Published : 03 Nov 2017 04:22 PM
Last Updated : 03 Nov 2017 04:22 PM

யானைகளின் வருகை 69: மின்நிலையங்கள், அணைகள், மாற்றங்கள்!

மேட்டுப்பாளையம் வனபத்திரகாளியம்மன் கோயிலுக்கு மேற்குப்புறத்தில் தெற்கிருந்து வடக்காக பவானி நதி ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நதிக்கு மேற்கே (இதற்கு தெற்கில் ஒரு கிலோமீட்டர் தொலைவில்தான் கோவில் யானைகள் புத்துணர்ச்சி முகாம் வருடந்தோறும் நடந்து வந்துள்ளது) நெல்லித்துறை கிராமம் உள்ளது.

ஆயிரம் குடும்பங்களுக்கு மேல் வசித்து வந்தது. இங்கேதான் ஆரவல்லி, சூரவல்லி மண் கோட்டை இருந்ததாக ஐதீகம். வனபத்திரகாளியம்மன் கோயிலின் முன்புறம் வீற்றிருக்கும் பகாசூரன் இந்த கோட்டைக்குத்தான் வண்டி, வண்டியாய் களியுருண்டைகளை கொண்டு போனதாக, ஆடு, மாடுகளை காவு வாங்கியதாக புராணக் கதைகள் உண்டு.

நீண்ட காலமாக இந்த கிராமத்தை ஒட்டிய மலைக்காடுகளில் ஆரவல்லி, சூரவல்லி ஆவியாக திரிவதாகவும், அங்கே ஆண்மகன்கள் போனால் அது பிடித்துக் கொள்வதாகவும், இப்பகுதியில் வசிக்கும் பழங்குடிகள் மாய மந்திரத்தில், வசியம் வைப்பதில் கெட்டிக்காரர்கள், கூடு விட்டு கூடுபாயும் வித்தை தெரிந்தவர்கள், சிலர் நரபலி இட்டு நரமாமிசம் கூட சாப்பிடுவார்கள் என்றெல்லாம் கதைகள் உலாவின. அதனால் பத்திரகாளியம்மன் கோயிலுக்கு வரும் மக்கள் இப்பகுதிக்குள் நுழையவே அஞ்சி வாழ்ந்த காலம் ஒன்று உண்டு.

இந்த கிராமத்திற்கு செல்ல இன்றைக்கு 15 வருடங்கள் முன்பு வரை கூட சாலைவசதியோ, பாலம் வசதியோ கிடையாது. பள்ளிக் குழந்தைகள், தொழிலாளர்கள், அரசு அலுவலர்கள் யாராகினும் பரிசலில்தான் அக்கறைக்கு செல்ல வேண்டும். அங்கிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஊருக்கு பொடிநடையாய் செல்ல வேண்டும். அங்கு விளையும் காய்கறிகள், இதர விளை பொருட்களை கூட பவானி நதிக்கரை வரை வாகனங்களில் கொண்டு வந்து இறக்கி வைத்து பரிசலில் ஏற்றி மறுகரைக்கு அதை கொண்டு வந்து, அங்கிருந்து வேறு வாகனத்தில் ஏற்றி மார்க்கெட்டிற்கு கொண்டு செல்ல வேண்டும்.

ஒவ்வொரு முறை தேர்தல் நடக்கும்போது கூட இந்த கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு, வாக்குப்பெட்டிகள், வாக்கு சீட்டுகள் பரிசலில்தான் செல்லும், திரும்பி வரும். பவானியில் பெரு மழை, வெள்ளக்காலங்களில் நிலைமை சொல்லவே வேண்டாம். பரிசலும் செலுத்த முடியாது. இதனால் இந்த கிராமத்திற்கு அடிப்படை வசதிகளான மின்சாரம், சுகாதாரவசதிகள் ஏற்படுத்த முடியாமலே இருந்தது. வெள்ளத்தில் பரிசல்கள் அடித்துச் செல்லப்பட்டு மனித உயிர்கள் பறிபோன சம்பவங்களும் நடந்தன. ('வைதேகி காத்திருந்தாள்' தமிழ் திரைப்படத்தில் ரேவதிக்கு திருமணமாவனவுடன் பரிசலில் செல்லும் கணவன் வெள்ளம் கொண்டு போய் இறந்துவிடும் காட்சி இங்குதான் படமானது).

சுதந்திரம் வாங்கின காலத்திலிருந்து தங்கள் ஊருக்கு பாலமும் அதைஒட்டி சாலையும் போட்டுத்தர வேண்டும் என்பது இங்குள்ள மக்களின் கோரிக்கையாக இருந்தது. இந்த விஷயங்கள் எல்லாம் பத்திரிகைகளில் வரவும்தான் இங்கே ஒரு கிராமம் இருப்பதும், அதில் ஏராளமான குடும்பங்கள் வசிப்பதும், பேய் பிசாசு ஏதுமில்லை என்பதும் வெளியுலக மக்களுக்கு தெரியவந்தது. ஆண்மக்களை பிடித்தாட்டிக் கொண்டிருந்த ஆரவல்லி, சூரவல்லி பயமும் விலகியது. ஒரு கட்டத்தில் பாலமும், சாலையும் அமைத்துத் தந்தது அரசு.

முழுக்க, முழுக்க பவானி நதி குறைவில்லாமல் பாயும் நிலங்கள். அடிப்படை வசதிகள் வந்ததும் உழைப்பில் புலிப்பாய்ச்சல் பாய்ந்தனர் மக்கள். விளைச்சல் ஒன்றுக்கு பல மடங்காக பெருக்கினர் இங்குள்ள மக்கள். ஊருக்குள் வாகனங்கள் இஷ்டம் போல் வந்து சென்றன. மற்ற பகுதிகளை விடவும் பலமடங்கு நிலங்களின் விலையும் எகிறியது. மக்கள் வாழ்நிலை மாறிவிட்டது. எந்த ஒரு மாற்றத்திற்கும் ஓர் எதிர்வினை உண்டு என்பது இயற்கையின் நியதி அல்லவா? அது இங்கும் நடந்தது.

இந்த கிராமத்தை அடுத்துள்ள நெல்லிமலை, பகாசூரன், ஆரவல்லி, சூரவல்லிகள் உலாவின பகுதிகளாக சொல்லப்படும் மலைக்காடுகளில் கோட்டை இருந்ததாக சொல்ல சுற்றித்திரிந்த காட்டு யானைகளின் பாதையும் மாறியது. வாழை, கரும்பு, பாக்கு என பூத்துக்குலுங்கும் தோப்புகளுக்குள் புகுந்தது. அவற்றை மிதித்துத் தள்ளியது. முட்டிச் சாய்த்தது. அந்த வகையில் சமீபத்தில் நடந்த சம்பவம் மனதை கரைய வைக்கும்.

கடந்த 24.09.2017 அன்று நெல்லித்துறை கிராமத்திற்குள் ஒரு ஒற்றை யானை புகுந்தது. இங்குள்ள வாழைத்தோப்புக்குள் நுழைவது, அதை துவம்சம் செய்வது, மக்கள் பட்டாசு வெடித்து நெல்லிமலை காட்டுக்குள் விரட்டுவது வழக்கமானது. யானையும் காட்டுக்குள் செல்வது போல் பாவ்லா காட்டி வேறு வழியில் முட்டிக் கொண்டு கிராமத்திற்குள் வருவது என அழிச்சாட்டியம் செய்து கொண்டிருந்தது.

ஒரு கட்டத்தில் வனத்துறையினரும் வரவழைக்கப்பட்டனர். அவர்களும் யானையை தங்களால் இயன்ற அளவு விரட்டிப் பார்த்தனர். அவர்களுக்கும் போக்குக் காட்டிக் கொண்டேயிருந்தது யானை. இந்த நிலையில் 17.10.2017 அன்று இரவு அகால வேளையில் இந்த நெல்லித்துறை, நந்தவனப்புதூரில் உள்ள ஒரு பாக்குத்தோப்பில் எழுந்த இந்த யானையின் ஒற்றைப் பிளிறல் சத்தம் அந்த பகுதியையே நடுங்க வைத்தது. விடிந்தெழுந்து பார்த்தால் அங்குள்ள சில பாக்கு மரங்களை முட்டிச்சாய்த்து அதன் கீழ் தும்பிக்கை கருகி இறந்து கிடந்தது யானை.

எப்படி இது நடந்தது?

இந்த தோட்டத்தில் தென்னை, பாக்கு, மஞ்சள் என பயிரிடப்பட்டுள்ளது. தோட்டத்தின் நடுவே மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு, மின்சாரம் கொண்டு செல்லப்படுகிறது. அதுவும் சாதாரண மின்சாரம் அல்ல. பில்லூர் நீர்மின்நிலையத்தில் உற்பத்தியாகும் உயர்அழுத்த மின்சாரம் நேரே துடியலூர் மின்நிலையம் செல்கிறது. இந்தப் பகுதியில் இருந்த பாக்குமரங்களை முட்டி மோதி சாய்த்துள்ளது யானை. அதில் உள்ள பாக்கு மட்டைகளை சாப்பிடுவது யானையின் நோக்கம்.

ஆனால் நெடித்து வளர்ந்திருந்த பாக்குமரம் உயர் அழுத்த மின் கம்பியை தொட, அதில் இருந்த மின்சாரம் பாக்குமரத்தில் பாய, ஒரே அடியில் யானை சுருண்டு விழுந்து விட்டது. இது இப்போது மட்டும் நடக்கும் சம்பவம் அல்ல. இதேபோல் 2 ஆண்டுகளுக்கு முன்பு கல்லாறு வனப்பகுதியில் மரங்களை முட்டிக் கொண்டிருந்த ஒரு காட்டு யானை அங்குள்ள ஒரு மின்கம்பத்தையும் முட்டிவிட்டது. அதில் அறுந்து விழுந்த மின்கம்பி யானையின் உடம்பில் பாய, அந்த இடத்திலேயே கருகி உயிரை விட்டது யானை.

இங்கிருந்து பல மலைக்குன்றுகள், பள்ளத்தாக்குகள் கடந்து சென்றால் வருவதுதான் நீர் மின்சாரம் உற்பத்தி செய்யும் பில்லூர் அணை. இந்த அணையில் வெளியேற்றப்படும் நீரில் தொடர்ச்சியாக நீர்மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவது மட்டுமல்ல, திருப்பூர், கோவை மாவட்ட, மாநகர குடிநீர்த் தேவையும் பூர்த்தி செய்யப்படுகிறது. இதற்கான ராட்சஷ குழாய் பதிப்புகள், மின்வடக்கம்பிகள் கொண்டு போதல், நீர்மின்சக்திக்காக அணையில் அடிக்கடி சுழற்சி முறையில் நீர் வெளியேற்றல் போன்ற பல்வேறு செயல்பாடுகளால் மக்கள் பயன்படுவது ஒரு பக்கம் இருந்தாலும், அதில் காட்டு மிருகங்கள் வெகுவாகவே பாதிக்கப்படுகிறது என்பது நுட்பமான உண்மை.

அதீத மின்சாரம் பாயும் மின்வடக்கம்பியில் சிக்கி மட்டுமல்ல, பவானியில் ஏற்பட்ட வெள்ளத்திலும், அணையில் திறந்துவிடப்பட்ட நீரின் திடீர் வேகத்திலும் கூட காட்டெருமைகள், யானைகள், யானைக்குட்டிகள், மான்கள் நிறைய இறந்திருக்கின்றன. இந்த இறப்பு இன்றைக்கு நேற்றல்ல காமராஜர் ஆட்சிக் காலத்திலேயே ஆரம்பித்திருக்கிறது.

பில்லூர் அணை என்பது காமராஜர் ஆட்சி காலத்தில் குந்தா நீர்மின்திட்டத்தின் பொருட்டு அமைக்கப்பட்டது. பில்லூர் அணையைப் பொறுத்தவரை கோவை மாவட்டத்தில் அமைந்திருந்தாலும். அதற்கு மேலே இதன் சங்கிலித் தொடர் போல குந்தார் நீர்மின் திட்டத்தின் பல்வேறு நீர் மின் உற்பத்தி நிலையங்கள் இயங்குகின்றன. அவை எல்லாமே நீலகிரி மாவட்டத்தில் வருபவை.

அந்த வகையில் குந்தா-1 மின் நிலையம்-60மெகாவாட், கெத்தையில் உள்ள குந்தா-2 மின்நிலையம்-175மெகாவாட், பரளியில் உள்ள குந்தா-3 மின்நிலையம் -180 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. இதற்கடுத்துள்ள இந்த பில்லூர் (குந்தா-4) மின்நிலையம்-100 மெகாவாட் மின் உற்பத்தி தருகிறது. இதுமட்டுமல்லாது அவலாஞ்சியில் உள்ள குந்தா-5 மின்நிலையம்-40 மெகாவாட், பார்சன்ஸ் வேலியில் உள்ள குந்தா-6 மின்நிலையம்-30 மெகாவாட், சிங்காராவில் உள்ள பஷப் மின்நிலையம் 150 மெகாவாட்., மரவக்கண்டியில் உள்ள மினி மின் நிலையம் 3/4மெகாவாட்., பைக்காராவில் உள்ள மைக்ரோ மின்நிலையம்-2 மெகாவாட்., முக்குறுத்தியில் உள்ள மைக்ரோ மின்நிலையம்-700 கிலோ வாட் என்று உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்கெல்லாம் சிகரம் வைத்த மாதிரி உள்ள சிங்காராவில் அமைந்துள்ள பைக்காரா மின்நிலையம் (இது பிரிட்டிஷார் காலத்தில் கட்டப்பட்டது) 59.2 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்கிறது. அதற்கடுத்துள்ள மாயார் மின் நிலையம்-36 மெகாவாட் தருகிறது.

இந்த அணைகள் எல்லாம் பிரிட்டிஷார் காலத்தில், அதற்கு பின்னர் வந்த இந்திராவின் எமர்ஜென்சி காலம் வரை நன்றாகவே பராமரிக்கப்பட்டன. மின் உற்பத்தியும் முறையாக நடந்தது. அதற்கு பிறகு வந்த ஆட்சியாளர்களிடம் இதன் மீது பெரிய அக்கறை இல்லை. அதன் விளைவு நீலகிரி மாவட்டத்தில் உள்ள 17 அணைகள் மட்டுமல்ல, கோவை மாவட்டத்தில் உள்ள இந்த பில்லூர் அணையிலும் சேறும் மண்ணும் நிரம்பி, முறையாக தூர்வாரி பராமரிக்கப்படாமல் கிடக்கிறது. மழைக் காலங்களில் கிடைக்கும் நீரை முழுமையாக சேகரிக்க முடிவதில்லை என்பது ஒரு பக்கம். இன்னொரு பக்கம் இப்பகுதியில் நீர் அருந்த வரும் வனவிலங்குகள் சேற்றிலும், திடீர் வெள்ளத்திலும் சிக்க இறக்கின்றன. அவற்றில் சில கீழே வந்து சேருகின்றன. பல ஆங்காங்கே காடுகளுக்குள் சேற்றோடு, சேறாக அமிழ்ந்து அழுகி காணாமலே போய்விடுகின்றன.

இந்த மின் உற்பத்தி வட்டத்தில், 1977 கால கட்டத்தில், 2000 தொழிலாளர்கள் இருந்தனர். அது இப்போது 400 தொழிலாளர்களுக்கு கீழாக குறைந்துவிட்டதாக சொல்கிறார்கள் இதன் ஊழியர்கள். இதனால் கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்து கட்டப்பட்டதொழிலாளர்களின் குடியிருப்புகள், இன்று பழுதடைந்து வீணாகிப் போய்க்கொண்டிருப்பதை பில்லூர் பகுதியில் காணமுடிகிறது. அதில் எல்லாம் காட்டு யானைகள் டென்ட் அடித்து தங்கிவிடுவதையும் பார்க்க முடிகிறது.

''இது மட்டுமல்ல, இங்கு மின் நிலையத்தில் உள்ள இயந்திரங்களில் பலவும் இந்த கதியில்தான் உள்ளது. ஒருமுறை சிங்காரா மின்நிலையத்தில் உற்பத்தி இயந்திரம் ஒன்று வெடித்தது. அதில் அந்த பகுதியே அதிர்ந்தது. அது பழுதடைந்த இயந்திரம். அந்த பழுதை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டதாலேயே விபத்து ஏற்பட்டது. இப்போதெல்லாம் அதுபோல பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று விடப்பட்ட இயந்திரங்கள் இந்த மின் நிலையங்களில் ஏராளமாக உள்ளது. அவை எப்போது வெடிக்குமோ, எத்தகைய விபரீதத்தை ஏற்படுத்துமோ என்பதெல்லாம் அது நடக்கும்போதுதான் தெரியும்!'' என்று அதிர்ச்சியூட்டினார் இங்குள்ள ஊழியர் ஒருவர்..

மக்கள் மின்சாரத்தில் தன்னிறைவு அடைய போடப்பட்ட திட்டமே, இப்படி மக்களுக்கு பயன்படாமல் கண்டும் காணாமல் விடப்பட்டு கிடக்கும்போது, அந்த திட்டங்களை ஒட்டி அவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இடங்களில் ஏற்பட்டுள்ள சேதங்களுக்கும், அதனால் வரக்கூடிய விபரீதங்களுக்கும் (ஏற்கெனவே மூடப்பட்ட, பராமரிப்பின்றி கிடந்த தனியார் ஆலை விஸ்கோஸ் நிலைமையை பார்த்துள்ளோம்) யார் பொறுப்பேற்பார்கள்? அது ஒரு நகரப்பகுதியாக இருந்தால் மக்களுக்கு நேரடியான பாதிப்பு, அதுவே அடர்ந்த வனாந்திரத்தில் இருந்தால், அது அங்குள்ள வனவிலங்குகளுக்குத்தானே பாதிக்கும்?

அவர்கள் சொல்லும் சூழலியல் பாதிப்பை, அதனால் ஏற்பட்ட யானை மனித மோதலை நாம் நேரடியாக பில்லூர் கிராமத்தை ஊடுருவி பார்த்தவேளையில் காணவும் முடிந்தது.

மீண்டும் பேசலாம்.

கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in  

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x