Published : 16 Dec 2017 09:44 am

Updated : 16 Dec 2017 13:08 pm

 

Published : 16 Dec 2017 09:44 AM
Last Updated : 16 Dec 2017 01:08 PM

ஆடு புலி ஒற்றுமையும், குஜராத் தேநீரும்!- காந்தியத்தில் தொடங்கிய தேநீர் பிரச்சாரம்

கு


ஜராத்தின் பல சுவாரசியங்களில் முக்கியமானது, அந்த மாநிலத்தின் தேநீர்க் கலாச்சாரம். ‘குஜராத்திகள் சப்பாத்தி இல்லாமல் ஒரு வாரம் வரை இருந்துவிடுவார்கள்; தேநீர் இல்லாமல் ஒரு மணி நேரம்கூட இருக்க முடியாது’ என்று சிரிக்கிறார் குஜராத்தி நண்பர் ஒருவர். ‘ஒரு கப் தேநீர்.. ஒரு ஓட்டு பாஜகவுக்கு’ என்று பாஜக பிரச்சாரம் செய்வதற்கான சூட்சுமம் இதுதான். குஜராத் வரும் ராகுல் காந்தி மறக்காமல் சாலையோரக் கடையில் தேநீர் அருந்துகிறார். மோடி தேநீர் விற்ற வட்வா நகர் பிளாட்பார தேநீர்க் கடைக்கு சுற்றுலாப் பயணிகள் அலைமோதுகின்றனர் என்றால், காரணம் மோடி மட்டுமல்ல, அதன் பின்னால் இருக்கும் தேநீர் கலாச்சாரமே!

குஜராத் கடைத் தெருக்களில் நடந்தால் பத்துக்கு நான்கு கடைகள் தேநீர்க் கடைகளாக இருக்கின்றன. தேநீர் அளவுகளும் பலவிதம். நம்ம ஊர் தேநீர் கடை கண்ணாடி டம்ளரைவிட சற்றே சிறிய டம்ளரில் ஊற்றித் தருகிறார்கள். அதில் பாதி அளவு டம்ளரும் இருக்கிறது. அதைவிட சிறிதாக, மருந்துக் குப்பி அளவிலும் ஒன்று இருக்கிறது. இவைபோக கடையில் சாஸரை எடுத்து நீட்டினால் அதில் கொஞ்சம் ஊற்றுகிறார்கள். சூடாக இரண்டு இழுப்பு இழுத்துக்கொள்ளலாம். ரூ.10 முதல் ரூ.2 வரை விதவிதமான அளவுகள். ஆனால், ஒரே சுவை.

சூரத்தின் ஜவுளிக் கடைகளில் கொதிக்கக் கொதிக்க பெரிய குவளையில் தேநீர் ஊற்றி வைத்திருக்கிறார்கள். ஜவுளி வாங்குகிறீர்களோ இல்லையோ, முதலில் தேநீரைச் சுவைக்கத் தருகிறார்கள். இவற்றை எல்லாம்விட முக்கியமானது அந்த தேநீரின் சுவை. குஜராத் சாலையோரக் கடையின் சுவைக்கு ஈடான தேநீரை, நட்சத்திர ஹோட்டல்களில்கூட சுவைக்க முடியாது. அருந்தி முடித்த பிறகும், நாக்கில் சுமார் மூன்று மணி நேரம் நின்று விளையாடுகிற சுவை. மக்களின் கலாச்சாரத்தோடு தேநீர் மையம் கொள்ளக் காரணமும் அந்தச் சுவையே.

தென் ஆப்பிரிக்காவில் விழுந்த விதை

1892-ம் ஆண்டு. தென் ஆப்பிரிக்காவில் 500 ஏக்கர் பரப்பளவில் தேயிலைத் தோட்டம் நடத்தி வந்தார் அகமதாபாத்தை பூர்வீகமாகக் கொண்ட நரன்தாஸ் தேசாய். சிறந்த காந்தியவாதி. தென் ஆப்பிரிக்காவில் நிறவெறித் தாக்குதலுக்கு அடிக்கடி ஆளானார். ஒருகட்டத்தில் அங்கு தொழில் நடத்தவே முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார். தேயிலைத் தோட்டம் உட்பட அனைத்து சொத்துகளையும் விட்டு சொந்த ஊருக்குச் திரும்பவேண்டிய சூழல். அப்போது அவர் கையில் இருந்தது தேயிலை பயிரிடும் தொழில்நுட்பமும், காந்தி நற்சான்றிதழாக அவருக்கு அளித்த கடிதமும்.

1915-ல் குஜராத் திரும்பிய நரன்தாஸ், அகமதாபாத்தின் சுற்றுவட்டார மலைப் பிரதேசங்களில் தேயிலை பயிரிட்டார். படிப்படியாக தொழிலை விரிவுபடுத்தியவர், 1925-ல் அகமதாபாத்தில் தேயிலைத் தூள் விற்பனை நிறுவனம் தொடங்கினார். கூடவே காந்தியின் கொள்கைகளையும் பரப்பத் திட்டமிட்டார். காந்தி வலியுறுத்தும் ‘அனைவரும் சமம்’ என்பதை தனது நிறுவனம் வழியாக மக்களிடம் கொண்டுசெல்ல வேண்டும் என்பதே அவரது விருப்பம். சாதியப் பாகுபாடுகளை ஒழிக்க நினைத்தவர் தனது நிறுவனத்துக்கு ‘வாக் பக்ரி’ என்று பெயரிட்டார். குஜராத்தியில் ‘வாக்’ என்றால் புலி. ‘பக்ரி’ என்றால் ஆடு. சாதிப் பாகுபாடின்றி அனைத்து தரப்பினரும் ஒரே கோப்பையில் தேநீர் அருந்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், ஆடும் புலியும் ஒரே கோப்பையில் தேநீர் அருந்துவதுபோல தனது நிறுவனத்தின் இலச்சினையை (லோகோ) வடிவமைத்தார். உயர் சாதியினரின் கடும் எதிர்ப்பு, மிரட்டல்கள் ஆகியவற்றை சமாளித்து, தனது தொழிலை நிலைநிறுத்தினார் நரன்தாஸ்.

இப்படியாகத் தொடங்கியதுதான் குஜராத் எங்கும் இன்று பரவியிருக்கும் தேநீர்க் கலாச்சாரம். குஜராத்தில் இன்று நூற்றுக்கணக்கான தேயிலை நிறுவனங்கள் இருக்கின்றன. தற்போது நான்காம் தலைமுறையாக நரன்தாஸின் வாரிசுகளால் நடத்தப்பட்டுவரும் ‘வாக் பக்ரி’ நிறுவனம், இப்போதும் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துகிறது.

குஜராத் தேநீரின் சுவைக்கு, அங்கு அபரிமிதமாக உற்பத்தியாகும் பாலும் ஒரு முக்கிய காரணம். பால் அதிகம் உற்பத்தி செய்யும் மாநிலங்களில் 4-வது இடத்தில் இருக்கிறது குஜராத். (தமிழகம் 9-வது இடத்தில்) குஜராத் கூட்டுறவு பால் விற்பனைக் கழகமான ‘அமுல்’ நிறுவனமே இன்றைக்கு உலகின் முன்னணி பால் உற்பத்தி நிறுவனமாகத் திகழ்கிறது. அதன் ஓராண்டு விற்றுமுதல் சுமார் ரூ.19,000 கோடி. இவற்றின் பின்னணியில் இருந்தும் குஜராத்தின் தேநீர்க் கலாச்சாரத்தைப் புரிந்துகொள்ளலாம்.

தேநீர் தயாரிப்பு முறைகூட குஜராத்தில் ஆச்சரியமூட்டுகிறது. அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தைச் சுற்றிலும் வரிசையாக சாலையோரத் தேநீர் கடைகள். அதிகாலை 3 மணிக்கே வியாபாரம் களைகட்டத் தொடங்குகிறது. பால் கேன்களும், மூட்டை மூட்டையாக இஞ்சியும் குவிகின்றன. கேன்களில் இருந்து இறக்கப்படும் பச்சைப் பாலை மீண்டும் மீண்டும் காய்ச்சி மறு உபயோகம் செய்வதில்லை. மிகப் பெரிய பாத்திரத்தில் ஊற்றி, கிட்டத்தட்ட அரை மணி நேரத்துக்கு மேலாக தீயை ஏற்றியும் இறக்கியும், அதன் அளவில் கால் பாகம் குறையும் அளவுக்கு பாலை சுண்டக் காய்ச்சுகிறார்கள். இறுதியாக தேயிலைத் தூளையும், கணிசமான அளவு இடித்த இஞ்சியும், சர்க்கரையும் சேர்க்கிறார்கள். மீண்டும் பத்து நிமிடம் கொதித்த பின்பு பெரிய காடா துணியால் வடிகட்டி, தூக்குப் பாத்திரத்தில் ஊற்றுகிறார்கள். அந்தத் தேநீரை ஒரு வாய் உறிஞ்சியவுடனேயே சுவை மிகுந்த அதன் பிசுபிசுப்பில் நாக்கும் மேலண்ணமும் ஒட்டிக்கொள்கிறது.. நரன்தாஸ் விரும்பிய ஒற்றுமையைப் போலவே!

ஆவி பறக்கும் அந்தத் தேநீரை அருந்தவே நீங்கள் ஒருமுறை குஜராத் செல்ல வேண்டும்!


Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author