Last Updated : 05 Dec, 2017 01:34 PM

 

Published : 05 Dec 2017 01:34 PM
Last Updated : 05 Dec 2017 01:34 PM

காசநோயும் மறுவாழ்வும்!

 

கொடிய நோயினும் கொடியது, அந்நோய் எற்படுத்தும் வெறுமையும், தனிமையும். அதுவும் தீவிர காசநோயாளிகளுக்கு இந்த சிக்கல் சற்று அதிகமாகவே இருக்கிறது. காசநோய் குணப்படுத்தக் கூடியதே என்றாலும் காசநோய் கண்டறியப்பட்டவுடனேயே சில வீடுகளில் அந்த நோயாளி ஒதுக்கப்படுதல் தொடங்கி விடுகிறது.

காசநோயாளிகள் எச்சில், சளி போன்றவற்றைத் துப்பும் உணர்வுக்கு அதிகமாக ஆளாவார்கள். இதனால் இவர்களுக்குப் பொது இடம் என்றுகூடப் பார்க்காமல் எச்சில் துப்புவதும் மூக்கைச் சிந்துவதும் தவிர்க்க முடியாத பழக்கமாக மாறிவிடுகிறது. இதுவே அவர்களை மற்றவர்கள் ஒதுக்கிப் புறந்தள்ளவும் காரணமாகிவிடுகிறது. ஆனால், இப்போதெல்லாம் அரசு நெஞ்சக நோய் மருத்துவமனைகளோ இல்லை வேறு எந்த மருத்துவமனையாக இருந்தாலும் சரி, காசநோயாளிகள் சிகிச்சையைத் தொடங்கிய முதல் 15 நாட்களுக்கு எப்படி நடந்துகொள்ள வேண்டும். மற்றவர்களுக்கு நோயைப் பரப்பாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று விளக்கமாகக் கூறி தெளிவுபடுத்தி விடுகின்றனர்.

பெரும்பாலான நோயாளிகள் மருத்துவர்கள் அறிவுறுத்தும் சுகாதாரப் பழக்கவழக்கங்களை கடைபிடிப்பதாகவே சொல்கின்றனர். சென்னை சேத்துப்பட்டில் உள்ள அரசு நெஞ்சக நோய் மருத்துவமனையில் காசநோய் சிகிச்சை பெற்று குணமடைந்த ஆபேல் (48) கூறும்போது, "நான் லோடுமேனாக வேலை செய்றேன். பீடி, சிகரெட் பழக்கமிருந்துச்சு. திடீரென சளி, இருமல், சளியில் ரத்தம்னு தொடர்ந்து பிரச்சினை. அப்புறம்தான் இங்க வந்தேன். எனக்கு டெஸ்ட் எல்லாம் பண்ணாங்க. அப்புறம் டி.பி.ன்னு சொன்னாங்க. மொதல்ல ரொம்பவே பயந்தேன். அப்புறந்தான் டாக்டர் ஒழுங்கா மருந்து சாப்பிட்டா இத குணப்படுத்திரலாம்னு சொன்னாங்க. அப்புறமா, சளியை கண்ட எடத்துல துப்பக் கூடாது. இருமும் போதும் தும்மும் போதும் துணியால மூடிக்கணும்னு சொன்னாங்க. நானும், நம்ம படுற கஷ்டம் மத்தவுங்களும் படக்கூடாதுன்னு ரொம்ப ஜாக்ரதையா இருந்தேன். இப்ப குணமாகிட்டேன். ஒரு பிரச்சினையும் இல்ல. திரும்பவும் லோடு தூக்குறேன். பீடி, சிகரட் பக்கம் போறதே இல்ல" என்றார்.

பொது சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை காசநோயாளிகளுக்கு சுகாதார மையங்கள் ஏற்படுத்தி வருவது பாராட்டத்தக்கது. ஏனெனில், நோய்த்தொற்று பரவுவதைத் தடுப்பதில் பொது சுகாதாரத்தைப் பேணுதல் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. அதுவும், இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இதன் பங்கு பன்மடங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.

இப்படியான நடவடிக்கைகளால்தான் இந்தியாவில் புதிதாகக் காசநோய் பாதிப்புக்கு உள்ளாகிறவர்களின் எண்ணிக்கையும், காசநோயால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் 2015-ஐ விட 2016-ல் சற்றே குறைந்திருக்கிறது என்று, உலக அளவில் காசநோய் தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டு இருக்கும் அறிக்கை தெரிவிக்கிறது. 2015-ல் 28.4 லட்சமாக இருந்த புதிய காசநோயாளிகளின் எண்ணிக்கை, 2016-ல் 27.9 லட்சமாகக் குறைந்திருக்கிறது 2015-ல் 5.1 லட்சமாக இருந்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 2016-ல் 4.3 லட்சமாகக் குறைந்திருக்கிறது.

இதே வேகத்தில் காசநோய் ஒழிப்பில் செயல்பட்டால் நிச்சயம் 2025-க்குள் காசநோயை முற்றிலுமாக இந்தியாவில் இருந்து ஒழிக்க முடியும். பொது சுகாதாரத்துக்கு அழிக்க வேண்டிய அதே முக்கியத்துவத்தை காசநோயாளிகளுக்கான மறுவாழ்விலும் ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதே தேர்ந்த மருத்துவர்கள் பலரின் கருத்தாகவும் சமூக ஆர்வலர்களின் வலியுறுத்தலாகவும் இருக்கிறது.

மறுவாழ்வின் அவசியம்:

மங்காலட்சுமி (55). சென்னையில் மாவு மில்லில் பணியாற்றி வந்தார். மிளகாய்ப் பொடி நெடி, பல்வேறு மாவுகளில் இருந்து கிளம்பும் புகை என ஆண்டுக் கணக்கில் வேலை, வேலை என ஓடிய மங்காவுக்கு திடீரென உடல் நலக்குறைவு. பக்கத்து தெரு மருத்துவரிடம் அவ்வப்போது சிகிச்சை எடுத்துவந்த மங்கா ஒருநாள் நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டார். அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோதுதான் அவருக்கு காசநோய் தொற்று ஏற்பட்டது தெரியவந்தது. மங்கா இயல்பாகவே மிகவும் துணிச்சலான பெண். அதனால், அதே துணிச்சலுடன் 6 மாதங்களுக்கு சரியாக சிகிச்சையை மேற்கொண்டு நோயில் இருந்து விடுபட்டுவிட்டார். பெண் பிள்ளைகள் எல்லாம் திருமணம் செய்து கொடுத்தாகிவிட்டதால் மங்காவும் அவரது கணவரும் மட்டும் தனியாக வசிக்கின்றனர். இருவரும் வேலைக்குச் சென்றால்தான் சற்றே கவுரமான வாழ்க்கையைத் தொடரும் சூழல் மங்காவுக்கு. ஆனால், மங்கா மீண்டும் மிளகாய் நெடி வீசும் மாவு மில் வேலைக்குச் செல்ல விரும்பவில்லை. வேறு தொழில் ஏதும் தெரியாமல் தவித்துவருகிறார். ஒருவேளை பண நெருக்கடி அதிகமானால் மங்கா மீண்டும் அதே மாவு மில்லுக்கு விருப்பம் இல்லையென்றாலும்கூட செல்ல நேரலாம். இப்படித்தான் சிலர் தொழில் சார்ந்து வரும் காசநோயால் மீண்டும் பாதிக்கப்படும் அபாய சூழலுக்கு ஆளாகின்றனர். இங்குதான் காசநோயாளிகளுக்கு மறுவாழ்வு ஏற்படுத்தித் தருவதும் காசநோய் ஒழிப்பின் ஒரு பங்காகிவிடுகிறது.

மறுவாழ்வின் முக்கியத்துவம் குறித்து மதுரை தோப்பூர் அரசு நெஞ்சக நோய் மருத்துவமனையின் ஆர்எம்ஓ, மருத்துவர் எஸ்.காந்திமதிநாதன் கூறும்போது, "காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்க 2025-ம் ஆண்டை நிர்ணயிக்கப்பட்ட இலக்காக இந்திய அரசு அறிவித்துள்ளது. இந்த இலக்கை எட்ட 2025-க்குள் காசநோயாளிகளின் இறப்பு விகிதம் 95% குறைக்கப்பட வேண்டும். காசநோயினால் பாதிக்கப்படுவோர் விகிதம் 90% குறைக்கப்பட வேண்டும். மேலும், காசநோயினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களே இல்லை என்ற சூழல் உருவாக வேண்டும். இதை நோக்கிதான் இந்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்திவருகிறது.

நீண்ட நாட்களாக உள்நோயாகிளாக சிகிச்சை பெற்றுவரும் காசநோயாளிகள், வறுமை, தனிமை, குடும்ப சூழ்நிலை, குற்ற உணர்வால் மன அழுத்தத்திற்கு உள்ளாகி, வாழ்க்கையை வெறுமையாக உணர்கிறார்கள். அப்படிப்பட்ட நோயாளிகளுக்கு நம்பிக்கை ஊட்டக்கூடியதாக அரசு மருத்துவமனைகள் அமைய வேண்டும். சிகிச்சையில் குணமான நோயாளிகளுக்கு மறுவாழ்வு தொழிற்பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும். இதற்கு உதவ தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் முன்வர வேண்டும்.

இதை நடைமுறைப்படுத்தும் விதமாகவே, மதுரை தோப்பூர் அரசு நெஞ்சக நோய் மருத்துவமனையில், நோயாளிகளுக்கு தையல் தொழில், கூடை முடைதல், ஒயர் சேர் (இருக்கை) பின்னுதல் போன்றவற்றில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன்மூலம், காசநோயாளிகள் மாற்றுத்தொழிலுக்குச் செல்ல வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படுகிறது" என்றார்.

மேலும், காசநோய் சிகிச்சையின் ஒரு பகுதியாக நுரையீரல் ஆரோக்கியத்துக்காக யோகா பயிற்றுவிக்கிறோம். இதற்காக பிரத்யேகமாக ஒரு பெரிய அரங்கை அமைத்திருக்கிறோம். விரைவில் இந்த அரங்கு திறப்புவிழா காணவிருக்கிறது" என்றார்.

காசநோய் சிகிச்சையில் யோகாவின் பங்கு என்ன?

அரசு நெஞ்சக நோய் மருத்துவரே காசநோய் சிகிச்சையில் யோகா பயிற்சியின் பங்கு குறித்து கூறியதைத் தொடர்ந்து யோகா தெரபிஸ்ட் தங்ககலட்சுமி பாலசுப்பிரமணியனிடம் பேசினோம். யோகாவில் முதுகலை பட்டம் பெற்ற தங்கலட்சுமியிடம் ஏராளமானோர் யோகா பயிற்சி பெற்று வருகின்றனர்.

காசநோய் சிகிச்சையில் யோகாவின் நலன் குறித்து அவர் கூறும்போது, "யோகா பயிற்சிகள் அனைத்துமே சுவாசப் பயிற்சியை உள்ளடக்கியதே. எனவே, நுரையீரல் காசநோயாளிகளுக்கு யோகா பயிற்சி நிச்சயம் பலனளிக்கும். மூச்சுப் பயிற்சிகளால் உடலில் நேர்மறை மாற்றங்கள் ஏற்படும். முதல் முறையாக யோகா பயிற்சிக்கு செல்லும் காசநோயாளிகள் யோகா தெரபிஸ்ட்டை அணுகுவதே சிறந்தது. ஒரு வாரம் முதல் 10 நாட்களுக்குள் பயிற்சியைக் கற்றுக்கொள்ளலாம். அதன் பின்னர் வாழ்நாள் முழுவதும் தினமும் சிறிது நேரம் யோகா பயிற்சியை மேற்கொள்வதை வழக்கமாக்கிக் கொள்வது நீண்ட நீடித்த பலனைத் தரும்" எனக் கூறினார்.

காசநோயை ஒழிக்க ஒட்டுமொத்த தேசமும் கைகோக்க வேண்டிய சூழலில் இருக்கிறோம். மருத்துவர்கள், பொதுமக்கள், சமூகநல அமைப்புகள் அரசு இயந்திரத்துடன் இணைந்து செயல்பட்டால் காசநோயை 100% ஒழித்துவிட முடியும். ஆரோக்கியமான சமூகமாக வாழ்வோம் தேச ஆரோக்கியத்தை உறுதிப்படுத்துவோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x