Published : 30 Nov 2017 10:17 AM
Last Updated : 30 Nov 2017 10:17 AM

‘அப்பாவுக்காக சிலம்பம் படித்தேன்’: பரிசுகளைக் குவிக்கும் பள்ளி மாணவி பவித்ரா

ந்த வீட்டை விருதுகளும், கோப்பைகளும் வியாபித்திருக்கின்றன. அத்தனையும் சிலம்பப் போட்டிகளில் பங்குபெற்று, பவித்ரா அள்ளிக் கொண்டு வந்தவை!

குமரி மாவட்டம், ராஜாக்கமங்கலத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான ஸ்ரீகணேசனின் மகள் பவித்ரா. இந்தக் காலத்திலும், மின்வசதிகூட இல்லாத குடிசையில் தான் வசிக்கிறது இந்தக் குடும்பம். மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் படித்தே பத்தாம் வகுப்பில் 411 மதிப்பெண் எடுத்த பவித்ரா, தற்போது நாகர்கோவில் கவிமணி மகளிர் மேல் நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படிக்கிறார். தன்னை வறுமை துரத்தினாலும் முறைப்படி சிலம்பம் கற்று, போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளைத் தட்டி வருகிறார் பவித்ரா.

அப்பாவுக்கு ஆசை

ஒரு காலை பொழுதில் பவித்ராவை அவரது இல்லத்தில் சந்தித்தோம். “எங்க அப்பா பெருசா படிக்காட்டிப் போனாலும் தமிழர் பாரம்பரியத்தைப் பத்தி அடிக்கடி பெருமையா பேசுவார். சின்ன வயசுல, சிலம்பம் கத்துக்கணுங்கிற ஆசை அப்பாவுக்கு இருந்திருக்கு. ஆனா, வறுமை காரணமா அதுக்கான வாய்ப்புகள் அமையல. இதை எனக்கிட்ட்ட சொன்ன சமயங்கள்ல அப்பாவோட கண்ணுக்குள்ள ஒரு ஏக்கத்தைப் பார்த்திருக்கேன். அந்த ஏக்கத்தைப் போக்கணும்னுதான் நான் சிலம்பக் கம்பை கையிலெடுத்தேன்.

இப்பவும் அதே வறுமைதான். ஆனாலும், அப்பா என்னை சந்தோஷமா சிலம்பம் படிக்க அனுப்பி வைக்கிறாங்க. தொடக்கத்துல, ஐயப்பன் ஆசான்கிட்ட படிச்சேன். இப்ப குமார் ஆசான் கத்துத் தருகிறார். ரெண்டு பேருமே என்னோட வறுமையையும் திறமையையும் புரிஞ்சுக்கிட்டு, பைசா காசு வாங்காம சிலம்பம் கத்துத் தந்தாங்க; இன்னும் கத்துத் தர்றாங்க.

பெண்கள் சிலம்பம் படிக்கணும்

அண்மையில், தமிழக அளவில் பள்ளிகளுக்கு இடையிலான சிலம்பப் போட்டிகள் சேலத்தில் நடந்துச்சு. அதில், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் 35 - 40 கிலோ எடைப் பிரிவில், மாநிலத்திலேயே முதலாவதாக வந்தேன். கடந்த ஆண்டு இதே போட்டியில் இரண்டாமிடமும், அதற்கு முந்தைய ஆண்டில் மூன்றாமிடமும் கிடைச்சுது.

சிலம்பம் கற்பது தொடர்பான எனது முயற்சிகளுக்கு குமரி மாவட்ட சிலம்ப கழக செயலாளர் சரவண சுப்பையா உள்ளிட்டோர் ஆக்கமும் ஊக்கமும் தர்றாங்க” என்று சொன்ன பவித்ரா, “சிலம்பம் ஒரு அருமையான தற்காப்புக் கலை. எனவே, இந்தக் கலையை பெண்கள் கட்டாயம் கத்துக்கணும். அப்படிக் கத்துக்கிட்டா, தைரியமும் தன்னம்பிக்கையும் பிறக்கும்.

நமது பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் விதமாக சித்த மருத்துவர் ஆகணும்கிறது என்னோட ஆசை. அதுக்காகத்தான் அறிவியல் பாடப் பிரிவை எடுத்துப் படிக்கிறேன். அதுமட்டுமல்ல.. சிலம்பத்தில் மாநில அளவில் விருது வாங்கிய நான், தேசிய அளவிலும் முக்கிய இடத்தைப் பிடிக்கணும். இது ரெண்டுதான் என்னோட எதிர்கால லட்சியம்” என்றார்.

கலைவளர்மணி விருது

பவித்ராவின் ஆசான் குமார் நம்மிடம் பேசுகையில், “குடிசையில் வசித்தாலும் சிலம்பக் கலை மீது பவித்ரா கொண்டிருக்கும் ஆர்வம் வியக்க வைக்கிறது. விடுமுறை நாட்களில் அதிகாலையிலேயே எழுந்து, ஐந்து கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் மிதித்து வந்து சிலம்பம் படிக்கிறார் இந்தப் பெண். அந்தளவுக்கு இவருக்குள் இருக்கும் ஆர்வத்தைப் புரிந்து கொண்டுதான் இலவசமாகவே இவருக்கு சிலம்பப் பயிற்சிகளை அளித்து வருகிறேன்” என்று சொன்னவர், “இதுபோன்ற பெண் பிள்ளைகளை அரசும் சிறப்புக் கவனமெடுத்து ஊக்கப் படுத்துவதுடன், கலைவளர்மணி விருது கொடுத்து கவுரவிக்கவும் வேண்டும். அப்போதுதான் பவித்ராவைப் போல இன்னும் பல பிள்ளை கள் வெளியில் வருவார்கள்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x