Published : 24 Jan 2018 09:10 AM
Last Updated : 24 Jan 2018 09:10 AM

உப்பு நீர் குடிக்கும் எருமச் சாமி!

நீ

லகிரி மாவட்டத்தில் உள்ள பழங்குடியினர்களில், கால்நடை வளர்ப்பைத் தொழிலாக கொண்டவர்கள் தோடர்கள். இவர்கள், தங்களது கோயில்களுக்கு கூரை மாற்றும் ‘பொலிவெய்த்’ திருவிழா, புத்தாண்டை வரவேற்கும் ‘மொற்பர்த்’ திருவிழா மற்றும் திருமணம் தொடர்பான ‘வில் அம்பு சாஸ்திரம்’ என பல விழாக்களை எடுக்கின்றனர்.

எருமைகளை தங்களின் தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். அனைத்து விழாக்களி லும் எருமைகளுக்கு முக்கிய இடம் உண்டு. இதனால், எருமைகளுக்கென்று பிரத்யேகமாக ‘உப்பு சாஸ்திரம்’ என்ற விழா கொண்டாடுகின்றனர். கால்நடைகளை கோமாரி உட்பட பிற நோய்களில் இருந்து காக்க இந்த விழா கொண்டாடப்படுகிறது.

நீலகிரி மாவட்ட கிராமங்களிலும், முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டியுள்ள கிராமங்களிலும் வன விலங்குகளுக்கு கோமாரி நோய் பரவாமல் இருக்க முகாம் நடத்தப்படுவது வழக்கம். ஆனால், கோமாரி நோயை இயற்கையாகவே தடுக்க, தோடர்கள் காலங்காலமாக ‘உப்பு சாஸ்திரம்’ விழா நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக உதகை தமிழகம் மந்தையைச் சேர்ந்த தோடரின தலைவர்பி.ராஜன் கூறியதாவது:

தோடரின மக்களின் முக்கிய விழாவான ‘மொற்பர்த்’, தலைமையிடமான உதகை அருகே முத்தநாடு மந்தில் கொண்டாடப்படும். இந்த விழாவுக்கு 4 நாட்களுக்கு பின்னர், முத்தநாடு மந்திலேயே எருமைகளுக்கு உப்பு நீர் வழங்கும் ‘உப்பர்த்’ நடக்கும். இதற்காக, அங்குள்ள மைதானத்தில் பள்ளம் தோண்டி அதில் நீர் நிரப்பப்படும். இதில், கோயில் பூசாரி உப்பை கொட்டுவார். அந்த உப்பு நீரைப் பருக, முதலில் கோயில் எருமைகள் விடப்படும். அவை குடித்து முடித்த பிறகு, ஒவ்வொருவராக தாங்கள் வளர்க்கும் எருமைகளை உப்பு நீரை குடிக்க வைப்பர்.

பழங்காலத்தில், உதகையில் ஆண்டுக்கு 9 மாதங்கள் கனமழை பெய்து கொண்டே இருக்கும். அப்போது எருமைகளின் வாய், கால்களில் புண் ஏற்பட்டு குணமாகாமல் பரிதாபமாக இறந்துவிட்டன. இதற்கு என்ன காரணம் என புரியாமல் இருந்தபோது, வனங்களில் உள்ள ஒரு வகை மண்ணை விலங்குகள் உண்பதை முன்னோர்கள் பார்த்துள்ளனர். அந்த மண்ணில் உப்பு சுவை இருந்துள்ளது. பாதிக்கப்பட்ட எருமைகளுக்கு அந்த மண்ணை வழங்கியபோது, அவை குணமடைந்ததாகக் கூறப்படுகிறது. அதனால், அந்த மண்ணை வனத்திலிருந்து எடுத்து வந்து, நோய் பாதிக்கப்பட்ட எருமைகளுக்கு கொடுத்து வந்துள்ளனர். காலப்போக்கில் உப்பு எளிதாக கிடைத்த பின்னர், நீரில் கரைத்து எருமைகளுக்கு வழங்குவதை பின்பற்றி வருகிறோம் என்றார்.

நீலகிரி சுற்றுச்சூழல், கலாச்சார அறக்கட்டளை அறங்காவலர் எம்.சிவதாஸ் கூறும்போது, ‘நோய் தாக்குதலில் இருந்து, வன விலங்குகள் தங்களை காத்துக்கொள்ள இயற்கையே உதவுகிறது. வனங்களில் ஒரு வகை மண் உப்பு நிறைந்திருக்கும். இதை அறிந்துள்ள வன விலங்குகள், தங்களை நோய்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ள, அந்த மண்ணை தேடிச் சென்று உண்கின்றன. குறிப்பாக, யானைகள் இதை பின்பற்றுகின்றன. இந்த உப்பு சத்து, வன விலங்குகளை கோமாரி உள்ளிட்ட நோய்களில் இருந்து பாதுகாக்கிறது.

வறட்சிக் காலங்களில் விலங்குகளுக்கு நோய்த் தொற்று ஏற்படாமல் இருக்க, வனங்களில் உப்பு போடப்படும். இது சால்ட் லிக்ஸ் என்று அழைக்கப்படும். இதை தோடர்கள் அறிந்துள்ளனர். எனவேதான், தங்களின் எருமைகளை நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்க, உப்பு நீர் வழங்கி வருகின்றனர். இதை ‘உப்பு சாஸ்திரம்’ என்று ஆண்டுதோறும் விழா எடுத்து கொண்டாடுகின்றனர்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x