Published : 22 Nov 2017 04:49 PM
Last Updated : 22 Nov 2017 04:49 PM

யானைகளின் வருகை 84: புலிகளுக்காக நாங்க சாகணுமா?

நீலகிரி கூடலூரில் பசுமை மாறாக்காடுகள் அதிகம் என்பதை அடிக்கடி சுட்டிக்காட்டி வருகிறோம். அப்படிப்பட்ட இப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் 99 ஆண்டு குத்தகை என்ற பெயரில் இந்துஸ்தான் லீவர், மஞ்சு ஸ்ரீ பிளேன்டேஷன், மலையாள பிளேன்டேஷன் போன்ற பல நிறுவனங்கள் கையில் உள்ளன. இவற்றில் பல நிறுவனங்கள் லீசும் முடிந்து விட்டன. ஆனால் பிரச்சினை கோர்ட்டில் இருந்தது. இதனால் சொற்ப குத்தகை பணத்தைக்கூட இந்நிறுவனங்கள் அரசுக்கு செலுத்துவதில்லை. இதேபோன்ற பல்வேறு நிலங்களில் ஏழை எளிய மக்களும் குடியிருந்து வருகிறார்கள்.

அவர்கள் ஒரு காலத்தில் இந்த நிலங்களை ஆண்டு கொண்டிருந்த நிலம்பூர் கோயிலகத்தின் (ஜமீன்) கூலிகளாக, பண்ணை அடிமைகளாக இருந்தவர்களின் வாரிசுகள். அவர்களிடம் அரை ஏக்கர், ஒரு ஏக்கர் நிலம் என மானியமாய் பெற்ற பூமியில் சிறிய அளவில் விவசாயம் செய்து வந்தவர்கள். இந்த நிலங்கள் எல்லாம் ஜென்மி நிலங்கள் ஒழிப்பில் சட்டத்தில் பிரிவு -17 ன் (செக்சன் 17) கீழ் சர்ச்சைக்குரிய நிலங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

அவற்றை விதிமுறைப்படி பட்டா கொடுக்க வேண்டியவர்களுக்கு கொடுத்துவிட்டு, எஞ்சியுள்ள நிலங்களை காடுகளாக அறிவிக்க வேண்டும். அதை செய்ய வேண்டியது வனத்துறையும். அரசும்தான். 1972-ல் வழக்குப்போடப்பட்டு, 1999-ல் 'இந்த நிலங்களில் தமிழக அரசே முடிவெடுக்கலாம்!' என்று உச்ச நீதிமன்றமே அறிவித்த நிலையில், அதை செய்யாமல் இருந்தனர் ஆட்சியாளர்கள்.

அவர்கள் எடுக்க வேண்டிய நிலங்கள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பெரிய எஸ்டேட் நிறுவனங்கள் பக்கம் இருக்க, அதில் கை வைக்காமல் அப்பாவி சிறு விவசாயிகள், வீடு கட்டிக்குடியிருந்தவர்கள்மீதுதான் ஆக்கிரமிப்பு என்று கைவைத்தனர் வன அலுவலர்கள். அதில் அப்போதைய கூடலூர் வன அலுவலர் சேவாக்சிங் முக்கியப் பங்கு வகித்தார். அதற்கு எதிராகத்தான் ஆயிரக்கணக்கில் மக்கள் பொங்கினர்.

இதைப்பற்றி அப்போது போராட்டக்களத்தில் இருந்த மலையக மக்கள் நல்வாழ்வு மன்ற அமைப்பாளர் சு.ஆனந்தராஜா, ''இந்தத் தொகுதி எம்.எல்.ஏ அமைச்சர் மில்லர். இந்த செக்சன் -17 நிலங்களுக்கு பட்டா வாங்கித் தருகிறேன் என்று சொல்லித்தான் தொகுதியில் ஓட்டு வாங்கி ஜெயித்தார். இதற்கு முன்பு எம்எல்ஏவாக இருந்த திமுக எம்எல்ஏ குன்னூர் முபாரக்கும் இதை சொல்லித்தான் வென்றார். ஆனா இப்ப கண்டுக்க மாட்டேங்கறாங்க. இதற்கு முன்பு வன அலுவலராக தீபக் ஸ்ரீ வத்சவா இருந்தார். அவர் இருந்தவரை இந்த மாதிரி பிரச்சினையே எழுந்ததில்லை. அவர் பெரிய எஸ்டேட் முதலாளிகள் ஆக்கிரமிப்பு நிலங்களில்தான் கை வைத்தார். துணிச்சலாக அவற்றில் ஐநூறு ஏக்கர் நிலங்களையும் மீட்டார். ஆனால் இந்த அதிகாரி ஏழை எளியவங்க இடங்களைத்தான் குறி வச்சு பறிக்கிறார். எஸ்டேட் முதலாளிகள், வனக்கொள்ளையர் நிலங்களில் மட்டும் ஒரு அங்குலம் கூட கை வைக்கவில்லை!'' என்று பொங்கினார்.

''இதில் ஒரு சூது இருக்கிறது. அவர்கள் ஏழை எளியவர்களை இப்படி அடித்து விரட்டுவார்கள். பயிர்களையும் அழித்து விடுவார்கள். வனத்துறை அதன் பிறகு எதுவும் கண்டு கொள்ளாது. அதையே சாதகமாக்கி அருகிலுள்ள பெரிய, பெரிய காபி, தேயிலை எஸ்டேட் கம்பெனிகள், இந்த நிலங்களையும் ஆக்கிரமித்துக் கொள்ளும். இதுதான் இங்கே காலம், காலமாக நடந்து வருகிறது!'' என்றார் சூழல் ஆர்வலர் செல்வராஜ்.

ஊரே கொந்தளித்து நின்றதையடுத்து வனத்துறையின் நடவடிக்கை அப்போதைக்கு ஒய்ந்தது. அதற்குப் பிறகு சில ஆண்டுகள் கழித்து மசினக்குடியில் மறுபடியும் பிரச்சினை கிளம்பியது. 1998-ல் சராணாலய விஸ்தரிப்புக்கு எதிராக போராடிய இந்த மக்கள், சரியாக அதற்கு 10 ஆண்டுகள் கழித்து, புதிதாக 'புலிகள் வாழ நாங்கள் சாக வேண்டுமா?' என்று கிளர்ச்சியில் குதித்தார்கள். அதிலும் மசினக்குடி மட்டுமல்லாது, அதைச் சுற்றியுள்ள மாவனல்லா, வாழைத்தோட்டம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அந்த போராட்டத்திலும் இருந்தார்கள். அது 2008-ம் ஆண்டு ஜூன் மாதம். முப்பது ஊர்களிலும் கடையடைப்பு, உண்ணாவிரதம் என்று தொடங்கியிருந்தார்கள்.

இந்தப் போராட்டத்திற்கு சில மாதங்கள் முன்புதான் முதுமலை வனவிலங்குகள் சரணாலயத்தில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகச் சொல்லி அதை புலிகள் சரணாலயமாக அறிவித்திருந்தது அரசு. அவர்கள் ஏற்கெனவே முதுமலைக்கு என இருந்த 321 சதுர கிலோமீட்டர் பரப்பளவை மட்டும் புலிகள் காப்பகமாக அறிவித்திருந்தால் கூட பரவாயில்லை. அதை ஒட்டியுள்ள பெரும்பான்மை கிராமங்களையும் உள்ளடக்கிய வனப்பகுதிகளையும் (சுருக்கமாக சொன்னால் 1998-ல் அறிவித்த சரணாலய விஸ்தரிப்பை விடவும் அதிகமான பரப்பளவு) சேர்த்தே காப்பகமாக அறிவித்திருந்தது.

அதாவது ஏற்கெனவே முதுமலைக்கு இருந்த 321 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கோர் ஜோன் எனவும், அதை ஒட்டியுள்ள பல்வேறு கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகள் பஃப்பர் ஜோன் எனவும் இரண்டு பிரிவாக பிரித்து அறிவித்துவிட்டனர் வன அலுவலர்கள். முதலாவது பகுதியில் மனித நடமாட்டமே கூடாது. இரண்டாவது பகுதியில் கிராம மக்கள் தங்கள் அடிப்படை வசதிகளை செய்து கொள்ளக்கூட வனத்துறை அனுமதி வாங்க வேண்டும். அப்படிச் செய்யக்கூடாது என்கிறது புலிகள் காப்பகத்திற்குரிய வனச்சட்டம். அத்துடன் நிற்காது இப்பகுதியில் வசிக்கும் மக்கள் படிப்படியாக இங்கிருந்து வெளியேற்றப்படுவர் என்றும் பயம் காட்டினர் வனத்துறை அதிகாரிகள். அதையடுத்தே இதற்கெதிராக மக்கள் போராட்டம் எழுந்தது.

இந்தப் போராட்டத்தில் அப்போது பங்கேற்ற அனைத்து வன ஒருங்கிணைபபுக்குழு தலைவர் மொய்தீன் இப்படி உணர்ச்சி பொங்கினார்:

''புலிகள் வாழ்வதாக வனத்துறையினர் அறிவித்துள்ள பகுதி எங்கள் கிராமப் பகுதிகளை ஒட்டி அமைந்துள்ளது. அதாவது அந்த பகுதிகளுக்குள் எங்கள் கிராமங்கள் தீவு போல் அகப்பட்டுக் கொள்ளும். அந்த 'கோர் ஜோனு'க்குள் மனித நடமாட்டமே இருக்கக் கூடாது என்பது வனத் துறையில் புலிகள் காப்பகத்தின் சட்ட விதி. அப்படிப் பார்த்தால் மசினக்குடி ஊராட்சி ஜனங்கள் சுமார் 30 ஆயிரம் பேர் மேற்கில் உள்ள கூடலூர் நகருக்கும் போக முடியாது. கிழக்கில் உள்ள ஊட்டிக்கும் போக இயலாது. தவிர இவை புலிகள் காப்பகமாக மாறும்போது வீடுகளுக்கு பச்சை வர்ண பெயிண்ட்தான் அடிக்கணும். இரவு பத்து மணிக்கு மேல் மின்விளக்கு எரிய விடக்கூடாது. வீட்டின் முன்பு குழியோ, தண்ணீர் தோட்டியோ அமைக்கக்கூடாதுன்னெல்லாம் கடும் விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

இந்த கெடுபிடிகளை சகித்துக் கொண்டு மலைவாசி மக்கள் இங்கே இருக்க விரும்பினால் இருக்கலாம். இல்லாவிட்டால் அவர்கள் குடும்பத்திற்கு பத்தே கால் லட்ச ரூபாய் கொடுத்து வெளியேற்ற வன உரிமை அங்கீகாரச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அது எந்த அளவு நிறைவேற்றப்படும் என்று தெரியவில்லை. ஏற்கெனவே களக்காடு, முண்டந்துறை பகுதிகளை புலிகள் காப்பகமாக அரசு மாற்றியபோது இத்தொகை தருவதாக சொல்லித்தான் வெளியேற்றியது. பிறகு அந்தத் தொகை கொடுக்கப்படவில்லை என்றே தெரிகிறது. தவிர இப்படி புலிகள் காப்பகமாக அறிவிக்கப்படவேண்டுமென்றால் முதலில் அப்பகுதி மக்களின் கருத்தைக் கேட்க வேண்டும் என்பது சட்டம். இந்த மசினக்குடி ஊராட்சியில் மட்டும் 15 ஆயிரம் பேர் வசிக்கிறோம். மற்ற 7 பஞ்சாயத்துகளின் ஜனத்தொகையையும் சேர்த்து ஜனத்தொகை 1.5 லட்சத்தைத் தொடும்.

ஆனால் இந்த மக்களிடம் எந்த கருத்துமே கேட்கப்படவில்லை. மூன்று மாதங்களுக்கு முன்பு வன அதிகாரிகளே இப்பகுதிகளை புலிகள் காப்பகம் என அறிவித்து, பெயர்ப் பலகையும் வைத்து விட்டார்கள். பிறகுதான் இங்குள்ள ஒரு கல்குவாரியையே மூடவும் வைத்தனர் வனத்துறையினர். இந்த ஊரில் ஒரு நீடில் பாலீஸ் தொழிற்சாலை வர இருந்தது. ஹார்லிக்ஸ், சந்தன ஆயில், பிளைவுட் த யாரிப்பு நிறுவனங்களும் வர இருந்தன. அவை வந்திருந்தால் இங்குள்ள மக்கள் ஓரளவு வேலைவாய்ப்பு பெற்று ஓரளவு ஜீவித்திருப்பர். ஆனால் இப்ப அதுக்கெல்லாம் வனத்துறை அப்ஜெக்சன் தெரிவித்து வரவிடாமல் தடுத்துவிட்டது. இப்பவே இப்படின்னா இது புலிகள் காப்பகமாக நடைமுறைக்கு வந்துவிட்டால் எங்கள் நிலை என்ன ஆகும்?'' என்றார்.

மீண்டும் பேசலாம்.

கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in  

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x