Published : 04 Dec 2017 03:04 PM
Last Updated : 04 Dec 2017 03:04 PM

யானைகளின் வருகை 93: விஐபிக்கு வளைந்த செக்சன்-17

1998-ல் நடந்த, 'புலிகள் வாழ நாங்கள் சாக வேண்டுமா?' என்ற கோஷத்தை முன்வைத்து நடந்த மாபெரும் போராட்டத்தை தொடர்ந்தும் வெவ்வேறு விதமான பல போராட்டங்களை சர்ச்சைக்குரிய ஜென்மி நிலத்தை ஒட்டி கூடலூர், பந்தலூர் நகரங்கள் சந்தித்தன. அதே சமயம் புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டு, அதனால் வரும் இடையூறுகள், வாழ்வாதார நிமித்தமும் அவ்வப்போது மசினக்குடி, மாவனல்லா உள்ளிட்ட கிராமங்களிலும் போராட்டங்கள் எழுவதும், அடக்கப்படுவதுமாக தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. அதில் 2012-ம் ஆண்டில் மற்றொரு குலுக்கலை சந்தித்தது கூடலூர்.

இது மாபெரும் மனித சங்கிலிப் போராட்டம். அப்போதும் ஒன்றல்ல, இரண்டல்ல, சுமார் நூறு கி.மீ. தூரம் கிட்டத்தட்ட 25,000 மக்கள் கூடலூர் தொடங்கி பாட்டவயல், தேவர்சோலை, நிலாக்கோட்டை, அய்யன்கொல்லி, எருமாடு, சேரம்பாடி, சேரங்கோடு, பந்தலூர், தேவாலா, நாடுகாணி என்று மொத்தம் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஊர்களுக்கு இந்த மனித சங்கிலி போராட்டம் துண்டு துக்காணியாக நீண்டது. இந்த ஊர்களில் உள்ள பல்லாயிரக்கணக்கான கடைகள் அன்றைய தினம் மதியம் இரண்டுமணி தொடங்கி நான்கு மணிவரை அடைக்கப்பட்டன. இந்த மனித சங்கிலி போராட்டத்தில் அதிமுக, திமுக, காங்கிரஸ், தேமுதிக, முஸ்லீம் லீக், விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளும் நீக்கமற கலந்திருந்தனர். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் 3 முக்கிய கோரிக்கைகளை வைத்தனர்.

செக்சன்-17 நிலத்தில் 'வனத்திற்கும், வனஉயிரினங்களுக்கும், சாதாரண மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படாமல் தமிழக அரசே முடிவு செய்து கொள்ளலாம்!' என்று உச்ச நீதிமன்றம், 2008-ம் ஆண்டில் ஒரு உத்தரவை வழங்கியது. இதையடுத்து சர்ச்சைக்குரிய நிலங்களில் சுமார் 12,000 ஏக்கரை வனப்பகுதியாக தமிழக அரசு 2011-ம் ஆண்டில் அறிவித்தது. அதை அரசு கெஜட்டிலும் வெளியிட்டது. வனத்தை இனம் கண்டு இப்படி அறிவித்த அரசு இங்குள்ள விவசாய நிலங்களையும், எஸ்டேட் நிலங்களையும், தோட்டங்களையும் இனம் கண்டு உரியவர்களுக்கு பட்டா வழங்கவில்லை. அதை உடனே செய்ய வேண்டும்! என்பது முதல் கோரிக்கை.

முதுமலை புலிகள் காப்பகமாக மாற்றப்பட்டபோது அதன் 325 சதுர கிலோமீட்டர் பரப்பளவையே கோர் ஜோன் (புலிகளின் வாழ்விடம்) 100 சதுர கிலோமீட்டர் எனவும், மீதி 125 சதுர கிலோமீட்டர் பஃபர் ஜோன் (புலிகளின் மேய்ச்சல் பகுதி) என பிரித்து அறிவித்திருக்க வேண்டும் அரசு. ஆனால் 325 சதுர கிலோமீட்டரையும் புலிகள் வாழ்விடமாக அறிவித்துவிட்டனர். பிறகு மத்திய அரசு புலிகளின் மேய்ச்சல் பகுதி எது என்று கேட்டபோது மக்கள் வாழும் முதுமலை சுற்றியுள்ள கிராமங்களை காட்டியிருக்கிறார்கள். இதனால் கூடலூர், பந்தலூர் தாலுகாவில் உள்ள 54 கிராம மக்களையும் ஊரை விட்டு வெளியேறுமாறும், விவசாயிகள் தங்கள் நிலங்களிலேயே விவசாயம் செய்யக்கூடாது; ஆடுமாடு மேய்க்கக்கூடாது என அச்சுறுத்துகின்றனர். எனவே 'புலிகள் மேய்ச்சல் பகுதி!' என்று அறிவித்திருப்பதை ரத்து செய்ய வேண்டும் என்பது இரண்டாவது கோரிக்கை.

அடுத்ததாக கூடலூர் பகுதியில் மட்டுமல்லாது நீலகிரி மாவட்டத்தின் பெரும்பகுதியில் தனியார் வனப் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தியிருக்கிறது அரசு. இங்குள்ள நிலங்களை வாங்குவதும், விற்பதும் ஆட்சியர் தலைமையில் உள்ள மாவட்ட தனியார் வனப் பாதுகாப்பு கமிட்டியிடம் அனுமதி வாங்கிவிட்டுதான் செயல்படுத்த வேண்டும் என்கிறார்கள். இதற்காக அனுமதி கேட்டு பல்லாயிரக்கணக்கான விண்ணப்பங்கள் ஆட்சியர் அலுவலகத்தில் காத்துக் கிடக்கின்றன. ஆனால் அனுமதிதான் கிடைக்கவில்லை. இது சாமானியர்களை ரொம்பவுமே பாதிக்கிறது. கன்னியாகுமரியிலும், நீலகிரியிலும் மட்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது இச்சட்டம். அதற்கு நாங்கள் மட்டும் என்ன பாவம் செய்தோம். இந்தச் சட்டத்தை உடனடியாக நீக்க வேண்டும்! என்பது மூன்றாவது கோரிக்கையாக நீண்டது.

இந்தப் போராட்டங்களுக்கு பிறகும் இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவில்லை அரசு. அதன் விளைவு 2017 மே மாதத்தில் வேறொரு போராட்ட இயக்கம் வேறு வண்ணத்தில் இங்கே வெடித்தது. சர்ச்சைக்குரிய செக்சன் 17 நிலங்களில் அரசு சொல்லும் புள்ளிவிபரங்களின் படி 5875 மக்களிடத்தில் விவசாய நிலங்களும், 8306 மக்களிடத்தில் வீடுகளுமாக மொத்தம் 14,181 பேர் இந்நிலங்களில் இருப்பதாக தெரிவிக்கிறது. உண்மையில் இதைவிட சில ஆயிரம் மக்கள் கூடுதலாக இருக்கிறார்கள். இவர்களுக்கு இன்னமும் அரசு பட்டா கொடுத்து நில உரிமையை அளிக்காததால் அங்கே மின் இணைப்பு கூட கொடுக்கப்படவில்லை.

'ஆதார் அட்டையை வழங்கிய அரசு ஏன் மின் இணைப்பு வழங்க மறுக்கிறது. காடுகளுக்கு மத்தியில், மலைமுகடுகளில், வனவிலங்குகளின் நடமாட்டத்திற்கு மத்தியில் மின்சார வெளிச்சம் இல்லாத ஒரு இருள் வாழ்க்கையைத்தான் மக்கள் வாழ வேண்டுமா?' என கேள்விகள் கேட்டு, 'மின்சாரம். அது எமது அடிப்படை உரிமை' என்ற கோஷத்துடன் மக்கள் அப்போது அணி திரண்டனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தொடங்கிய இந்தப் போராட்ட இயக்கத்தில் மட்டும் மூன்று கட்டங்களில் சுமார் 10 ஆயிரம் பேர் ஒரே சமயத்தில் மின் இணைப்பு கேட்டு மின்சார அலுவலகங்களில் விண்ணப்பம் அளித்து புதியதொரு அமைதிப் போராட்டத்தை நடத்தினர். அப்படியும் இந்த விவகாரத்திற்கு விடிவு தரவில்லை அரசு.

ஆனால் சமீபத்தில் ஆளும் கட்சிக்கு நெருக்கமாக உள்ள ஒரு பிரமுகர் சமீபத்தில் வாங்கிய நிலத்திற்கு மாவட்ட நிர்வாகத்தின் அனைத்துத் துறைகளும் விரைவான சேவையும், தடையில்லாச் சான்றும் வழங்கி மின் இணைப்பும் அளித்து மக்களையே அதிர்ச்சியூட்டினர் அதிகாரிகள்.

இந்த நிலம் கூடலூர் சில்வர் கிளவுட் எஸ்டேட்டிற்கு அருகில் உள்ள சிக்மோயார் என்ற இடத்தில் 16 ஏக்கர் நிலத்தை அந்த ஆளுங்கட்சி பிரமுகர் வாங்கியிருக்கிறார். அந்த நிலத்தில் விவசாயப் பணிகளுக்காக என இலவச மின்சாரத்திற்கு விண்ணப்பம் அளித்துள்ளார். இவர் ஆளும் கட்சியில் முக்கியமானவராவார். அவரின் விண்ணப்பத்தின் அடிப்படையில் அவருக்கு வழங்க வேண்டிய அனைத்து தடையில்லாச் சான்றுகளையும் உடனடியாக அரசுத் துறைகள் வழங்கியதோடு, மின்வாரியமும் மிகக்குறுகிய காலத்தில் 11 கி.வா. மின் தடம் அமைத்து மின்சார வசதியையும் உடனடியாக வழங்கியுள்ளது.

அவருக்கு மின் இணைப்பு வழங்குவதற்கான பணிகளுக்கான திட்ட மதிப்பீடு 17.04.2017-ல் வழங்கப்பட்டு 08.05.2017-ல் பணிகள் தொடங்கி 29.05.2017-ல் பணிகள் முடிக்கப்பட்டு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் திட்ட மதிப்பீட்டு தொகை ரூ.14 லட்சத்து,59 ஆயிரத்து 980 ஆகும். இத்தகவல்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் நிலகிரி மாவட்டத் தலைவரான என்.வாசு விண்ணப்பத்தின் மூலம் 31.05.2017 அன்று நீலகிரி மாவட்ட செயற்பொறியாளரிடமிருந்து பெற்றுள்ளார்.

இதில் முக்கியமான விஷயம். இந்த நிலத்தின் முந்தைய உரிமையாளரான எம்.பி.டி.கொய்லொ ஏற்கெனவே இதே நிலத்திற்கு மின் இணைப்பு கோரி கடந்த 1995 பிப்ரவரி 8-ம் தேதியே விண்ணப்பித்திருக்கிறார். ஆனால் அவர் அந்த நிலத்தை விற்கும் வரை அவருக்கும் மின் இணைப்பு வழங்கப்படவில்லை என்பதுதான். இப்போது மின் தடம் அமைக்கும் பணிகளும் செக்சன் 17 நிலங்களிலேயே நடந்துள்ளதோடு, செக்சன் 17 நிலங்களில் மின்பாதை அமைக்க தடையேதும் இல்லை எனவும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

''ஆளும் கட்சிப் பிரமுகருக்கு மின் இணைப்பு வழங்கியதை நாங்கள் யாரும் ஆட்சேபிக்கவில்லை. ஆனால் அதே நேரத்தில் அவருக்கு கிடைப்பதைப் போல விரைவான சேவைகளும், மின் இணைப்பும், இதர ஏழை, எளிய மக்களுக்கும் அளித்திட மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை!'' என்கிறார் இந்தத் தகவலை வெளியிட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்க நீலகிரி மாவட்ட செயலாளர் வாசு.

சரி, அப்படி மின் இணைப்பு பெற்ற அந்த விஐபி யார்? அவர் வேறு யாருமல்ல. ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் சர்ச்சைக்கு ஆட்பட்டவர். சில நாட்கள் முன்பு வருமான வரித்துறை அதிகாரிகள் 1900 பேர் ஒரே சமயத்தில் சசிகலாவுக்கு நெருக்கமானவர்கள் வீடு, அலுவலங்களில் சோதனையிட்டு பரபரப்பூட்டினார்களே. அந்த சோதனையிலும் அகப்பட்டவர். அவர்தான் பி.பி. சஜீவன்.

இந்த சஜீவனைப் பற்றி பலரும் ஜெயலலிதா இறந்த பின்பு, கோடநாடு எஸ்டேட் காவலாளி கொல்லப்பட்ட பிறகுதான் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட இவர் 2005-ம் ஆண்டிலேயே நான் எழுதிய ஒரு பரபரப்பு செய்திக்குள் முக்கியத்துவம் பெற்றார். போலீஸாரால் கைதும் செய்யப்பட்டிருந்தார் என்றால் நம்ப முடிகிறதா?

மீண்டும் பேசலாம்.

கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in  

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x