Last Updated : 20 Jan, 2018 10:44 AM

 

Published : 20 Jan 2018 10:44 AM
Last Updated : 20 Jan 2018 10:44 AM

மீனை புடிச்சு கூண்டில் அடைச்சு..

தூத்துக்குடி மாவட்டம் சிப்பிகுளம் கடற்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் ரெக்சன் (37). ஐடிஐ படித்துள்ள இவர், மிதவைக் கூண்டுகளில் மீன் வளர்ப்புத் தொழிலில் முன்னோடியாக மாறியுள்ளார். சிப்பிகுளம் கடல் பகுதியில் மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் 2015-ல் சோதனை அடிப்படையில் மிதவைக் கூண்டில் மீன் வளர்க்கும் முறையை அறிமுகம் செய்தது. இங்குள்ள கடல் சூழ்நிலை, நீரின் தன்மை, அலையின் இயல்பு, ஆழம் போன்ற அனைத்து அம்சங்கள் குறித்தும் விஞ்ஞானிகள் ஓராண்டு காலம் ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில், சிப்பிகுளம் கடல் பகுதி மிதவை கூண்டுகளில் மீன்வளர்ப்புக்கு ஏற்ற இடம் எனக் கண்டறிந்தனர். இதையடுத்து, சோதனை அடிப்படையில் 2015-ல் மிதவைக் கூண்டுகளில் சிங்கி இறால் வளர்க்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அப்போது 2 கூண்டுகளில் சிங்கி இறால் வளர்த்தார் ரெக்சன்.

முதல்முறையிலேயே நல்ல பலன் தந்ததால், தொடர்ந்து அதிக ஆர்வம் காட்டினார். தற்போது, தமிழகத்தில் கூண்டுகளில் மீன்களை வளர்க்கும் முன்னோடி மீனவராக மாறியிருக்கிறார். தற்போது சிப்பிகுளம் கடல் பகுதியில் 4 கூண்டுகளில் சிங்கி இறால், கடல் விரால், கொடுவா ஆகிய மீன்களை வளர்க்கிறார்.

இதுகுறித்து ரெக்சன் கூறியதாவது:

‘‘இரும்பு மிதவை கூண்டுகளை மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையம் உருவாக்கியுள்ளது. காலியான பிளாஸ்டிக் டிரம்கள் மூலம் இந்தக் கூண்டுகள், கடலில் மிதக்க விடப்படுகின்றன. அலையில் கூண்டுகள் அடித்துச் செல்லப்படாமல் இருக்க இருபுறங்களிலும் நங்கூரம் போட்டு நிறுத்துவோம். சிங்கி இறால், கடல் விராலை பொறுத்தவரை ஒரு கூண்டில் 700 மீன்கள் வரையும், கொடுவா மீன்களை பொறுத்தவரை 1,000 வரையும் வளர்க்கலாம். 7-வது மாதத்தில் இவற்றை அறுவடை செய்யலாம். தினமும் காலை, மாலை இரு வேளையும் உணவு போட வேண்டும்.

ஒரு கூண்டு வடிவமைக்க ரூ.1.5 லட்சம் முதல் ரூ.2.5 லட்சம் வரை செலவாகும். ஒரு கூண்டை 5 ஆண்டுகள் வரை பயன்படுத்த முடியும். 7 மாதங்கள் காத்திருந்தால்தான் வருமானம் கிடைக்கும். ஒருமுறை வளர்த்தால் ஒரு கூண்டில் ரூ.1 லட்சம் வரை வருமானம் கிடைக்கும். செலவு போக கணிசமான லாபம் கிடைக்கும். கடலில், அதன் சூழ்நிலையிலேயே மீன்கள் வளர்க்கப்படுவதால் நோய்கள் எதுவும் பெரிதாக பாதிப்பதில்லை.

மிதவை கூண்டில் மீன் வளர்ப்புத் தொழிலுக்கு தேவையான தொழில்நுட்ப உதவிகளை தூத்துக்குடியில் உள்ள மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையம் அளிக்கிறது. அங்குள்ள விஞ்ஞானிகள் மாதம் 2 முறை இங்கே வந்து கூண்டுகளில் உள்ள மீன்களைப் பார்த்துவிட்டு, தேவையான ஆலோசனைகளை வழங்குகின்றனர். தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகளும் இந்த திட்டத்துக்கு ஊக்கம் அளிக்கிறார்கள். மிதவை கூண்டுகள் உள்ளிட்ட அனைத்து உபகரணங்களையும் தமிழக அரசு 100 சதவீத மானியத்தில் வழங் குகிறது’’ என்கிறார் ரெக்சன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x