Published : 21 Dec 2017 08:45 PM
Last Updated : 21 Dec 2017 08:45 PM

யானைகளின் வருகை 103: கருமந்திக்கூத்தும், புலித்தோல் பூசலும்...

மக்களின் கோரிக்கையை வனத்துறையினர் கண்டுகொள்ளவில்லை. தொடர்ந்து கருமந்தியால் கடிபட்ட பொதுமக்களே அதைப் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைக்க முயற்சி செய்தனர். இந்த மந்தி சுமார் 30 கிலோ எடை கொண்டது. அதைப் பார்க்கும்போதே ஒரு சிறுவனைப் போன்ற தோற்றத்தைக் கொண்டிருந்தது. அதன்பேரில் அதற்கு மூன்று மாதங்களுக்கு முன் ஒரு வீட்டிற்கு இந்த மந்தி வந்தபோதே வீட்டுக்கதவை பூட்டிவிட்டு வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

அவர்கள் சாவகாசமாக ஆறேழு மணி நேரம் கழித்து வர மந்தி தப்பிச் சென்றுவிட்டது. இதன் பின்பும் இப்பகுதியில் பல பேர் இந்த மந்தியிடம் கடிபட, திரும்ப அதைப் பிடிக்க முயற்சித்துள்ளனர். அந்த வகையில் ஒருநாள் ராணி என்ற பெண்ணின் வீட்டிற்குள் அந்த மந்தி நுழைந்துவிட்டது. அதைப் பார்த்த ராணி அதற்கு சாதுர்யமாக சாப்பாடு வைத்து, கதவைத் தாழிட்டுவிட்டு மக்களைக் கூவி அழைத்திருக்கிறார்.

வந்தவர்கள், 'இனி வனத்துறையினரை அழைக்கப் போனால் வேலையாகாது!'2 என்று சொல்லி தாமே அதைப் பிடிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கின்றனர். அவரவர் வீட்டிலிருந்த சாக்குப்பை, கித்தான் சாக்கு, பிளாஸ்டிக் வலைகள், கயிறு போன்றவற்றை வைத்து அதை அமுக்கியும் விட்டனர். பிறகு வனத்துறையினருக்கு தவகல் கொடுத்தனர்.

அவர்களோ, இந்த முறையும் வந்தது தாமதமாகத்தான். அப்படி வந்தவர்களும் அதைக் கொண்டு போவதற்கான கூண்டோ, வலையோ, பாதுகாப்பு ஆயுதங்களோ கொண்டு வரவில்லை. மந்தி காட்டிய சீற்றம் கண்டு குண்டுக்கட்டாக கட்டப்பட்டிருந்த அதைத் தொடவே பயந்தனர்.

இருந்தாலும் பொதுமக்கள் விடவில்லை. தங்களிடமிருந்த வலை, சாக்குப்பை, கயிறு போன்றவற்றுடனே அதை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். ''பொதுவாக இதை எந்தக் காட்டில் கொண்டுபோய் விட்டாலும், மக்களுடன் இரண்டறக் கலந்து விட்டதால் திரும்ப மக்கள் புழக்கம் உள்ள இடத்திற்கே ஓடி வந்துவிடும். அல்லது சமூக விரோதிகளால் வேட்டையாடப்பட்டு விடும். எனவே வன உயிரியியல் பூங்கா அல்லது மிருகக்காட்சி சாலைகளில் விட்டுவிடுங்கள்!'' என்றே பொதுமக்கள், சூழல், இயற்கை ஆர்வலர்கள் வனத்துறையினரிடம் கேட்டுக் கொண்டனர்.

ஆனால் அவர்களோ இங்கிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள கீழ்நாடுகாணி வனப்பகுதியில் கொண்டு போய் மந்தியை விட்டிருக்கின்றனர். இதற்கு அருகாமையிலும் மக்கள் குடியிருப்பு இருக்கவே செய்கிறது. போதாக்குறைக்கு இது கேரள எல்லைப் பகுதி வேறு.

ஆக, கருமந்தி திரும்ப அந்தக் குடியிருப்புக்குப் போகாதா? அங்குள்ள மக்களைக் கடிக்காதா? அப்படியே கடித்தாலும் இங்கேயுள்ள மக்கள் வனத்துறையிடம் அதைப் பாதுகாப்பாக பிடித்துக் கொடுத்தது போல், பிடித்துக் கொடுப்பார்களா? அல்லது அது கேரளா எல்லைப் பகுதி என்பதால் அங்குள்ள வனவிலங்குகள், வேட்டைக்காரர்களுக்கு இரையாகி விடாதா? என்ற கேள்விகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டிருந்தனர்.

வனத்துறையினரோ இதை ஒரு துளியும் சட்டை செய்யவில்லை. தாம் கொண்டு போன கருமந்தியை அப்படியே வைத்து புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டு, அதை சில பத்திரிகைகளுக்கு கொடுத்து, தாங்கள்தான் அதீதீர வீரசூர பராக்கிரமத்துடன் மந்தியைப் பிடித்து காட்டில் விட்டதாக செய்திகளை பரப்பிக் கொண்டிருந்தார்கள்.

இந்த கருமந்தி விவகாரத்தில் வனத்துறை செயற்கை விளம்பரம் தேடிக் கொள்கிறார்கள் என்று பந்தலூர் மக்கள் பேசிக் கொண்டிருந்ததற்கு அடுத்தபடியாக புலி வேட்டையை அதே வனத்துறையினர் கைகட்டி வேடிக்கை பார்ப்பதாக இங்கே ஒரு சர்ச்சை கொடி கட்டியது. அது ஒரு புலித்தோல் கடத்தல் கும்பலை மையமாக வைத்தே உருண்டதுதான் வேடிக்கை.

கூடலூர் மசினக்குடி பகுதிகளில் உள்ள ரிசார்ட்டுகளில் மான்கறி விருந்துகள் அவ்வப்போது நடப்பதும், அதற்காக மான்கள் வேட்டை தொடர்வதையும் ஏற்கெனவே தொடரில் எழுதியுள்ளோம். அதே போல் கர்நாடகா பந்திப்பூர் ரிசார்ட்டுகளிலும் நடப்பதாக புகார் உள்ளது.

அந்த வகையில் கூடலூர் பொக்காபுரம் பகுதியில் சேர்ந்த பரமேஸ்வரன், இவருடைய நண்பர் போரைய்யன் ஆகிய இருவரும் இணைந்து ரகு ஒன்பவரிடம் ஒரு புலித்தோலை விற்க முயன்றுள்ளனர்.

இவர்கள் வனத்துறையின் பறக்கும்படையிடம் கர்நாடக மாநிலம் குண்டல்பேட் அருகே 2005-ம் ஆண்டு ஆகஸ்ட் கடைசி வாரத்தில் பிடிபட்டனர். இதில் போரய்யனும், பரமேஸ்வரனும் குண்டல்பேட் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதில் போராய்யாவுக்கு குண்டல் பேட்டில் ஆதரவாளர்கள் அதிகம் என பேசப்பட்டது.

குறிப்பாக பந்திப்பூர் ரிசார்ட்டுகள் வைத்துள்ளவர்களுடன் படு நெருக்கம் எனப் பேசப்பட்டது. அந்த வகையில் இங்கே உள்ள பெரிய ரிசார்ட் முதலாளி ஒருவர் குண்டல்பேட் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஒருவரை கவனிக்கிற விதத்தில் கவனிக்க, அவருடைய ரிசார்ட்டுக்கே கொண்டு போய் குளிர விசாரிக்கப்பட்டுள்ளனர் கைதிகள்.

இதையடுத்து, ''போரய்யாவுக்கும், இந்த புலித்தோலுக்கும் சம்பந்தமில்லை. அவரின் நண்பர் பரமேஸ்வரனிடம் பல வருடங்களுக்கு மேலாக ஒரு புலித்தோல் இருந்திருக்கிறது. அவரின் குழந்தைக்கு உடல்நிலை சுகமில்லாது ஆஸ்பத்திரியில் இருப்பதால், அதற்கு செலவுக்காக வேண்டி புலித்தோலை விற்கப் பார்த்துள்ளார். ரகுவிடமும் பேரம் பேசியிருக்கிறார். அதைக் கொண்டுவர வாகன உதவி செய்யத்தான் போரய்யா சென்றுள்ளார். அவர் மீது எந்த குற்றமுமில்லை. பரமேஸ்வனும் இப்போதுதான் முதல் குற்றம் புரிந்துள்ளார். எனவே அவர்கள எங்கள் சொந்த ஜாமீனிலேயே விடுவிக்கப் போகிறோம்!'' என்று போலீஸார் இந்த வழக்கை ஊத்தி மூட, கூடலூரில் உள்ள சூழல் அமைப்பினர் சிலர் பொங்கினர். போராட்டக் களத்திலும் இறங்கி விட்டனர். அவர்களின் கோபத்தைப் பார்த்த கர்நாடக போலீஸ் கைது செய்த இருவரையும் ரிமாண்ட் செய்து விட்டது.

ஓரிரு வருடங்களுக்கு முன் முதுமலை தெப்பக்காடு வன உயிரின மியூசியத்தில் பல பொருட்கள் திருடு போனது. அதில் இரண்டு புலித்தோல்களும், சில சிறுத்தை தோல்களும் அடக்கம். இப்போது குண்டல்பேட் போலீஸாரால் கைப்பற்றப்பட்ட புலித்தோல் அதில் ஒன்றாக ஏன் இருக்கக்கூடாது? என்று இச்சம்பவத்தை தொடர்ந்து மக்களிடம் கேள்விகள் சுழல ஆரம்பித்தன.

அதையடுத்து குண்டல்பேட்டில் பிடிபட்ட புலித்தோலை பார்த்து வர தமிழக வனத்துறையினர் சிலர் சென்றனர். அதில் அவர்கள் என்ன கண்டுபிடித்தார்களோ இல்லையோ, பெரிய உண்மையை மூடி மறைத்திருப்பதாக குற்றம் சாட்டினர்.

இந்த விஷயத்தில் பல்வேறு விஷயங்களை குண்டல்பேட்டிற்கு சென்று ஆராய்ச்சி செய்து வந்த வன உயிரின ஆர்வலர் ஒருவர் நம்மிடம் இப்படி பேசினார்:

''பந்திப்பூர் டைகர் புராஜக்ட்ல இப்ப புலிகள் அதிகமாகியிருக்கு. அவை கூடலூர் மசினக்குடி வரை வந்து செல்கின்றன. போன மாதத்தில் மட்டும் மசினக்குடி வட்டாரத்தில் 15 எருமைகள் புலி அடிச்சே செத்திருக்கு. எருமைகள் மேல பதிஞ்சிருந்த நகக் கீறல்களை வைத்தே அதை டாக்டர்கள் கண்டுபிடித்து சொன்னாங்க. இப்படியிருக்க டைகர் இப்போ வேட்டையாடப்படறதை கைகட்டி வேடிக்கை பார்க்கிறாங்க அதிகாரிகள். குண்டல்பேட்ல அந்த புலித்தோலை நாங்களும் போய்ப் பார்த்தோம். அதில் ஒரே ஒரு நகம் மட்டும்தான் இருக்கு. தோலை நல்லா பாலீஷ் பண்ணியிருக்காங்க. கால் பகுதிகளில் எங்கேயும் ஆணி குத்தின அடையாளமோ, சுவற்றில் மாட்டப்பட்டதற்கான அறிகுறியோ இல்லவே இல்லை. அதை வச்சுப் பார்க்கும்போது ஒரு சில மாசம் முன்னாலதான் அந்தப்புலி வேட்டையாடப் பட்டிருக்க வேண்டும். தாங்கள் கொடுத்த பிரஷ்ஷரின் பேரில்தான் தமிழ்நாடு வனத்துறை இதை விசாரிக்கவே தொடங்கியிருக்கு. இப்படியிருந்தால் எத்தனை புலிகள் காப்பகம் அமைத்தாலும் புலிகளை காப்பாற்ற முடியாது!'' என்றனர்.

மீண்டும் பேசலாம்.

கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x