Last Updated : 20 Jan, 2018 07:24 PM

Published : 20 Jan 2018 07:24 PM
Last Updated : 20 Jan 2018 07:24 PM

சென்னை புத்தகக் காட்சி: ஒரு அரங்கத்தை தெரிஞ்சுக்கலாமா- பரிசல்

சென்னை புத்தகக் காட்சியில் 13 வருடங்களாக 'பரிசல்' அரங்கம் இடம்பெற்று வருகிறது. இதன் நிறுவனரைப் பற்றிக் கேட்டால், ''இலக்கிய உலகம், கல்விப்புலம், திரைஎழுத்து, அரசியல் இயக்கங்கள் என பலவிதமான துறைசார்ந்த நண்பர்களுக்கும் ஒரு பாலமாக இருக்கிறாரே பரிசல் செந்தில்நாதன், அவரையா கேட்கிறீர்கள்'' என்றுதான் கேட்கிறார்கள்.

பல ஆண்டுகளாக சைக்கிளில் புத்தகங்களை எடுத்துச்சென்று புத்தகங்களை விநியோகம் செய்துவருவதால் மட்டும் எல்லோருக்கும் வந்துவிடக்கூடிய பண்பு அல்ல அது. வெறும் வியாபாரம் என்ற அளவில் மட்டும் நில்லாமல் இனிய நட்பாகவும் வளர்த்துக்கொள்ளும் இவரது அரிய குணமும் ஒரு காரணம்.

புத்தகக் காட்சி வளாகத்தில் முதன்முதலாக சில ஆண்டுகள் இவரது அரங்கம் இடம்பெற்ற பிறகு கூட சைக்கிள் பயணம் தொடர்ந்தது உண்டு. கூடவே பரிசல் பதிப்பகத்தையும் தொடங்கினார். பரிசல் செந்தில்நாதன் வெளியிட்ட நூல்களுக்கு குடியரசுத் தலைவர் விருது உள்ளிட்ட விருதுகள் பலவும் கிடைத்துள்ளன.

சென்னைப் பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்களுடன் இணைந்து மாற்று வெளியீடுகள், மாற்றுவெளி (ஆசிரியர் பேரா.வீ.அரசு) இதழ்களையும் கொண்டுவந்தார். தற்போது படப்பெட்டி (ஆசிரியர் ஆவணப்பட இயக்குநர் ஆர்.ஆர்.சீனிவாசன்), இதழையும், இடைவெளி என்னும் இலக்கிய இதழையும் நடத்திவருகிறார்.

கடைக்கு வரும் நண்பர்களிடம் உற்சாகமாகப் பேசிக்கொண்டிருந்தவரிடம் சற்றே நெருங்கிப் பேசினோம்...

சைக்கிள் பயண புத்தக விநியோகத்துக்கும் புத்தகக் கடை நடத்துவதற்கும் உள்ள வித்தியாசமாக நீங்கள் நினைப்பது?

பெரிய வித்தியாசம் எதுவுமில்லை. புத்தக விநியோகம் அடிப்படை நோக்கம். என்றாலும் பலரையும் தேடிச்சென்று புத்தகங்கள் விநியோகித்ததை மறக்கமுடியாது.

1993 வாக்கில் ஆரம்பத்தில் இயக்க வெளியீடுகள் மட்டும் அரசியல்வாதிகளைத் தேடிச் சென்று கொடுத்துக்கொண்டிருந்தேன். பிறகுதான் பிஎச்டி மாணவர்களுக்கு புத்தகங்கள் தேவைப்படும் என்று தோன்றியது. அரும்பாக்கம் அருகிலுள்ள எம்எம்டிஏவிலிருந்து மெரினா பீச் எதிரே உள்ள சென்னைப் பல்கலைக்கழத்திற்கு புத்தகங்களை சைக்கிளிலேயே சுமந்துகொண்டு போனேன். ஆய்வு மாணவர்களுக்குத் தேவையான புத்தகங்களைக் கொண்டு போய் சேர்த்தேன்.

இதன்மூலம் பதிப்பகங்களும் மாணவர்களும் ஆசிரியர்களும் அறிமுகமானார்கள். அவர்கள் வழியே தமிழகம், இலங்கை என பேராசிரியர்கள்,  ஆய்வு மாணவர்கள் பலர் அறிமுகமானார்கள். கிடைக்காத புத்தகங்கள்கூட என்னிடம் கேட்டால் கிடைக்கும் என வருவார்கள்.

எல்எல்ஏ பில்டிங்ஸ், வடசென்னை கலை இரவு, ரோஜா முத்தையா நூலகம், தாம்பரம் கிறிஸ்தவக் கல்லூரி, திருவான்மியூர் பத்திரிகையாளர் குடியிருப்பு என என் சைக்கிள் சென்னை முழுவதும் வலம் வந்துள்ளது. பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள், அரசியல்வாதிகள், சினிமா துறையைச் சேர்ந்தவர்கள் என பல்வேறுபட்ட வாசகர்களிடம் புத்தகங்கள் கொண்டுபோய் சேர்த்திருக்கிறேன்.

தங்கள் நீண்ட கால அனுபவத்தில் புத்தகக் காட்சி அரங்கில் நினைவுகூரத்தக்க ஒன்று...

புத்தகக் காட்சியால் எதிர்பாராத புதிய நண்பர்களும் கிடைப்பது உண்டு. இங்கு உங்களிடம் சொல்வதற்கு ஒரு செய்தி உண்டு. சில ஆண்டுகளுக்கு முன் அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி பேட்டரி காரில் அமர்ந்து புத்தகக் காட்சியை சுற்றிவந்தார். அவரிடம் தங்கள் பதிப்பக வெளியீடுகளைத் தரலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. எங்கள் வெளியீடுகளில் ஒரு புத்தகத்தை அவரிடம் கொடுத்தேன். மூவாலூர் ராமாமிருதம் அம்மையாரின் வாழ்க்கை வரலாறு அது.

பா.ஜீவசுந்தரி எழுதியது. கருணாநிதி ஆட்சியில் கொண்டுவந்த மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண நிதியுதவித் திட்டம் பல ஏழைகளுக்கு உதவிகரமாக இருந்தது.

இந்நூலைப் பார்த்ததும் ஒரு புன்முறுவல். என்னை அருகே அழைத்து அப்புத்தகத்தை எழுதிய நூலாசிரியர், எங்கள் பதிப்பகம், என்னென்ன வகையான நூல்கள் வெளிவந்தன போன்ற தகவல்களைக் கேட்டறிந்தார். மகிழ்ச்சியோடு இன்னொரு பிரதியும் கேட்டு வாங்கிச் சென்றது இன்றுவரை மறக்க முடியாது.

உங்கள் முக்கியமான வெளியீடுகளைப் பற்றி சொல்லமுடியுமா?

1995-ல் பரிசல் வெளியீடாக முதன்முதலாக நாங்கள் கொண்டுவந்தது எஸ்.வி.ராஜதுரை எழுதிய பூர்தியுவும் மார்க்சியமும் என்ற நூல்தான். அதன் பிறகு பரிசல் கங்கு வரிசை கொண்டுவந்தோம். இந்திய தத்துவங்கள் என்றொரு புத்தகம் இதற்கு ஆசிரியர் ந.முத்துமோகன்.

ஆ.சிவசுப்பிரமணியன்- நாட்டார் வழக்காற்று அரசியல், தொ.பரமசிவம்- சமயங்களின் அரசியல், ராஜ்கௌதமன்- தலித்திய அரசியல், அ.மங்கை- பெண்ணிய அரசியல் உள்ளிட்ட 10 புத்தகங்கள் கொண்டுவந்தோம். இவை யனைத்தும் 64 பக்கங்கள். ரூ.25 விலையில் தந்தோம்.

அதன்பிறகுதான் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்களை இணைத்துக்கொண்டு தமிழ் இலக்கிய இலக்கண ஆய்வு தொடர்பான புத்தகங்களைப் பதிப்பித்தோம். அதில் முக்கியமானது மாற்றுவரிசை. அதற்கு சிறப்பாசிரியர் வீ.அரசு, வெளியீட்டாளர் நான்.

இது மட்டுமின்றி அ.மங்கை, நந்தமிழ் நங்கை, சித்ரலேகா மௌனகுரு, வண்ணநிலவன், மகாஸ்வேதா தேவி என பலரின் புத்தகங்களும் வெளிவந்துள்ளன.

இந்த ஆண்டு எங்கள் புதிய புத்தகங்கள் என்றால், மஞ்சள் வெயிலும் மாயச் சிறுமியும் கவிதை ஜெயகணேஷ், சீனக்கவிதைகள் ப.கல்பனா, வ.ரா எழுதிய கோதைத் தீவு. பேரா.அழகரசன் எழுதிய உட்பகை உணரும் தருணம், பா.விசாலம் நாவல்- உண்மை ஒளிர்க வென்று,  திருமாவேலன் எழுதிய காந்தியார் சாந்தியடைய ஆகிய புத்தககங்கள்.

தங்கள் பதிப்பக வெளியீடுகளுக்கு விருதுகளும் கிடைத்ததே?

உண்மைதான். இரண்டு தமிழ் இலக்கணம் தொடர்பான நூல்களுக்கு குடியரசுத் தலைவரிடம் பரிசல் படைப்பாளிகள் விருது பெற்றது குறிப்பிட்டுச் சொல்லலாம். சென்னைப் பல்கலைக்கழக ஆய்வு மாணவர்களாக இருந்த வே.பிரகாஷ் எழுதிய திணை உணர்வும் பொருளும் பா.இளமாறன் எழுதிய இலக்கண உரை வரலாறு ஆகிய இரு நூல்களும் இணைந்து மத்திய அரசின் செம்மொழிக்கான விருதுபெற்றன.

பரிசல் வெளியீடான 'இந்திய இலக்கியக் கோட்பாடு' மொழிபெயர்ப்புக்காக நல்லி திசை எட்டும் விருது கிடைத்தது. கேரள இலக்கிய அமைப்பு ஒன்றின் விருதும் இந்நூலுக்கு கிடைத்துள்ளது. பரிசல் வெளியீடுகளில் 'பருக்கை' நாவலுக்காக - 2016 யுவபுரஸ்கார் சாகித்ய அகாதமி விருது வீரபாண்டியனுக்குக் கிடைத்தது.

'சந்நியாசமும் தீண்டாமையும்' ராமானுஜம் எழுதியது இந்து புக் ஃபார் லைஃப் 2018-ல் ஏகே செட்டியார் விருது கிடைத்துள்ளது. இது மட்டுமின்றி, விகடன் விருது ராஜபாளையம் விருதுகளும் இந்நூலுக்கு கிடைத்தது.

ஆரம்பகாலத்தில் புத்தகம், வாசிப்புக்குள் வந்தது எப்படி?

புதுக்கோட்டை பொன்னமவராதியில்தான் நான் வளர்ந்தேன். அங்குள்ள நூலகத்திற்குச் செல்வேன். நாடகம், கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வேன்.

கையெழுத்துப் பிரதிகளைப் படிப்பேன். 1988-ல் சென்னை வந்தோம். 9-ம் வகுப்பு படித்து சென்னையில் 10-வது படிக்க வேண்டியது ஆனால் வீட்டுச்சூழல் படிப்பைத் தொடர முடியவில்லை. மருந்துக்கடை வேலைக்கு போக ஆரம்பித்தேன். 88, 90கள் வரை அது தொடர்ந்தது. ஒருநாள் சைதாப்பேட்டை வழியாக இரவில் வந்துகொண்டிருக்கும்போது காரணீஸ்வரர் கோயில் அருகே கலைஇரவு கூட்டம் நடந்துகொண்டிருந்து. மேடையில் மேலாண்மை பொன்னுச்சாமி, சுபமங்களா பத்திரிகை பற்றி பேசினார். அதை பழைய பேப்பர் கடையில் தேடிஎடுத்து வாசிக்க ஆரம்பித்தேன்.

இலங்கை எழுத்தாளர் செ.யோகநாதனை ஒருநாள் நான் வழக்கமாக செல்லும் ஜி.என்.செட்டி சாலை நூலகம் அருகே சந்தித்தேன். அவரிடம் பேசும்போது ‘பாலன் இல்லம்’ வாருங்கள் பேசலாம் என்றார். ‘பாலன் இல்லம்’ இந்தியக் கம்யூ.கட்சி அலுவலகம் இயங்கும் இடம். அங்கிருந்துதான் தாமரை இதழ் வந்துகொண்டிருந்தது.

தாமரை ஆசிரியர் சி.மகேந்திரன், உதவி ஆசிரியராக கவிதா பாரதி பணியாற்றினார். அவருக்கு உதவியாளராக வேலைகள் செய்தேன். ஓவியர்கள் மருது விஸ்வம் போன்றவர்களிடம் ஓவியம் வாங்கிவருதல் வேலைகள் செய்யும்போது அவர்களிடம் பழக்கம் வந்தது.

அல்லயன் பிரான்சிஸ், பிலிம்சேம்பர், மனோரமா பிரிவ்யூ தியேட்டர், நாடகம், சினிமா என தொடர்ந்து சென்றேன்.  அச்சமயங்களில் சுந்தரபுத்தனை சந்தித்தேன். அவர் ஊரில் இருந்தவரை 'காவ்யா' கையெழுத்து பத்திரிகை நடத்தியதைக் கேள்விப்பட்டேன்.  தீவிர கலை இலக்கிய அரசியல் பத்திரிகை 'பரிசல்' என்று தொடங்கப்பட சுந்தரபுத்தனே காரணமாக இருந்தார்.

'பரிசல்' இதழை எம்எம்டிஏ நூலகத்தில் வைப்பேன். அதைப் படிப்பவர்கள் முகவரியை கேட்டு வாங்கிக்கொண்டு எம்எம்டிஏவில் தமுஎகசவின் கிளை தொடங்கினேன். அந்தத் தொடர்புகளைக் கொண்டு பல்வேறு கலை இலக்கிய சினிமா ஆளுமைகளை அழைத்து இலக்கிய நகிழ்ச்சிகள் நடத்தினேன். இப்படித்தான் புத்தகம், வாசிப்பு, நட்புவட்டம் என அமைந்தது.

உங்கள் புத்தக வாழ்க்கையில் நிறைய திருப்பங்கள். அதில் நிறைய ஏற்ற இறக்கங்கள். அவற்றை எப்படி பார்க்கிறீர்கள்?

சென்னைக்கு வந்த புதிதில் ராமகிருஷ்ணா மடத்திற்கு அடிக்கடி செல்வேன். அங்கு சென்று வரும்போது அங்கேயே ஒரு துறவியாகிவிடலாமா என யோசித்ததுண்டு. ஆனால் சைதாப்பேட்டை கலை இரவுக் கூட்டம் என்னை மடைமாற்றிவிட்டது.

2015-ல் மழைவெள்ளத்தில் எனது சேகரிப்பில் 10 லட்ச ரூபாய் மதிப்பிலான புத்தகங்கள் வீணாகிவிட்டன. அதிலிருந்து மீண்டது பெரிய விஷயம். அதற்குக் காரணம் வாழ்வின் ஒவ்வொரு  காலகட்டத்திலும் நான் வளர்த்துக்கொண்ட எனது அருமை நட்புவட்டங்கள்தான்.

செந்தில்நாதன் அனுபவங்களைக் காணும்போது, பரிசல் ஒரு தனி பதிப்பகம் அல்ல ஒரு இயக்கம் என்பதையும் அவர் செல்ல இருக்கும் பாதையில் இன்னும் பல சாதனைகள் காத்திருக்கின்றன என்பதையும் நமக்கு உணர்த்துகின்றன...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x