Published : 09 Dec 2017 09:16 PM
Last Updated : 09 Dec 2017 09:16 PM

யானைகளின் வருகை 97: புலி, நிழல், நிஜம்!

'புலிகளைப் பற்றிய உண்மைகள்!' என்றொரு ஆவணப்படம். சேகர் தத்தாத்ரி என்பவர் எடுத்தது. அதில் ஆதிவாசிகள் காட்டில் நெல்லிக்காய் பறிக்கிறார்கள். அதை மூட்டையாக கட்டி வந்து மலை மக்களுக்கு விற்கிறார்கள். அந்த மக்களும் அதை வாங்கிக்கொண்டு சந்தைக்குச் செல்கிறார்கள். இதனால் புலிக்கு இரையாகக்கூடிய விலங்குகள் பலவற்றுக்கு நெல்லிக்காய் கிடைப்பதில்லை. எனவே அந்த விலங்குகள் அழிகின்றன. அந்த விலங்குகள் இல்லாததால் அதை சாப்பிட்டு உயிர்வாழ்ந்து கொண்டிருந்த புலிகள் அழிகின்றன.

இதே போல் ஆதிவாசி ஒருவர் புலியை வேட்டையாடி சிறையில் இருக்கிறார். அந்த ஆதிவாசிக்கு வேட்டையாடுவதும், காடுகளில் கிடைக்கும் வனப்பொருட்களை கொண்டு உயிர் வாழ்வதே வாழ்க்கை. அவரும், அவர் குடும்பமும் காட்டில் இப்படியே வாழ்வதால் வறுமையும், கொடுமையும் தலை விரித்தாடுவதாகவும், புலி வேட்டையாடியதால் சிறைக் கொடுமையையும் அனுபவிப்பதாக காட்சிகள் விரிகிறது.

சரி. இந்த நிழல் ஆவணப்படத்திலிருந்து கண்களை கொஞ்சம் அகற்றிவிட்டு ஒரு நிஜ சம்பவத்தைக் கவனியுங்கள். இது முதுமலை அருகே இருக்கும் நம்பிக்குன்னு மலை கிராமம். இங்கு வசிக்கும் முரளிதரன் என்ற விவசாயி தனது வீட்டில் கொட்டகை அமைத்து பட்டி ஆடுகள் வளர்த்து வருகிறார். இந்தப் பகுதியில் விவசாயிகள் வளர்க்கும் கால்நடைகளைத் தொடர்ந்து புலி, சிறுத்தை போன்ற விலங்குகள் அடித்துத் தின்று வந்தன. இந்த நிலையில் 19.08.2014 அன்று முரளிதரன் ஆட்டுக் கொட்டகையில் புகுந்த புலி ஒன்று புகுந்து ஆடுகளைத் தொடர்ந்து அடித்து தின்று வந்தது. அதில் வேதனையுற்ற விவசாயிகள், ஒருநாள் இந்தப் புலி ஆட்டுக்கொட்டகையில் புகுந்ததைப் பார்த்து, அது வெளியே போய்விடாமல் இருக்க, அதை கொட்டகைக்குள்ளேயே வைத்து மூடினர். இதன்பிறகு வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். பெரும் சிரமத்துக்கு மத்தியிலேயே புலியைப் பிடித்து இரும்புக்கூண்டில் அடைத்தனர் வனத்துறையினர். இதற்கு இடையில் இந்த புலியை காட்டுக்குள் விரட்டாத, புலியால் சேதப்பட்ட கால்நடைகளுக்கு இழப்பீடு தராத அரசையும், வனத்துறையினரையும் கண்டித்து இங்குள்ள விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உயர் அதிகாரிகள் வந்து உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்த பின்புதான் போராட்டம் கைவிடப்பட்டது.

மேற்சொன்ன நிழல் மற்றும் நிஜ சம்பவங்களில் இரு விஷயங்களைக் காணலாம். மலை மக்கள் யாரும் புலிகளைக் கொல்ல வேண்டும் என்று போராடுவதில்லை. அவை காட்டுக்குள் இருக்க வேண்டியவை. அவை தவறி ஊருக்குள் நுழைந்து வளர்ப்பு மிருகங்களை அடித்துக் கொன்றால் இழப்பீடு கோருவதையும், புலியை காட்டுக்குள் விரட்டவேண்டும் என்ற கோரிக்கையையும்தான் முன்வைக்கிறார்கள். மனிதர்களை அந்தப் புலி வேட்டையாடும்போதுதான் அது ஆட்கொல்லிப் புலியாக மாறுகிறது. அதைப் பிடிக்கவும் கோருகிறார்கள்.

ஆவணப்படத்திலோ ஆதிவாசி சட்டவிரோதமாக நடந்து கொள்வது போல் சித்தரிக்கப்படுகிறது. அவர் கைது செய்து சிறையில் இருப்பதாக காட்டப்படுகிறது. நெல்லிக்காயை மலை மக்கள் பறிப்பதாகவும், அதை சாப்பிடும் விலங்குகள் அது கிடைக்காமல் அழிவதாகவும், அவை அழிவதால், அதை உண்ண வகையில்லாமல் புலிகள் இறப்பதாக கருத்தோட்டம் பின்னப்படுகிறது.

முதலாவது சுட்டிக்காட்டப்பட்ட ஆவணப்படத்தை மேலோட்டமாகப் பார்த்தால் காடுகளும், கானுயிர்களும் ஆதிவாசிகள் மற்றும் மலை மக்களால்தான் அழிகிறது. அவர்கள் நாட்டுக்குள் வராமல், காட்டுக்குள்ளேயே வசிப்பதால்தான் கல்வி அறிவு இன்றி, விழிப்புணர்வு அற்று வறுமை, கொடுமையில் வாழ்கிறார்கள் என்ற மையக்கருவை உட்புகுத்தி, காடுகளிலும், மலையிலும் வாழ்பவர்கள் இயற்கைக்கு எதிரானவர்கள் என்ற கருத்தை நமக்குள் புகட்டி விடுகிறது.

அடுத்ததாக சொல்லப்பட்ட நிஜ சம்பவத்தை அப்படியே மக்களிடம் காட்டி, அந்த மக்களின் உணர்வுகளையும் கோப வெளிப்பாடுகளையும் நீக்கமற சித்தரித்தால் ஒரு விஷயம் புலனாகும். காட்டில் வறட்சி நிலவும் போதும், தனக்கான இரை கிடைக்காத போதும், அருகில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து அங்குள்ள வளர்ப்பு மிருகங்களை சாப்பிட புலிகளுக்கு வாய்ப்புண்டு என்பதை அறிய முடிகிறது. அந்த கால்நடைகளை காக்க வேண்டியே காடுகளையும், காட்டு விலங்குகளையும் மலை மக்கள் அழிப்பதில்லை என்பதையும் புரிந்து கொள்ளலாம். அதன் மூலம் காடும், கானுயிர்களும், இந்த மக்களும் கூட இங்கே இருக்க வேண்டியவர்கள் என்பது புலப்படும்.

ஆனால் இந்த இரண்டாவது உண்மை பெரும்பான்மை என்ஜிஓக்களால் எடுத்தாளப்படுவதேயில்லை. நிழலான ஆவணப்படங்கள் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்படுகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பள்ளி, கல்லூரிகளில் திரையிடப்படுகிறது. இதைப் பார்ப்பவர்கள் 'இவர்களல்லவோ உண்மையான சூழலியல்வாதிகள்!' என உச்சி மோந்து கொள்கின்றனர். இவர்களையே கொண்டாடுகின்றனர்.

புலி இயற்கை உயிரினச் சுழற்சியில் ஒரு முக்கியமான கண்ணி. அது அழிந்தால் காடுகள் அழிந்துவிடும். ஓடைகள் வற்றிவிடும். எனவே புலி வசிப்பிடங்களில் மனித வாசமே ஆகாது என்பதுதான் இந்த குறிப்பிட்ட தன்னார்வலர்கள் வெளிப்படுத்தும் கோட்பாடு. இதற்காக அடர்ந்த காடுகளில், அதன் உள்ளிருக்கும் வனத்துறைக்கு சொந்தமான தங்கும் விடுதிகளில், அறிவுஜீவிகளையும், ஊடகத்துறையில் குறிப்பிட்ட கருத்தோட்டமுள்ள சிலரையும் அழைத்து சில நிறுவனங்கள் நிதியுதவியுடன் கருத்தரங்குகள் நடக்கின்றன.

இவற்றைப் பின்னால் இருந்து இயக்குபவர்கள் யார் என்பதே தெரியாத அளவுக்கு, முழுக்க, முழுக்க காடுகளின்பாலும், கானுயிர்பாலும், அதையும் விட பெரிய விலங்கான யானை மற்றும் புலிகள் மீதும் மிகுந்த பற்றுள்ளவர்கள் போலும் இவர்கள் பரிவு ததும்ப பேசுகிறார்கள்.

ஆனால் நாம் முன்னரே சொன்ன மாதிரி தமிழகத்தின் மலைகளில் 50 சதவீதம் பகுதிகளை பெரு நிறுவனங்களும், அரசுக்கு சொந்தமான தேக்கு, யூகாலிப்பட்ஸ், தேயிலைக் காடுகள் ஆக்கிரமித்துக் கொண்டன. பல பகுதிகளில் அரசுக்கு சொந்தமான சுரங்கங்கள், கல்குவாரிகள், அணைக்கட்டுகள் உள்ளன என்பதை மட்டும் இவர்கள் ஆவணப்படங்களிலோ, கருத்தரங்க உரைகளிலோ காட்டுவதும் இல்லை. சொல்வதும் இல்லை.

பெரு நிறுவனங்கள், கல்குவாரிகள், சுரங்கங்கள் வசம் இருக்கும் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் எல்லாம் கானக விலங்குகள் வாழ்ந்த இடம்தான். அவற்றில் இனி அவை வாழவே முடியாதபடி ஆக்கிவிட்டார்கள். அதில் வாழ முடியாத வன மிருகங்கள் யாவும் இப்போது ஆதிவாசிகள் மற்றும் இதர மலைமக்கள் வாழும் பகுதிக்குத்தான் ஊடுருவி வாழ்கின்றன. அதனாலேயே அங்கு மனித-விலங்கு மோதல் நடக்கிறது என்பதை மருந்துக்குக் கூட கிள்ளிப் போடுவதில்லை.

அப்படியானால் இந்த சூழலியல்வாதிகள் யார்? கானுயிர்களுக்கும், காடுகளுக்கும் என்று சொல்லி யாருக்காக அழுகிறார்கள். வனமும், வனவிலங்குகளும் காடுகளின் நிரந்தர குடிகளான ஆதிவாசி மற்றும் மலைமக்கள் மீது பழியைப் போட்டுவிட்டு யாருக்காக பேசுகிறார்கள். நிச்சயம் அந்த பெருநிறுவனங்களுக்காகத்தானே? அப்படியானால் இவர்கள் நோக்கம் என்ன?

''கொஞ்சமே கொஞ்சமாய் இருக்கும் ஆதிவாசிகளும், மலை மக்களும் இந்த வனக்கொள்ளையர்கள், பெருந் தோட்டக்காரர்களுக்கு இடையூறாக இருக்கிறார்கள். இவர்களை அகற்றிவிட்டால் அந்த நிலங்களையும் நாம் ஆக்கிரமித்துக் கொள்ளலாம். வனக்கொள்ளையை இன்னமும் தான்தோன்றித்தனமாய் சுதந்திரமாய் நிகழ்த்தலாம் என்றுதானே?

அரசுத் திட்டங்களும் காடுகளுக்கு ஊறு விளைவிக்கின்றன என்று மென்மையாகி சொல்லிவிட்டு ஆதிவாசி மற்றும் மலைவாழ் மக்களையே முக்கிய குற்றவாளிகளாக இவர்கள் காட்ட ஏன் பெரும் முயற்சி செய்கின்றனர். இதையெல்லாம் நிறைய நாம் யோசிக்க வேண்டும். சிந்திக்க வேண்டும். அதையொட்டியே நம் வெளிப்பாடும் இருக்க வேண்டும்!'' என போலி சூழலியல்வாதம் பேசும் என்ஜிஓக்களை அம்பலப்படுத்துகிறார் செல்வராஜ்.

மீண்டும் பேசலாம்.

கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in  

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x