Last Updated : 11 Nov, 2017 09:43 AM

 

Published : 11 Nov 2017 09:43 AM
Last Updated : 11 Nov 2017 09:43 AM

ஊருக்குள் ஒரு குளம்.. குளத்தைச் சுற்றி மரம்; இது கீழ் காங்கேயங்குப்பத்தின் தீபாவளி தீர்மானம்

பி

றந்த நாளின் போதும் புது வருடம் பிறக்கும் போதும் ‘இந்த ஆண்டிலிருந்து இப்படி இருப்பேன் அல்லது இதைச் செய்வேன்’ என சிலர் தீர்மானம் எடுத்துக் கொள்வார்கள். அதுபோல, கீழ் காங்கேயங்குப்பத்து மக்கள் இயற்கையை நேசித்து இந்த ஆண்டு தீபாவளிக்கு எடுத்திருக்கும் தீர்மானம் சற்றே வித்தியாசமானது!

பட்டாசு வெடிக்கவில்லை

கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டத்தில் உள்ளது கீழ் காங்கேயங்குப்பம். இந்த கிராமத்து மக்களில் பெரும்பகுதியினர், அண்மையில் நகர்ந்து சென்ற தீபாவளிக்கு பட்டாசுகள் வாங்கவில்லை; வாங்கிய சிலரும் அதை வெடிக்கவில்லை. வீணாக பட்டாசை வெடித்து காசை கரியாக்கி ஊரை மாசுபடுத்தாமல் தீபாவளி அன்று ஊரே ஒன்றுகூடி மரக் கன்றுகளை நட்டு, இயற்கையை போற்றும் இன்முக சேவை செய்திருக்கிறார்கள்.

மரம் நடுதல் என்றால் வழக்கமாக கன்றுகளைத் தான் நடுவார்கள். ஆனால் இவர்கள், அப்படிச் செய்யாமல் ஆள் உயரத்துக்கு மேல் வளர்ந்த மரக் கன்றுகளை நட்டிருக்கிறார்கள். அதிகம் போனால், அடுத்த ஆண்டுக்குள் இந்த மரங்கள் வேர்பிடித்து வளர்ந்து நிழல் கொடுக்க ஆரம்பித்துவிடும். பெரிதாக ஆர்ப்பாட்டம் காட்டாமல் அமைதியாய் நடந்த இந்த நல்ல காரியம் நமது காதுகளுக்கு சற்று தாமதமாகவே எட்டியது. எனினும் தீபாவளிதான் போய் விட்டதே என்று இந்தக் தகவலை ஒதுக்கிவிடாமல் விசாரிக்கப் புறப்பட்டோம்.

இளைஞர்கள் எடுத்த முடிவு

கீழ் காங்கேயங்குப்பத்தில் இறங்கிய நம்மை எதிர்க்கொண்டார் அங்கு குளக்கரையில் அமர்ந்திருந்த பன்னீர். முதலில் அவருக்கு கைகூப்பி ஒரு பசுமை வாழ்த்தைச் சொல்லிவிட்டு பேச ஆரம்பித்தோம். “இந்த வருசம் தீபாவளிக்கு ஊருக்கு உபயோகமா ஏதாச்சும் செய்யணும்னு தீர்மானிச்சது இங்குள்ள இளந்தாரிகள் தான். அப்படி என்ன செய்யலாம்னு யோசிச்சப்ப, பக்கத்துல இருக்கிற மேல் காங்கேயங்குப்பத்து மக்கள் ஏரியைச் சுற்றி மரங்களை நட்டது ஞாபகத்துக்கு வந்துச்சு. அதையே நம்மளும் செஞ்சா என்னன்னு இளைஞர்கள் முடிவெடுத்தாங்க.

இந்தக் குளம் சமீபத்துல தான் தூர்வாரப்பட்டு இந்த மழைக்கு நல்லாவே தண்ணீர் தேங்கிருக்கு. இந்தக் குளத்தைச் சுத்தி மரங்களை நட்டு வளர்த்தா குளக்கரையும் அழகா இருக்கும்; சுற்றுச் சூழலுக்கும் உகந்ததா இருக்கும்னு முடிவு செஞ்சோம். அதுபடிதான், அஞ்சு ஏக்கர் பரப்பளவுள்ள இந்தக் குளத்தைச் சுற்றிலும் தீபாவளி அன்னைக்கி 100 மரக் கன்றுகளை நட்டோம்” என்று பன்னீர் முடிக்க, தொடர்ந்து பேசினார் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஜெகநாதன்.

ஆந்திராவிலிருந்து..

“மேல் காங்கேயங்குப்பத்துல நடுறதுக்காக நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா ராஜேந்திரன், வளர்ந்த மரக் கன்றுகளை ஆந்திராவிலிருந்து விலைக்கு வாங்கிக் கொடுத்தார். அங்கு நட்டது போக மீதிக் கன்றுகள் இருந்துச்சு. அதுலதான் 100 கன்று களை எங்க ஊருக்காக அவரிடம் கேட்டு வாங்கிட்டு வந்தோம். மரம் நடும் நிகழ்ச்சிக்கு ஒரு முக்கியத்து வம் இருக்க வேண்டும் என்பதற்காகவே தீபாவளி நாளை தேர்வு செய்தோம்.

அன்று காலையில் டிராக்டரை எடுத்துட்டுப் போய் மரக் கன்றுகளை ஏத்திட்டு வந்தோம். சின்னப் பசங்கள்ல இருந்து வயசானவங்க வரைக்கும் அத்தனை பேரும் இந்த மரம் நடும் விஷயத்தில ஆர்வமா இருந்ததால யாருமே தீபாவளிக்கு கறிச் சோறு சாப்பிட நினைக்கல. சின்னப் பசங்க பட்டாசு வெடிக்கிறதையே மறந்துட்டாங்க. மரம் நடும் செலவுகளுக்கு பணம் தேவைப்படும் என்பதற்காக எங்களில் சிலபேரு இந்தத் தீபாவளிக்கு பட்டாசு வாங்கு றதையே தவிர்த்துக்கிட்டோம்.

25 லட்ச ரூபாய் செலவில்..

ஒரு குழு குழிபோட, இன்னொரு குழு மரக் கன்றுகளை நட, இன்னொரு குழு, நடப்பட்ட கன்றுகளுக்கு தண்ணீர் ஊத்துற வேலைய கவனிச்சுக்கிட்டாங்க. அத்தனை பேருக்கும் முத்தாண்டிக்குப்பத்துல வாங்கிட்டு வந்த பட்டை சாதம்தான் அன்னிக்கு மதியச் சாப்பாடு. எல்லாருமே பம்பரமா சுத்துனதால மதியம் மூணு மணிக்கெல்லாம் 100 கன்றுகளையும் நட்டு முடிச்சுட்டோம்.

நன்கு வளர்ந்த கன்றுகள் என்பதால் சுத்தி வேலி போடவேண்டிய அவசியம் இல்லை. மழைக்கு முந்தி வரைக்கும், வேலை உறுதியளிப்புத் திட்டம் மூலமா இந்தக் கன்றுகளுக்கு தண்ணீர் ஊத்த ஏற்பாடு செய்திருந்தோம். இப்ப நல்ல மழை பெஞ்சிருக்கதால இன்னும் கொஞ்ச நாளைக்கு தண்ணி ஊத்த வேண்டிய அவசியம் இருக்காது” என்று முடித்தார் ஜெகநாதன்.

வழக்கமாக நடப்படும் மரக் கன்றுகளோடு நமது மண்ணின் மரங்களான ஆலமரம், அரசமரம், புங்கை மரம், கல்யாண முருங்கை, இயல்வாகை, மரமல்லி, மகாகனி உள்ளிட்டவைகளையும் இந்தக் குளத்தைச் சுற்றி நட்டிருக்கிறார்கள். இவர்களுக்கு முன்னு தாரணம் தந்த மேல் காங்கேயங்குப்பத்துக்கும் சென்றோம். அங்கு இதைவிட ஒருபடி மேலாகவே சமுதாயப் புரட்சி நடந்திருக்கிறது. அங்குள்ள மிகப்பெரிய ஏரியான காசாம்பு ஏரியை சட்டமன்ற உறுப்பினர் சபா ராஜேந்திரன் என்.எல்.சி. நிறுவனத்தின் துணையோடு 25 லட்ச ரூபாய் செலவில் தூர்வாரி செப்பனிட்டிருக்கிறார்.

மு.க.ஸ்டாலின் பாராட்டு

இது குறித்துப் பேசிய அவ்வூரைச் சேர்ந்த ஐ.டி. ஊழியர் கலைச்செல்வன், “கடும் வறட்சியால் வறண்டு போயிருந்த இந்த ஏரியை தூர்வார வேண்டும் என்று நாங்கள் சொன்னதை தட்டாமல் ஏற்றுக் கொண்டார் எம்.எல்.ஏ. முதலில் அவர் தனது சொந்தப் பணத்தில் தூர்வாரும் பணிகளைத் தொடங்கினார். அப்புறமாகத்தான் என்.எல்.சி. நிறுவனம் வந்து இணைந்து கொண்டது. ஏரி முழுமை யாக முறையாக தூர்வாரப்பட்டதால் இப்போது தண்ணீர் நிரம்பி இருக்கிறது.

இந்த ஏரியைச் சுற்றி, 150 வளர்ந்த மரக் கன்றுகளை நட்டிருக்கிறோம். இந்தக் கன்றுகள் ஒவ்வொன்றையும் 500 முதல் 800 ரூபாய் வரை விலை கொடுத்து வாங்கியிருக்கிறார் எம்.எல்.ஏ. மழையில்லாத நாட்களில் இந்தக் கன்றுகளுக்கு சொட்டுநீர்ப் பாசன முறையில் நீர் விடுவதற்கும் ஏற்பாடு செய்து விட்டோம். தூர்வாரப்பட்ட இந்த ஏரியைப் பார்வையிட வந்த தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், எம்.எல்.ஏ-வை மாத்திரமில்லாமல் கிராம மக்களையும் வெகுவாகப் பாராட்டிச் சென்றார்” என்று பூரித்துப் போய் சொன்னார் கலைச்செல்வன்.

மரக் கன்றுகளை நட்டதோடு மட்டுமில்லாமல், ஏரிக்கரை முழுவதும் நூற்றுக் கணக்கில் பனை விதைகளையும் விதைத்திருக்கிறார்கள் இந்த ஊர் மக்கள். இயற்கையைப் போற்றும் இவ்விரண்டு கிராம மக்களையும் வாழ்த்தி வணங்குவோம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x