Last Updated : 10 Oct, 2017 10:01 AM

 

Published : 10 Oct 2017 10:01 AM
Last Updated : 10 Oct 2017 10:01 AM

வாழ்ந்து பாருங்கள்... இதுதான் சந்தோஷத்தின் ரகசியம்

டோ

க்லாம் பகுதியில் கடந்த மாதம் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் இருந்த மோதல் சூழல் விலகி, படைகள் வாபஸ் பெறப்பட்டதால், பலர் சந்தோஷப்பட்டதை நான் அறிவேன். பல வாரங்களாக போர் மேகங்கள் சூழ்ந்து இருந்தன. இறுதியில், இரு நாடுகளும் போர் எண்ணத்தை கைவிட்டன. கடைசிவரை நம் பக்கம் நின்றதற்கு பூடானுக்கு நாம் நன்றி சொல்லியாக வேண்டும். இதேபோல், மற்ற அண்டை நாடுகளும் நட்பாக இருந்தால் நன்றாக இருக்குமே என்ற ஏக்கமும் நம்மில் பலருக்கு ஏற்பட்டது.

மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு (ஜிடிபி) பதிலாக தேசிய சந்தோஷக் குறியீட்டை அடிப்படையாகக் கொண்டு நாட்டின் வெற்றிக்கு அளவீடாக பயன்படுத்தியதன் மூலம் பிரபலமான நாடு பூடான். தனி மனித சந்தோஷம் என்பது அவர் இருக்கும் சூழலைப் பொருத்து உள்ளிருந்து வருவது. ஓர் அரசாங்கம் எப்படி தனது குடிமக்களை சந்தோஷப்படுத்த முடி யும் என்ற சந்தேகம் ஆரம்பத்தில் எனக்கும் இருந்தது. நம்மில் பலர், பொருத்தமில்லாத திருமணம், நன்றி கெட்ட பிள்ளைகள், பதவி உயர்வு கிடைக்காமல் போவது, எதன் மீதும் நம்பிக்கை இல்லாமல் போவது போன்ற பல காரணங்களால் சந்தோஷத்தை இழந்து தவிக்கிறோம். பூடான் இந்த உலகத்துக்கு ஒரு விஷயத்தை சொல்கிறது - ஓர் அரசாங்கம் சுதந்திரம், சிறந்த நிர்வாகம், வேலை வாய்ப்பு, தரமான பள்ளிகள், மருத்துவ பாதுகாப்பு, ஊழல் இல்லாத நிர்வாகம் போன்றவற்றை அளித்தால் அது மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் என்கிறது.

ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள உலக சந்தோஷ அறிக்கை 2017-ன்படி, ஸ்காண்டிநேவியா முதல் இடத்தில் இருக்கிறது. அமெரிக்கா 14-வது இடத்திலும் சீனா 71-வது இடத்திலும் இருக்கின்றன. சீனாவில் கடந்த 1990-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, தனி நபர் வருமானம் 5 மடங்கு வரை உயர்ந்திருக்கிறதே தவிர, சந்தோஷம் அதிகரிக்கவில்லை. இதற்குக் காரணம், சமீபத்தில் அதிகரித்த வேலை வாய்ப்பின்மையும் சமூக பாதுகாப்பு குறைந்திருப்பதும்தான். இந்தியா, பாகிஸ்தானுக்கும் நேபாளத்துக்கும் கீழே 122-வது இடத்தில் இருக்கிறது. கேலப் அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் மக்களின் வாழ்க்கைத் தரத்தின் அடிப்படையிலேயே இந்த அறிக்கையைத் தயாரிக்கிறது.

ஆர்வமுடன் வேலை பார்ப்பதுதான் சந்தோஷத்துக்கு மிகவும் அவசியம். நமக்கு எது தெரியுமோ, நாம் எதில் வல்லவர்களோ அந்த வேலையைப் பார்க்க வாய்ப்பு கிடைத்தால் அது அதிர்ஷ்டம்தான். நம்மை நாமே அறிவது அல்ல வாழ்க்கை, நம்மை நாமே உருவாக்குவதுதான். என் நண்பர்களுடன் சிலநேரம் சிந்தனை விளையாட்டு விளையாடுவேன். “நீ இன்னும் 3 மாதம்தான் உயிரோடு இருப்பாய் என உன் டாக்டர் கூறிவிட்டார் என வைத்துக் கொள்வோம். “கடைசி நேரத்தில் சில ரிஸ்க்குகளை எடுக்கலாமா? சிறு வயதில் இருந்து ரகசியமாக நான் காதலித்து வரும் பெண்ணிடம் என் காதலை சொல்லலாமா? ஆன்மீகவாதியாக மாறலாமா? அல்லது அமைதியின் சத்தத்தை கேட்க பழகிக் கொள்ளலாமா?” எனக் கேட்பாய். இந்த மூன்று மாதங்களில் எப்படி வாழ்கிறாயோ, அப்படித்தான் நீ வாழ்க்கை முழுவதும் வாழந்திருக்க வேண்டும்.

சிறு வயதில் இருந்தே கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும், தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்தால்தான் கல்லூரியில் இடம் கிடைக்கும் என்று சொல்லிச் சொல்லித்தான் நாம் வளர்க்கப்பட்டிருக்கிறோம். இறுதியில் நல்ல வேலைக்கு போகிறோம். நல்ல துணையை மணக்கிறோம். நல்ல வீட்டில் குடியிருக்கிறோம். நல்ல கார் வாங்கி ஓட்டி மகிழ்கிறோம். நமது பிள்ளைகளுக்கும் இதே அனுபவத்தை அளிக்கிறோம். பின்னர், 40 வயதைக் கடந்த நிலையில் ஒரு நாள் காலையில் எழுந்து, இதுதான் வாழ்க்கையா என நம்மை நாமே கேட்டுக் கொள்கிறோம். அடுத்த பதவி உயர்வு எப்போது வரும் என எதிர்பார்த்து வாழும்போதே, வாழ்க்கை நம்மை கடந்து சென்று விடுகிறது.

நம் இளமைக் காலத்தில் வாழ்க்கையை வாழ்வதற்கும் வாழ்க்கையை அனுபவிப்பதற்கும் உள்ள வேறுபாட்டை நமக்கு யாருமே சொல்லித் தரவில்லை. வாழ்க்கையில் அர்த்தத்தை ஏற்படுத்தும் மனிதர்களின் வாழ்க்கைப் போராட்டங்களை விளக்கும் சிறந்த புத்தகங்களை நாம் படிக்கவில்லை. 3 வயதிலேயே இசை மீது பேரார்வம் கொண்டு, பின்னாளில் மிகச் சிறந்த இசை வித்தகரான மொஸார்ட் போல், நம்மில் ஒரு சிலருக்குத்தான் அந்த அதிர்ஷ்டம் கிடைக்கிறது. எந்த வேலையை செய்யும்போது, அது வேலை போல் தெரியாமல் இருக்கிறதோ அதுதான் நமக்கு ஆர்வமான விஷயம் என்பதை அறிந்து கொள்ளலாம். நேரம் போவதே தெரியாது... சாயந்திரம் ஆகி விடும்.. அப்போதுதான் நீங்கள் மதிய உணவு சாப்பிட மறந்ததே நினைவுக்கு வரும். அப்படி இருந்தால், நீங்கள் சரியான களத்தில்தான் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். ஒருவர் பேரார்வத்துடன் வேலை பார்க்கும்போது, ஆணவம் அகன்றுவிடும். ஆணவத்தால் திசை திரும்பாமல், தன்னிலை மறந்து செய்யும் பணி மிகச் சிறந்ததாக இருக்கும். வாழ்க்கையை வாழ இதுதான் என்னுடைய யோசனை. சந்தோஷத்தின் ரகசியமும் இதுதான்.

இதோடு, சந்தோஷத்துக்கு மேலும் இரண்டு வழிகளையும் சொல்கிறேன். 1. யாருடன் வாழ்கிறீர்களோ அவரை நேசியுங்கள். 2. நல்ல நண்பர்கள் சிலரை வைத்துக் கொள்ளுங்கள். நண்பர் என்பவர் துன்பம், வருத்தம், பயம் ஏற்படும்போது அடைக்கலமாகவும் அன்பு மற்றும் நம்பிக்கையின் உருவமாகவும் இருக்க வேண்டும் என்கிறது பஞ்சதந்திரம். வேலையைக் காதலி, துணையை காதலி. அதோடு நல்ல நண்பர்களை பழகிக் கொள். இதை சொல்வது எளிது, அடைவது கஷ்டம்.

உலக சந்தோஷ அறிக்கையை பூடான் நாடு முன்னெடுத்துச் சென்றிருந்தாலும் அது என்னவோ 95-வது இடத்தில்தான் இருக்கிறது. இந்தியா, கடந்த ஆண்டை விட 4 இடம் பின்தங்கி, 122-வது இடத்தில் இருக்கிறது. நல்ல காலத்தை எதிர்பார்த்து இருக்கும் இந்தியாவுக்கு இது ஏமாற்றம் அளிக்கும் பின்னடைவுதான். இந்த நிலைக்கு வேலை வாய்ப்பின்மை, கீழ் மட்டத்தில் பரவிக் கிடக்கும் ஊழல், தொழில் நடத்துவதில் உள்ள சிரமம், டாக்டர்கள் இல்லாத அரசு மருத்துவமனைகள், ஆசிரியர்கள் இல்லாத அரசு பள்ளிகளின் அவலம்தான் காரணம். ஆனால் செல்வ வளத்தில் முன்னேற்றம் கண்டுள்ளது. வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடு இந்தியா என்பதால், செல்வம் எல்லோருக்கும் கிடைத்து வருகிறது.

வாழ்க்கையின் பெரும்பகுதியை வேலை செய்தே கழிப்பதால் நமது சந்தோஷத்தை உருவாக்குவதில் வேலை முக்கிய பங்கு வகிக்கிறது. வேலை இல்லாதவர்கள் சந்தோஷம் இல்லாதவர்கள் என அறிக்கை கூறுகிறது. 2019 தேர்தலில் பிரதமர் மோடி மீண்டும் வெற்றி பெற விரும்பினால், அவர் வாக்குறுதி அளித்ததுபோல், வேலை வாய்ப்பை உருவாக்குவது மிகவும் முக்கியம்.

தொடர்புக்கு: gurcharandas@gmail.com

தமிழில்: எஸ். ரவீந்திரன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x