Last Updated : 13 Dec, 2017 06:18 PM

 

Published : 13 Dec 2017 06:18 PM
Last Updated : 13 Dec 2017 06:18 PM

காசநோயிலிருந்து குழந்தைகளைக் காக்கும் தடுப்பு முறைகள் என்ன?- மருத்துவர் கண்ணன் பேட்டி

 

உலக சுகாதார நிறுவனம் மதிப்பிட்டுள்ளதைக் காட்டிலும் உலக அளவில் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை 25 சதவீதம் அதிகமாக இருப்பதாகவும், உலக அளவில் காசநோய் பாதிக்கப்பட்ட குழந்தைகளில் 27 சதவீதக் குழந்தைகள் இந்தியாவைச் சேர்ந்தவர்களென்று லான்செட் என்ற மருத்துவ இதழ் புள்ளிவிவரங்களை வெளியிட்டிருக்கிறது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 74, 000 தொடங்கி 1,30,000 வரையிலான குழந்தைகள் காசநோய்க்குப் பலியாவதாக குறிப்பிடுகின்றன.

ஒன்பது இந்திய நகரங்களில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 76 ஆயிரம் குழந்தைகளில் 5,500 குழந்தைகள் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த இந்தியாவில் முழுமையாகக் கணக்கெடுப்பு நடந்தால் காசநோயால் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் குழந்தைகள் குறித்த விவரங்கள் கவலையை ஏற்படுத்தும் விதமாகவே இருக்கும்.

ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 10 லட்சம் குழந்தைகள் உலகெங்கிலும் காசநோயால் பாதிக்கப்படுகிறார்கள்.

இந்தியாவில் 42 சதவீத குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். உலகளவில் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் இருக்கும் மூன்று குழந்தைகளில் ஒரு குழந்தை இந்தியக் குழந்தை. ஊட்டச்சத்துக்கும் காசநோய்க்கும் என்ன தொடர்பு என்று கேட்கிறீர்களா? ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளை காசநோய் மிக எளிதாகத் தாக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

இந்நிலையில் காசநோய் குழந்தைகளுக்கு எந்த விதத்தில் பரவுகிறது, அதற்கான தடுப்பு முறைகள் என்ன, பரிசோதனை முறைகள் என்ன என்பது குறித்து குழந்தைகள் நல மருத்துவர் கண்ணனிடம் பேசினோம்.

காசநோய் குழந்தைகளுக்கு வர என்ன காரணம்? ஊட்டச்சத்தா? பெரியவர்களிடமிருந்தா? தொற்றுநோயாகவா?

காசநோய் மேற்கண்ட மூன்று காரணங்களாலும் குழந்தைகளுக்குப் பரவுகிறது. ஊட்டச்சத்து குறைபாடு இருந்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். இதனால் காசநோய் உட்பட பல நோய்க்கிருமிகள் குழந்தைகளின் உடலுக்குள் புகுந்து நோயை ஏற்படுத்துகின்றன.

காசநோய் இன்னொரு நபரிடமிருந்துதான் குழந்தைகளுக்கு வருகிறது. பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு பெற்றோர், தாத்தா - பாட்டி, பணிப்பெண், பக்கத்து வீட்டு நபர்கள் ஆகியோரிடமிருந்து பரவுகிறது. பள்ளிக்குச் சென்றால் அந்த சூழலில் இருக்கும் நபர்களுக்கு காசநோய் இருந்தால் அது குழந்தைகளுக்கு எளிதில் பரவுகிறது.

குழந்தைகளுக்கு காசநோய் வராமல் தடுக்க எந்த வகை தடுப்பூசி பயன்படுத்தப்படுகிறது? பிசிஜி தடுப்பூசியால் காசநோயை முற்றிலும் ஒழிக்க முடியுமா?

பிறந்த குழந்தை முதல் 2 வயது வரை ஆன குழந்தைகளுக்கு பிசிஜி தடுப்பூசி போடப்படுகிறது. இதனால் காசநோய் வராமல் தடுக்கலாம். இந்த தடுப்பூசியால் காசநோயை முற்றிலும் ஒழிக்க முடியும் என்று சொல்ல முடியாது. ஆனால், மூளையில் பரவும் காசநோய், உடல் முழுக்கப் பரவும் காசநோய் ஆகியவற்றை பிசிஜி தடுப்பூசி தடுக்கிறது.

குழந்தைகளுக்கு பொதுவாக ஏற்படும் காசநோயை பிரைமரி காம்ப்ளெக்ஸ் என்று சொல்கிறோம். குழந்தைக்கு பசி எடுக்காதது, அடிக்கடி சளியுடன் கூடிய காய்ச்சல் வருவது, உடல் எடை குறைவது ஆகியவை இந்த நோயின் முக்கிய அறிகுறிகள்.

நிமோனியா சளியாக மாறும்போது இருமல் சளி ஏற்படும். காசநோய் மூளைக்குப் பரவும் போது மயக்கம், வலிப்பு வரும்

பிரைமரி காம்ப்ளெக்ஸ் வகை காசநோய் நுரையீரலைத் தாக்கும். பிசிஜி தடுப்பூசி நுரையீரல் காசநோயை 100% தடுக்காது. ஆனால், அதற்குரிய மருந்துகள் மூலம் காசநோயைக் குணப்படுத்தலாம். காசநோய் வந்த பிறகு குழந்தைகளின் எடைக்குத் தகுந்தாற்போல ATT மருந்துகள் தரப்படுகின்றன. பெரியவர்களுக்கும், குழந்தைகளுக்கும் ATT என்ற மருந்து காசநோயை குணப்படுத்த பயன்படுத்தப்படுகிறது.

மூளையில் பரவும் காசநோய் என்றால் 9 மாதம் முதல் ஒரு வருடம் வரை சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.பிற காசநோய் என்றால் ஆறு மாசம் சிகிச்சை அவசியம்.

உடல்நலம் ஆரோக்கியமாக இருக்கும் குழந்தைக்கு காசநோய் எளிதில் தொற்றுநோயாகப் பரவாது என்பது குறிப்பிடத்தக்கது.

காசநோய் பரிசோதனை முறைகள்?

எக்ஸ்ரே பரிசோதனை, மான்டோ பரிசோதனை, ரத்தப் பரிசோதனை, ஜீன் டைப் பரிசோதனை மூலம் காசநோய் இருக்கிறதா அல்லது சந்தேகம் இருந்தாலும் பார்த்துக் கொள்வது நல்லது.

சளி பரிசோதனை செய்வதற்கு, குழந்தைகளுக்கு காறித் துப்பத் தெரியாது என்பதால் வயிற்றில் இருக்கும் சளியை எடுத்துப் பரிசோதனை செய்வோம். சளியில் இருக்கும் கிருமி பாசிடிவ் ஆக இருக்கும். சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் சளியை எடுத்துப் பார்த்து நெகடிவ் ஆக வந்தால் குணமடைந்ததாக பொருள் கொள்ளலாம்.

தோல் ஊசி பரிசோதனை எந்த வயதுக் குழந்தைக்கு எப்படி பயன்படுத்தப்படுகிறது?

மான்டோ பரிசோதனைதான் தோல் ஊசி பரிசோதனை என்று சொல்லப்படுகிறது. பிறந்து ஆறு மாதத்துக்கு மேல் ஆன குழந்தைக்கு மான்டோ பரிசோதனை செய்ய வேண்டும். ஒரு தடவை இந்த ஊசியைப் போட்டால் ஒன்றரை வருடங்களுக்கு போடக் கூடாது. ஆனால், இதைவிட நுண்ணிய தொழில்நுட்பம் கொண்ட பரிசோதனை முறைகள் இப்போது வந்துவிட்டன.

கர்ப்பிணி பெண்ணுக்கு காசநோய் இருக்கும் பட்சத்தில் குழந்தைக்கும் அந்நோய் வருமா?

கர்ப்பிணி பெண்களை காசநோய் தாக்கினாலும் குழந்தையை எளிதில் தாக்காது. அது அரிதினும் அரிது. அதுகுறித்து கவலைப்பட வேண்டியதில்லை.

பச்சிளம் குழந்தைக்கு காசநோய் இருப்பதை எப்படிக் கண்டறியலாம்?

மண்ணீரல், கல்லீரல் வீக்கம் இருந்து மூச்சுத்திணறல் இருந்தால் பச்சிளம் குழந்தைக்கு காசநோய் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

தாய்க்கு காசநோய் இருந்தால் பச்சிளம் குழந்தைக்கு அந்நோய் வராமல் தடுக்க, ஐ.என்.எச் மருந்து கொடுத்தால் காசநோயைத் தடுக்கலாம். அதற்குப் பிறகு தடுப்பூசி போடப்படுவதால் காசநோய் வராமல் தடுக்கப்படும்.

குழந்தைகளுக்கு ஏற்படும் ஊட்டச்சத்துக் குறைபாட்டை எப்படிப் போக்கலாம்?

பிறந்த குழந்தைக்கு ஆறுமாதம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அதற்குப் பிறகு திட உணவுகளை வழங்க வேண்டும். கமர்ஷியல் உணவுகளைத் தவிர்த்துவிட்டு புரதச்சத்து நிறைந்த உணவுப் பொருட்கள், பருப்பு வகைகள், தானிய வகைகள் கொண்ட உணவை வழங்க வேண்டும். இதுவே ஊட்டச்சத்துக் குறைப்பாட்டை போக்கும். பால் காய்ச்சும்போது தண்ணீரை கலக்கக் கூடாது.

பொறிகடலை, கடலை மிட்டாய், தேங்காய் ஆகியவற்றில் புரதம் உள்ளது. அதைக் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.

இந்தியாவில் 2 லட்சம் பேர் காசநோயால் பாதிக்கப்படுகின்றனர். மூன்றில் ஒரு பங்கு இந்தியர்கள் பாதிக்கப்படுகின்றனர். ஆனால், குழந்தைகளுக்கு வராது என்று அறியாமையில் இருந்துவிடுகின்றனர். இது தவறு.

மற்றவர்களுக்கு காசநோய் பரவவிடாமல் தடுக்க வேண்டும். இரண்டு வருடங்களுக்கு முன்பு வீட்டில் ஒருவர் காசநோயால் பாதிக்கப்பட்டிருந்தால் அதன் தாக்கம் இரு வருடங்களுக்குப் பிறகு குழந்தைகளைப் பாதிக்கவும் வாய்ப்பு உள்ளது.காசநோய்க்கு முழுமையான சிகிச்சை இருப்பதால் 100% குணப்படுத்த முடியும்'' என்றார் மருத்துவர் கண்ணன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x