Published : 22 Dec 2017 09:14 PM
Last Updated : 22 Dec 2017 09:14 PM

யானைகளின் வருகை 104: 22 கிராம் பாம்பின் விஷம் 6.5 லட்சம் ரூபாய்

 

கூடலூர் பகுதி மிகவும் வித்தியாசமான பிரதேசம் என்பதை பல முறை சொல்லிவிட்டோம். அது விநோதப் பொருட்கள் கடத்தல் விவகாரத்திலும், மாஃபியாக்கள் நடமாட்டத்திலும் கொடிகட்டிப் பறக்கிறதாகவே இன்றளவும் இருக்கிறது. அதில்தான் காட்டு மாடுகள் வேட்டையாடப்பட்டு காட்டி இறைச்சிகளாகவும், மான்கள் வேட்டையாடப்பட்டு மான் தோல், மான் இறைச்சிகளாகவும், யானைகள் வேட்டையாடப்பட்டு தந்தங்களாகவும், புலி சிறுத்தைகள் வேட்டையாடப்பட்டு அவற்றின் தோல், பற்கள், நகங்களாகவும் கேரளா, கர்நாடகா பகுதிகளுக்கு கடத்தப்படுகின்றன. அதில் ஒன்றாக நம்பவே முடியாத அளவுக்கு பாம்பு விஷக் கடத்தல் குற்றம் ஒன்று பிடிபட்டது. ஒரு துளி பாம்பின் விஷம் லட்சக்கணக்கான ரூபாய் பேரம் பேசப்பட்டது.

கூடலூரிலிருந்து 90 கிலோமீட்டர் தூரம் கேரள நகரான தளிப்பரம்பு. இங்கே உள்ள ரயில் நிலைய தங்கும் விடுதியில் சிலர் தங்கியிருப்பதாகவும், அவர்கள் இங்கிருந்து மங்களூருக்கு செல்லும் ரயிலில் பத்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள பாம்பு விஷப்படிகங்களைக் கடத்திச் செல்ல இருப்பதாகவும், அங்குள்ள வனத்துறையினருக்கு 2008-ம் ஆண்டு புத்தாண்டு தினச்செய்தியாக வந்து சேர்ந்திருக்கிறது.

வனத்துறையினரும் தரகர்கள் போலவே அந்த விடுதியில் சென்று விசாரித்துள்ளனர். அதில் கடத்தல்காரர்கள் மாத்யூ, சோமன், நாராயணன் ஆகிய மூவர் சிக்கியிருக்கின்றனர். அவர்களிடமிருந்து இரண்டு பிளாஸ்டிக் குப்பிகளையும் கைப்பற்றினர். அவற்றில் கண்ணாடிக் கற்களைப் போல பனங்கற்கண்டு வடிவங்களில் இருபத்தியிரண்டு கிராம் எடையுள்ள விஷப்படிகங்கள் இருந்துள்ளன. அவர்களைப் பிடித்து விசாரித்தனர் வனத்துறையினர். அதில் கற்பனைக் கதையிலும் படிக்க முடியாத சுவாரஸ்ய சம்பவங்கள் கடை விரித்துள்ளன.

சோமன், மாத்யூ ஆகிய இருவரும் பாம்புகள் பிடிப்பதில் வல்லவர்கள். இதில் சோமனின் அண்ணன் மோகன் என்பவர் ஒரு காலத்தில் பாம்பாட்டியாக இருந்தவர். பின்னாளில் விஷப் பாம்புகளுடன் கூண்டுக்குள் பத்து நாள், இருபது நாள் இருப்பது போன்ற சாகசங்களை செய்து பொதுமக்களிடம் காசு சம்பாதித்து வந்திருக்கிறார். அவருக்கு வெளிநாடுகளில் பாம்பின் விஷப்படிகங்கள் கடத்தும் ஏஜெண்டுகள் சிலர் அறிமுகமாகி உள்ளனர். 'எனக்கு இவ்வளவு பாம்பு விஷம் எடுத்துக் கொடுத்தால் இவ்வளவு தொகை தருகிறேன்!' என்ற பேரமும் நடந்திருக்கிறது.

பிறகென்ன? மோகன் பாம்புகளைப் பிடித்து விஷம் கக்க வைத்து விற்கத் தொடங்கியிருக்கிறார். பாம்பிலிருந்து எடுக்கப்பட்ட விஷத்தைப் பதப்படுத்தி படிகங்களாக மாற்றுவதற்கான தொழில்நுட்பம் கேரள கள்ளிக்கோட்டை பகுதியில் 1979வரை இருந்து வந்துள்ளது (அதாவது குறிப்பிட்ட அந்த ஆண்டுக்கு முன்பு வரை பாம்புகளைப் பிடித்து விஷம் கக்க வைத்து படிகம் ஆக்குவதற்கு எந்தவொரு தடையும் இல்லாமல் இருந்து வந்துள்ளது. அதன் பிறகுதான் இது குற்றமாகக் கருதப்பட்டு சட்டங்கள் வந்தனவாம். அந்த மெஷின்களும் தற்போது வழக்கொழிந்து போய்விட்டனவாம்).

அத்தகைய மெஷின்களில் ஒன்றை தேடிப்பிடித்து வாங்கி படிகமாக்கவும் ஆரம்பித்திருக்கிறார் மோகன். அதை சோமன், மாத்யூ, நாராயணன் மூலமாகவே தரகர்களிடம் கொடுத்து அனுப்பி வந்திருக்கிறார். இந்த பாம்பு விஷப் படிகங்கள், வெளிநாடுகளில் மருந்திற்காகவும், ஆராய்ச்சிக்காகவும் பயன்படுத்தப்படுகிறதாம். ஒரு கிராம் விஷப்படிகம் அமெரிக்கா, கனடா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் ரூபாய் மதிப்பில் ஐம்பதாயிரம் ரூபாய் வரை விலை போகிறதாம். அதுவே இங்கே கிராமுக்கு ரூபாய் 30 ஆயிரம் வரை தரகர்கள் விலை கொடுத்து வாங்கிக் கொள்கிறார்களாம்.

இதில் நாராயணனுக்கு தரகர்களிடம் கறாராக பேசும் வேலை. இவருக்கு வெளிநாட்டில் கடத்தல் பொருள் விற்கும் பல நபர்களிடம் தொடர்பு உண்டாம். இதில் அதிர்ச்சியான விஷயம். அவர் தளிப்பரம்பு கல்வி உதவி இயக்குநர் அலுவலகத்தில் முதன்மைக் கண்காணிப்பாளராகப் பணிபுரிந்து வந்ததுதான்.

''இப்போது இந்த 22 கிராம் விஷப்படிகங்கள் மட்டும் 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு விலை போகும். இந்த விஷத்தை சேகரிக்க மட்டும் தமிழகம், கேரளம், கர்நாடகா வனப்பகுதிகளில் நானூறுக்கும் மேற்பட்ட விஷப்பாம்புகளைப் பிடித்து விஷம் கக்க வைத்துக் கொன்றோம்!'' என்று கூறியிருக்கின்றனர் இந்த விஷக் கடத்தல்காரர்கள். அதன் பிறகு பாம்பு சாகசக்காரன் மோகனை வனத்துறையினர் தேட, அவர் தலைமறைவாகியிருக்கிறார்.

அதன் தொடர்ச்சியாக மோகன், மாத்யூ, சோமன் ஆகியோரின் வீடுகள் சோதனையிடப்பட்டன. அங்கே கொடிய விஷமுடைய ஒரு கழுதை விரியன், மூன்று நாகப்பாம்புகள் உள்பட ஆறு பாம்புகள் இருக்க, அதைக் கைப்பற்றியிருக்கின்றனர் வனத்துறையினர்.

பிறகு கைது செய்யப்பட்ட மூன்று பேரும், பிடிபட்ட பாம்புகளுடன் தளிப்பரம்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மீட்கப்பட்ட பாம்புகளை காட்டுவதற்காக பாம்பாட்டிகள் உதவியுடன் பாம்புகளை நீதிமன்ற வளாகத்தில் விட்டனர் வனத்துறையினர். அங்கே பாம்புகளும் படமெடுத்து ஆட, நீதிமன்றத்தில் பலரும் தெறித்து ஓடினர். அப்பாம்புகளை வனத்தில் கொண்டு போய் விட்டுவிட நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க, அப்படியே செய்த வனத்துறையினர். மேலும் இதுகுறித்த தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே இந்த சம்பவம் நடந்து இரண்டு நாள் கழித்து திருவனந்தபுரம் விமான நிலையத்தில் 480 மிலி விஷக் குப்பியுடன் இரண்டு பேரை போலீஸார் பிடிக்க, அதில் ஒருவர் தப்பிச் சென்றுள்ளார். பிடிபட்டவரின் பெயர் முகம்மது சாலி. தப்பியவர் பெயர் மணிகண்டன். இரண்டு பேருமே கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.

''இந்த 480 மிலி விஷத்தைக் கக்க வைக்க 250 நல்ல பாம்புகளைப் பிடித்தோம். ஒரு ஆரோக்கியமான நல்ல பாம்பிலிருந்து நான்கு மில்லி முதல் ஐந்து மில்லி வரை விஷம் கிடைக்கும். அனலி என்ற விரியன் வகைப் (கழுதை விரியன்) பாம்பிலிருந்து அதே அளவு விஷம் எடுக்கலாம். ஒரு பாம்பிடம் இரண்டு மாதத்திற்கு ஒரு முறைதான் விஷம் எடுக்க முடியும். இப்படி அடிக்கடி விஷம் எடுப்பதால் நிறைய பாம்புகள் இறந்து போகும். இந்தத் தொழிலை நாங்கள் மட்டுமல்ல, பாம்பாட்டிகள் நிறைய பேர் செய்து வருகின்றனர்!'' என்று விலாவாரியாக விவரங்களைச் சொல்லியிருக்கிறான் பிடிபட்ட முகம்மது சாலி.

இதையடுத்து கேரளத்தில் உள்ள அனைத்து பாம்பாட்டிகளையும் கண்காணித்து விசாரிக்கும்படி போலீஸ் அதிகாரிகளும், வனத்துறை அதிகாரிகளும் தன் கீழுள்ள ஊழியர்களுக்கு உத்தரவு பிறப்பித்தனர். இந்த உத்தரவு பிறப்பித்த மூன்றாம் நாள் மலப்புரத்தில் இரண்டு பாம்பாட்டிகளை 12 நல்ல பாம்புகளுடன் பிடித்தனர். அடுத்தடுத்தும் இதே போல் பிடித்தனர். அந்த காலகட்டத்தில் மட்டும்தான் அது நடந்தது. அப்படியே அது மறந்தே போனது.

இப்போதும் பாம்பாட்டிகள் மூலம் பாம்பு விஷம் சேகரிக்கும் கும்பல்கள் நிறையவே கூடலூர், பந்தலூர் கேரள எல்லைப் பகுதிகளில் சுற்றுவதாகவே குறிப்பிடுகிறார்கள் இப்பகுதி மக்கள். இந்த கடத்தல்காரர்கள் எல்லாம் மூன்று மாநில எல்லையிலும் உள்ள ஓட்டல்கள், தங்கும் விடுதிகளிலேயே தங்குகிறார்கள். திட்டமிடுகிறார்கள். அவர்களுடன் ரிசார்ட்ஸ் உரிமையாளர்களுக்கும் தொடர்பு உண்டு. சில ரிசார்ட்டுக்காரர்களே இந்தத் தொழிலை நிழல் தொழிலாக வைத்துக் கொண்டுள்ளனர் என்கின்றனர் விஷயமறிந்தவர்கள்.

ரிசார்ட்டுக்காரர்கள் பாம்பு, புலி, காட்டு மாடு, யானை, மான்கள் போன்றவற்றை வேட்டையாடுவதற்கும், சூழல் கேட்டுக்கு மட்டும்தான் துணைபுரிகிறார்களா என்றால் அதையும் தாண்டி மனித உயிர்களுக்கும் உலை வைக்கத்தான் செய்கிறார்கள். அதுவும் சில சமயம் வெளிநாட்டுக்காரர்கள் உயிருக்கு கூட உலை வைத்து விடுகிறார்கள். அதன் உச்சகட்ட நிகழ்வுதான் காட்டு யானை தாக்கி ஒரு பிரான்ஸ் பெண்மணி பலியான சம்பவம்.

மீண்டும் பேசலாம்.

கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x