Last Updated : 20 Dec, 2017 10:06 AM

 

Published : 20 Dec 2017 10:06 AM
Last Updated : 20 Dec 2017 10:06 AM

வீட்டுல இருந்த அண்டாவைக் காணோம்!

‘எ

ங்கடி இங்க இருந்த பழைய பித்தளை அண்டாவக் காணோம்..?’

‘ஷோ கேஸ்ல புதுசா ஒரு யானை சிலை இருக்கே நீங்க பார்க்கல..!’

‘அடியேய்.. அது எங்க ஆத்தா எனக்கு சீதனமா குடுத்தது. மூணு தலமுறையா பாதுகாத்து வெச்சிருந்த பரம்பரைச் சொத்த அநியாயமா இப்படி அழிச்சிட்டியேடி பாவி..’

கர்நாடகாவிலிருந்து வந்து மதுரையில் டென்ட் அடித்திருக்கும் கைவினைஞர் கூட்டத்தின் கைங்கர்யத்தால் மதுரைப் பக்கத்து வீடுகளில் இப்போது மாமியார் மருமக்கள் இப்படித்தான் குஸ்தி போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மரத்தடி நிழலில்..

மரத்தடி நிழலில் தனது சின்னம்மாவுடன் சேர்ந்து கடை விரிக்கிறார் அந்த இளைஞர். அதில், மீனாட்சி, காமாட்சி, துர்க்கை, விநாயகர், சிவன் தொடங்கி மீன், வாத்து, சீன வாஸ்து பொம்மை வரைக்கும் சிலைகளை அடுக்குகிறார். வீட்டிலிருக்கும் பழைய ஈயம், பித்தளைப் பாத்திரங்களைக் கொண்டு வந்து இந்தத் தம்பியிடம் கொடுத்துவிட்டு கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்தால் போதும். நம் கண் எதிரிலேயே நாம் கொண்டு வந்து கொடுக்கும் பாத்திரங்களை அழகுச் சிலைகளாக வார்த்துக் கொடுத்துவிடுகிறார்.

அற்புதமாய் இவர் சிலை வடிக்கும் அழகை மேஜிக் பார்ப்பது போல் மக்கள் கூடி நின்று வேடிக்கை பார்க்கிறார்கள். மதுரை டி.ஆர்.ஓ. காலனியில் இதை ஆச்சரியம் விலகாமல் பார்த்துக் கொண்டிருந்த பெண் ஒருவர், சூதாடி போல கைகள் பரபரக்க வீட்டில் கிடந்த பழைய பொருட் களை எல்லாம் மொத்தமாக வாரிக்கொண்டுவந்து இளைஞரிடம் கொடுத்துவிட்டு மூன்று சிலைகளுக்கு ஆர்டர் கொடுத்தார். ‘மூணுன்னா இன்னொரு பாத்திரம் வேணும்மா..’ என்று இளைஞர் கேட்க, கொஞ்சமும் யோசிக்காமல் வீட்டுக்குள் ஓடிப்போய், பழைய பித்தளை அண்டா ஒன்றை கொண்டு வந்து விட்டார். அந்த அண்டா யானையான பிறகு நடந்தது தான் மேலே கண்ட உரையாடல்!

பெண்களே இப்படியென்றால், சிறுவர்களைக் கேட்கவா வேண்டும்.. வீட்டில் இருக்கும் பழைய பொருட்களை எல்லாம் எடுத்துக்காட்டி, ‘அம்மா இதை உருக்கிச் சிலை செய்யலாமா..?’ என்று கேட்டு அம்மாக்களை ஆயுதம் ஏந்த வைக்கிறார்கள். அப்படித்தான், அலுமினிய சிலை செய்ய ஒரு பாத்திரம் குறைகிறது என்று, ஒரு பெண்மணி பழைய குக்கரைக் கொண்டுவந்துவிட்டார், இந்த நேரத்தில் தினகரன் ஆட்கள் பார்த்தால் நொந்தே விடுவார்கள்.

நடப்புத் தலைமுறை இதை வாய்பிளந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, மலைச்சாமி என்ற பெரியவர், “யப்பா, இது ஆதிகாலத்து டெக்னாலஜி. முனெல்லாம் இப்படி வீதி வீதியா வந்து குத்து விளக்கு, காமாட்சி விளக்கு செஞ்சி குடுக்கிற ஆளுக நம்ம ஊருலயே இருந்தாங்க. சிலைகளை செஞ்சு குடுக்க தானியங்களைத்தான் கூலியா வாங்குவாங்க. கம்மியான வருமானம்கிறதால அவங்க எல்லாம் அந்தத் தொழிலைவிட்டு கொஞ்சம் கொஞ்சமா விலகிட்டாங்க. இப்ப இந்தை வேலைக்கு கர்நாடகத்துலருந்து வந்துருக்காங்க’’ என்றார்.

வார்ப்புகளை உருவாக்குவதற்காக ஸ்பெஷலாக தயாரிக்கப்பட்ட மண் கலவையில் சிலைக்கான அச்சுக்களைப் பதித்து, வார்ப்பட அச்சை உருவாக்கி, அதில், உருக்கிய உலோகத்தை ஊற்றுகிறார் இளைஞர். வார்ப்படம் குளிர்ந்த பிறகு அச்சிலிருந்து சிலையை பிரித்து எடுத்து அதிலுள்ள பிசிறுகளை நீக்கி பாலீஷ் போட்டு நம் கையில் குடுத்துவிட்டு, ‘காசை எடு..’ என்கிறார்.

குல்பர்காவிலிருந்து வாரோம்

இளைஞரிடம் பேச்சுக்கொடுத்தேன். “நாங்க குல்பர்காவிலிருந்து வாரோம் சார். மொத்தம் 10 குடும் பங்கள் மதுரைக்கு பக்கத்துல உலகனேரியில டென்ட் போட்டுத் தங்கியிருக்கோம். அலுமினியத்தை உருக்க அதிகபட்சம் 450 டிகிரி செல்சியஸ் ஹீட் போதும். ஆனா, பித்தளைக்கு 700 டிகிரி செல்சியஸ் வேணும். அதுக்கேற்ப கரியும், சில வேதிப் பொருட்களும் செலவாகும். பித்தளைக்கு உடல் உழைப்பும் அதிகம் அதனாலதான், அலுமினியச் சிலைக்கு 250 ரூபாயும், பித்தளைச் சிலைக்கு 500 ரூபாயும் வாங்குறோம்” என்றார்.

“ரொம்ப நல்லாத்தான் பேசுறீங்க.. தம்பி உங்க பேரு?” என்றேன். “முகமது புரான்” என்றார் இளைஞர். ஆம், இப்படி, இந்துக் கடவுள் சிலைகளை நேர்த்தியாக வார்த்துக் கொடுக்கும் அந்த இளைஞர் ஒரு அக்மார்க் இஸ்லாமியர்!

படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x