Last Updated : 27 Aug, 2017 02:58 PM

 

Published : 27 Aug 2017 02:58 PM
Last Updated : 27 Aug 2017 02:58 PM

தலைவாழை: நித்தம் ஒரு கீரை!

தினம் ஒரு கீரை நல்லது என்பது முன்னோர் வாக்கு மட்டுமல்ல, நாம் அனைவரும் அறிந்த வாக்கும் கூட. ஆனால் கீரையைப் பார்த்ததுமே எட்டிக்காயைக் கடித்ததுபோல முகத்தை வைத்துக்கொள்கிறவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இன்னும் சிலரோ சிறுகீரை, அரைக்கீரை, முளைக்கீரை வகையறாக்களைத் தவிர மற்ற கீரைகளின் பக்கம் செல்வதே இல்லை. ஆனால், நன்மை தரும் ஏராளமான கீரைகள் நம்மைச் சுற்றி இருக்கின்றன. அவற்றைத் தினம் ஒன்றாகச் சமைத்துச் சாப்பிட வழிகாட்டுகிறார் சென்னை நொளம்பூரைச் சேர்ந்த ர.கிருஷ்ணவேணி. கீரையில் அடை, இலைச் சுருட்டு, ரசம் என விதவிதமாகச் சமைக்கக் கற்றுத்தருகிறார் இவர்.

இலைச் சுருட்டு

27CHLRDLEAFROLL

என்னென்ன தேவை?

நச்சுக்கொட்டை கீரை (சண்டிக்கீரை) இலைகள் - 10

துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, பாசிப் பருப்பு - தலா அரை கப்

மிளகாய் வற்றல் - 2

பெருங்காயத் தூள், மஞ்சள் தூள் - தலா கால் டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - 2 டீஸ்பூன்

கடுகு - ஒரு டீஸ்பூன்

தேங்காய்த் துருவல் - சிறிதளவு

எப்படிச் செய்வது?

பருப்பு வகைகளை ஒன்றாக ஊறவைத்து நீரை வடித்து மிளகாய் வற்றல், உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத் தூள் சேர்த்துக் கரகரப்பாகத் தளர அரையுங்கள். இலைகளைச் சுத்தம் செய்து நடு நரம்பை எடுத்துவிட்டுக் குறுக்குவாக்கில் நறுக்குங்கள். அரைத்து வைத்துள்ள பருப்புக் கலவையை, இலை மீது கால் அங்குலக் கனத்துக்குத் தடவுங்கள். இலையைப் பாய்போலச் சுருட்டுங்கள். அவற்றை ஆவியில் ஏழு நிமிடங்கள் வேகவையுங்கள். ஆறிய பிறகு துண்டுகளாக நறுக்குங்கள்.

வாணலியில் எண்ணெய் சேர்த்துக் காய்ந்ததும் கடுகு தாளியுங்கள். அதில் கீரைத் துண்டுகளைச் சேர்த்து வதக்கி இறக்குங்கள். கீரைத் துண்டுகள் மேல் தேங்காய்த் துருவல் சேர்த்துப் பரிமாறுங்கள். இதைப் பசலைக்கீரையிலும் முட்டைகோஸிலும்கூடச் செய்யலாம்.

கொள்ளு முருங்கை அடை

27CHLRDDRUMSTIC

என்னென்ன தேவை?

கொள்ளு - ஒரு கப்

தினை, வரகரிசி - தலா அரை கப்

மிளகாய் வற்றல் - 2

இஞ்சி - சிறிய துண்டு

மிளகு - அரை டீஸ்பூன்

பெருங்காயத் தூள் - கால் டீஸ்பூன்

சுத்தம் செய்த முருங்கைக்கீரை - ஒரு கப்

உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப

எப்படிச் செய்வது?

கொள்ளு, தினை, வரகரிசி ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து இரண்டு மணி நேரம் ஊறவையுங்கள். அவற்றுடன் மிளகாய் வற்றல், மிளகு, உப்பு, இஞ்சி, பெருங்காயத் தூள் சேர்த்துக் கரகரப்பாக அரையுங்கள். மாவில் முருங்கைக் கீரையைச் சேர்த்துக் கலக்குங்கள்.

இந்த மாவைச் சூடான தவாவில் சிறிய அடைகளாக ஊற்றி சுற்றிலும் எண்ணெய் விட்டு, இருபுறமும் திருப்பிப்போடுங்கள். அடை நன்றாக வெந்து, மொறுமொறுவென ஆனதும் எடுத்துவிடுங்கள். வரகரிசிக்குப் பதில் பச்சரிசியிலும் செய்யலாம்.

புளிச்சகீரை ரசம்

27CHLRDRASAM

என்னென்ன தேவை?

புளிச்சகீரை இலைகள் - அரை கப்

தனியா, கடலைப் பருப்பு, நெய், பாசிப் பருப்பு

- தலா 2 டீஸ்பூன்

மிளகாய் வற்றல் - 1

பெருங்காயத் தூள், மஞ்சள் தூள்

- கால் டீஸ்பூன்

பூண்டு - 4 பல்

மிளகு - 2 டீஸ்பூன்

கறிவேப்பிலை - இரண்டு கொத்து

கடுகு - 1 டீஸ்பூன்

உப்பு - ருசிக்கேற்ப

எப்படிச் செய்வது?

வெறும் வாணலியில் பாசிப் பருப்பை வறுத்துப் பொடியுங்கள். தனியா, கடலைப் பருப்பு இரண்டையும் வறுத்து, மிளகுடன் சேர்த்துப் பொடியுங்கள். வாணலியில் நெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, மிளகாய் வற்றல், பொடியாக அரிந்த பூண்டு சேர்த்துத் தாளியுங்கள். புளிச்சக்கீரை இலைகளைச் சேர்த்து வதக்குங்கள். நன்கு வதங்கியதும் இரண்டு கப் தண்ணீர், தேவையான உப்பு, பெருங்காயத் தூள், பொடித்த பாசிப் பருப்பு, பொடித்த தனியா கலவை ஆகியவற்றைச் சேருங்கள். கலவை நன்றாகப் பொங்கிவரும்போது அடுப்பை அணைத்துவிடுங்கள். சமையலில் புளியைச் சேர்க்க விரும்பாதவர்கள், புளிச்சகீரை ரசம் செய்து சாப்பிடலாம்.

அகத்திக் கீரை கறி

என்னென்ன தேவை?

பொடியாக அரிந்த அகத்திக்கீரை - 1 கப்

கெட்டிப் புளிக்கரைசல் - கால் கப்

துருவிய வெல்லம் - ஒரு டீஸ்பூன்

துவரம் பருப்பு, தனியா, கறுப்பு எள்

- தலா ஒரு டீஸ்பூன்

மிளகாய் வற்றல் - 4

மஞ்சள் பொடி - கால் டீஸ்பூன்

உப்பு - ருசிக்கேற்ப

நல்லெண்ணெய், கடுகு

- தலா ஒரு டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

வாணலியில் அகத்திக் கீரையை இரண்டு கப் தண்ணீரில் கலந்து வேகவிடுங்கள். துவரம் பருப்பு, தனியா, எள், மிளகாய் வற்றல் ஆகியவற்றை ஊறவைத்து மிக்ஸியில் அரைத்துக்கொள்ளுங்கள். அகத்திக் கீரையுடன் புளிக்கரைசல், உப்பு, மஞ்சள் பொடி, வெல்லம், அரைத்த கலவை ஆகியவற்றைச் சேருங்கள். தளதளவெனக் கொதிக்கும்போது இறக்கிவைத்து, நல்லெண்ணெயில் கடுகு தாளித்துச் சேருங்கள். கூட்டுபோல் இருக்கும் இதைச் சூடான சாதம், சப்பாத்தியுடன் சாப்பிடலாம்.

சுக்கான் கீரைக் குழம்பு

27CHLRDSUKKAN

என்னென்ன தேவை?

சுக்கான் கீரை இலைகள் - ஒரு கப்

வெங்காயம், தக்காளி - தலா 2

பச்சை மிளகாய் - 2

மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்

வெந்த துவரம் பருப்பு - கால் கப்

பூண்டு - 4 பல்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - ஒரு டீஸ்பூன்

வெந்தயம் - கால் டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

வாணலியில் எண்ணெய் விட்டு வெந்தயம், பச்சை மிளகாய், பூண்டு போட்டுத் தாளித்து, சுக்கான் கீரை சேர்த்து வதக்குங்கள். வெங்காயம், தக்காளியைச் சேர்த்து வதக்குங்கள். அதில் மிளகாய்த் தூள், இரண்டு கப் தண்ணீர் சேருங்கள். எல்லாம் சேர்த்துக் கொதிக்கும்போது வெந்த பருப்பு சேர்த்துக் கலந்து இறக்கிவையுங்கள். இதைச் சோற்றில் பிசைந்து சாப்பிடலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x