Published : 04 Jan 2018 08:15 PM
Last Updated : 04 Jan 2018 08:15 PM

அதிகரித்து வரும் நிதி சமத்துவமின்மை: புதிய இந்தியா யாருக்காகப் பிறக்கும்?

உலக அளவில் மிகப் பெரிய ஜனநாயக நாடு, தொன்மையாக கலாச்சாரம் என பழம்பெருமைகள் ஒரு பக்கம், ஒளிரும் இந்தியா, புதிய இந்தியா, வளரும் வல்லரசு என புதிய புகழ் ஒருபக்கம். நாணயத்தின் இரு பக்கமும் பளபளப்பாக இருப்பதை இந்தியா இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு காட்டிக்கொண்டிருக்கும் என்பதுதான் எதிர்கால இந்தியாவுக்கான மிகப் பெரிய கேள்விக்குறி?

இந்தியாவின் பொருளாதாரம் குறித்து ஒவ்வொரு நாளும் விதவிதமான புள்ளிவிவரங்கள் வருகின்றன. 2022-ம் ஆண்டுக்கான இலக்கு, 2030-ம் ஆண்டுக்கான இலக்கு என அரசும் அறிவித்து வருகிறது. ஆனால் அதிகரித்து வரும் ஏழை-பணக்காரர் விகிதம் இந்தியாவின் மிகப் பெரிய அச்சுறுத்தலாக அமைய உள்ளது என்கின்றன ஆய்வுகள்.

இந்தியாவில் ஏழைக்கும் பணக்காரர்களுக்கும் இருக்கும் இடைவெளி உச்சத்தை தொட்டு நிற்கிறது என்றது கிரெடிட் சூயிஸ் நிறுவனத்தின் குளோபல் வெல்த் ஆய்வு. குறிப்பாக உலக அளவில் நிதி சமத்துவமில்லாத நாடுகளில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. இது மிகவும் ஆபத்தான நிலைமை என்கிறது அந்த ஆய்வு.

பணக்காரர்களின் சொத்து மதிப்பு மேலும் அதிகரிக்க அதிகரிக்க, தராசின் மற்றொரு தட்டு அதல பாதாளத்துக்குச் சென்று கொண்டிருக்கிறது. இந்திய பணக்காரர்கள் உலக பணக்காரர்கள் வரிசைப் பட்டியலில் இடம் பெறும் அதே நாட்டில்தான் கடன் சுமை காரணமாக பல்வேறு பகுதிகளிலும் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதும் அன்றாட நிகழ்வாக இருக்கிறது என்கிற உண்மை இதை உணர்த்துகிறது.

அதிகரிக்கும் பணக்காரர்கள்

கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவில் பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை நான்கு மடங்காக உயர்ந்துள்ளது என்று குறிப்பிடும் ஆய்வறிக்கை, இந்தியாவில் மொத்த வளத்தில் 60 சதவீதம் 1 சதவீத மக்களிடம் குவிந்துள்ளது என்கிறது.

2016-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட ஒரு கணக்கின்படி பெரும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் 92 சதவீத இந்தியர்களின் வருமானம் ஆண்டுக்கு 6.5 லட்சத்துக்கும் குறைவாகவே உள்ளது. இந்தியாவில் செல்வமும் சொத்துகள் சேர்ப்பும் அதிகரித்து வந்தாலும் இந்த வளர்ச்சியை அனைவரும் பங்கீடு செய்து கொள்வதில்லை என்கிறது அந்த ஆய்வு.

கடைசி இடம்

அதே நேரத்தில் நியூ ஆக்ஸ்பாம் நிறுவனம் கடந்த ஆண்டில் வெளியிட்ட ஒரு ஆய்வில், உலக அளவில் ஏழை-பணக்காரர் வித்தியாசத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளில் இந்தியா கடைசி இடத்தில் உள்ளது என்கிறது. உலக நாடுகளோடு ஒப்பிடுகையில், இந்தியாவில் மிகப் பெரிய அளவில் பொருளாதார சமத்துவமின்மை நிலவினாலும் அதை சரிசெய்ய போதுமான நடவடிக்கைகள் இல்லை என்கிறது.

தொலைநோக்குப் பார்வை இல்லை

வறுமை, பொருளாதார சமமின்மை உள்ளிட்ட சமூக பிரச்சினைகளை கையாளுவதில் அரசாங்கங்கள் தொலைநோக்குப் பார்வையில் செயல்படவில்லை. குறுகிய கால நோக்கில் அரசியல் தேவைகளைப் பொறுத்து முடிவு செய்யப்படுகின்றன. அரசியல்வாதிகளின் லாபத்திற்காக மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என்றும் ஆக்ஸ்பாம் ஆய்வு கூறுகிறது. ஏழை பணக்காரர் பொருளாதார சமமின்மையை களைவதற்கான நடவடிக்கைகளில் இந்தியா 132-வது இடத்தில் உள்ளது. உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இது மிக கடைசி வரிசையாகும்.

உலக வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள்படி 94 சதவீத ஏழை மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் இல்லை. கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவ சேவை உள்ளிட்டவற்றிலும் மிகப் பெரிய அளவில் சமத்துவமின்மை நீடித்து வருகிறது என குறிப்பிடுகிறது. இந்தியாவில் 5 நபர்களில் நான்கு பேர் ஏழைகளாக உள்ளனர் என்கிறது உலக வங்கி.

தொழில் தொடங்குவதை எளிதாக்குவதில் காட்டும் வேகத்தினை, ஏழை பணக்காரர் விகிதத்தை குறைப்பதற்கு காட்டவில்லை எனில் புதிய இந்தியா யாருக்காகப் பிறக்கும் என்கிற கேள்விகள் தவிர்க்க முடியாததாக இருக்கும் என்பதை அரசு உணர்ந்து கொள்ள வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x