Last Updated : 12 May, 2019 11:39 AM

 

Published : 12 May 2019 11:39 AM
Last Updated : 12 May 2019 11:39 AM

தலைவாழை: வயிற்றுக்கு உகந்த சுற்றுலா உணவு

சுற்றுலாக்களில் ஆர்வம் இல்லாதவர்கள்கூடக் கோடை விடுமுறையில் சில நாட்களைச் சுற்றுலாவுக்கென ஒதுக்கிவிடுவார்கள். எத்தனை நாள் சுற்றுலா என்றாலும் குறைவான சுமையோடு செல்வது நிறைவான மகிழ்வைத் தரும். அதேபோல் அந்தந்த ஊரின் பெருமையைச் சொல்லும் உணவு வகைகளைச் சுவைப்பதோடு நம் வயிற்றுக்குத் தொந்தரவு தராத சிலவற்றை வீட்டிலேயே சமைத்து எடுத்துச் செல்லலாம். குறைந்தது ஒரு நாள் உணவுச் செலவாவது குறையும் என்பதுடன் வயிற்றுக்கோளாறு ஏற்படுமா என்ற கவலையின்றியும் இருக்கலாம். சுற்றுலாவுக்கு எடுத்துச் செல்ல உகந்த உணவு வகைகள் சிலவற்றைச் செய்யக் கற்றுத்தருகிறார் சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த அம்பிகா.

பூண்டுச் சட்னி

என்னென்ன தேவை?

பூண்டு – 10 பல்

சின்ன வெங்காயம் – 15

காய்ந்த மிளகாய் (நீட்டு) – 8

புளி – சிறிய கோலிக்குண்டு அளவுக்கு

பெருங்காயம், கறிவேப்பிலை – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

கடுகு – அரை டீஸ்பூன்

நல்லெண்ணெய் – 50 மி.லி.

எப்படிச் செய்வது?

சின்ன வெங்காயம், பூண்டு, மிளகாய், உப்பு, புளி ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் போட்டு நைஸாக அரைத்துக்கொள்ளுங்கள். வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் அதில் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் ஆகியவற்றைப் போட்டுத் தாளித்துக்கொள்ளுங்கள். அரைத்துவைத்துள்ள கலவையை அதில் போட்டுக் கிளறுங்கள். பச்சை வாசனை போகும்வரை கொதிக்கவிட்டு இறக்குங்கள். இது சீக்கிரம் கெடாது.

உருளைக்கிழங்கு சாதம்

என்னென்ன தேவை?

உருளைக்கிழங்கு – 2

வெங்காயம் – 1

வேர்க்கடலை – சிறிதளவு

கடுகு – அரை டீஸ்பூன்

சாதம் – ஒரு கப்

இஞ்சி – பூண்டு – அரை டீஸ்பூன்

பச்சை மிளகாய் – 1

தனியா – ஒரு டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 6

கடலைப் பருப்பு, உளுந்து

   – தலா ஒரு டீஸ்பூன்

மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

அகலமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் அதில் கடுகு, கறிவேப்பிலையைப் போட்டுத் தாளியுங்கள். வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்து சேர்த்து வதக்குங்கள். இஞ்சி – பூண்டு, பச்சை மிளகாயைச் சேர்த்து வதக்கி, தேவையான அளவு உப்பைச் சேருங்கள். உருளைக் கிழங்கை நீளவாக்கில் நறுக்கிச் சேர்த்துக் கிளறி, எண்ணெய்யிலேயே வேகவிடுங்கள். மஞ்சள் தூளைச் சேருங்கள். உருளைக் கிழங்கு பாதி வெந்ததும் அடுப்பை சிம்மில் வையுங்கள்.

வெறும் வாணலியில் தனியா, மிளகாய், கடலைப் பருப்பு, உளுந்து ஆகியவற்றைத் தனித்தனியாக வறுத்து ஆறவையுங்கள். இவற்றை ஒன்றாகச் சேர்த்துப் பொடித்துக்கொள்ளுங்கள். இந்தப் பொடியில் இரண்டு அல்லது மூன்று டீஸ்பூன் எடுத்து உருளைக் கிழங்கு கலவையில் சேருங்கள். பொடியும் கிழங்கும் நன்றாகக் கலந்ததும் கறிவேப்பிலையைச் சேர்த்துக் கிளறுங்கள். ஆறவைத்திருக்கும் சாதத்தை இந்தக் கலவையில் கொட்டிக் கிளறுங்கள். விரும்பினால் வறுத்த வேர்க்கடலையைச் சாதத்தில் சேர்த்துப் பரிமாறலாம்.

கோதுமை ரவை இட்லி

என்னென்ன தேவை?

கோதுமை ரவை, தயிர் – தலா ஒரு கப்

இஞ்சி – சிறிய துண்டு

பச்சை மிளகாய் – 1

கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு

கடுகு – அரை டீஸ்பூன்

உளுந்து – ஒரு டீஸ்பூன்

பச்சைப் பட்டாணி – சிறிதளவு

முந்திரி (விருப்பப்பட்டால்) – சிறிதளவு

கேரட் – 1 (சிறியது)

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

கோதுமை ரவையை வெறும் வாணலியில் வறுத்துக்கொள்ளுங்கள். அதனுடன் ஒரு கப் தயிர், சிறிதளவு உப்பு சேர்த்து அரை மணி நேரம் ஊறவையுங்கள். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம். வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுந்து சேர்த்துத் தாளியுங்கள். அதனுடன் இஞ்சி, பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய கேரட், கறிவேப்பிலை, முந்திரி, பச்சைப் பட்டாணி ஆகியவற்றைச் சேர்த்து வதக்கி, கோதுமை ரவையில் கொட்டிக் கிளறுங்கள். ஐந்து நிமிடம் கழித்து கோதுமை மாவை இட்லித் தட்டில் ஊற்றிப் பத்து நிமிடம் வேகவைத்து எடுங்கள். பூண்டு காரச் சட்னி சேர்த்துச் சாப்பிடச் சுவையாக இருக்கும்.

பாசிப் பருப்பு சப்பாத்தி

என்னென்ன தேவை?

கோதுமை மாவு – ஒரு கப்

பாசிப் பருப்பு – 6 டீஸ்பூன்

தனி மிளகாய்த் தூள் – ஒரு டீஸ்பூன்

கொத்தமல்லி – சிறிதளவு

சோம்பு – அரை டீஸ்பூன்

மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்

சீரகம் (விருப்பப்பட்டால்) – சிறிதளவு

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

பாசிப் பருப்பைச் சூடான நீரில் போட்டு ஐந்து நிமிடம் கழித்து எடுத்து வடிகட்டிக்கொள்ளுங்கள். அதனுடன் கோதுமை மாவு, உப்பு, மிளகாய்த் தூள், ஒன்றிரண்டாகப் பொரித்த சோம்பு, எண்ணெய், மஞ்சள் தூள், சிறிதளவு கொத்தமல்லி ஆகியவற்றைப் போட்டு நன்றாகப் பிசையுங்கள். தேவைப்பட்டால் சிறிது சிறிதாகத் தண்ணீர் தெளிக்கலாம். பிசைந்த மாவை ஐந்து நிமிடங்கள் ஊறவையுங்கள். பிறகு மாவைச் சிறு உருண்டைகளாக்கி, மெலிதாகத் திரட்டி தோசைக்கல்லில் போட்டுச் சுற்றிலும் எண்ணெய் விட்டு இரண்டு புறங்களும் வேகும்படி நன்றாகச் சுட்டெடுங்கள்.

கருணைக்கிழங்கு சிப்ஸ்

என்னென்ன தேவை?

கருணைக்கிழங்கு – கால் கிலோ

கடலை மாவு – ஐந்து டீஸ்பூன்

அரிசி மாவு – 4 டீஸ்பூன்

தனி மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன்

எள் – சிறிதளவு

சோள மாவு – 2 டீஸ்பூன்

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

கருணைக்கிழங்கைத் தோல் சீவி, மஞ்சள் தூள், உப்பு போட்டுக் கழுவிக்கொள்ளுங்கள். சிறிது நேரம் கழித்துக் கருணைக்கிழங்கை சிப்ஸ் கட்டையில் சீவிக்கொள்ளுங்கள். கடலை மாவு, அரிசி மாவு, சோள மாவு, மிளகாய்த் தூள், உப்பு, எள் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்துகொள்ளுங்கள். இவற்றுடன் கருணைக்கிழங்கு சீவலைச் சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்துப் பிசறி, எண்ணெய்யில் போட்டுப் பொரித்தெடுங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x