Published : 30 Nov 2017 11:32 AM
Last Updated : 30 Nov 2017 11:32 AM

யானைகளின் வருகை 90: வனக் கொள்ளையர்களிடம் 30 ஆயிரம் ஏக்கர் நிலங்கள்!

உதாரணமாக, செக்சன்-8 மற்றும் செக்சன்-9 நிலங்கள் எனப்படுவது மக்களால் முழுமையாக பயன்படுத்தக்கூடிய நிலம். அதில் விவசாயம், அல்லது கட்டுமானங்கள் இருக்கும். இதற்கு பட்டா அளிக்கலாம் என்கிறது. செக்சன் 53 என்பது நிலம்பூர் ஆவணங்களில் வனம் என்று இருக்கும். அதில் நிலம்பூர் ஜமீன் குடிகள், அவர்களின் அடிமைக்குடிகள் வசிப்பார்கள். அதில் உள்ள வகைப்பாட்டின்படி என்ன முடிவு எடுத்து, எதற்கு பட்டா கொடுக்கலாம் என சொல்கிறது. இப்படி ஒவ்வொரு பிரிவிலும் அந்த நிலங்களின் வகைப்பாடு சொல்லப்பட்டு, அதற்கான நடவடிக்கைகள் வழிமுறைகளும் சொல்லப்பட்டிருக்கிறது.

இந்த வகைப்பாட்டின்படி தன் மாநில எல்லைக்குள் வந்த செக்சன்-17 பிரிவு சர்ச்சைக்குரிய நிலங்களில் உள்ள குளறுபடிகளை நீக்கி, தீர விசாரித்து, உரியவர்களுக்கு பட்டாவையும் அளித்து எஞ்சிய பகுதியை வரையறுத்து அதை முழு வனமாகவும் அறிவித்து விட்டது கேரள அரசு. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் எதுவும் நடக்கவில்லை. காரணம் இங்கிருந்த ஊழல், முறைகேடு ஓட்டைகள்.

ஏனென்றால் ஆவணங்களில் உள்ளதையும் மீறி நீண்டகாலமாக இந்த நிலங்களில் வசிப்பதாக உரிமை கொண்டாடினர் ஆயிரக்கணக்கானோர். அவர்கள் எல்லாம் 2 ஏக்கர், 3 ஏக்கர் முதல் 10 ஏக்கர், 15 ஏக்கருக்கு கூட நிலம்பூர் கோயிலகத்தின் பத்திரங்களை வைத்திருந்தனர். அசலாக இங்கே இருந்தவர்கள் அந்தப் பத்திரங்கள் எல்லாம் போலி என்றனர்.

போதாக்குறைக்கு கோயிலகத்திடம் லீசு எடுத்த பெரு நிறுவனங்கள் தான் லீசு எடுத்த நிலங்களை விட கூடுதலாய் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். இதை சமயமாக பயன்படுத்தி கேரளத்திலிருந்து ஒரு பிரிவினர் கோயிலகத்தின் பெயரால் போலி பத்திரங்கள் தயார் செய்துகொண்டு இங்கே நிலம் உள்ளதாக கணக்கு காட்டி குடியேறினர். அந்தப் போலிப் பத்திரம் தயார் செய்வதற்கெனவே கேரளத்தில் ஆட்கள் இயங்கினர்.

இதன் மூலம் நிறைய பேர் நிலக் கொள்ளையர்களாகவே இந்தக் காடுகளுக்குள் புகுந்தனர். நிலம்பூர் ஜமீன் வாரிசுகள் கேரளத்தில் இருந்ததால், அவர்கள் வைத்துள்ள பத்திரங்கள் போலியா, அசலா என்பதை கண்டுபிடிப்பதிலேயே இங்குள்ள அதிகாரிகள் தாவு கழன்றனர். போலி பத்திரங்கள் என நடவடிக்கை எடுக்கப் பாய்ந்தால் பல்லாயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதே சமயம் இவர்களிடம் உள்ள பட்டாக்களுக்கு, பத்திரங்கள் உள்ளிட்ட ஆவணங்களுக்கு ஏற்ப, நிலங்களை அந்தந்த வகையில் பிரித்துக் கொடுத்துவிட்டு பெருமுதலாளிகளிடம் உள்ள ஆக்கிரமிப்பு நிலங்களை கைப்பற்றி காடுகளாக அறிவியுங்கள் என்று அப்போதைய விவசாய, இயற்கை அமைப்புகளிடம் கோரிக்கைகள் கிளம்பின. அதிகாரிகள் பெரிய எஸ்டேட்டுகளின் ஆக்கிரமிப்பை அகற்ற புறப்பட்டால் அதில் உள்ள தொழிலாளர்களையும், பக்கத்தில் உள்ள சிறு விவசாயிகளை தூண்டிவிட்டு போராடவைத்து எஸ்டேட் நிர்வாகமே கிளர்ச்சி நாடகங்கள் போட்டன.

அதையும் மீறி ஜென்மி நிலங்கள் 80 ஆயிரத்து 88 ஏக்கரையும் தமிழக அரசு எடுத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க, மஞ்சுஸ்ரீ பிளேன்டேஷன் (பிர்லா குருப்) உள்ளிட்ட 9 பெரும் நிறுவனங்கள் உச்ச நீதிமன்றம் சென்றன. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இப்பகுதி நிலங்களை விவாதத்திற்குரிய பகுதியாக அறிவித்தது.

அத்துடன், 'அப்போது விவசாயம் செய்திருக்கும் நிலத்தை தவிர்த்து ஒரு அங்குல நிலம் கூட புதிதாக யாரும் ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது!' என ஆணை பிறப்பித்தது. மேலும், 'இந்தப் பகுதியில் எந்த வளர்ச்சி திட்டங்களும் மேற்கொள்ளக்கூடாது; மீறி செய்தால் உச்ச நீதிமன்ற அவமதிப்பாகும்!' என்றும் எச்சரித்தனர் நீதியரசர்கள். இதில் பல்வேறு அத்துமீறல்கள் நடக்க, அப்போதும் ஒரு வழக்கில் நீதிமன்றம், 'இந்த செக்சன் 17 நிலங்களில் விவசாயம் விவசாயமாகவும், குடியிருப்பு, குடியிருப்பாகவும், வனம், வனமாகவுமே இருக்கணும். அதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு வனத்துறைக்கே உள்ளது!' என்றும் சொன்னது.

ஆனால் அப்போதும் அத்துமீறல்கள் நடந்து கொண்டே இருந்தன. பல நிலக் கொள்ளையர்கள் இந்த நிலத்திற்குள் மேலும் புகுந்தனர். நிறுவனங்களும் தன் லீசு நிலத்திலிருந்து தன் எல்லையை விஸ்தரித்துக் கொண்டே சென்றது. அதைக் கண்காணிக்க வேண்டிய வனத்துறையினர் அதைக் கண்டுகொள்ளாமல், அந்தப் பெரு நிறுவனங்களுக்கு உறுதுணையாகவும் இருந்தனர். அதற்கேற்ப அவர்கள் அனுகூலமும் பெற்றனர்.

அதே சமயம் அரை ஏக்கர், ஒரு ஏக்கர் வைத்துள்ள சிறு, குறு விவசாயிகள், அவர்கள் குடியிருக்கும் குடிசைகளில் ஏதாவது சின்ன அபிவிருத்திப் பணிகள் செய்தாலோ, பாதையைச் சீரமைத்தாலோ அவர்கள் மீது மட்டும் நடவடிக்கைகள் பாய்ந்தது. இதனால் வனத்துறையினர்- பொதுமக்கள் மோதலும் அடிக்கடி தொடர்ந்தது. இதை முன்வைத்து எரிகிற வீட்டில் பிடுங்கின வரை லாபம் என்பது வனக் கொள்ளையர்களுக்கும் வசதி படைத்த பெரும்புள்ளிகளுக்கும் கொள்கையாகிப் போனது. கூடலூர் பகுதியில் உள்ள வனங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கர் காடுகளை ஆக்கிரமித்து அதில் உள்ள் மரங்களை எல்லாம் வெட்டிக் கடத்த கோடிகளில் லாபம் ஈட்டினர். இந்தப் பணத்தைக் கொண்டே அந்த இடத்தில் தேயிலைத் தோட்டங்களை உருவாக்கி காடு இருந்த சுவடே இல்லாமல் செய்து விட்டனர்.

இந்த இயற்கை நேய, மனிதநேய, சட்டவிரோத கொடுமைகள் எல்லாம் அந்தந்த காலகட்டத்தில் இருந்த வனத்துறையினர் மூலமும், ஆளுங்கட்சி அரசியல் புள்ளிகளின் வாயிலாகவும் அரங்கேற்றம் கண்டன. இந்த செக்சன் -17 நிலங்கள் வழக்கை 1999-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் முடிவுக்கு கொண்டு வந்தது. 'இந்த நிலங்களில் தமிழக அரசே இறுதி முடிவு எடுக்கலாம்!' என்பதே அந்தத் தீர்ப்பு.

அப்போதே இந்த நிலங்களில் வசிக்கும் மக்களுக்கும், விவசாயிகளுக்கும் பட்டா கொடுத்துவிட்டு, பெரும் கம்பெனிகளிடமுள்ள நிலங்களையும் அரசு மீட்டு, அவற்றைக் காடுகளாகவும் அரசு அறிவித்திருக்கலாம். ஆனால் செய்யவில்லை.

இதன் விளைவு. 1969 காலகட்டத்தில் குறிப்பிட்ட 12 நிறுவனங்களிடம் இருந்த லீசு நிலங்களின் கணக்கும், இப்போது அவர்கள் ஆக்கிரமித்து வைத்திருந்த நிலத்தின் கணக்கும் மலைக்கும் மடுவுக்குமானதாக மாறியது. உதாரணமாக வுட் பிரயர் எஸ்டேட் 1969ல் கணக்கில் வைத்திருந்த வேளாண் நிலம் 381.68 ஏக்கர். அவர்களிடம் தற்போது இவர்கள் வசம் உள்ள நிலங்கள் 466.27 ஏக்கர்.

இதில் அதிகமாக மஞ்சுஸ்ரீ எஸ்டேட் 1969 ஆவணப்படி 3 ஆயிரத்து 673 ஏக்கர் 73 சென்ட் வைத்திருந்தது. தற்போது அது 16 ஆயிரம் ஏக்கர் 28 சென்ட் வைத்துள்ளது. இரண்டாவது இடத்தில் உள்ள கிளன்ட் ராக் எஸ்டேட் 2 ஆயிரத்து 895 ஏக்கர் 33 சென்ட் இருந்ததை, இப்போது 3 ஆயிரத்து 560 ஏக்கர் 68 சென்ட்டை கூடுதலாக நீட்டித்துள்ளது. 3-வது இடத்தில் உள்ள இந்திய எஸ்டேட் டீ எஸ்டேட்டிடம் 1 ஆயிரத்து 490 ஏக்கர் 27 சென்ட் இருக்க வேண்டும்.

அது இப்போது 4 ஆயிரத்து 489 ஏக்கரை கூடுதலாக வைத்துள்ளது. இப்படியாக 1969 ஆவணப்படி மொத்தம் 12 எஸ்டேட் மற்றும் தோட்ட நிறுவனங்களிடம் ஆவணப்படி 19 ஆயிரத்து 644 ஏக்கர் 19 சென்ட் நிலம் இருந்தது, தற்போது அதை விட கூடுதலாய் 32 ஆயிரத்து 356 ஏக்கர் 52 சென்ட் நிலங்களை ஆக்கிரமித்து வைத்துள்ளது.

தற்போது இந்த செக்சன்-17 நிலங்கள் கூடலூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் 20 சதவீதம் உள்ளன. ஓவேலி பேரூராட்சிக்குள் அதுவே 60 சதவீதம் உள்ளது. ஸ்ரீமதுரை, நிலாக்கோட்டை, நெல்லியாளம், சேரங்கோடு என வரும் ஊராட்சிகளில் 20 முதல் 30 சதவீதம் நிலங்கள் இருக்கிறது. இதில் அரை ஏக்கர் நிலம் முதல் 5 ஏக்கர் வரை நிலங்கள் வைத்து விவசாயம் செய்யும் குடும்பங்கள் சுமார் 50 ஆயிரம் உள்ளது. நூறுக்கும் மேற்பட்ட எஸ்டேட்டுகள் கம்பெனிகள் உள்ளன.

அதில் 13 நிறுவனங்கள் மட்டுமே 300 ஏக்கர் முதல் 16 ஆயிரம் ஏக்கர் நிலங்களை வைத்துள்ளன. இந்த கணக்குப்படி பார்த்தால் 32 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் 13 பெரும் பணக்காரர்களிடமும், 19 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் மக்கள் கையிலும் உள்ளது. வனக் கொள்ளையர்கள் என்று பார்த்தால் 300 முதல் 400 பேர் இருப்பர். அவர்களிடம் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் அகப்பட்டிருக்கும். இப்போது இவற்றை முறையாக மீட்டெடுத்தால் கூட மக்களுக்கு கொடுத்துள்ளது போக, கம்பெனிகளை சரி செய்து, வனக் கொள்ளையர்களை அப்புறப்படுத்தினால் 30 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் வனமாகவே மாறும்.

மீண்டும் பேசலாம்.

கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in  

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x