Published : 04 Nov 2017 20:52 pm

Updated : 04 Nov 2017 21:12 pm

 

Published : 04 Nov 2017 08:52 PM
Last Updated : 04 Nov 2017 09:12 PM

இடுப்பளவு தண்ணீரில் ரிப்போர்ட்டிங்.. மக்களிடம் எதைக் கொண்டு செல்கிறது?

சென்னையில் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கும் இரண்டு விஷயங்கள் எவை தெரியுமா? ஒன்று வடகிழக்கு பருவமழை மற்றொன்று அது தொடர்பான செய்திகளை இடைவிடாது 24 மணி நேரமும் ஒளிபரப்பிக் கொண்டிருக்கும் தொலைக்காட்சி ஊடகங்கள்.

தொலைக்காட்சி ஊடகங்களின் சிறப்பான சேவையை நிச்சயம் பாராட்டியே தீர வேண்டும். ஓர் ஊடகவியலாளராக மனமார்ந்த பாராட்டுகள். ஆனால், அதேவேளையில் சில நெருடல்களும் இருக்கத்தான் செய்கின்றன.


அண்மையில் என் மகளின் பள்ளிக்கூட ஆண்டு விழாவுக்குச் சென்றிருந்தேன். அங்கு ஒரு சிறு நாடகம் அரங்கேற்றப்பட்டது. சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் சில விஷயங்களைப் பட்டியலிட்டு அதை பதாகைகளில் பெரிய எழுத்துகளில் எழுதி ஏந்தி நின்றனர் மாணவிகள். நடுவில் ஒரு குழந்தையின் கையில் இருந்த அந்த பதாகை என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதில், "media menace" என எழுதப்பட்டிருந்தது.

விசாரித்தபோது, மரண வீட்டில் உறவுகளை பறிகொடுத்தவர்களிடம் மைக்கை நீட்டி கருத்து கேட்பதும் அதை முதல் காட்சி என வாட்டர்மார்க் போட்டு பெருமையுடன் சொல்லிக் கொள்வதும், தீயில் கருகும் குழந்தையின் படத்தை செய்தித்தாளில் போடுவதும் மீடியா மெனாஸ் இல்லாமல் என்ன? என்றது அந்தப் பிஞ்சு. பதில் ஏதும் சொல்லாமல் நழுவினேன். அந்தக் குழந்தையின் குரல் மனதில் ஏதோ ஒருபுறம் அரித்துக் கொண்டே இருக்க இன்று காலை சில தொலைக்காட்சிகளில் பார்த்த காட்சிகள் குழந்தையின் குரலை லவுட் ஸ்பீக்கரில் ஒலிக்கச் செய்தது.

பருவமழை தொடங்கிவிட்டது. ஐப்பசி, கார்த்திகை அடைமழை காலம் என நம் முன்னோர் கூறி வைத்துள்ளனர். இக்காலத்தில், இடைவிடாமல் மழை பெய்யத்தான் செய்யும். சொந்த வீட்டு கனவில் ஏரியின் நடுவில் நாம் வாங்கிவைத்த வீடு நிச்சயம் தண்ணீரில் மூழ்கத்தான் செய்யும். கொசஸ்தலை ஆற்றில் ஆக்கிரமிப்பு செய்து வல்லூர் அனல் மின் நிலையம் அமைத்து ஆக்கிரமிப்புக்கு தவறான முன்னுதாரணமாக இருக்கும் அரசாங்கம் ஏரியில் ஏன் வீடு கட்டினீர்கள் என தனிநபரிடம் கேட்க முடியாது.

நீரில் மூழ்கும் குடியிருப்புகள், அரசு மற்றும் அதிகாரிகளின் மெத்தனம், பொதுமக்களின் பொறுப்பின்மை, சில விபத்துகள், விபரீதங்கள் இவை எல்லாவற்றையும் செய்தியாக்க வேண்டிய பொறுப்பு செய்தியாளர்களுக்கு இருக்கிறது. ஆனால், செய்திகள் எவ்வளவு முக்கியமோ அதைவிட செய்தியாளர்களின் பாதுகாப்பும் முக்கியம்.

இடுப்பளவு தண்ணீரில் நின்று கொண்டு செய்தியை ரிப்போர்ட் செய்வது, இதோ இந்த மின்சாரப் பெட்டி திறந்திருக்கிறது என அருகில் நின்று ரிப்போர்ட் செய்வது இவை எல்லாம் பார்க்கும் மக்களை செய்தியை கூர்ந்து கவனிக்கச் செய்வதைவிட 'யார் பெற்ற பிள்ளையோ இப்படி தண்ணில கெடக்குது' என உச்சு கொட்டவே வைக்கிறது. பார்வையாளரின் முதல் ரியாக்‌ஷன் இதுவாக இருக்கும்போது, எதற்காக இப்படி சாகசங்கள் ஊக்குவிக்கப்படுகின்றன? மக்களின் உணர்வுகளை, துயரங்களை அவர்களோடு நின்று வெளிப்படுத்துவதற்கு - சிம்பிளாக சொல்ல வேண்டுமானால், எம்பதைஸ் பண்ணுவதற்கு என்று சிலர் சொல்லும் வாதத்தை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

தூரத்தில் இடுப்பளவு தண்ணீரில் நிற்கும் அந்தப் பகுதிவாசியை ஜூம் செய்தாலே அப்பகுதியில் எவ்வளவு தண்ணீர் இருக்கிறது என்பதை உணர்த்த முடியும். அதையும் தாண்டி சமூக அக்கறையை வெளிப்படுத்த நினைத்தால் ஒரு படகோ அல்லது வேறு ஏதாவது மிதவையோ பயன்படுத்தி மக்கள் அருகில் சென்று அவர்கள் துயரை ஒளிபரப்பலாம். ஆனால், அதிகமாக தண்ணீர் செல்லும் இடத்தில் தனியாக இடுப்பளவு தண்ணீரில் நின்று கொண்டு செய்தியை சொல்வது அதை பார்க்கும் அவர்களது வீட்டில் இருக்கும் உறவுகளை எத்தனை பதைபதைப்புக்கு உள்ளாக்கும். 

அப்படி, ஆபத்தான வகையில் ரிப்போர்ட் செய்யும்போது, குறைந்தபட்சம் ஏதாவது லைஃப் ஜாக்கெட், இடுப்பில் ஒரு கயிறைக் கட்டிக் கொண்டு மறுமுனையை பாதுகாப்பான பகுதியில் ஒரு நபரை நிற்கச் செய்து அவரிடம் கொடுப்பது. ரப்பர் பூட் அணிந்து கொள்வது.. இப்படி ஏதாவது பாதுகாப்பு செய்து கொள்ளலாமே. எதுவுமில்லாமல் நிற்பது ஒருவித 'ஆர்கஸ்ட்ரேடட் ரிப்போர்ட்டிங்' உணர்வையே தருகிறது.

உடனே எல்லையில் நிற்கும் ராணுவ வீரரை ஒப்பீட்டுக்கு கொண்டுவர வேண்டாம். என்னிடம் துப்பாக்கி இருக்கிறது என்று எந்த ராணுவ வீரரும் எதிரியின் முன்னால் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு இருப்பதில்லை. ராணுவ உத்தியின்படியே எல்லையில் எல்லாம் நடக்கிறது. மேலும், அந்த பணியே பாதுகாப்புத் துறை சார்ந்தது. உயிருக்கு உத்தரவாதம் இல்லை எனத் தெரிந்தே அங்கு செல்கிறார்கள்.

நாம் செய்தியாளர்கள்.. செய்தியை வழங்குவோம்.. அநீதியை அம்பலப்படுத்துவோம், நீதிக்காக குரல் கொடுப்போம். ஆனால் அதைத் தொடர்ந்து செய்து கொண்டே இருக்க நமது பாதுகாப்பும் முக்கியமல்லவா?! ஊடகம் நமது கருவி. அதன் வாயிலாக நாம் செய்திகளைத் தருகிறோம். 

அப்படியிருக்கும்போது இத்தகைய பணியிட அபாயங்களைத் தவிர்க்கலாமே. இதற்கு, புற்றீசல் போல் உருவாகும் ஊடகங்கள்தான் காரணமோ என்ற எண்ணமும் உதிக்கிறது.

24 மணி நேர செய்தி சேனல்கள் ஒவ்வொரு மொழியிலும் என 24-க்கும் மேல் இருக்கின்றன என்றே சொல்ல வேண்டும். மணிக்கு ஒரு சேனலை மாற்றினால்கூட அத்தனை சேனலையும் பார்த்துவிட முடியாது போல. 

தூங்கும்போதுகூட பிரேக்கிங் நியூஸ்மியூசிக் செவியில் கொசுவைத் தாண்டியும் ரீங்காரம் செய்யும் அளவுக்கே இன்று செய்திகள் கொட்டப்படுகின்றன.

செய்திகளை முந்தித் தருவது, வித்தியாசமாகத் தருவது இப்படி டிஆர்பி.,க்கான போட்டிகளில் களத்தில் செய்தியாளர்கள் வாட்டி வதைக்கப்படுகிறார்களோ என்ற கேள்வியத்தான் இடுப்பளவு தண்ணீர் ரிப்போர்ட்டிங் முன்வைக்கிறது. 

கால்வாய்களும், கழிவுநீரும் கலந்தோடும் தண்ணீரில் நிற்கும்போது விஷப் பூச்சிகளும்கூட வரலாம்.. தெரியாத பகுதி என்பதால் ஏதாவது பள்ளத்தில் விபரீதத்தில் சிக்கலாம். எனவே, செய்தி சேகரிப்புக்குத் தரும் முக்கியத்துவத்தை செய்தியாளர்கள் தங்கள் பாதுகாப்புக்கும் தரலாமே!சென்னைதொலைக்காட்சி ஊடகங்கள்பிரேக்கிங் நியூஸ்வடகிழக்கு பருவமழைசென்னை மழைNorth east monsoonBreaking newsNewsroomTv channels

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x