குடியினர் நலச்சங்க செயலாளர் சந்திரனிடம் பேசியதில், ''மசினக்குடி, பொக்காபுரம் பகுதிகளில் 54 தங்கும் விடுதிகள் இருக்கின்றன. ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு ஊட்டியை விட இந்த இடங்கள் பிடித்திருப்பதால் இங்குள்ள தங்கும் விடுதகள் நல்ல வருமானம் பார்க்கின்றன. இது ஊட்டி லாட்ஜ்கார்கள் பலருக்கு பிடிக்கவில்லை. இதனால் அவர்கள் சில சுற்றுச்சூழல் அமைப்புகள், வக்கீல்களை தூண்டி விட்டு இந்த இடங்களை யானைகளின் புதிய வழித்தடம் என்று மாற்றி இங்குள்ள தங்கும் விடுதிகளை மூடப் பார்க்கிறார்கள். இவர்களது அரசியலுக்கு ஆதிகாலத்திலிருந்து இங்கு வசிக்கும் ஆதிவாசி மக்கள்தான் பலியாக வேண்டுமா? இங்கே யானைகளின் வழித்தடங்களை முடிவு செய்ய முதலில் 'பூர்வீக பூத் கமிட்டி' ஒன்றைப் போடவேண்டும். அதற்கு முன் விஞ்ஞானிகள் வந்து கணக்கெடுக்க வேண்டும். அதிகாரிகள்தான் பார்வையாளர்களாக இருக்க வேண்டும். சுற்றுச்சூழல் அமைப்புகள், வக்கீல்கள் என்று யாரும் வரக்கூடாது. மாவட்ட நிர்வாகத்திடம் இப்படியொரு கோரிக்கை வைத்திருக்கிறோம். அதற்கு இவங்க செவி சாய்க்கா விட்டால் போராட்டம்தான்!'' என்றார் அவர்.

''இங்கு வாழும் மக்களை கூண்டோடு வெளியேற்றி விட்டால் ஒட்டுமொத்த காட்டையும் கட்டியாளலாம் என்று வனத்துறை நினைக்கிறது. இதே முதுமலை சரணாலயப் பகுதியில் இதுவரை எத்தனை மரங்கள் வெட்டப்பட்டன? எத்தனை விலங்குகள் வேட்டையாடப்பட்டன என்பது யாருக்குத் தெரியும்?'' என்றார் மசினக்குடி மக்கள் வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வர்கீஸ்.

மசினக்குடியின் அப்போதைய (2010) பஞ்சாயத்து தலைவர் சங்கீதா பேசும்போது, ''யானைகளும் வாழணும். மனிதர்களும் வாழணும். பணம் போட்டு விதை, உரம் வாங்கி விவசாயம் செய்யும் எந்த ஒரு விவசாயியாவது யானை வரும் பாதையில் விவசாயம் செய்து நஷ்டம் அடைய விரும்புவானா? விவசாய நிலத்தைப் போய் யானைகளின் வழித்தடம் என்பது என்ன நியாயம்?'' என்று கேள்வி எழுப்பினார்.

''நாங்கள் யானைகளின் வழித்தடத்தை முறையாகத்தான் அளந்திருக்கிறோம். இது சம்பந்தமான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. அதைப் பற்றி எதுவும் சொல்ல முடியாது!'' என்று அப்போது பதிலளித்தனர் வனத்துறையினர். அதன் பிறகு என்ன நடந்தது?

''யானைகளின் வலசைப்பாதை என இப்பகுதியில் விஞ்ஞான ரீதியிலான முந்தைய கணக்கெடுப்பின்படி 537 ஏக்கர் நில எடுப்பு செய்ய வேண்டும் என்று கோடிட்டுக் காட்டப்பட்டிருந்தது. வனத்துறையின் ஆய்வுக்கமிட்டியின் அறிக்கை மூலம் சுமார் 7 ஆயிரம் ஏக்கர் நிலம் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இரண்டையும் பரிசீலித்த உச்ச நீதிமன்றம் இதில் எந்த கணக்கெடுப்பு சரி என்பதை தமிழக அரசே முடிவெடுக்க உத்தரவு பிறப்பித்தது. அதை வைத்து 7000 ஏக்கர்தான் சரி என்று தமிழக அரசு சொல்லிவிட்டது. பாதிக்கப்படும் மக்கள் அதை எதிர்த்து உயர் நீதிமன்றம் செல்ல, அவர்கள் அரசு சொல்லியிருக்கும் நிலங்களிலிருந்து மக்கள் வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டது. அது எப்படி சரியாகும். காலங்காலமாக யானைகள் எந்த வழியே செல்கிறது என்பது தொடர்ந்து செய்யப்பட்ட ஆய்வறிக்கை ஒன்றிருக்க, திடீரென்று ஒரு கமிட்டி சுட்டிக்காட்டிய நிலத்தை எப்படி கணக்கில் கொள்ள முடியும். அதுவும் காலங்காலமாக மக்கள் தாங்கள் குடியிருந்த பட்டா நிலத்தை விட்டு தாங்களாகவே வெளியேற வேண்டும் என்று சொன்னால் என்ன அர்த்தம்? இது உலகத்திலேயே எங்கேயும் இல்லாத சங்கதி. எனவே இதற்காக மக்கள் உச்ச நீதிமன்றத்தில் தடையாணை பெறப்பட்டுள்ளது!'' என்று குறிப்பிட்டார் வர்கீஸ்.

மேலும் வர்கீஸ் கூறுகையில், ''யானைகள் புகும் பட்டா நிலங்களை எல்லாம் யானைகளின் வலசை என்று அறிவிக்கும் வனத்துறையினர் எப்போதாவது யானைகளுக்கான காடுகளில் யானைகளுக்கான தாவரங்கள் விளைந்திட முயற்சி எடுத்திருக்கிறார்களா? அங்கே உண்ணிச்செடிகளாக வளர்த்து யானைகள் மட்டுமல்ல, எந்த விலங்குகளும் அதற்குள் நுழையமுடியாமல்தானே செய்திருக்கிறார்கள். அதனால் அந்த விலங்குகள் ஊருக்குள் வராமல் என்னதான் செய்யும். இன்றைக்கு ஊருக்குள் வரும் யானைகள் முப்பது , நாற்பது வயதான தென்னை மரங்கள் முதல் நேற்று நடப்பட்ட தென்னங்கன்றுகள் வரை முறித்து சாப்பிடுகின்றன. இது யானைகள் வலசை என்றால் 30 ஆண்டுகளுக்கு முன்பே இந்த மரங்கள் கன்றுகளாக இருக்கும்போதே முறித்து சாப்பிட்டிருக்க வேண்டுமல்லவா? ஏன் செய்யவில்லை. அப்போது காடு காடாக இருந்தது. அங்கே யானைகள் சாப்பிட உகந்த தாவரங்களும் இருந்தது. அதனால் இங்கே வரவில்லை. இப்போது அங்கே உணவு இல்லை. இங்கே வருகிறது. அப்படித்தானே?'' என்றும் உணர்ச்சி பொங்கக் கேட்டார்.

இப்படி 1997-ல் சரணாலய விஸ்தரிப்புப் போராட்டம் தொடங்கி, இன்று 20 ஆண்டுகள் கழித்தும் நிற்கும் புலிகள் காப்பகத்திற்கான பிரச்சினைகள் வரை மசினக்குடியும் அதன் சுற்றுவட்டார கிராம மக்களும் பட்ட துன்பம், பட்டு வரும் பிரச்சினைகள் நிறைய.

இந்த துன்பக்கேணியின் உச்சபட்ச வடிவம்தான் இந்த மக்களின் வாழ்வில் இரண்டறக் கலந்து நின்ற பல்லாயிரக் கணக்கான நாட்டு மாடுகளின் அழிவும், அதில் காணாமல் போன பால் வளமும்.

மீண்டும் பேசலாம்.

கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x