

பெண்கள் வலிமையானவர்கள்தான். தேச எல்லைகள் கடந்து, அதன் நாகரிகங்கள் தாண்டி அவர்களின் வலிமையை மழுங்கடிப்பது என்னவோ சாதி, மதம், இனம், பால் பேதங்களும், குடும்பம் என்ற கட்டமைப்பும், அதை ஒட்டிய ஒழுக்கம், கற்பு, மானம் போன்ற கற்பிதங்களை தனக்கு தோதான விழுமியங்களோடு உருவாக்கிய ஆண் சமூகமும்தான்.
என்னிடம் எப்போதோ ஒரு நண்பர் கேட்டார், “ஆண்களை குற்றவாளி ஆக்காமல் பெண்ணியம் பேச முடியாதா?” என்று. அவருக்கும், அந்தக் கேள்விகளோடு இருப்போருக்குமான பதில் மேலே உள்ள பத்திதான். மீண்டும் மீண்டும் வாசித்து உணரலாம், பிரச்சினையின் ஆணி வேரை!
ஆனால், இத்தனை அழுத்தங்களைத் தாண்டியும் மனிதிகள் தங்களின் இயற்கை வலிமையோடு அவ்வப்போது ஜொலிக்கத்தான் செய்கிறார்கள்.
“ஒவ்வொரு முறையும் ஒரு பெண் தனக்காக நிற்கும்போதும், தனக்குத் தெரியாமலேயே அவள் ஒட்டுமொத்த பெண்களுக்காகவும் நிற்கிறாள்” - புரட்சியாளர் மாயா ஆஞ்சலோவின் மேற்கோள்களில் ஒன்று இது.
இதன் அப்கிரேடட் வெர்ஷனின் உயிர் வடிவம்தான் 2023-ல் வெளியான மலையாளத்தில் வெளிவந்த ‘காதல்: தி கோர்’ (Kaathal: The Core) படத்தின் நாயகி ஓமனா (ஜோதிகா).
ஓமனா தன்னைத் தானே மீட்டெடுக்கும் முயற்சியில், இந்தச் சமூகம் ‘பாவம்’ என்றும், ‘குற்றம்’ என்றும் கட்டியெழுப்பிய கற்பிதங்களால் பாதிக்கப்பட்ட இன்னும் சிலரையும் மீட்கிறாள். தன் சுயத்தை மீட்டெடுக்கும் செயல்முறையில் தனது இணையரையும் ரட்சிக்கிறாள் மீட்பர் ஓமனா.
மலையாளத் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான மம்மூட்டி ஏற்று நடித்த துணிச்சலான கதாபாத்திரம் ‘காதல்: தி கோர்’ படத்தின் மேத்யூ தேவஸி. ஃபேமிலி டிராமா ஜானரில் பொருந்தும் இந்தப் படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் காணக்கிடைக்கிறது.
இந்தப் படத்தின் இயக்குநர் ஜியோ பேபி. 2021-ல் இவர் இயக்கிய ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ (The Great Indian Kitchen) பெண்களின் சமையலறை சங்கடங்கள் பற்றி புரட்சிகரமாகப் பேசி சமூகத்தில் ஆழமான விவாதங்களைக் கிளப்பியது. அந்தப் படத்தைப் பார்த்து தங்களது டேபிள் மேனர்ஸ்களை மாற்றிக் கொண்டவர்களை நான் அறிவேன். சினிமா ஒரு சமூக இலக்கியமாக படைக்கப்படும்போது, அது எத்தகைய ஆழமான மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதற்கு சான்று அது.
இனி மெயின் பிக்சருக்கு வருவோம். ‘காதல்: தி கோர்’ படத்தின் ஆரம்பக் காட்சி ஒரு பிரார்த்தனைக் கூட்டத்திலிருந்து தொடங்குகிறது.
“இறைவா! நாங்கள் உனக்கு எத்தனை நன்றிகள் சொன்னாலும், அதைவிட அதிக நன்மைகளை நீ எனக்குத் தருகிறாய்” என்ற துதியுடன் ஆரம்பிக்கிறது.
இந்த துதி மீது எனக்கு எந்த விமர்சனமும் இல்லை. மதிக்கிறேன். ஆனால் நிதர்சனம் இதுதான்...
தியாகச் சுடர், கருணைக் கடல் என்று துதிக்கப்பட்டு மரபுகளைப் பின்பற்றும் ‘சாம்ப்ரதாயினி’களாக இருப்பதே இயல்பு என்று நம்பவைக்கப்படுகிறார்கள்.
இப்படி சமஸ்கிருதத்தில் சொன்னால் எப்படி எல்லோருக்கும் புரியாதோ, அப்படித்தான் பெரும்பாலான பெண்கள் தாங்கள் சிக்கியிருக்கும் கற்பிதங்களைப் பற்றிய புரிதல் இல்லாமலேயே அதில் உழல்கின்றனர்.
நாயகி ஓமனா ஆரம்பத்தில் அப்படித்தான் இருந்துவிடுகிறாள். கணவன், மகள், மாமனார், குடும்பம், பிரார்த்தனை என ரொட்டீன்களில் சுழன்று கொண்டிருக்கிறாள். ஆனால், ஓமனா தனக்காக ஏதோ ஒரு முக்கிய முடிவு எடுத்திருக்கிறாள் என்பது ஓமனாவிடம் மகள் ஃபெமி “அப்பாகிட்ட சொல்லிட்டியா மா?” என்று கேட்கும்போது தெரியும்.
அதுவரை எதுவுமே நாம் ஊகித்திருக்க மாட்டோம். ஒரு பொருத்தமான தம்பதிகளாகவே மேத்யூ தேவஸியும், ஓமனாவும் நமக்குத் தெரிவார்கள். இந்தியக் குடும்பங்களில் பெரும்பாலான கணவன் - மனைவி ‘நல்ல வேஷம்தான் வெளுத்து வாங்குற’ என்கிற பாணியில் தான் வாழ்கின்றனர்.
மேத்யூ ஓர் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி. ஓமனா இல்லத்தரசி. மாமனார் வாரிசுகளின் வளமான வாழ்வுக்கு சொத்து சேர்த்து வைத்திருக்கிறார். மகள் ஃபெமி ஒரு பொறுப்பான தாய் - தகப்பனின் வளர்ப்பில் முற்போக்கு சிந்தனையோடு வளர்ந்து கல்லூரி பயில்கிறாள். அவ்வப்போது விசிட் தருகிறார் ஓமனாவின் சகோதரர். கதையில் அங்குமிங்கும் வந்துபோகிறார் டிரைவின் ஸ்கூல் நடத்தும் தங்கம் (மிக முக்கிய கேரக்டர்). அவரது மருமகன் ‘குட்டாயி’ வன்மத்தை கக்கும் சமூகத்தின் விக்டிம்.
ஓர் அதி முக்கிய கேரக்டரை அண்டர்ப்ளே பண்ணியே நிறுவ முடியுமா என்பதற்கு தங்கம் கதாபாத்திரம் படைக்கப்பட்ட விதம் தான் ப்ரூஃப்.
மேத்யூ பஞ்சாயத்து வார்டு மெம்பர் தேர்தலுக்கு தயாராகும் அதே வேளையில் ஓமனா விவாகரத்து மனுவில் மும்முரமாகிறாள். கணவரிடமிருந்து விவாகரத்து கோரும் அந்த மனுவில், ‘என் கணவர் மேத்யூ என்னை அடித்துத் துன்புறுத்தியது இல்லை, பொருளாதார ரீதியாக வசதியாகவே வைத்திருக்கிறார், என்னுடன் சேர்ந்து மகளை பொறுப்பாக வளர்த்திருக்கிறார், ஆனால், என்னை ‘கொடுமை’ப்படுத்தியிருக்கிறார்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
அந்தக் ‘கொடுமை’ தன்னுடன் தாம்பத்ய உறவில் ஈடுபடுவதில்லை என்பதும், அதற்குக் காரணம் அவர் ஒரு தன்பாலின ஈர்ப்பாளர் என்பதும் என்றும் விவரமாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த விஷயம் ஊர் முழுக்க பரவுகிறது. உறவுகளும், ஊரும், மதமும், தேர்தலில் களம் காணவுள்ள கட்சியும் மேத்யூ தேவஸியின் பாலியல் விருப்பத்தை, ஓமனாவின் விவாகரத்து உரிமை கோரலை எப்படிக் கையாள்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
ஓமனா தன் விவாகரத்து கோரல் நியாயமானது என்று நம்பி தனக்காக தான் நிற்கவே 20 வருடங்கள் ஆகிவிடுகிறது. அத்தனை ஆண்டுகளுக்குப் பின்னரும் கூட அவளை விடுவிக்க குடும்பத்துக்கு ஆண்கள், சமூகமும் தயாராக இல்லை.
அண்ணனிடம் விவரிக்கிறாள். அவன் ஏசுகிறான். “இந்த வயதில் எதற்கு விவாகரத்து? குடும்பம் என்றால் சண்டை, சச்சரவு இருக்கத்தான் செய்யும். இனிமேல் என்ன இன்னொரு கல்யாணமா செய்யப் போகிறாய்!” என்று வார்த்தைகளைக் கொட்டுகிறான்.
ஓமனா ஒரே ஒரு கோரிக்கைதான் வைக்கிறாள். ”நீ எப்பவும் எனக்காக துணை நின்றதில்லை. இப்பவாவது எனக்காக நில்” என்கிறாள். இதுதான் பெண்களின் எதிர்பார்ப்பு.
மாறாக ‘நீ என்ன உடை வேண்டுமானாலும் போடலாம்’, ‘நீ வேலைக்கு போகலாம்’, ‘உன் முடிவை நீயே எடுக்கலாம்’ என்று கூறும் ஆண்கள், பெண் சுதந்திரத்தை மதிப்பவர்கள் அல்ல. அவர்கள் ஆஃபர் அருளும் ஆண்டவனாக தங்களை நினைத்துக் கொள்ளும் ஆதிக்கவாதிகள்.
சகோதரனை சமரசம் செய்த ஓமனாவுக்கு அடுத்த சவால் கணவர் மேத்யூதான். 20 வருடங்களுக்குப் பிறகு விவாகரத்து தேவையற்றது என்ற ஒற்றைக் கருத்தை பல வார்த்தை ஜாலங்களில் வலியுறுத்துகிறான். ஆனால், “எனக்கு விவாகரத்து மட்டும்தான் தேவை” என்று ஆணித்தரமாக நிறுவுகிறாள். அந்த நியாயத்தை உணர்ந்து அவளுடன் நீதிமன்றத்தில் ஆஜராகிறான் மேத்யூ.
ஆனாலும் தனது வழக்கறிஞரிடமும், நீதிமன்றத்திலும் தொடர்ந்து தான் தன்பாலின ஈர்ப்பாளர் இல்லை என்று சொல்கிறான். அவனது மழுப்பலை, “நீங்கள் மக்கள் பிரதிநிதியாகப் போகிறீர்கள். உங்களுக்கு உண்மையும், நேர்மையும் முக்கியம்” என்று ஓமனாவின் வழக்கறிஞர் விமர்சிக்கும் காட்சி சம்மட்டி அடி!
மேத்யூ சார்ந்த கட்சி, “ஒருவரின் தனிப்பட்ட விஷயங்களுக்குள் மூக்கை நுழைப்பது அநாகரிகம். மேலும், சமூகத்தால் ஒதுக்கப்படும் எல்ஜிபிடிக்யூ வட்டத்திலிருந்து ஒருவரை வேட்பாளராக நிறுத்துவது அரசியலில் முக்கியம்” என்கிறது.
மேத்யூ ஊர்வாசிகள் இந்த சமூகம் எப்போதும் இரு துருவங்களாக பிரிந்து கிடப்பது போலவே இரண்டு வித அணுகுமுறையைக் காட்டுகின்றனர். மேத்யூ - தங்கம் உறவை சொல்லி அவருக்கு ஓட்டுபோட வேண்டாம் என்ற எதிர்க்கட்சியை ஊர்க்காரர் கேட்கும் கேள்வியும், தங்கம் தன் மருமகனை வண்டியில் ஏற்றும்போது வன்மத்தை கக்கும் டீக்கடை வெத்து வேட்டுகளும் அந்த இரு துருவ சமூகத்தின் பிரதிபலிப்புகள்.
வெளிநாட்டிலிருந்து விவாகரத்து விஷயத்தைப் பற்றி ஆவேசமாகப் பேசும் மேத்யூவின் சகோதரி, “அண்ணியை மனநல மருத்துவரை பார்க்கச் சொல்லுங்கள்,” என்கிறார்.
மேத்யூவால், ஓமனாவின் சகோதரரால் அவளை சமாதானப்படுத்த முடியாதபோது மதகுரு வரவழைக்கப்படுகிறார்.
அவர்களிடம் “உங்களின் அன்புக்கும், அக்கறைக்கும் நன்றி. ஆனால் இப்போது கூட நான் எனக்காக நிற்காவிட்டால் நான் வாழ்நாள் முழுவதும் துன்பப்படுவேன்” என்று தீர்க்கம் காட்டி அனுப்பிவைக்கிறாள் ஓமனா.
இவ்வாறாக தனது விடுதலைக்காக எல்லோரையும் சரி கட்டுகிறாள் ஓமனா. நீதிமன்றத்தில் அவளிடம் ‘உங்கள் கணவர் ‘கே’ (Gay) என்றால் குழந்தை எப்படி பிறந்தது? உங்களுக்குள் எத்தனை முறை தாம்பத்தியம் நிகழ்கிறது?’ என்ற கேள்விகளுக்கு, ஓமனா சொல்லும் பதில்கள் அனைத்தும் நீதிபதி, வாதி, பிரதிவாதி வக்கீல்களை அதிர வைக்கும். அந்த பதில்களை இங்கே போட்டுடைப்பதைவிட வாசகர்கள் திரையில் கண்டால்தான் உணர்வுபூர்வமாக இருக்கும்.
ஆனால், நீதிமன்றத்துக்கு இந்த உணர்வுபூர்வ விவரிப்புகள் போதாது அல்லவா? சாட்சியம் கோரும். சாட்சியம் கிடைக்காவிட்டால் ஓமனாவின் வழக்கும் நிற்காது. அந்த வேளையில்தான் ஓர் அற்புதம் நிகழ்கிறது.
அப்படித்தான் இந்த விவாகரத்து தனக்கு ஏன் அவ்வளவு முக்கியம் என்று மேத்யூவின் தந்தையிடம் அவள் விளக்குவது, அவரை மகனுக்கு எதிராக நீதிமன்றத்துக்கு வந்து சாட்சி சொல்ல வைக்கிறது.
ஒரு பெண் தனக்காக நிற்க முடிவு செய்துவிட்டால் கோணலான அத்தனையையும் நேராக்குவாள்.
படத்தில் கனமான காட்சியொன்றும் உண்டு. அதுதான் மேத்யூ தேவஸியை ஓமனா ரட்சிக்கும் காட்சி.
“நான் இதையெல்லாம் எனக்காக மட்டுமே செய்தேன் என நினைக்கிறாயா மேத்யூ. நீ வாழ விரும்பும் வாழ்க்கை உனக்கும் வேண்டாமா?” என ஓமனா கேட்பதுதான் காதலின் ஆழம். அந்தக் காட்சியில் படத்தின் பெயர் நமக்கு விளங்கும்.
அதுமட்டுமல்லாது, சுதந்திரம் எனக்கு மட்டும் போதாது. அது உனக்கும் கிடைக்க வேண்டும் என்ற ரட்சிப்பை விடுதலை பெற்ற ஓமனா வழங்கும்போது, பெண் இயல்பிலேயே எத்தனை வலிமையானவள் என்பது நிரூபணமானதாகவும் நான் உணர்ந்தேன்.
மேத்யூவின் தந்தை, மருமகளைப் புரிந்துகொண்டது போலவே, மகனையும் புரிந்துகொள்வார். படம் நெடுகிலும் தொங்கிய தலையுடன் இருக்கும் அவர், மருமகளின் பிரசங்கத்தில் மனம் தெளிந்து தன் தவறை உணர்வார்.
“நீங்கள் சொன்ன சாட்சியால், எல்லாம் எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. ஒரே நல்ல விஷயம் இனி நான் நடிக்க வேண்டாம். எனது விருப்பம் தெரிந்தும், மருத்துவர் சொல்லியும் திருமணம் செய்தால் சரியாகும் என்றீர்கள். 20 வருடங்களுக்குப் பின் என்ன நடந்திருக்கிறது? நான் என்ன தவறு செய்தேன்?” என்று கண்ணீர் சிந்தும் மகனிடம். “எல்லா தவறும் நான்தான் செய்தேன்” என்று மகனை வாரித் தழுவிக் கொள்வார்.
எல்ஜிபிடிக்யூ சமூகத்தினரிடம் இந்த ஒப்புதல் வாக்குமூலத்தை தான் சமூகம் சொல்ல வேண்டும். ஒருவரின் பாலியல் தேர்வு எப்படி அவரின் மதிப்பை, மரியாதையை தீர்மானிக்கும். அவர்களை ‘ச்சீ’ என்றும், ‘த்தூ’ என்றும் சொல்வோர்தான் எல்லா தவறையும் செய்பவர்கள்.
ஓமனா - தேவஸி விவாகரத்து வழக்கின்போது ஓமனாவின் வக்கீல், “தன்பாலின உறவை கிரிமினல் குற்றமல்ல என்று தீர்ப்பளித்த நீதிமன்றம் இத்தனை கால தவறுக்காக வருந்துவதாகக் கூறியது” என்று மேற்கோள் காட்டுவார். சட்டம் 2018 வரை தன்பாலின உறவை கிரிமினல் குற்றமாக வைத்திருந்தபோது ஓமனா எப்படி அதற்கு முன்னால் வழக்கு தொடர்ந்திருக்க முடியும் என்ற வாதத்தையும் முன்வைப்பார்.
சட்டபூர்வமாக கணவனை கிரிமினல் ஆக்கிவிடாமல், அதேவேளையில் தன்னுடைய சுதந்திரத்தை உறுதி செய்வதில் ஓமனா கடைப்பிடித்த பொறுமை, அறிவுக்கூர்மை, தின்மம் அவளைப் போன்று தவிப்போருக்கு நம்பிக்கை ஊற்று!
படத்தின் மிக முக்கிய கதாபாத்திரம் மம்மூட்டியின் ‘மேட்’ தங்கம். ஆனால், தங்கம் - மம்மூட்டி இணைந்த ஃப்ரேம் அதிகம் இருக்காது. அவர்கள் இருவரும் இருக்கும் காட்சிகளும் தூரத்தில் கண்களால் பேசிக் கொள்ளும் காட்சியாகவே இருக்கும்.
இந்தச் சமூகத்தின் விமர்சனப் பார்வைகளால் ஒளிந்திருக்க வேண்டிய உறவாளர்களின் வேதனையை அந்தக் காட்சிகள் நேர்த்தியாக வெளிப்படுத்தும்.
தங்கம் - மேத்யூ படத்தின் கடைசிக் காட்சியில் ஒரே காரில் செல்வார்கள். அதுதான் படத்தின் ப்ரைட் பரேட். கார் செல்லச் செல்ல ஃப்ரேமில் மம்மூட்டி படமுள்ள பேனரில் ‘மேத்யூ தேவஸி அமோக வெற்றி’ என்ற வாசகம் தெரியும்.
இவ்விடத்தில் சமூக வலைதளங்களில் வைரலான ஒரு சமீபத்திய போஸ்ட், அதன் பின்னூட்டங்கள் பற்றிச் சொல்வது அவசியமாகிறது.
அந்த வைரல் போஸ்டில், ஒரு பெண் “எனது கணவர் தன்பாலின ஈர்ப்பாளர் என்பது எங்களுக்கு ஒரு மகன் பிறந்த பின்னரே எனக்குத் தெரியும். இப்போது நான், எனது கணவர், அவரது ‘கே மேட்’ மற்றும் எங்களது குழந்தை ஒரே வீட்டில்தான் வசிக்கிறோம். நாங்கள் கணவன் - மனைவியாக வாழவில்லை. ஆனால், நாங்கள் எல்லோரும் குடும்பமாகத் தான் இருக்கிறோம்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
அதன் பின்னூட்டங்களில் ‘அந்தப் பெண் துணிச்சலானவர்’, ‘அந்த ஆண் ஏமாற்றுக்காரர்’, ‘அவர்கள் இருவரும் குழந்தை பெற்றிருக்கக் கூடாது’, ‘இத்தனைக்குப் பின்னரும் அந்த ஆணுடன் இருப்பது அடிமைத் தனத்தை விரும்பி ஏற்பது’, ‘குழந்தைக்கு ஒரு நிலையான குடும்ப சூழலை கொடுக்க வேற்றுமைகளை மறந்து இருவரும் ஒன்றாக இருப்பது சரியே’, ‘போஸ்ட்டில் குழந்தையின் முகத்தை மறைத்துப் பகிருங்கள்’ என்று விதவிதமான கருத்துகள் இடம்பெற்றுள்ளன.
மனித உறவுகள் எத்தகைய தன்மையில் இருந்தாலும் விமர்சிக்கப்படும். ஓமனாவை போல் எது தேவை, எது நியாயம் என்று முடிவெடுத்து முன்னேறுவது உறவுச் சிக்கல்களை அணுகுவதில் சிறந்த நடவடிக்கை.
அதுவும் விவாகரத்து ஆகும்போது குழந்தை இலவச இணைப்பு என்பதுபோல், குழந்தை வளர்ப்பில் ஒட்டுமொத்த பொறுப்பையும் பெண்ணிடமே நகர்த்துவது, குழந்தையை ஏற்காவிட்டால் அவளை குற்றவாளியாக்கும் சூழலில் தன் தாய் வீட்டிலிருந்து எப்படி தனியாக வந்தாலோ அப்படியே ஓமனா தனியாகச் செல்வதும் படத்தின் முக்கிய மெசேஜ்!
ஒரே கதையில் பெண் விடுதலையையும், எல்ஜிபிடிக்யூ சமூகத்தின் உரிமையையும் பேசிய இந்தப் படத்தை நிச்சயம் உங்கள் வாட்ச் லிஸ்டில் போட்டுவைத்துக் கொள்ளுங்கள். அவ்வப்போது புதியவர்களுக்கு பரிந்துரையுங்கள். தெளிவு தொடரட்டும்.
| தேவதைகள் தொடர்ந்து வலம் வருவர் |
தொடர்புக்கு: bharathi.p@hindutamil.co.in