Published : 05 Nov 2017 17:46 pm

Updated : 05 Nov 2017 18:05 pm

 

Published : 05 Nov 2017 05:46 PM
Last Updated : 05 Nov 2017 06:05 PM

யானைகளின் வருகை 71: பரளிக்காடுக்கு ஓர் எச்சரிக்கை!

71

நீலகிரி மலைகளின் நடுவே உள்ள குளுகுளுப்பான ஊட்டி நகருக்குச் செல்வதென்றால் குன்னூர் மற்றும் கோத்தகிரி சாலைகளைத்தான் பயன்படுத்த முடியும். இந்த இரண்டு மலைப் பாதைகளிலும் எங்காவது மரங்கள் முறிந்து விழுந்து விட்டாலோ, நிலச்சரிவுகள் ஏற்பட்டு விட்டாலோ வேறு வழியே இல்லாத இந்த நகரங்கள் துண்டிக்கப்பட்டு விடும்.

மேற்கே மசினக்குடி, முதுமலை, கூடலூர் வழியே கேரள கர்நாடகா பகுதிகளான சுல்தான் பத்தேரி, பந்திப்பூர் வழியாக சென்று சுற்றி தமிழ்நாட்டுக்குள் வரலாம். அல்லது குன்னூரிலிருந்து மஞ்சூர் சென்று அங்கிருந்து கெத்தை, முள்ளி, வெள்ளியங்காடு வழியாக கோவை வரலாம்.

இதில் மூன்றாவது தமிழ்நாட்டு பாதையான மஞ்சூர் சாலையையும், அதனை ஒட்டியுள்ள பில்லூர் அணை, அங்கு இயங்கும் நீர் மின்நிலையம், சுற்றுவட்டார வனாந்திரங்களையும்தான் தற்போது நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

இத்தொடரின் 16-ம் அத்தியாயத்தில் ஊட்டிக்கு மாற்றுப்பாதையாக சீகூர், தெங்குமரஹாடா சாலை போடுமாறு மக்கள் வலியுறுத்துவதைக் கண்டோம். அந்தப் பகுதியில் சுமார் பத்துகிலோமீ்ட்டர் தூரம் சாலைபோட்டு, சுமார் மூன்று பாலங்கள் கட்டி அங்குள்ள பள்ளத்தாக்கு மற்றும் சில மலைக்குன்றுகளை இணைத்தால் போதும் ரூட் கிளியர் ஆகிவிடும். அதில் கூடலூரிலிருந்து வரும் வாகனங்கள் மட்டுமல்ல, ஊட்டி, குன்னூர், கோத்தகிரி நகரங்களுக்கும் புதிய பாதை கிடைத்து விடும் என்பதே மக்கள் கோரிக்கையாக இருந்தது. ஆனால் இங்குள்ள வனவிலங்குகள், அடர் கானகங்கள், யானைகளின் வலசைகள் அதில் இருக்கும் பல்லுயிர் பெருக்கம் முன்னிட்டு சூழலியலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த திட்டம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. இது எல்லாம் ஏற்கெனவே நாம் விரிவாக பார்த்ததுதான்.

அதுபோல அல்லாமல் ரூட் கிளியராக இருந்தும் பராமரிப்பில்லாமல் பில்லூர் சாலை கிடப்பதால் இங்கு வசிக்கும் மக்களுக்கு வேண்டுமானால் இடையூறாக இருக்கலாம். அதை மட்டும் சரி செய்து விட்டால் ஒன்றல்ல, இரண்டல்ல இதை விட பத்து மடங்கு இருபது மடங்கு வாகனங்கள் பெருக்கம், மக்கள் வருகை ஏற்பட்டு இங்குள்ள வனவளங்களும், வனவிலங்குகளும் அழியும். அது யானைகளுக்கும் பெருங்கேடாக விளையும்.

ஒரு வகையில் மின்சார இலாகா, வனத்துறை, பொதுப்பணித்துறை ஈகோ பிரச்சினையில் இந்த சாலை குண்டும் குழியுமாக கிடப்பது கூட நல்லதற்குத்தான் என்பதே இப்பகுதியை கவனிக்கும் இயற்கை ஆர்வலர்களின் நோக்காக உள்ளது. அது எப்படி இந்த சாலையை புனரமைத்தால் ஒன்றுக்கு பத்து மடங்கு வாகனப் பெருக்கம், மக்கள் வருகை ஏற்படும் என்று கேள்வி எழுப்பலாம். அதற்கு இப்போதே இங்கே நடந்து வரும் சூழலுக்கு எதிரான விஷயங்களை கவனித்தல் நல்லது.

அப்பர் பவானி தொடங்கி பில்லூர் வரை கட்டப்பட்டுள்ள அணைகளும், அதைச் சார்ந்துள்ள நீர்மின் நிலையங்களும், அதற்காக அமைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதைகளும் ( இங்கு நீர் கொண்டு செல்லும் ராட்சஷ குழாய்கள் பாரமரிப்புக்காக ஆங்கிலேயர் காலத்தில் விஞ்ச் நிறுவப்பட்டுள்ளது)இங்குள்ள வனத்தையும், வன உயிரினங்களையும் எந்த அளவு சேதப்படுத்தியதோ, அது அந்த காலகட்டத்தில் ஆண்ட ஆட்சியாளர்களுக்கே வெளிச்சம்.

ஆனால் இப்பொதேல்லாம் மஞ்சூர் வரை வருகிறவர்கள் எங்காவது ஒரு ஓடையோ, சிற்றருவியோ, பள்ளத்தாக்கோ, பசும்புல்வெளியே கண்டுவிட்டால் போதும் அதையெல்லாம் மனிதர்கள் கண்டுகளிக்கக்கூடிய இடமாக மாற்றி விடுகிறார்கள். அந்த வகையில் மஞ்சூரில் உள்ள அன்னமலை கோயிலில் ஆரம்பித்து, ஆங்கிலேயேர் காலத்து கெத்தை பள்ளத்தாக்கில் உருளும் விஞ்ச் வரை (இங்கே மின்வாரியத்துறை அனுமதி பெற்றே செல்லவேண்டும்) சென்று சுற்றிப் பார்க்காமல் செல்வதில்லை.

அப்படித்தான் பில்லூர் அணையின் நீர்த்தேக்கமாக விளங்கும் பூச்சமரத்தூர், பரளிக்காடு போன்ற பழங்குடியின கிராமங்களை உள்ளடக்கிய அடர்ந்த காடுகள், நீர் சூழ் வெளிகளாக காட்சியளித்தன. காலை, மாலை என்றில்லாமல் காட்டு யானைகள், காட்டு மாடுகள், மான்கள், புலி,சிறுத்தை, கரடி போன்றவை நீர் அருந்த வருவதும், காடுகளில் கிடைக்கும் பசுந்தீவனங்களை உண்பதும், ஆங்காங்கு நின்று இளைப்பாறுவதும் நடந்து வந்தது. விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் இருந்த பழங்குடிகளும் தேன் உள்ளிட்ட காட்டுப்பொருட்கள் சேகரிப்பதும், அதைச் சார்ந்து நடந்தே சந்தைக்கு செல்வதும், அணை நீர்த்தேக்கத்தில் பரிசலில் சென்று மீன்பிடிப்பதுமான தொழில்களை செய்து வந்தனர்.

காலப்போக்கில் பல்வேறு வனப்பகுதிகளிலும் வனப்பொருட்கள் சேகரிக்க பழங்குடிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. காட்டுக்குள் செல்லவும் தடை விதிக்கப்பட்டன. பல குடும்பங்கள் காட்டிலிருந்து அடிவாரப்பகுதிக்கு வெளியேற்றப்பட்டனர். அதில் கீழ்நாட்டுக்கு (மலையடிவாரப்பகுதிக்கு) செல்ல மறுத்தவர்களுக்கு நெருக்கடிகளும் தொடர்ந்தன.

இதற்கெதிராக சமூக ஆர்வலர்கள் கிளர்ந்தெழுந்தனர். காடும், காடு சார்ந்த பழங்குடிகளும் இரண்டற கலந்தவர்கள். அவர்களால்தான் காடுகளும், காடு சார் உயிரினங்களும், இயற்கை வளங்களும் காப்பாற்றப்படுகின்றன போன்ற கோஷங்களை முன்வைத்து அந்த கிளர்ச்சிகள் நடந்தன. இதன் எதிரொலியாக காடுகளிலிருந்து வெளியேற விருப்பமில்லாதவர்களுக்கு, வனப்பகுதிகளிலேயே வனத்துறையினர் சார்பில் பழங்குடி மக்களுக்கு வனக்குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன. சுயசார் தொழில்களும் உருவாக்கப்பட்டன.

இதன் நீட்சி பரளிக்காட்டிற்கு விநோதமான வடிவில் வந்தது. சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு இங்கே வனத்துறையினரால் சூழல் சுற்றுலா ஏற்படுத்தப்பட்டது.

பரளிக்காட்டை சுற்றிக்கிடக்கும் இயற்கை வளம். கண்களை கொஞ்ச வைக்கும் பசுமை. நீண்டு பல கிலோமீட்டர் தொலைவுக்கு நெடித்து துள்ளும் நீர்த்தேக்கம். திரும்பின பக்கமெல்லாம் மேற்குத்தொடர்ச்சி மலையின் குன்றுகள், பள்ளத்தாக்குகள். அதற்குள் ஊடுருவி நிற்கும் பல்வகை மரங்கள். அதனூடே ஊடுருவி வரும் வெளிச்சம். அதையும் தாண்டி மூலிகை மணத்துடன் வீசும் சுகந்த காற்று. அதற்குள் நடைபயிலும் அபூர்வ வனவிலங்குகள், பறவைகள், இவற்றையே மூலதனமாக்கி, நகரவாழ் மனிதர்களுக்கு புத்துணர்ச்சி ஊட்டும் சூழல் சுற்றுலா விஷயமாக்கியது. அதையே இங்குள்ள பழங்குடிகளுக்கு வாழ்வாதாரமாகவும் மாற்றியது.

இந்த சூழல் சுற்றுலாவிற்கு காரமடையில் (கோவையிலிருந்து 35 கிலோமீட்டர்) வனத்துறை அலுவலகத்தில் முன்கூட்டியே பதிவு செய்யவேண்டும். இதற்கு ரூ.500 ஒரு நபருக்கு கட்டணம். 12 வயதிற்குட்பட்டவர்களுக்கு ரூ.400. சனி, ஞாயிறு இருநாட்களில் மட்டுமே அனுமதி. காரமடையிலிருந்து 34 கிலோமீட்டர் தூரமுள்ள இந்த பரளிக்காட்டிற்கு வனத்துறையின் வாகனத்திலேயே அழைத்து வருகிறார்கள். விருப்பமுள்ளவர்கள் அவரவர் வாகனத்திலும் வந்து பரளிக்காடு சேரலாம்.

இங்கு வந்தவுடன் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் விதமாக உள்ளூர் மலைவாழ் மக்கள் சூடான சுக்குகாப்பி கொடுத்து வரவேற்கின்றனர். பிறகு சிறிது ஓய்வு. அதன் பின் ஆளை மயக்கும் பரிசல் பயணம். பில்லூர் அணையின் பின்புறமாகச் சென்று தேங்கும் பவானி ஆறு. அதில் பயணிக்க 16 பரிசல்களும் 18 ஓட்டுநர்களும் தயார் நிலையில் இருக்கிறார்கள். வழக்கமான மூங்கில் பரிசலாக அல்லாமல் (ஏற்கெனவே சில ஆண்டுகளுக்கு முன்பு பரிசல்கள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி சிலர் நீரில் இறந்தனர். எனவேதான் இந்த ஏற்பாடு) பாதுகாப்புக்காக ஃபைபரால் செய்யப்பட்ட பரிசலையே பயன்படுத்துகிறார்கள். அனைவருக்கும் கட்டாயமாக லைப் ஜாக்கெட் அணிவிக்கப்படுகிறது.

வனத்துறையால் நியமிக்கப்பட்ட உள்ளூர் பழங்குடியின இளைஞர்களே பரிசலை இயக்குகிறார்கள். அவர்களே அப்பகுதியின் காடுகள், வனவிலங்குகள், தங்களின் வாழ்க்கை முறை பற்றி சுற்றுலா பயணிகளுக்கு சொல்லி செல்கிறார்கள். பயணத்தின் போதே கரையோரத்தில் சுற்றித்திரியும் காட்டு யானைகளை, தாகம் தீர்க்க வரும் மான் மற்றும் காட்டு மாடுகள் கூட்டங்களையும் காட்டி மகிழ வைக்கிறார்கள். அந்த 2 மணிநேர பரிசல் பயணத்திற்கு பிறகு கரை ஒதுங்கல். பசுமை நிறைந்த காட்டுக்குள் இளைப்பாறல், அங்குள்ள பழங்குடி கிராமங்களை சேர்ந்த மக்களின் கலாச்சார முறைப்படி தயாரிக்கப்பட்ட ராகிக்களி, கீரை, நாட்டுக்கோழிக்கறி, தயிர்சாதம், சப்பாத்தி, பழங்கள் என சுற்றுலா வந்தவர்களுக்கு பரிமாறப்படுகிறது.

இதன் பின்னர் மறுபடியும் சிறிது நேரம் ஓய்வு. பிறகு ஆற்றை ஒட்டிய பகுதியில் வனங்களை நன்கு அறிந்த பழங்குடியினர் மற்றும் வனத்துறையினர் பாதுகாப்போடு காட்டுக்குள் ட்ரெக்கிங் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். வேர்த்து விறுவிறுத்து டிரக்கிங் முடிந்து வந்ததும், பரளிக்காட்டிலிருந்து ஏழெட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள அத்திக்கடவு கிராமத்தில் ஓடும் பவானி ஆற்றில் குளிக்க அனுமதி. ஆனந்த குளியல் முடிந்து மாலை ஐந்து மணிக்கு சூழல் சுற்றுலா நிறைவு பெறுகிறது. நெருக்கடியான நகர வாழ்க்கையில் பிக்கல், பிடுங்கல்களோடு அல்லாடும் மனிதர்களுக்கு இந்த சூழல் சுற்றுலா அபூர்வமான வரப்பிரசாதம்தான்.

மேம்போக்காக பார்த்தால் இதனால் சூழல் கேடு ஏதுமில்லைதானே என்று தோன்றும். ஆனால் எங்கே வனவிலங்குகள் உள்ளனவோ, அங்கெல்லாம் மனிதக் காலடிகள் படும்போது சூழல் கேடுகள்தான் நிகழும். அதிலும் இதுமாதிரியான சூழல் சுற்றுலாக்கள் கூட ஒரு வகையான எதிர்கால வர்த்தக கண்ணோட்டமே என்கிறார் கூடலூர் சூழலியாளரும், விவசாயிகள் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க ஸ்தாபகர்களில் ஒருவருமான வி.டி.செல்வராஜ்.

மீண்டும் பேசலாம்.

கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in

தவறவிடாதீர்!

    Sign up to receive our newsletter in your inbox every day!

    You May Like

    More From This Category

    More From this Author