Published : 09 Dec 2017 08:16 PM
Last Updated : 09 Dec 2017 08:16 PM

முகவரி தேடும் முகங்கள் 1: நம்பிக்கைதான் பிசினஸ்...வாழ்க்கை...மனித குணம்... எல்லாமே!- நெகிழும் அனுஷ்கா முருகன்

’எப்பவுமே நாம நாலுபேர்கிட்ட நல்லபேரெடுக்கணும். அது ரொம்ப முக்கியம். அப்படி நல்ல பேர் எடுக்கறதுக்கு, நம்ம வண்டிதான் முதல்ல நல்ல பேரைச் சம்பாதிச்சாகணும்’’என்று சிரித்துக் கொண்டே சொல்கிற டிரைவர் முருகன் இந்த வாரமும் தொடர்கிறார்.

‘’பாண்டிச்சேரில ஒரு சோப் விளம்பரம் ஷூட்டிங். அதுக்காக சென்னைக்கு மும்பைலேருந்து வந்திருந்தவங்களை பிக் அப் பண்றதுக்காகப் போய் நின்னேன். வண்டில ஏத்திட்டுப் போனேன். அவங்க எனக்குப் புரியணுங்கறதுக்காக ஒருவித இங்கிலீஷ்ல பேச... நான் புரிஞ்சுக்கிட்டு நம்ம பட்லர் இங்கிலீஷ்ல பேச... ஏனோ தெரியல... என்னை ரொம்பவே பிடிச்சுப் போச்சு அவங்களுக்கு!

பாண்டிச்சேரில இறங்கும்போது அங்கே பின்சீட்ல இருந்த பேக்ல 500 ரூபாயைச் சொருகி வைச்சிருந்தார். அப்புறம் ஷூட்லாம் முடிஞ்சு, பாண்டிச்சேரி ஹோட்டல்ல விடும்போதும் 500 ரூபாயைச் சொருகினார். அடுத்த நாள் சென்னைப் பயணம். அப்படி இப்படின்னு ரெண்டாயிரம் ரூபாயை தனியா கவர்ல வைச்சுக் கொடுத்தாங்க. என்ன நினைச்சாங்களோ... மொத்தப் பணத்தையும் எடுத்து, டேஷ்போர்டுல வைச்சு, ‘எடுத்துக்கோங்க’ன்னு சொன்னார். வேணாம்னேன். ‘உங்க அன்புக்கு சின்னப்பரிசு. வீட்ல எதுனா வாங்கிக் கொடுங்க’ன்னு சொன்னாங்க.

பணத்துக்கு ஆசைப்படவே கூடாதுங்க. நம்ம வேலையை சரியாச் செஞ்சா, அதுவே நமக்கு எல்லாத்தையும் கொடுக்கும்’’ என்று தத்துவார்த்தமாகப் பேசுகிறார் முருகன்.

’’நடிகர் முரளி சார் படம் அது. கேமிராலாம் ஏத்திக்கிட்டுப் போய் இதே பாண்டிச்சேரில இறக்கிட்டேன். நைட் ஷூட் முடிஞ்சதும் இன்னொரு கேமிரா வேணும்னாங்க. சட்டுன்னு வண்டி எடுத்துக்கிட்டு, சென்னைக்கு வந்து, கேமிராவை ஏத்திக்கிட்டு பாண்டிச்சேரி போயிட்டிருக்கேன். மரக்காணம் தாண்டும்போது, கண்ணு ரெண்டும் தூக்கத்துல அசந்துருச்சு. அப்படியே மயங்கிட்டேன் போல. எந்திரிச்சுப் பாத்தா... வயலுக்குள்ளே நிக்கிது காரு. ரேடியேட்டர், எஞ்சின்லாம் மொத்தமா கண்டமாயிருச்சு. வண்டில வந்த கேமிராமேன் அஸிஸ்டெண்ட், என்னை கண்டபடி திட்டிக்கிட்டே வர்றாரு. திட்டத்தானே செய்வாங்க. பாண்டிச்சேரிலேருந்து கார் வந்துச்சு. கேமிராவை ஏத்திட்டுப் போனாங்க. அதுல கொஞ்சம் காருக்கு செம செலவாகிப் போச்சு.

முன்னாடி ஒருநாள்... என் நண்பர் என்னைக் கூட்டிட்டுப் போய் ஒரு இடத்துல விட்டாரு. அது... சூப்பர்குட் பிலிம்ஸ் கம்பெனி ஆபீஸ். கிட்டத்தட்ட பல டைரக்டர்களுக்கும் , கேமிராமேன்களுக்கும் நடிகர்களுக்கும் அது கோயில் மாதிரி! ஜீவா சார்கிட்ட இருக்கிற 4300 நம்பர் கொண்ட ஹோண்டா சிட்டியோட முதல் டிரைவர் நான்தான்.

'சிவா மனசுல சக்தி', 'தெனாவட்டு', 'கற்றது தமிழ்', 'ராமேஸ்வரம்' உள்ளிட்ட 8 படங்களுக்கு ஜீவா சாரோடு பணிபுரிந்தேன். அப்போது தமிழ் திரையுலகில் அனைவருக்குமே 'ஜீவா' முருகன் என்றால் தான் தெரியும். சின்ன சின்ன மனஸ்தாபம். வெளியே வந்துட்டேன். ஆனா ஜீவா சார் அப்படியொரு நல்ல மனிதர்.

அப்புறம், தயாரிப்பாளர் ராஜாராம் சாரிடம் வேலை பாத்தேன். அங்கேதான் பல தயாரிப்பாளர்களோட நட்பு கிடைச்சுச்சு. ஆனா குடும்பச் சூழல்... அங்கிருந்தும் வெளியே வந்தேன். அப்புறம் 'குருவி' படத்துக்காக சுமன் சாருக்கு வண்டி ஓட்டினேன். அப்பதான் இன்னோவா கார் எல்லாருக்குமே பிடிக்குதே. எப்படியாவது வாங்கிடணும்னு ஆசைப்பட்டேன். வாங்கினேன். இப்போ... காருக்கும் மரியாதை கூடியிருக்கு. கார் ஓட்ற நமக்கும் கவுரவமா இருக்கு’’ என்று ரைமிங் கலந்து பேசுகிறார் முருகன்.

’’ 'சிங்கம் 1' மற்றும் 'சிங்கம் 2' இரண்டு படத்துக்கும் வண்டி ஓட்டும் போது சூர்யா சார் பழக்கம். நான் பெரிய ஹீரோன்னே நினைக்காதவர். பந்தாவே இல்லாதவர். அண்ணன் சூர்யா யதார்த்தம்னா, தம்பி கார்த்தி சார் அன்பாளர். எப்பப் பாத்தாலும் ‘என்னப்பா நல்லாருக்கியா. வீட்ல எல்லாரும் நல்லாருக்காங்கதானே...’ என்று விசாரிப்பார்.

சமீபத்துல கூட சூர்யா சாரை, 'தானா சேர்ந்த கூட்டம்' ஷூட்டிங்ல பாத்தேன். ‘என்ன சார் வேலை தந்து ரொம்ப நாளாச்சே’ன்னு சொன்னேன். ‘முருகனோட தேதி கிடைக்கறதுதான் கஷ்டமாம்ல’ன்னு சொல்லிக் கலாய்ச்சு சிரிச்சார் என்று சொல்லிவிட்டு, சிரிக்கிறார் முருகன்.

நடிகர் சங்கத் தேர்தல் சமயத்துல வண்டி கேட்டிருந்தாங்க. அடுத்த மாநிலங்கள்லேருந்து வர்ற நடிகர்களைக் கூட்டிட்டு வரணும். விஷால் சார் அணிக்காக ஓட்டினேன். ரொம்ப மரியாதையா நடத்தினாங்க நாசர் சாரும் விஷால் சாரும்!

வெளிமாநிலங்களிலிருந்து வரும் நடிகர்களை அழைத்து வந்து வாக்களிக்க வைத்து, மறுபடியும் கொண்டு போய்விட வேண்டும். அதே போல் விஷால் அணிக்கு தயாரிப்பாளர் சங்கத் தேர்தலுக்கு ஓட்டினேன்.

அனுஷ்கா மேடம் சென்னைக்கு வர்றார்னா, இங்கே எல்லா ஏற்பாடுகளையும் பர்பெக்ட்டா பண்ணி வைச்சிருப்பேன்னு அவங்களுக்குத் தெரியும். இப்படித்தான் 'சிங்கம்' ஷூட்டிங், தூத்துக்குடில! ரிங் ரோடு வழியா மதுரைக்கு வர்றோம். அப்போ செம மழை. ரோடே தெரியல. பள்ளம் மேடு எதுன்னே புரியல. அப்போ கார்ல, அனுஷ்கா மேடமும் இன்னொரு நடிகரோட பேர் தெரியல. அவங்க ரெண்டுபேரையும் ஏத்திக்கிட்டு வரேன். அந்த நடிகர் கொஞ்சம் பயந்துதான் போயிட்டார் மழையப் பாத்து! ஆனா அனுஷ்கா மேடம்... ‘கவலையே படாதீங்க. முருகன் நம்மளை ஜாக்கிரதையாக் கொண்டு போய் விட்டுருவாரு’ன்னு சொன்னாங்க!

நம்பிக்கை வரணும் சார் நம்ம மேல! அந்த நம்பிக்கை வரும்படி, நாம நடந்துக்கணும். அதான் பிசினஸ்... அதான் வாழ்க்கை... அதான் மனித குணம்... அவ்ளோதான். இதெல்லாம் இருந்துட்டா, வண்டி ஸ்மூத்தாப் போயிட்டே இருக்கும். நான் வண்டின்னு சொன்னது வாழ்க்கையை பாஸூ’’ உற்சாகமும் உத்வேகமுமாகச் சிரிக்கிறார் டிரைவர் முருகன்.

தொடர்புக்கு: esakkimuthu.k@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x