Last Updated : 03 Nov, 2017 10:34 AM

 

Published : 03 Nov 2017 10:34 AM
Last Updated : 03 Nov 2017 10:34 AM

நிரம்பிவிடும் நிலையில் வீராணம் ஏரி: வீணாக தண்ணீர் கடலுக்குப் போகும் என விவசாயிகள் வேதனை!

டலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகிலுள்ள வீராணம் ஏரி கடந்த வாரம் சுத்தமாய் வறண்டு கிடந்தது. இயற்கையின் தாராளக் கொடையால் இப்போது கடல்போல தண்ணீர் ததும்பி நிற்கிறது!

ஏரியின் மொத்த கொள்ளளவு 47.60 அடி. இதில், செவ்வாய்கிழமை மதியமே 42.30 அடிக்கு தண்ணீர் நிரம்பிவிட்டது. இதே வேகத்தில் நீர்வரத்து இருந்தால் சீக்கிரமே வீராணம் ஏரி முழுமையாக நிரம்பிவிடும். ஆனால், இந்தச் செய்தியைக் கேட்டு மகிழ்ச்சியடைய வேண்டிய விவசாயிகளோ மன வேதனையில் இருக்கிறார்கள்.

ஐந்தே நாட்களில் நிரம்பியது

கடலூர் மாவட்டத்தின் மிகப் பிரம்மாண்ட ஏரியான வீராணம் சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்வதற் கான முக்கிய நீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. மேட்டூரில் திறக்கப்படும் நீர் கல்லணை வழியாக கீழணை எனப்படும் அணைக்கரைக்கு வந்து அங்கிருந்து வடவாறு வழியாக வீராணத்தை வந்து நிரப்புகிறது. மழைக் காலங்களில் அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் சேகரமாகும் மழைநீரும் வீராணத்தில் வந்து சேருகிறது.

இந்த ஆண்டு அக்டோபர் 2-ல், மேட்டூர் அணையும் அதைத் தொடர்ந்து 5-ம் தேதி கல்ல ணையும் திறக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 26-ம் தேதி, கீழணை திறக்கப்பட்டு வீராணத்துக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது. விநாடிக்கு 1,373 கன அடி வீதம் வடவாற்றை நான்கு நாட்களில் கடந்து சென்ற நீரால் மட்டும் வீராணம் நிரம்பிவிடவில்லை. கடந்த ஐந்து தினங்களாக வீராணம் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் நீர்வரத்து ஏற்பட்டு வீராணம் அதன் முழு கொள்ளளவுக்கு பக்கத்தில் வந்திருக்கிறது.

வருத்தம் ஏன்?

“சரி, ஏரியில் தண்ணீர் நிரம்பினால் சந்தோசப்பட வேண்டியதுதானே; எதற்காக வருத்தப்படுகிறீர்கள்?” என்று கேட்டால், விவசாயிகள் கொந்தளிக்கிறார்கள். இதுகுறித்து நம்மிடம் பேசிய வடவாறு - வீராணம் பாசன விவசாயிகள் சங்க தலைவரும், காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவருமான வீர.இளங்கீரன், “வீராணம் நிரம்பினால் விவசாயிக்கு மகிழ்ச்சிதான். ஆனால், அதிகாரிகள் கண்கெட்ட பின்னே சூரியநமஸ்காரம் செய்வதை என்ன சொல்வது.

மேட்டூர் அணையை செப்டம்பரிலேயே திறக்க வேண்டும் என்று தலையால் அடித்துக் கொண்டோம். அதைப்பற்றி கொஞ்சமும் சிந்தித்து பார்க்காமல், அக்டோபர் 2-ல் அணையை திறந்தார்கள். அதற்கடுத்து உடனடியாக கல்லணையை திறந்ததுகூட சரிதான். ஆனால், அக்டோபர் 10-ம் தேதிக்குள் கீழணையையும் திறந்திருந்தால் வீராணம், வடக்குராஜன் வாய்க்கால், தெற்குராஜன் வாய்க்கால் உள்ளிட்டவற்றின் பாசன பகுதியில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நேரடி நெல் விதைப்பு வயல்களை சாகடிக்காமல் காப்பாற்றி யிருக்கலாம். அப்படிச் செய்யாமல் கீழணையை திறக்க அதிகாரிகள் தேவையற்ற காலதாமதம் செய்ததால் நெல் வயல்கள் முழுவதுமாக கருகிவிட்டன. இதனால், பல இடங்களில் விவசாயிகள் திரும்பவும் விதை விதைத்துள்ளனர்.

தற்போது மழை பெய்யத் தொடங்கிவிட்டது. இப்போது தண்ணீரை வீராணத்தில் தேக்கி வைப்பதால் விவசாயிகளுக்கு எந்தவித பயனும் கிடையாது. இவ்வளவு தண்ணீர் இருந்தும் பாசனத்துக்காக இன்னும் வீராணத்தை திறக்கவில்லை. அப்படி இருக்கும்போது விவசாயிகள் சந்தோசப்பட என்ன இருக்கிறது?” என்று கேள்வி எழுப்பினார்.

வீராணத்திலிருந்து இன்னும் பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு ஒருபுறம் இருக்க, இதே ரீதியில் தொடர் மழை பெய்தால் வீராணம் நிரம்பி, தண்ணீரை வீணாக வெளியேற்றும் நிலை ஏற்படும். வீராணம் வறண்டு கிடந்ததைப் பார்த்துக் கலங்கிக் கிடந்த விவசாயிகள், இப்படி பலநூறு டி.எம்.சி தண்ணீர் வீணாக கடலுக்கு போவதை பார்த்தால் மேலும் வேதனை அடையத்தானே செய்வார்கள்?

இந்த விவகாரத்தில் காவிரி டெல்டா விவசாயிகள் பாதுகாப்புச் சங்க துணைத் தலைவரும், பா.ஜ.க-வின் விவசாய அணி மாநில பொறுப்பாளருமான கண்ணன் இன்னொரு தகவலைச் சொல்கிறார். “வீராணத்தை முழுமையாக தூர்வார வேண்டும் என்பது எங்களது வேண்டுகோள். இதற்காக கடந்த ஆண்டு 44 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கின. ஆனால், மூன்றே மாதத்தில் மழை வந்ததால் பணிகள் நிறுத்தப்பட்டன. இந்த ஆண்டு மீண்டும் பணிகள் நடக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால், பணிகள் நடைபெற்றதாக தெரியவில்லை. ஏரிக்குள் விவசாயிகள் மட்டும்தான் வண்டல் மண்ணை எடுத்துச் சென்றனர். தூர்வாருவதற்காக ஒதுக்கப்பட்ட நிதி என்ன ஆனது என்றே தெரியவில்லை.

முறைப்படி தூர் வாரியிருந்தால் இன்னும் அதிகப்படியான நீரை சேமித்திருக்க முடியும். ஆனால், அதைச் செய்யவில்லை. இந்த ஆண்டு முன்கூட்டியே தண்ணீரை கேட்டு வாங்கி பாசனத்துக்கு திறந்திருக்கலாம். அதையும் செய்யவில்லை. இப்படி, திட்டமிட்டு செயல்படாமல் ஏனோதானோவென்று செயல்படுவதால் விவசாயிக்கு உரிய பலன் கிடைப்பதில்லை” என்று வருத்தப்படுகிறார் கண்ணன்.

தூர்வாரும் பணிகள் தொடர்கின்றன

விவசாயிகளின் வேதனை குறித்து பொதுப்பணித்துறை சிதம்பரம் வடிநிலக் கோட்ட செயற்பொறியாளர் அன்பரசுவிடம் கேட்டோம். “வீராணத்தில் எப்போதும் விவசாயத்துக்கே முன்னுரிமை அளிக்கப் படுகிறது. ஆனால், தண்ணீரே இல்லாதபோது எங்கிருந்து விவசாயத்துக்கு தண்ணீர் திறப்பது? ஏரியில் தற்போது தண்ணீர் இருப்பதால் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கும் தேதி விரைவில் முடிவு செய்யப்படும்.

தண்ணீர் வந்த பிறகு இங்கிருந்து இதுவரை சென்னைக்கு குடிநீர் அனுப்பப்படவில்லை. மேட்டூர் மற்றும் கீழணையை முன்கூட்டியே திறப்பது என்பதெல்லாம் அரசு முடிவெடுக்க வேண்டிய விஷயம்.

தூர்வாரும் பணிகளைப் பொறுத்தவரை இன்னமும் பணிகள் முறையாக நடந்துகொண்டு தான் இருக் கின்றன. நடப்பு ஆண்டிலும் பணிகள் நடைபெற்றது. ஆனாலும் இன்னும் முழுமையடையவில்லை. வரும் கோடையில் தூர்வாரும் பணிகளை முழுமையாக செய்துமுடிப்போம்” என்றார்.

வீராணம் ஏரியானது பாசனத்துக்குத்தான் பிரதானம் என்பதை அதிகாரிகள் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி விட்டார்கள். இப்போது, இதை சென்னைக்கான குடிநீர் ஆதாரமாக மட்டுமே பார்க்கிறார்கள். வீராணம் ஏரி என்பதைக் கூட சமீபகாலமாக வீராணம் நீர்த்தேக்கம் என்றே குறிப்பிடுவதாக விவசாயிகள் குமுறுகிறார்கள். நாளடைவில் வீராணம் தண்ணீர் சென்னை குடிநீருக்கு மட்டும்தான் என சொல்லிவிடுவார்களோ என்றும் விவசாயிகள் கவலைப்படுகிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x