Last Updated : 25 Jan, 2018 10:23 AM

 

Published : 25 Jan 2018 10:23 AM
Last Updated : 25 Jan 2018 10:23 AM

பிராணிகளுக்கும் இறுதிமரியாதை

சா

லையோரம் இறந்து கிடக்கும் நாய், பூனை போன்ற பிராணிகளையும் சக உயிராய் மதித்து எடுத்துச் சென்று புதைத்து அவ்விடத்தில் மரக்கன்று நட்டுவரும் உயிர்களின் நேசனின் பெயர் சரவணன். புதுச்சேரியில் இருக்கிறார்.

ஆதரவற்ற சடலங்களை எடுத்து புதைத்து மரியாதை செய்யும் மனிதநேயர்கள் பலரை பார்த்திருக்கிறோம். அதே நேயம் மிருகங்களின் மீதும் காட்டுகிறார் இந்த சரவணன். அவரிடம் பேசினோம்.

“புதுச்சேரி நாவற்குளத்தில் இருக்கிறேன். முன்பு டிரைவராக இருந்தேன். பலநேரம் சாலையோரம் பிராணிகள் அடிப்பட்டு கிடப்பதை பார்த்து வேதனை அடைந்திருக்கிறேன். 5 வருஷம் முன்பு எனது குழந்தைக்கு உடம்பு சரியில்லை. மருத்துவமனையில் சேர்க்க வேண்டியிருந்தது.

இறந்துபோன விலங்கின் கிருமி தொற்றிதான், குழந்தைக்கு இந்த பாதிப்பு வந்ததா மருத்துவர்கள் தெரிவித்தனர். அதே பிரச்சினையால் மேலும் சில குழந்தை மருத்துவமனையில் சேர்ந்தனர். பிராணிகள் இறந்து கிடக்கும்போது பரிதாபம் ஏற்பட்ட அதேநேரம் அவைகளால் பிரச்சினைகளும் உருவாகும் என்பதை உணர்ந்தேன்.

என் வீட்டு பக்கத்தில் ஒரு நாய் இறந்து கிடந்தது. எங்கள் பகுதியிலிருந்து ஏர்போர்ட் தாண்டி காலியாக கிடக்கும் இடத்துக்கு அதை எடுத்துச் சென்று அடக்கம் செய்தேன். என்னேவோ மனசுல சட்டுன்னு தோணுச்சி.. புதைச்ச இடத்துல ஒரு மரக்கன்றை நட்டு வச்சேன். அப்படியே இந்தப் பழக்கம் தொத்திக்கிச்சி.

இப்பல்லாம் ரோட்டோரம் இறந்து கிடக்கும் நாய், பூனை, பன்றி பிராணிகளை எடுத்து சென்று புதைப்பதை ஒரு வேலையாவே மாற்றிக் கொண்டேன். எங்கேயாவது பிராணிகள் இறந்து கிடந்தால் உடனே எனக்கு பலர் தகவல் தருகிறார்கள் என்று கூறும் சரவணன், இது தனது சேவைக்கு கிடைத்த அங்கீகாரம் என்கிறார்.

இதற்காக எப்போதும் தனது இரசக்கர வானத்தில் க்ளவுஸ், மாஸ்க், பினாயில், டெட்டால் வைத்திருக்கிறார். ஒரு ஜீவனை அடக்கம் செய்ய இருநூறு ரூபாய் செலவாகும் என்று கூறும் சரவணன், தொடக்கத்தில் இந்த சேவை பற்றி தனது வீட்டில் வாய் திறக்கவில்லையாம். சேவையின் எண்ணிக்கை 100-ஐ தொட்டதும் மனைவியிடம் சொல்லியிருக்கிறார். அவரும் அவரை ஊக்கப்படுத்த இப்போது அடக்கம் பண்ணிய பிராணிகள் எண்ணிக்கை 252-யை தொட்டிருக்கிறது. கூடவே 252 மரக்கன்றுகளும் நட்டு வைக்கப்பட்டுள்ள.

திருமணம் மற்றும் விசேஷங்களில் மீதமாகும் உணவை எடுத்துக்கொண்டு இல்லோதோருக்கும் விநியோகம் செய்வதையும் சமீபமாக தொடங்கியிருக்கிறார்.

தனது பகுதிக்குட்பட்டு பிராணிகள் எங்கேனும் இறந்து கிடந்தால், 98944 18642 இந்த எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் சொல்லலாம் என்று கூறுகிறார் சரவணன்.

பிராணிகளின் நல்லடக்கத்தால் கூடவே ஒரு மரமும் நடும் சரவணனின் சேவையை விவரம் தெரிந்தவர்கள் பாராட்டுகின்றனர். உண்மையில் 252 மரக்கன்றுகளுக்கும் பிராணிகளே விதைகளாகி இருக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x