Published : 16 Nov 2017 03:18 PM
Last Updated : 16 Nov 2017 03:18 PM

யானைகளின் வருகை 79: உணவான உப்பு ஆடைகள்!

''அங்குள்ள மரங்கள், குன்றுகளில் தன் தீப்பிடித்துள்ள உடலை உராய்ந்து, தன் மீது கொதித்துக் கொண்டிருக்கும் தார்க்குழம்பை அகற்ற முயற்சிக்கும். அப்படி முடியாது காட்டுக்குள் ஓட்டம் பிடிக்கும். அதற்குப் பிறகு அது காட்டிலிருந்து வெளியே வரவே வராது. அது அங்கேயே புண்ணாகி செத்திருக்குமோ, வேறு இடத்திற்குச் சென்று தழும்புடன் திரியுமோ என்பதெல்லாம் அதைப் பார்த்தவர்களுக்குத்தான் தெரியும். அதை நான் என் கண்ணாலேயே கண்டிருக்கிறேன். இப்படி செய்பவர்களை கண்டித்தும் உள்ளேன். வனத்துறையினருக்கும் தெரிவித்து நடவடிக்கை எடுக்க செய்திருக்கிறேன்.

அது இன்னமும் பல்வேறு மாவட்டங்களில், மாநிலங்களில் தொடர்கிறது என்பது கொடூரம். மேற்கு வங்கத்தில் கூட இந்த மாதிரி செயல்கள் நடந்திருப்பது, நம் மக்கள் இன்னமும் தன்னலமற்று வாழவே தொடங்கவில்லை என்பதையே காட்டுகிறது!'' என வேதனை தெரிவிக்கிறார் செல்வராஜ்.

இந்த ஓவேலி, பர்லியாறு சம்பவங்கள் உயிர்ச்சூழல் மண்டலத்தில் நாம் பிரவேசித்துள்ளதற்கு தொடக்க அதிர்ச்சி சம்பவங்கள்தான்.

இதில் பர்லியாறு என்பது நீலகிரி மலைகளின் கிழக்கு கோடிப் பகுதி. அதேபோல் மேற்குக்கோடி பகுதியாக விளங்குவது கூடலூர் ஓவேலி. 1989ல் ஒரு மாவட்டத்தின் மேற்குக் கோடியில் நடந்த கொடூர சம்பவம், அதே மாவட்டத்தின் கிழக்குக் கோடியில் 2015ல் நடக்கிறதென்றால், அதே மாதிரியான காட்சிகள் இந்திய வரைபடத்தில் வடமேற்கு கோடியில் உள்ள மாநிலத்தில் நடைபெறுகிறதென்றால், இந்த கொடூரத்தை என்ன வார்த்தைகள் சொல்ல விவரிப்பது. எந்த வகையில் நியாயம் கற்பிப்பது. தீர்வு சொல்வது? இப்படியெல்லாம் யானைகளை அதன் வாழ்விடத்திலேயே சென்று கொடூரத்திற்கு உள்ளாக்கினால் அவை எந்த மாதிரியான மாற்றங்களுக்கு உள்ளாகும்?

அதற்கு ஓர் உதாரணம்தான் இங்கு அழுக்குத் துணிகளை சாப்பிடும் காட்டு யானைகள்.

இதே ஓவேலியை ஒட்டியுள்ளதுதான் கூடலூரை அடுத்துள்ள தேவாலா. தமிழகத்தின் சிரபுஞ்சி எனப்படும் பிரதேசம். இங்கேதான் ஆறுகளை வளம் கொழிக்கச் செய்யும் பசுமை மாறாக்காடுகள் மிகுந்துள்ளன. தமிழகத்திலேயே அதிகமான மழைப்பொழிவுள்ள பகுதியும் இதுதான் என்பதை நாம் ஏற்கெனவே கண்டுள்ளோம். இங்குள்ள முண்டக்குன்னு ஆதிவாசிகள் கிராமத்தைச் சேர்ந்தவர் மாதன். இவர் வீட்டில் நுழைந்த காட்டு யானைகள் அரிசி, பருப்புடன் அங்கிருந்த ஒரு மூட்டைத் துணியையும் சாப்பிட்டு விட்டது. வனத்துறையினரிடம் மாதனின் முக்கிய புகாரே, ''எங்க குடும்பத்துல யாருக்கும் உடுத்தறதுக்கு துணியே இல்லீங்க. அதுக்கு உதவி பண்ணுங்க!'' என்பதுதான்.

கூடலுார் கொலப்பள்ளி கிராமம். மாலை 6 மணிக்கு வெளிச்சம் இருக்கும்போதே இங்குள்ள டீக்கடையில் புகுந்த ஒற்றை யானை ஒரு ஆளை அடித்துக் கொன்றது. அவனின் உடலை நிலத்தோடு, நிலமாக அழுத்தி தேய்த்தது. தவிர, அந்த ஆளின் தோலை பாம்பு சட்டையை உரிப்பதுபோல் உரித்தது. மனித உடம்பில் வடிந்த ரத்தத்தை தடவிதடவி நாக்கில் வைத்து டேஸ்ட் பார்த்தது யானை. 'சைவப் பிராணியான யானையா இப்படி?' என திகிலறைந்து பார்த்தனர் மக்கள்.

லாரஸ்டன் என்ற கிராமத்தில் சத்துணவுக்கூடத்தை உடைத்து புகுந்தன சில காட்டு யானைகள். அது அரிசி பருப்புடன் விரும்பி சாப்பிட்டது அங்குள்ள உப்பு மூட்டையை. அண்ணாநகரில் காலை 11 மணிக்கு தனது தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த ராசைய்யா என்பவரை ஒரு யானை துாக்கிப்போட்டு மிதித்து கைகால்களை உடைத்து விட்டது. பழங்குடிப் பெண் யானைகள் துாரத்தில் வரும் வாசத்தை வைத்து கண்டுகொள்ளும் ஆற்றல் மிக்கவர். அவரை மதியம் 2 மணிக்கு யானை அடித்துக் கொன்றது.

இதுவெல்லாம் கடந்த நான்காண்டுகளுக்கு முன்பு நீலகிரி கூடலுார் பகுதி கிராமங்களில் நிகழ்ந்த சம்பவங்கள். இதற்கு முன்பு வரை காட்டு யானைகள் வரும் போகும். எதிர்ப்பட்டால் மட்டும்தான் மனிதனைத் தாக்கும். ஆனால் வீடுபுகுந்து மனிதனை தாக்குவது, அங்குள்ள உணவுப்பொருட்களை சாப்பிடுவது, குறிப்பாக உப்பு மூட்டை கிடைத்தால் ஒரு பிடி பிடிப்பது என்பதெல்லாம் பத்தாண்டுகளுக்கு உட்பட்ட காலங்களில்தான். அதற்கு என்ன காரணம் என்பதுதான் அதிர்ச்சியூட்டக் கூடியது.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சுற்றுலாப் பயணிகளை கவருவதற்காக வனத்துறையும், தனியார் ரிசார்ட் முதலாளிகளும் வனவிலங்குகள் நடமாடும் வழியோரங்களில் உப்பு, புளி போன்றவற்றை மூட்டை மூட்டையாக போட்டனர். அதை உண்டு பழகின யானைகள்தான் இந்த உப்பு, புளி ருசி பழகி காட்டிலிருந்து குடியிருப்பு வீடுகளுக்குள் புகுந்து திண்பண்டங்களையும், துணிமணிகளையும், மனித ரத்தத்தை கூட டேஸ்ட் பார்க்கிறது!'' என்கிறார் எம்.எஸ். செல்வராஜ்.

ஆசிய இன யானைகள் அதிகம் வாழ்வது நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலமாகும். 5520 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட கூடலுார் பசுமைாறாக்காடுகளுக்கு அருகில்தான் முதுமலை, முத்தங்கா, பந்திப்பூர், முக்குருத்தி, நாகர்ஹோலா என்ற 5 வனவிலங்கு சரணாலயங்கள் உள்ளன. இப்பகுதியைச் சுற்றி பாரம்பரியமிக்க பழங்குடிகளும் இதர வனம் சார்ந்த இயற்கை வாழ்வு வாழும் மக்களும் வசித்து வருகின்றனர்.

சில வருடங்கள் முன்புவரை இங்குள்ள விலங்குகளால் குறிப்பாக காட்டு யானைகளால் எந்த பெரிய பிரச்சினையும் இங்குள்ள மக்களுக்கு ஏற்பட்டதில்லை. வருடத்தில் ஒரு முறை சிலமாதங்கள் மட்டும்தான் மக்கள் வாழும் பகுதிகளில் யானைகளை அதுவும் இரவு 9 முதல் 10 மணிக்கு மேல்தான் பார்க்க முடியும். ஆனால் இப்போதெல்லாம் பட்டப்பகலிலேயே யானைகளால் நடுங்கிக் கிடக்கிறது வன கிராமங்கள்.

1 மாதம் முன்பு நாடுகாணியில் ஒரு ஆளை பகலிலேயே அடித்துக் கொன்றது யானை. சில மாதங்கள் முன்பு வெள்ளைக்கார பெண்மணி ஒருவரை மசினக்குடியில் கொன்றது; அதுவும் பகல்நேரம்தான். ஆடைகளை உண்ணுவது, இடையில் மாட்டும் நபர்களை அடித்துக் கொலை செய்யும்போது அவனின் தோலை உரித்து ரத்தத்தை சுவைப்பது போன்ற அதிர்ச்சியூட்டும் செயல்களில் காட்டு யானைகள் ஈடுபடுவதை நானே பார்த்துள்ளேன்.

இதுபோன்ற யானைகளின் செயல்பாடுகளுக்கு வனத்துறையினரும், இதைச்சார்ந்தவர்களும் ரொம்ப சுலபமாக இங்கு வசிக்கும் மக்கள் மீதே பழியை போட்டு தப்பித்துக் கொள்கின்றனர். உயர்மட்ட அதிகாரிகளுக்கும், மீடியாக்களுக்கும் தவறான தகவல்களை கொடுத்து மக்கள் மீது பழிபோடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். இதனால் காட்டு யானைகளால் ஏற்படும் பாதிப்புகளை கட்டுப் படுத்தவே முடியாத நிலை ஏற்படும்.

யானைகளுக்காக ஒதுக்கப்பட்ட சரணாலயங்களிலும், இதரக்காடுகளிலும் பார்த்தீனிய விஷச்செடிகளும், உண்ணிச்செடிகளும் (லேண்டா), காங்ரஸ் செடி மற்றும் தேக்கு மரங்களும் மட்டுமே உள்ளன. ஒரு நாளைக்கு 250 கிலோ உணவு சாப்பிடும் யானைகள் இவற்றை முகர்ந்து கூட பார்க்காது. யானைகளின் முக்கிய உணவாக இருந்து பல்லாயிரம் ஹெக்டேர் பரப்பில் பல்கியிருந்த மூங்கில் காடுகள் இப்போது சுத்தமாக அழிந்தே போய்விட்டது.

முற்றிய மூங்கில்களை நாம் முறையாக வெட்டி எடுத்துவந்தால்தான் மீண்டும் புதுப்புது கிளைகள் தோன்றி மூங்கில்கள் நிரந்தரமாக இருக்கும். அதை பாரம்பரியமாக பழங்குடிகள் செய்து வந்தனர். இயற்கையோடு இணைந்து இச்செயல்பாட்டுக்கு வனத்துறையினர் தடை செய்ததால் முற்றிய மூங்கில்களின் வாழ்நாளான 45 ஆண்டுகள் பூர்த்தியான நிலையில் அவை முற்றிலும் அழிந்து விட்டன.

கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் போல் இப்போது காடுகளில் மூங்கில் வளர்க்க நாற்றுகளை உருவாக்குகிறார்கள். இது உடனடியாக பலன் தராது. தவிர இந்த தவறான இயற்கை சூழல் மாற்றத்தால் புவி வெப்பமடைந்து யானைகளும், இதர உயிரினங்களும் உண்ணும் தாவரங்கள் அழிந்தே போய் விட்டன.

இதற்கிடையேதான் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காக சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சாலையோரங்களில் உப்பு, புளிகளை போட்டனர். பொதுவாக சீஸன் காலங்களில் ஒரு வகை உப்பு மண்ணையும், உப்புத்தன்மையுடைய தாவரங்களையும் வனத்திலேயே தேடி உண்ணும் வழக்கம் கொண்டது யானைகள். சாலையோரங்களில் கடல் உப்பு கிடைப்பதையறிந்ததும், அதை சாப்பிட வர ஆரம்பித்தன. அதை உண்டு பழகிய யானைகள் தினம் தினம் சாலைக்கு வுர சுற்றுலாப் பயணிகள் இதை கண்டு ரசித்தனர். இந்த உப்பு வாங்குவதில் முறைகேடுகள் நடந்ததாக எல்லாம் வனத்துறையினர் மீது குற்றச்சரட்டுக்கள் கிளம்பின.

சூழல் ஆர்வலர்களும் இந்த உப்பு போடும் விஷயத்தில் எதிர்ப்புகளை கிளப்பினர். எனவே இந்த உப்பு போடும் செயல் அடியோடு நிறுத்திவிட்டது வனத்துறை. ஆனால் உப்பு சாப்பிட்டு பழகின யானைகள் சும்மாயிருக்குமா? அந்த சுவைக்காக ஊருக்குள் புக ஆரம்பித்துவிட்டன. சத்துணவுக் கூடங்கள், வீடுகள், டீக்கடைகள் என காட்டு யானைகள் எங்கு நுழைந்தாலும் முதலில் சாப்பிடுவது உப்பு, புளியைத்தான்.

ஆதிவாசிகள் கடும் உழைப்பாளிகள். அவர்களின் ஆடைகளில் மிகுதியான வியர்வை இருக்கும். எனவே அந்த உப்பு வியர்வையுள்ள துணிகளைக்கூட விடாமல் அதையும் சாப்பிடுகின்றன. மனித உடம்பு ரத்தத்தில் உப்பு சுவை மிகுதி. எனவே போகிற போக்கில் மனிதனை அடிக்குமபோது சில யானைகள் அவன் ரத்தத்தையும் சுவைத்துப் பார்ப்பதும் நடக்கிறது. அதுவும் அவைகளுக்கு பழகிப் போனால் நிலைமை என்னவாகும்? எனவேதான் தற்போது யானைகளின் பண்பும், குணாம்சமும் நாம் செய்த தவறுகளால் மாற்றம் கண்டுள்ளது. அதை முழுமையான ஆராய்ச்சிக்குட்படுத்தி அதற்கேற்ப நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்!'' என்கிறார் இவர்.

அப்படியென்ன யானைகளின் புகலிடத்தில் மனிதன் செய்தான்? ஒன்றா இரண்டா? அதற்கு நாம் நிலம்பூர் ஜமீன் வரலாறுக்குள்ளும், செக்சன் 17 பிரிவு நிலங்களுக்குள்ளும், அதில் நடந்த குளறுபடிகளுக்குள்ளும் செல்ல வேண்டியது அவசியம். 

மீண்டும் பேசலாம்.

கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in  

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x