

சமூக வலைதளங்களில் ‘Chiraiya’ வெப் சீரிஸ் தொடர்பான பற்பல பார்வைகளும், பெண்ணியக் குரல்களும் பரவிக் கிடப்பதைக் கண்டுதான் ஜியோ ஹாட்ஸ்டாரில் இந்த சீரிஸைப் பார்க்க நேர்ந்தது. இந்தியில் உருவாக்கப்பட்ட இந்த ‘சோஷியல் டிராமா’ ஜானர் சீரிஸ் தமிழிலும் காணக் கிடைக்கிறது. 6 எபிசோடுகளிலும் தங்களுக்கு வழங்கப்பட்ட ரோலை பிரமாதப்படுத்தியிருக்கின்றனர் நடிகர்கள்.
ஓர் ஆணாதிக்கக் குடும்பத்தின் மூத்த மருமகளாக பத்தாம்பசலித் தனங்களின் உருவமாக இருக்கும் கமலேஷ் (திவ்யா தத்தா) அபாரமான நடிப்பில் அப்ளாஸ் அள்ளுகிறார். அதே குடும்பத்துக்குள், “மருமகளுக்கு சிந்தனையும், சித்தாந்தமும் இருக்கக் கூடாதா?” என்ற கேள்விகளோடு நுழையும் இளைய மருமகள் பூஜாவும் (பிரசன்னா பிஷ்ட்) ‘மேரிட்டல் ரேப்’ விக்டிமாக தத்ரூபமாக வாழ்ந்து மனங்களில் வலியை நிரப்புகிறார்.
படித்த, யுபிஎஸ்சி தேர்வு எழுதும் கனவு கொண்ட இளம்பெண் பூஜாவுக்கும் (23 வயது), சுகுமார் பிரம்மரின் பாரம்பரியக் குடும்பத்தில் பிறந்த மகன் அருண் குமாருக்கு இருவீட்டார் சம்மதத்துடன் இனிதே திருமணம் நடக்கிறது.
காய்ச்சலுக்கான மாத்திரையை விழுங்கிவிட்டு திருமணச் சடங்குகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் பூஜாவுக்கு அன்றைக்கே முதலிரவு சடங்கும் ஏற்பாடு செய்யப்படுகிறது. உடலளவிலும், மனதளவில் பாலுறவுக்கு தயாராக இல்லாத பூஜாவை, தாலி கட்டிவிட்டதாலேயே அவளின் ‘நோ’-வை தாண்டியும் அன்றைய இரவே பலமுறை வல்லுறவு கொள்கிறான் அருண், “உன் ‘நோ’-க்கு அர்த்தமேதுமில்லை. எனது செயல் சட்டப்படி சரியே,” என்ற விளக்கத்துடன்.
இப்படியான சூழலில், “என் அருண் தவறு செய்யவே மாட்டான்” என்று வாதிடும் அளவுக்கு ஆணாத்திக்கத்தில் மூழ்கியிருக்கும் மூத்த மருமகள் கமலேஷ் தன்னை விடுவித்துக் கொண்டு பூஜாவின் ரணத்தைப் புரிந்து கொண்டு பூஜாவின், பெண்களின் படுக்கையறை ‘நோ’ உரிமை பற்றி உரக்கப் பேசுவதுதான் ‘Chiraiya’ வெப் தொடர்.
Marital Rape (திருமண பந்தத்தில் நிகழ்த்தப்படும் பாலியல் வல்லுறவு)... இந்தியச் சமூகத்தில் பெண்கள் மீதான இந்த அநீதி இன்றளவும் கூட சட்டத்தின் எல்லைக்கு அப்பாற்பட்டே நிற்கிறது. அதாவது, மனைவியின் விருப்பமின்றி கணவன் வலுக்கட்டாயமாக பாலுறவு கொண்டாலும் அவள் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர முடியாது என்பதே தேசத்தின் சட்டமாக உள்ளது.
ஆனால், கணவன் - மனைவியாகவே இருந்தாலும்கூட சம்மதம் (Consent) முக்கியம். இசைவு இல்லாவிட்டால் அந்த பாலுறவை திருமண பந்ததின் பெயரில் நிகழும் பாலியல் வல்லுறவாகக் கருதுங்கள் என்பதே பெண்ணிய செயற்பாட்டாளர்களின் குரலாக இருக்கிறது.
இந்தியாவில் திருமணமான பெண்களில் 5.6% பேர், தாங்கள் தங்களின் விருப்பமின்றி கணவரால் வலுக்கட்டாயமாக வனபுணர்வு செய்யப்பட்டதாக, எண்ட் கிரெடிட்ஸில் புள்ளிவிவரம் பகிரப்படுகிறது. ‘இது சொற்பான அளவுதானே!’ என்று உடனே உங்களுக்குள் ஒரு கேள்வி வரலாம். அதை முளையிலேயே கிள்ளிவிடுங்கள்.
பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையல்ல குற்றம் என்று ஒரு செயலை வரையறைப்படுத்துவதற்கான அளவுகோல். பாதிக்கப்பட்டவரின் வலியும், இழப்பும்தான் உண்மையான அளவுகோல். அப்படியான, குரலற்றவர்களின் குரலாகத் தான் கமலேஷ் ஒலிக்கிறாள். இதுதான் ‘Chiraiya’ கதைச் சுருக்கம்.
சீரிஸின் 6 அத்தியாயங்களிலுமே கமலேஷின் எழுச்சி மூலம் தான் கதை நகர்கிறது. பூஜா மூலமாக விழிப்புணர்வைப் பெறும் கமலேஷ், பூஜாவுக்காக நிற்கிறாள்.
குடும்பம், அலுவலகம், பந்துபட்ட சமூகம் என எதுவாக இருந்தாலும், “பெண்கள் தான் பெண்களுக்கு எதிரி” என்ற பார்வை விதைக்கப்பட்டுள்ளது. இதுவும், ஆணாதிக்க சமூகத்தின் பிரித்தாளும் சூழ்ச்சியின் விளைவே.
ஆனால், ஒரு பெண் தான் இன்னொரு பெண்ணுக்கான பெரிய பலம் என்பதை ‘Chiraiya’ வலுவாக நிறுவுகிறது. ‘Chiraiya’ என்பது இந்தி மொழியில் சிட்டுக் குருவி போன்ற சின்னஞ்சிறு பறவைகளைக் குறிக்கிறது. கூடவே, மகள்களைச் செல்லமாக அழைக்கவும் இந்தப் பதத்தை இந்திவாசிகள் பயன்படுத்துகின்றனர்.
கமலேஷின் பத்தாம்பசலித் தனங்களைப் பட்டியலிட்டால் ஆணாதிக்க சமூகத்தின் சூழ்ச்சி புரியும். கமலேஷ் என்ற பெயரே ஆணுக்கான பெயர். ஒருவேளை அவளின் பெற்றோர் ஆண் குழந்தையென்று எதிர்பார்த்திருந்து பெண்ணாகப் பிறந்துவிட்டாலும் அந்தப் பெயரை விடாப்பிடியாகப் பிடித்ததின் விளைவாக இருக்கலாம்.
அப்படிப்பட்ட கமலேஷ் ஒரு வீட்டின் மூத்த மருமகள் என்பதை தனக்கான வாழ்நாள் பதவியாகப் பார்க்கிறாள். அதற்கான கடமைகள் என்று பட்டியலிடப்பட்டுள்ள அத்தனையையும் பார்த்துப் பார்த்துச் செய்கிறாள்.
“குடும்பம் என்பது ஒரு ஸ்வெட்டர் அதில் எந்தக் குறையும் ஏற்படாமல் பிண்ண வேண்டும்” என்று தன்னை அர்ப்பணிக்கிறாள். எல்லோருக்கும் பிடித்ததை சமைத்து, எல்லா வேலைகளையும் பார்த்துப் பார்த்து செய்து, அந்த வீட்டைக் கட்டிக் காப்பாற்றுபவளாக தன்னை நம்புகிறாள்.
ஆனால், உண்மையில், ஆண்கள் தாங்கள் ஆண்களாகவே இருப்பதற்கான மேடையை தாங்கிப் பிடிப்பவளாக மட்டுமே கமலேஷ் வாழப் பழக்கப்படுத்தப் பட்டிருக்கிறாள். குடும்பத்தின் மூத்த ஆணான தன் மாமனார் ஒரு ‘நீதிமான்’ என்று நம்பவைக்கப்படுகிறாள். அவர், தனக்கு எல்லா உரிமைகளையும் கொடுத்திருப்பதாக சிலாகிக்கிறாள்.
கொழுந்தனுக்கு பெண் பார்க்கச் செல்லுமிடத்தில் தான் மூத்த மருமகள், தன் சொற்படித்தான் எல்லாம் நடக்குமென்று தான் நம்பும் மாயையை எல்லோருக்கும் காட்சிப்படுத்த முயற்சிக்கிறாள். அவளின் அந்த பரிதாப முயற்சியை, நாங்கள் பண்பானவர்கள், பெண்களை மதிப்பவர்கள் என்று நிறுவுவதற்காகப் பயன்படுத்திக் கொள்கின்றனர் கமலேஷின் மாமனாரும், கொழுந்தனாரும். இந்திய சமூகத்தில் இன்றளவும் பெருமளவிலான ஆண்கள், பெண் சுதந்திரம் என்பது தாங்கள் அருளியது என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.
பெண்கள் தமது சொந்தக் கட்டுப்பாட்டால் சங்கிலி போட்டுக் கொண்டுள்ளனர். பெண் சுதந்திரம் என்பது பெண் வாழ்க்கையின் ஒவ்வொரு அத்தியாத்தயையும் திறக்கும் திறவுகோலை தானே கண்டறிந்து பயன்படுத்துவதைத் தவிர வேறொன்றுமில்லை.
பூஜாவை திருமண நிச்சயம் செய்தபின்னர், ஒரு நாள் சாலையில் LGBTQ சமூகத்தினருக்கான போராட்டத்தில் அவளைப் பார்க்கிறாள் கமலேஷ். அவளை அழைத்துக் கொண்டு ஆவேசமாக அவளின் பெற்றோர் வீட்டுக்குச் செல்லும் கமலேஷ், பூஜாவிடம், “நீ லெஸ்பியனா, உனக்கு அங்கே என்ன வேலை, மாமியார் காலில் விழுந்து மன்னிப்பு கேள், பெண் ஒரு செய்தித்தாளின் கடைசிப் பக்கங்களில் வரும் சமையல் குறிப்புகளைப் படித்தால் போதும், பெண்ணின் எண்ணங்கள், சித்தாங்கள் எல்லாம் மதிப்பற்றவை,” என்று கோபாவேசம் கொள்கிறாள்.
நான் தவறு செய்யவில்லை மன்னிப்பு கேட்க முடியாது என்று படிப்பு கொடுத்த பகுத்தறிவை பூஜா பிரகடனப்படுத்த, அவள் விரலில் இருந்து திருமண நிச்சயதார்த்த மோதிரத்தைப் பறித்துச் செல்கிறாள்.
அதன்பின்னர் தனக்காகப் பேச தானே அருணின் வீட்டுக்குச் செல்கிறாள் பூஜா. அவளால், கமலேஷின் இன்செக்யூர் உணர்வைப் புரிந்து கொள்ள முடிகிறது.
“எனக்கு எது சரி, எது தவறென்பதை அறிந்து கொள்ள நேரமாகும். தெரிந்துவிட்டால் நியாயத்தின் பக்கம் தான் நிற்பேன்” என்று கமலேஷ் சொல்கையில், “சில பேர் தனக்கு நடக்கும் அநியாயத்தை எதிர்த்து குரல் கொடுக்க முடியாது. பாதிக்கப்பட்டு பயத்தில் இருக்கும் அவர்களுக்காக வேறு ஒருவர் குரல் கொடுக்க வேண்டும்” என்று கமலேஷ் கண்ணில் கட்டப்பட்டிருக்கும் ஆணாதிக்க திரையின் முதல் முடிச்சை அவிழ்த்துவிடுவாள் பூஜா.
ஆனால், வெறும் உபதேசங்கள் ஆண்டாண்டு கால அடிமைப்படுத்துதலால் கட்டப்பட்ட திரையை அவ்வளவு எளிதில் அவிழ்த்துவிடுமா என்பதுபோலத் தான், முதலிரவு வன்புணர்வால் உடலும், மனமும் ரணமான பூஜாவை அணுகுவாள் கமலேஷ். “அருண் என்னை ரேப் செய்துவிட்டார்”, என்று சொல்லும் பூஜாவை ஓங்கி அறைவாள்.
“என் வீட்டிலிருக்கும் ஒரு பீரோவில் இருந்து நான் 100 ரூபாய் எடுத்துக் கொண்டால் அது திருட்டா?” என்று ஆண் மனத் தொனியில் கேட்பாள். பெண் ஆணின் சொத்து. பெண் குடும்பத்தின் கவுரம். பெண் குடும்ப குலவிளக்கு என்றுதான் பெண்கள் நம்பவைக்கப்பட்டுள்ளனர். அதைத்தான் கமலேஷும் பேசுவாள்.
கமலேஷ் கண் திரையின் அடுத்த முடிச்சையும் அவிழ்க்கும் வகையில், “நான் ஒன்றும் அலமாரி அல்ல? திருமணம் தான் செய்து கொண்டேன். என்னை ஒரு பொருளைப் போல் பத்திரம் போட்டு பதிவு செய்து கொடுக்கவில்லை. உங்களுக்கு ‘கன்சென்ட்’ என்றால் என்னவென்று தெரியுமா என்று கேட்டுச் செல்வாள்.
பூஜாவும் அருணும் ஹனிமூனுக்கு புறப்பட்டுச் சென்றவுடன், சீரிஸ் 2 கிளைகளாகப் பிரியும். ஒருபக்கம் கமலேஷ் ‘கன்சென்ட்’-க்கான அர்த்தமறிய முயற்சிப்பாள், இன்னொரு புறம் பூஜா ‘கன்சென்ட்’-ன் முக்கியத்துவத்தை அருணிடம் விளக்கமுடியாமல் வன்புணர்வின் விக்டிமாகிக் கொண்டிருப்பாள்.
கமலேஷ் தனது அறியாமையை, முட்டாள் தனத்தை உடைக்க முயற்சிக்கும் காட்சிகளில் அற்புதமான நடிப்பால் ஆட்கொள்கிறார். திருமண பந்தத்தில் நிகழ்ந்த பாலியல் வன்புணர்வுகளின் சாட்சியாகப் பேசும் பெண் குரல்களின் வழியாக பூஜா கேட்ட கேள்விக்கு விடை பெற்று தெளிகிறாள். முதன்முறையாக, அருண் தவறு செய்திருப்பானோ! என்று அஞ்சுகிறாள்.
ஹனிமூனிலிருந்து மருத்துவமனையில் கிடக்கும் பூஜாவுக்கு என்ன நேர்ந்தது என்று தெரிந்ததும் ஆடிப் போகிறாள் கமலேஷ். அவளிடம் என்னாச்சு, யார் இப்படிச் செய்தார்கள் என்று கேட்கும் கமலேஷிடம், “என்னால் முடியவில்லை. எனக்கு படுக்கையைப் பார்த்தாலே பயம் வந்தது. நான் வேண்டாம் என்று சொன்னாலும் என்னை அருண் விடவில்லை. நான் மாதவிடாய் என்றேன். ரத்தத்தை காட்டு என்றார். வேறு வழியில்லாம் நானே என் பிறப்புறுப்பை பிளேடால் கீறிக் கொண்டேன்” என்று சொல்வதோடு, “இப்பவும் நீங்கள் என்னை நம்பமாட்டீர்கள், நீங்கள் வேண்டுமானால் அங்கே பிளேடு வைத்துப் பாருங்கள். எந்தப் பெண்ணாவது அதில் பொய் சொல்வாளா என்று தெரியும்” என்பாள்.
வீடு திரும்பும் கமலேஷ் பிளேடை தனது பிறப்புறுப்பு அருகே கொண்டு செல்லக் கூட மனம் அனுமதிக்காமல் பதறி, கதறி அழுவாள். அருணின் அடையாளமாக கையில் சுமக்கும் கடிகாரத்தை நொறுக்குவாள். புகைப்படங்களை எரிப்பாள். “எது சரி, தவறு என்று தெரிந்தாள் நியாயத்தின் பக்கம்தான் நிற்பேன்,” என்று ஏற்கெனவே சொன்னதுபோல் பூஜாவின் பக்கம் நிற்கலாவாள்.
அதன் நீட்சியாக மாமனார் எப்போதோ போதித்திருபார், “குற்றவாளி ஒருவன் அல்ல அவன் குற்றத்தைப் பார்த்து அமைதியாக இருக்கும் அனைவரும் தான்” என்று. புராணக் கதைகளைக் கூறி என்றோ அவர் சொன்னதின் படி ஒரு குற்றவாளிப் பட்டியலைத் தயார் செய்வாள் கமலேஷ்.
நியாயப்படி அருணின் பெயர் தான் அதில் முதலில் இருக்க வேண்டும். ஆனால் தன் பெயரை எழுதிக் கொள்வாள். தன் வளர்ப்பு சரியில்லை. ஆணாத்திக்கத்தை குழந்தைப் பருவத்திலிருந்தே ஊக்குவித்து, அனுமதித்தால் தன் பெயரை எழுதுவாள்.
ஆனால், அருண் மீது கடுங்கோபத்தை முகத்துக்கு நேராகக் காட்டுகையில், “இதுவே எனது கடைசி ஆசிர்வாதம். உன்னையும் உன் மாதிரியான ஆட்களையும் விட்டுவைக்க மாட்டேன். ஆண்டன் உன்னை என் கிட்ட இருந்து காப்பாற்றட்டும்” என்று சொல்வாள்.
ஒரு பெண்ணாக பூஜாவின் பக்கம் நிற்கத் துணிந்தாலும் கூட அவள் மனதில் வேரூன்றிய ஆணாதிக்கம் அருண் வெளிவர ஒரு வாய்ப்பை இறைவன் நல்கட்டும் என்று ஆசிர்வதிப்பவளாகவே அவளை கட்டமைத்திருக்கும்.
பூஜாவின் தோழி அறிமுகப்படுத்தும் என்ஜிஓ நிர்வாகி, “Consent விளக்கத்தோடு, உலகத்தில் எல்லா மதமும் ஆணால் உருவாக்கப்பட்டது. அதன் நிமித்தமான சட்ட திட்டங்களும் அவர்களால், அவர்களுக்கு சாதகமாகவே எழுதப்பட்டது” என்று சொல்லியிருப்பார். ஏனோ அது கமலேஷ் புத்திக்கு அப்போது எட்டாது. தெளிவு பெற்று, பூரண விடுதலை பெற அவளுக்கு அவகாசம் தேவைப்படும்.
கடைசி 2 எபிசோடுகளில் அவள் முழுமையாக தெளிவு பெறுதலையும், நியாயத்தின் பக்கம் எந்த சந்தேகமும் இல்லாமல் நிற்றலுமே சொல்லப்பட்டிருக்கும்.
“படிப்பு இல்லை, டிகிரி இல்லை என்னிடம் இருப்பது அருண் மட்டும்தான். அவனை நான் தான் வளர்த்தேன். அவன் தவறானவனாக இருந்தால்...” என்ற பயத்தில் ஆரம்பிக்கும் கமலேஷின் ட்ரான்ஸ்ஃபர்மேஷன் “சட்டத்தை மாற்ற முடியாவிட்டாலும், என்னால் எனது குடும்பத்தை மாற்ற முடியும்” என்று ‘மாற்றம் என்பது குடும்பங்களில் இருந்தே தொடங்க வேண்டும்’ என்ற பெண் சமூக செயற்பாட்டாளர்களின் பார்வையை பிரதிலிப்பதாக மாறும்.
பூஜாவுக்கான நீதியை நிலைநாட்ட 3 முயற்சிகளை எடுக்கிறாள் கமலேஷ். முதல்முயற்சி குடும்பத்துக்குள். ‘நீதிமான்’ என்று தான் கருதும் மாமனார் முன்னால் அருணை நிறுத்துகிறாள். ஆனால் அவரோ சம்பிரதாய ‘சாரி’ சொல்லவைத்து பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வர முற்படுகிறார். வெறும் மன்னிப்பென்ற வார்த்தையல்ல அருணை சட்டபூர்வமாக தண்டிக்க வேண்டும் என்று மாமனாரிடம் வாதிடுகிறாள்.
“குடும்பத்திற்கு எதிரான செயலைச் செய்வதென்றால் குடும்பத்தைவிட்டு வெளியே சென்று செய்யலாம்” என்று வீட்டைவிட்டு மருமகள்களையும், பேத்தியையும் வெளியேற்றும் மாமனார், “கமலேஷின் பிடிவாதத்தை இப்படித்தான் சரி செய்ய வேண்டும். அவள் திரும்பிவந்து காலில் விழுந்து மன்னிப்பு கேட்பாள்” எனக் கணிக்கிறார்.
கமலேஷும் திரும்பி வருகிறாள். மாமனார் காலில் விழுகிறாள். அதைப் பார்த்து வெற்றிச் சிரிப்பைத் தெறிக்கும் அவரிடம், “இது மன்னிப்புக்காக அல்ல என் போராட்டதுக்கான ஆசி கோருதல்,” என்று கூறி யாருடைய மகனை தண்டிக்கப் புறப்படுகிறாளோ அவரிடமே ஆசிர்வாதம் வாங்கி, அவளுடைய குடும்பத்தின் ஆணாதிக்க முகத்துக்கு முதல் அறையை விடுகிறாள்.
கமலேஷின் முயற்சிக்கு அவள் கணவன் முழு ஆதரவு தருகிறான். தான் இத்தனை நாட்களாகக் குற்றங்களை வேடிக்கைப் பார்ப்பவனாகவே மட்டுமே இருந்துவிட்டதால், குற்றத்தைத் தட்டிக் கேட்கும் நீ தான் ஹீரோ என்று மனைவியை உச்சி முகர்ந்து15 ஆண்டு காலம் முகத்துக்கு நேராக சொல்லாத ஐ லவ் யூ-வை சொல்லி வழியனுப்புகிறான்.
இரண்டாவதாக, தனது தாத்தாவின் மூலம் நியாயமான வழியில் பூஜாவுக்காக போராட முற்படுகிறாள் கமலேஷ். தாத்தாவோ, இந்தியாவில் ‘மேரிட்டல் ரேப்’-க்கு எதிராக புகார் கொடுக்க சட்டத்தில் வழியில்லை. ஆனால், வரதட்சணைப் புகார் கொடுத்து ஜாமீனில் வெளிவர முடியாதபடி சிறைக்கு அனுப்பலாம் என யோசனை சொல்கிறார். பூஜா அதற்கு ஏற்பாடு செய்யச் சொல்கிறாள்.
கமலேஷின் தாத்தா வரதட்சணை வழக்கு பதிவு செய்யச் சொல்லுவதற்கான காரணத்தை விவரிக்கையில், “நாம் வெறி நாய்க்கு எதிராக கல் எடுக்கிறோம். அதன் நகங்களும், பற்களும் நமக்கு அச்சத்தைக் கடத்துகின்றன. அதேபோல் இந்தச் சமூகத்துக்கும் பற்கள், நகங்கள் இருக்கின்றன. அவை மிருகங்களுக்கு இருப்பதைவிட கொடுமையானவை.
இந்தச் சமூகமும் வெறி நாயைவிட நம்மை அதிகமாகக் கடிக்கும். அதனால் சண்டைக்கு நாம் கல்லை எடுக்கலாம். அது பொய்யான கல்லாக இருந்தாலும் சரி!. கல்லை எடுத்து சமூகத்தின் முகத்தில் அடி கமலேஷ். நடந்த குற்றத்துக்கு தண்டனை வாங்கித் தர முடியாவிட்டால், நடக்காத குற்றத்துக்கு தண்டனை வாங்கித்தா,” என்கிறார்.
கமலேஷோ, “நான் நியாயத்தின் பக்கம் நிற்கிறேன். சரியான விஷயத்துக்குப் போராடுவது கடினம். அதைவிடக் கடினம் சரியான வழியில் போராடுவது. அப்படிப் போராடினால் தனியாகத் தான் நிற்க வேண்டும்” என்று குழம்புகிறாள். புகாரை எரிக்கிறாள். ஆனாலும், பூஜா ஆன்லைனில் புகாரளிக்க மாமனார், மாமியார், அருண் கைதாகின்றனர். போலீஸ் ஜீப்பில் வீட்டுவாசலைத் தாண்டும் முன்னர் முன் ஜாமீன் கிடைத்ததால் வீடு திரும்புகின்றனர்.
அதன்பின்னர் ‘வீறு’ கொண்டு எழும் மாமனார் சதி வேலைகளால் மருமகள்களை வீடு திரும்ப வைக்கிறார். ஆண் தப்பு செய்வான். அவனை அன்பினால் திருத்த வேண்டியது தான் பெண்ணின் கடமை என்று அறிவுரை கூறுகிறார் மாமனார்.
வீட்டுக்கு மாமனாருடன், அருணுடன் காரில் செல்லும்போது கமலேஷ் மனதின் குரல், “சிட்டுக்குருவிகளை எல்லோருக்கும் பிடிக்கும். ஆனால் அவை பறந்துவிட்டால் கூண்டுக்கு பிடிக்காது. அவை பறக்காமல் இருக்க றெக்கையை வெட்டிவிடுவார்கள். அதன் சுதந்திரத்தைப் பறித்துவிடுவார்கள். எங்களிடம் பறித்த மாதிரி” என்று சொல்லும். அங்கே சீரிஸின் தலைப்பின் அர்த்தம் நமக்குக் கிடைக்கும்.
கமலேஷின் 3-வது முயற்சிதான் வெற்றிகரமான முயற்சி. அதற்குத் தூண்டுதலாக இருப்பார் கமலேஷ் மாமனாரின் தாய். “உங்களுக்கு வாய் இருக்கு. ஆனால் அது பேசாமல் இருக்கு. புரட்சி செய்யப் போறேன்னு கிளம்பிப் போய்விட்டு கட்டுக்கதையை நம்பி திரும்பவும் அடிபட வந்திருக்கிறீர்கள்.
குடும்பம், பாரம்பரியம், கவுவரவம், அப்பா இன்னும் யார் யார் பெயரையோ சொல்லித்தான் நம்மை காலங்காலமாக அடிமைப் படுத்தி வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு சரியான அடி கொடுக்க வேண்டும். என்ன நடந்தது என்று எல்லோர் முன்னிலையிலும் அம்பலப்படுத்துங்கள்” என்று யோசனை சொல்கிறாள்.
கமலேஷுக்கு இது நல்ல யோசனையாக அமைகிறது. கமலேஷ் கதா காலட்சேபத்துக்கு ஏற்பாடு செய்கிறாள். நீ யாருடைய கதையைச் சொல்லப் போகிறாய் என்று வினவுவோரிடம், “2 தேவதைகளின் கதை, என்னோட கதை, உங்கள் எல்லோருடைய கதை” என்று பீடிகையுடன் ஆரம்பிக்கிறாள். அதில் கமலேஷ் சில புராண ரெஃபரன்ஸ்களை சொல்கிறாள்.
அவளுடைய பேச்சின் டேக்-அவே இதுதான்: ஒரு பெண் பிறக்கிறாள், குழந்தை பெற்றுக் கொள்கிறாள், செத்து மடிகிறாள். இதுதான் இப்போதைய பெண்களின் நிலைமை. அவளுடைய அதிகாரம் போய்விட்டது. அவள் வீடு, சொத்து என எல்லாத்தையும் இந்த உலகம் பறித்துக் கொண்டது. ஏன், அவளுக்கு சூடான சப்பாத்தி கூட கிடைப்பதில்லை.
தனக்குப் பிடித்ததை அவளால் சமைக்க முடியாது. அவளுடைய உடம்பு மட்டும் தான் அவளுக்கு சொந்தம். திருமணத்துக்குப் பின் அதுவும் அவளுடைய கணவரின் சொத்தாகிவிடுகிறது.” என்று கூறி மீதக் கதையை பூஜாவை சொல்ல வைக்கிறாள். பூஜா, எல்லோர் முன்னிலையில் உரக்கச் சொல்கிறாள்... “என் கணவர் என்னுடன் பலவந்தமாக உறவு வைத்துக் கொண்டார்” என்று.
இதனால் வெகுண்டெழும் மாமனார் கூட்டத்தைக் கலைக்க முற்பட, “உங்களில் யார் பேருந்துப் பயணத்தில் பாலியல் சீண்டலுக்கு ஆளாகம் சிரித்துக் கொண்டு இறங்கியிருக்கிறீர்களோ!, யார் குடும்பத்துக்குள்ளேயே இருக்கும் சித்தப்பா, மாமா அல்லது ட்யூஷன் வாத்தியாரால் பாலியல் சீண்டலுக்கு ஆளாகவில்லையோ!, யார் ஒருமுறை கூட வேண்டாம் என்று சொல்லியும் வலுக்கட்டாயமாக கணவரால் புணரப்படவில்லையோ! அவர்கள் கிளம்பலாம் என்று சொல்ல” திரும்பிய கால்கள் நின்றுவிடுகின்றன. கமலேஷின் மாமனாரும், கொழுந்தனார் அருணும் அம்பலமாகின்றனர்.
அருணின் அம்மா மகன் செய்த தப்பை நினைத்து வருந்துகிறாள். நாங்கள் முற்போக்கானவர்கள் என்று காட்டிக் கொண்டே தங்கள் ஆதிக்கத்தை சற்று தளரவிடாத அருணும், அவன் அப்பாவும் அம்பலப்படுகின்றனர். அப்போது பூஜாவை அடிக்கக் கை ஓங்கும் அருணுக்கு ஓங்கி அறைவிட்டு வீழ்த்துகிறாள் கமலேஷ். பூஜாவின், காலில் விழுந்து மன்னிப்பு கேட்கச் சொல்கிறாள்.
அதற்குப் பூஜா “ஓர் அறை இவனை ஒன்று செய்யாது. நான் இவனை மன்னிக்க மாட்டேன். என்றைக்கு மேரிட்டல் ரேப் குற்றம் என்று சட்டம் வருகிறதோ அன்று நான் உன்னை நீதியின் முன் நிறுத்துவேன்” என்கிறாள்.
அநீதியை உரக்கச் சொல்லி, ஆணாதிக்க வாதிகளை அம்பலப்படுத்தி இரும்புக் கூண்டை தகர்த்த குருவிகளாக நிற்கின்றனர் கமலேஷும், பூஜாவும். கூடவே இன்னும் பல பெண்கள்.
| தேவதைகள் இன்னும் வலம் வருவர்... |
தொடர்புக்கு: bharathi.p@hindutamil.co.in