Published : 25 Nov 2017 09:37 am

Updated : 26 Nov 2017 11:22 am

 

Published : 25 Nov 2017 09:37 AM
Last Updated : 26 Nov 2017 11:22 AM

காப்பகம் வந்தது.. கவலைகள் பறந்தன.. மனநோயாளிகளை தேடிவந்த மறுவாழ்வு

கா

சிக்கு இணையான புனிதத் தலமான ராமேஸ்வரத்தில் மனநோயாளிகள் நடமாட் டம் அதிகரித்து வருவதாகவும், பராமரிக்க முடியாமல் உறவினர்களே இவர்களை இங்கு கொண்டுவந்து விட்டுச் செல்வதாகவும் வாசகர் ஒருவர் ‘தி இந்து - இங்கே.. இவர்கள்.. இப்படி!’ பகுதிக்கான அலைபேசி (044 42890013) எண்ணில் தகவல் தெரிவித்திருந்தார். இதையடுத்து, ராமேஸ்வரத்தில் சுற்றித் திரியும் மனநோயாளிகளின் அவலநிலை குறித்து, ஆகஸ்ட் 31-ம் தேதி இதழில் ‘புனிதத் தலமா.. மனநோயாளிகள் மடமா? என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டோம்.


லட்ச ரூபாய் தந்த வாசகி

இதைப் படித்துவிட்டு நம்மை தொடர்பு கொண்ட மணிகண்டன் என்பவர், “நாங்கள் மனநோயாளிகளின் மறுவாழ்வுக்காக கன்னியாகுமரியில் ‘மனோலயா’ என்ற சேவை இல்லத்தை நடத்தி வருகிறோம். எங்க ளால் மீட்கப்படும் மனநோயாளிகளை உரிய முறையில் குணப்படுத்தி, அவர்களை உறவினர்களிடம் ஒப்படைத்தும் வருகிறோம். இதேபோன்ற சேவையை ராமேஸ்வரத்திலும் தொடங்க முடிவெடுத்திருக்கிறோம்” என்று சொன்னார். இதுகுறித்தும் நாம் கட்டுரை வெளியிட்டோம்.

இந்த நிலையில், மணிகண்டனின் சேவை குறித்து ‘தி இந்து’வில் படித்த மதுரை வாசகி ஒருவர், மனோலயா இல்லத்துக்கு ஒரு லட்ச ரூபாய் நன்கொடை தருவதாக நம்மிடம் தெரிவித்தார். இதேபோல், திருச்சியைச் சேர்ந்த வாசகர் ஒருவரும் தன்னாலான நிதியுதவியை அளிக்க விரும்புவதாகச் சொன்னார். சொன்னபடியே தங்களது அருட்கொடையை வழங்கிய இவர்கள் இருவருமே, “எங்களை நாங்கள் விளம்பரப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை” என்று சொல்லி தங்களது பெயரைக்கூட குறிப்பிட வேண்டாம் என தெரிவித்துவிட்டனர்.

நவம்பர் 17-ல்..

இவர்களைப் போன்று இன்னும் சிலர் செய்த உதவிகளையும் வைத்துக் கொண்டு ராமேஸ்வரத்தில் மனோலயா மறுவாழ்வு இல்லத்தைத் தொடங்கி விட்டார் மணிகண்டன். தொடங்கிவிட்டார் என்று நாம் ஒற்றை வரியில் எளிதாகச் சொல்லிவிட்டோம். ஆனால், இதன் பின்னணியில் மணிகண்டன் எடுத்துக் கொண்ட முயற்சிகள் ஏராளம்.

இவர்களில் யாருமே மணிகண்டன் குழுவினர் அழைத்ததும் எளிதில் வந்துவிடவில்லை. தங்களுக்கே உரித்தான மூர்க்கத்தனத்தை வெளிப் படுத்தினர். அவர்களை அவர்களின் போக்கிலேயே விட்டு அவர்களுக்குத் தேவையான பிஸ்கட், இனிப்புகள் உள்ளிட்டவைகளை வாங்கிக் கொடுத்தது மனோலயா குழு. அதன்பிறகே, அவர்கள் மீது மனநோயாளிகளுக்கு நம்பிக்கை வந்தது.

சகல வசதிகளுடன் அமைந்த இல்லம்

முதலில், மனநோயாளிகளின் பின்னிச் சடைபிடித்துக் கிடந்த தலைமுடியை மொத்தமாய் மழித்து மொட்டை போட்டது மனோலயா குழு. பிறகு, அவர்களின் கந்தல் ஆடைகளைக் களைய வைத்து, அக்கினித் தீர்த்தக் கடலில் அவர்களை குழந்தையைக் குளிக்கவைப்பது போல் குளிப்பாட்டினர். அங்கேயே, வளர்ந்து கிடந்த அவர்களின் கை - கால் நகங்களை வெட்டி நேர்த்தி செய்து, புத்தாடையும் உடுத்திவிட்டனர். அதன்பிறகு, அத்தனை பேரையும் அங்குள்ள கோயிலுக்கு அழைத்து வந்து, சுவாமிக்கு அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தியது மனோலயா குழு. இதைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் ராமேஸ்வரம் மனோலயா இல்லத்துக்கு அழைத்துவரப்பட்டனர். அங்கே அவர்களுக்கு பசியாற உணவு வழங்கப்பட்டது.

இதுவரை, ஓட்டல் கழிவுகளில் கிடக்கும் உணவுகளையும் இரக்கமுள்ளவர்கள் வாங்கிக் கொடுப்பதையும் சாப்பிட்டுப் பசிக் கொடுமையைப் போக்கிவந்த அந்த 28 மனநோயாளிகளும் இப்போது, ‘தி இந்து’ செய்தியால் தொடங்கப்பட்ட மனோலயா இல்லத்தில் சுவையான உணவை உண்டு பாதுகாப்புடன் உள்ளனர். இவர்களின் மனதை ஒருநிலைப் படுத்த யோகா பயிற்சிகள், பஜனை, கவுன்சலிங் உள்ளிட்டவைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கூடவே, நடைப் பயிற்சி உள்ளிட்ட உடற்பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. சுகாதாரமான கழிப்பறை, குளியலறை, உணவருந்தும் ஹால், சமையலறை, யோகா ஹால், விளையாடுவதற்கான விசாலமான ஹால், மருத்துவ அறை, உறங்குமிடம் உள்ளிட்ட வசதிகள் ராமேஸ் வரம் மனோலயா இல்லத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

ஒரே வாரத்தில் வியத்தகு மாற்றம்

இங்குள்ளவர்களுக்கு ஆயுர்வேதம் மற்றும் அலோபதி முறையில் மருத்துவச் சிகிச்சைகள் அளிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது. இல்லம் தொடங்கி ஒரு வாரம் கடந்துவிட்ட நிலையில், தற்போது இங்குள்ள மனநோயாளிகள் மனோலயா குழுவினரின் வழி காட்டுதலில், தினமும் காலையில் எழுந்ததும் அவர்களாகவே கழிப்பறைக்குச் சென்று காலைக் கடன்களை கழிக்கவும், பல்துலக்கி குளிக்கும் பக்குவத்துக்கும் வந்திருக்கிறார்கள்.

குளித்து முடித்ததும் அவர்களாகவே உணவருந்தும் ஹாலுக்கு வந்து அமர்ந்து சாப்பிடவும் பழகிவிட்டனர். ஒரே வாரத்தில் இவர்களின் நடவடிக் கையில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாக மகிழ்ச்சி பொங்கச் சொன்னார் மனோலயா இல்லத்தின் நிர்வாகி மணிகண்டன். முன்பின் அறிமுகமே இல்லாத ராமேஸ்வரத்துக்கு வந்து மனநோயாளிகளுக்காக மறுவாழ்வு இல்லத்தைத் தொடங்கி யிருக்கும் மணிகண்டனுக்கு உள்ளூர், வெளியூர் மக்களிடமிருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

இது கடவுளுக்குச் செய்யும் தொண்டு

“எவ்வித ஆசையோ, பொறாமையோ, போட்டியோ இல்லாத இந்த ஜீவன்களுக்கு (மனநோயாளிகள்) சேவை செய்வது இறைவனுக்குச் செய்யும் தொண்டு. ராமேஸ்வரத்தில், 100 அடிக்கு ஒரு மனநோயாளியை பார்க்க முடிகிறது. ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில்கூட இவர்கள் நடமாடுகிறார்கள். கன்னியாகுமரி பகுதியில் நடமாடும் மனநோயாளிகள் ஆக்ரோஷமாக இருப்பார்கள். ஆனால், இங்குள்ளவர்கள் சரியான உணவு கிடைக்காமல் உடல் நலிவுற்று இருக்கிறார்கள். கண்ட உணவையும் சாலையோரத்தில் தேங்கிக் கிடக்கும் தண்ணீரையும் அருந்திப் பழகிவிட்டதால் இவர்கள் பல்வேறு நோய்களுக்கும் ஆளாகி உள்ளனர்.

மனநோயாளிகளை அவர்கள் போக்கிலிருந்து மீட்டுக் கொண்டு வருவது என்பது எளிதான காரியம் இல்லை. சாதுவாக இருந்தாலும் அவர்கள் நம்மை தாக்க நினைப்பார்கள். சிலபேர், ஒன்றன் மீது ஒன்றாக நான்கைந்து சட்டைகளைக்கூட போட்டிருப்பார்கள். சிலர் அரைகுறை ஆடையோடு இருப்பார்கள். பெரும் பாலானவர்கள் மலம் கழித்துவிட்டு சுத்தமில்லாமல் இருப்பார்கள். அருகில் கூட செல்லமுடியாத அளவுக்கு இவர்கள் மீது துர்நாற்றம் வீசும். இத்தனையும் சகித்துக் கொண்டுதான் நாங்கள் இவர்களை எல்லாம் மீட்டு இங்கு கொண்டு வந்திருக்கிறோம்” என்று சொன்னார் மணிகண்டன்.

மனநோயாளிகளுக்கு மறுவாழ்வு அளிப்பதற்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டிக்கும் மனோலயா குழுவினரை மீண்டும் ஒருமுறை மனதார வாழ்த்திவிட்டு ராமேஸ்வரம் தீவிலிருந்து புறப்பட்டோம்.

மனநல காப்பகம் அமைப்பது எளிதான காரியமல்ல:

தொடக்கத்தில் நம்மிடம் பேசிய மணிகண்டன், “விஜயதசமி அன்று ராமேஸ்வரத்தில் மனநோயாளிகள் மறுவாழ்வுக்கான மனோலயா இல்லம் தொடங்கப்படும்” என தெரிவித்திருந்தார். ஆனால், அதே தேதியில் அவரால் இல்லம் தொடங்க முடியவில்லை. அதற்கான காரணத்தை விளக்கிய மணிகண்டன், ‘‘மனநோயாளிகளுக்கான காப்பகத்தை ஆரம்பிப்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. காப்பக கட்டிடத்துக்கான கட்டிட உறுதிச் சான்று, தீயணைப்புத் துறையின் தடையின்மைச் சான்று, பொதுசுகாதாரத் துறை அளிக்கும் சான்று, வட்டாட்சியர் அளிக்கும் கட்டிட உரிமைச் சான்று உள்பட 18 விதமான சான்றுகளைப் பெறவேண்டும்.

இந்தச் சான்றிதழ்களை இணைத்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் விண்ணப்பம் கொடுக்க வேண்டும். அவர்கள் மாநில மாற்றுத்திறனாளிகள் ஆணையருக்கு அனுப்பி, அங்கிருந்தே காப்பகம் அமைக்க அனுமதியளிப்பார்கள். அனுமதி பெறுவதில் இத்தனை சிரமங்கள் என்றால், மனநோயாளிகளை மீட்டு காப்பகத்துக்கு கொண்டு வருவதிலும் பல சிக்கல்கள் இருக்கின்றன.

மீட்கப்படும் மனநோயாளிகளை முதலில் காவல் துறையிடம் அழைத்துச் செல்ல வேண்டும். அங்கே முறைப்படி எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவார்கள். பிறகு, நீதிமன்ற உத்தரவுடன் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அவர்கள் மனநலம் பாதித்தவர்கள்தானா என பரிசோதனை செய்து சான்றிதழ் பெறவேண்டும். இதன்பிறகே, சம்பந்தப்பட்ட மனநோயாளிகளை காப்பகத்தில் வைத்துப் பராமரிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும். இதுதான் வழக்கமான நடைமுறை. ஆனால், நாங்கள் ஏற்கெனவே கருணை அடிப்படையில் மனநல காப்பகம் நடத்துவதால் இந்த விதிமுறைகளில் சிலவற்றை தளர்த்தியுள்ளனர்” என்றார்.Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x