Ammu: காயங்களை கூர்தீட்டி ஆயுதம் செய்த அம்மு | திரை தேவதைகள் 16

Ammu: காயங்களை கூர்தீட்டி ஆயுதம் செய்த அம்மு | திரை தேவதைகள் 16
Updated on
5 min read

"The rage of the oppressed is never the same as the rage of the privileged." - bell hooks

ஆப்பிரிக்க - அமெரிக்க பெண்ணிய எழுத்தாளர் பெல் ஹுக்ஸின் இந்த மேற்கோள், “ஒடுக்கப்பட்டோரின் சீற்றம், சமூகத்தில் தனிச் சலுகைகள் பெற்றவர்களுடையது போன்றது அல்ல” என்ற பொருளை தாங்கி நிற்கிறது.

ஆம், அந்தச் சீற்றம் அனலாகத் தகிக்கும். எதிரியை சுட்டெரிக்கும். தடைகளைத் தகர்த்தெறியும். அந்தச் சீற்றம் தரும் துணிச்சல் அடைமொழிகளுக்கு அப்பாற்பட்டது.

முதலில், யார் இங்கே ஒடுக்கப்படுகிறார்கள் என்று ஒரு பட்டியல் தயாரித்தால் அதில் சாதி, மதம், இனம் தொடர்ந்து பாலினம் சார்ந்த ஒடுக்குமுறையை குறிப்பிடாமல் செல்ல முடியாது.

குறிப்பாக, பெண் என்ற பாலினம் சந்திக்கும் அடக்குமுறைகள் சாதி, மதம், இனம் மூலமும் குடும்பம், திருமணம் என்ற கட்டமைப்புகள் மூலமும் நிகழ்த்தப்படுகிறது. அந்த வகையில் பெண்ணினம் எப்போதுமே இருமடங்கு ஒடுக்கப்பட்ட நிலையில்தான் (Double Oppressed) இருக்கிறது.

அப்படியாக, பெண் என்பதால் சிறுவயதில் மிளிர்ந்த வீரம் மழுங்கடிக்கப்பட்டு, திருமணச் சந்தைக்காக தயார் செய்யப்பட்டு, பக்கத்து வீட்டுக்காரனாக இருந்தாலும் கூட காதல் வயப்பட்டுவிடாமல் பெரியோரால் நிச்சயக்கப்பட்டு திருமணம் எனும் அமைப்புக்குள் நுழைக்கப்படும் அம்மு என்ற 25 வயது பெண் சந்திக்கும் அவலங்களும், அதிலிருந்து அவள் மீண்டெழுவதும், பட்டக் காயங்களை கூர்தீட்டி ஆயுதமாக்கி, மதி நுட்பத்தால் மெருகேற்றி நிகழ்த்தும் சம்பவங்கள்தான் 2002-ல் வெளியான த்ரில்லர் - டிராமாவான ‘அம்மு’ (Ammu) தெலுங்கு படத்தின் கதைக்களம்.

ஜஸ்வர்யா லக்‌ஷ்மி, நவீன் சந்திரா, பாபி சிம்ஹா முதலானோர் நடித்துள்ள இந்தத் திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

அம்முவை நாம் அவள் பெண் பார்க்கும் படலத்திலிருந்தே காண ஆரம்பிப்போம். சீவி, சிங்காரிக்கப்பட்டு இருக்கும் அம்முவுக்கு ரவி ஒன்றும் முன்பின் தெரியாதவன் அல்ல. பக்கத்துக்கு வீட்டுக்காரன் என்றாலும் பழக்கம் ஏற்படாமல் வளர்க்கப்பட்டிருப்பதால் அரேஞ்சுடு மேரேஜுகளில் தொற்றிக் கொள்ளும் வெட்கம், தயக்கம் என்று நிற்கிறாள். அவளது சிறுவயது வீரத்தைப் பற்றிக் கேட்கும் மாமனாரிடம், “அவள் உங்கள் வீட்டு மருமகளாகப் போகிறாள். அதற்கேற்ற கீழ்ப்படிதலோடு அவளை வளர்த்திருக்கிறோம்” என்பார்.

பெண்ணின் மீதான அடக்குமுறைகளுக்கு இந்தச் சமூகம் பல பெயர்கள் வைத்திருக்கிறது. அச்சம், மடம், நானம், பயிர்ப்பு எல்லாம் அந்த வகையறாக்கள் தான்.

உணவுப் பதார்த்த லேபிளில் நியூட்ரிஷன் வேல்யூ போல்தான் கல்யாணச் சந்தையில் வியாபாரத்துக்கு கடைவிரிக்கப்படும் பெண்ணுக்கு கீழ்ப்படிதல் மிக முக்கியமான லேபிளிங்காக இருக்கிறது.

அம்மு போன்ற துறுதுறுப்பான, துடிப்பான, துணிச்சலான பெண் குழந்தைகளை கீழ்ப்படியும் பெண்ணாக மாற்றும் கோமாளித்தனத்தை குடும்பப் பாரம்பரியம் என்ற போர்வையில் இந்தியக் குடும்பங்கள் காலங்காலமாக செய்து வருகின்றன. அதேவேளையில், மாறிவரும் காலச் சூழலில் இத்தகைய கேலிக்கூத்துகள் சற்று குறைந்து வருவது நம்பிக்கைக் கீற்று என்பது குறிப்பிடத்தக்கது.

திருமண பந்தத்துக்குள் வரும் அம்மு காதலிலும், காமத்திலும் திளைக்கிறாள். கணவன் - மனைவி அன்பு என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் க்ளீஷே சினிமாட்டிக் ரொமான்ஸ்கள் அத்தனையையும் அம்மு - ரவி டூயட்டில் நாம் கண்டுகொள்ளலாம்.

காதலில் கசிந்துருகும் காட்சிகளில் அம்மு, கணவனிடம் முதல் பரிசு கேட்க, அதற்கான காரணத்தை கேட்பான் ரவி. அப்போது அம்மு, ”என்கிட்ட ஒரு தையல் இயந்திரம் இருந்தது. அதை என் அம்மா வாங்கிக் கொண்டார். எனக்கென்று ஒன்று இருந்தால் நான் கொஞ்சம் சம்பாதிப்பேன்” என்பாள்.

ரவி சர்க்கரை வார்த்தைகளோடு குறுக்கிடுவான். “மனைவி சம்பாத்தியத்தில் வாழ்பவன் ஆண் அல்ல. உன் பெற்றோரிடம் உன்னை நன்றாகப் பார்த்துக் கொள்வேன் என்று சொல்லியிருக்கிறேன்” என்பான். அதிருப்தியாக இருந்தாலும் காதல் மயக்கத்தில் கரைந்துபோவாள் அம்மு.

பெண்ணை முடக்க நினைக்கும் ஆண் முதலில் செய்வது அவள் வேலைக்குச் செல்ல அனுமதி மறுப்பது. மனைவி முதல் குழந்தையை உடனே பெற்றுக்கொள்ள சில ஆண்கள் அவசரமும், ஆர்வமும் காட்டுவதும் வேலைக்குச் செல்வதைத் தடுப்பதற்காகவே.

அவர்களில் சிலர் அம்மு கணவன் ரவி போல் குரூரமாக பொருளாதார சுதந்திரமே இருக்கக் கூடாது என நினைத்து அதைச் செய்வார்கள். சிலர் கோபி - சுதாகர் காமெடியில் வருவதுபோல் மனைவி குடும்பத்தைக் கவனிக்கட்டும் என நினைத்துச் செய்வார்கள். ஆனால், விஷத்தில் இனிப்பு தடவிக் கொடுத்தாலும் அது விஷம்தான்.

ஒரு பெண் பொருளாதார சுதந்திரத்தை எந்தச் சூழ்நிலையிலும் சமரசம் செய்து கொள்ளக் கூடாது. நவீன காலத்தில் ஹைப்ரிட் டைப் ஒர்கிங் கலாச்சாரம் வந்துவிட்ட சூழலில் குழந்தைக்காக தற்காலிகமாக தள்ளிப்போடுவதே சரியானதாக இருக்கும். கூடவே, கணவனையும் குழந்தை வளர்ப்பில் ஈடுபடுத்த பெண்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

BOO

முதன்முதலில் ஆசையாக கணவனுக்கு உணவு சமைத்து எடுத்துச் செல்வாள் அம்மு. காவல் நிலையமே அவளைக் கொண்டாட, மாலை வரும்போது அவளுக்கு அவள் கேட்ட தையல் மெஷினுடன் வருவான் ரவி. அன்றுதான் முதன்முறை அவனிடம் ‘ஐ லவ் யூ’ சொல்வாள் அம்மு.

உள்ளமும் உடலும் இணைவதுதான் காதலால் அரங்கேறும் காமம்; மற்றவை எல்லாம் கூடுகைகளே. ஆனால், நிஜ வாழ்க்கையில் நிகழ்வதே வேறு.

முதலிரவு கலாச்சாரம் ஊறிப்போன இந்தியச் சமூகத்தில் காமம் என்பது தண்டவாளத்தில் போகும் ரயில் போல் கடகடவென கடந்த பின்னர்தான் காதலுக்கான கிரீன் சிக்னலே விழுகிறது.

அம்மு விஷயத்தில் அந்தப் பச்சைக் கொடி சந்தோஷம் நீண்டதாக இருக்கவில்லை. விரும்பிய தையல் மெஷின் கிடைத்ததால் அதில் மூழ்கும் அவள் சமைக்க மறந்துவிடுகிறாள். உணவு வேளையில் அம்முவுக்கு கால் செய்யும் ரவி, “எங்கே சுற்றிக் கொண்டிருக்கிறாய்?” என்று கேட்பான். அதுவே அவளுக்கு முதல் ஷாக். அரக்கப் பறக்க சமைத்துச் செல்லும் அவளது உணவைப் புறக்கணிப்பான். அந்தக் கடுமை அவளை கிலியில் தள்ளும். செய்வதறியாது தவிப்பாள்.

ஒரு டாக்ஸிக் மேல் தன் டாக்சிஸிட்டியை எப்படியெல்லாம் கடத்துவான் என்று பல்வேறு படிநிலைகளில் தத்ரூபமாக ‘அம்மு’ காட்டியிருக்கும். படத்தைப் பார்க்கும்போது நம்மை பீதியிலும், படபடப்பிலும் ஆழ்ந்து போவோம்.

மனைவியை மற்றவர்கள் முன்னால் மட்டம் தட்டுவது. எதிர்த்துப் பேசினால் அவளை தண்டிப்பது (நடுவழியில் இறக்கிவிட்டு வருவான்), காதலுடன் வருடினால் அதை உடல் தேவை என்று மலினமாகப் பேசிப் புண்படுத்துவது, கண்டித்து ‘உன்னை விட்டுக் கிளம்பிவிடுவேன்’ என்றால் தட்டை வீசி எறிந்து அச்சுறுத்துவது, அம்மு அஞ்சி உறைந்தால் சாரி சொல்வது, சால்ஜாப்புகள் செய்வது, பொசசிவ் என்று பூசி மெழுகுவதுமாக ரவியின் டாக்சிஸிட்டி சீன் பை சீன் நடுங்க வைக்கும்.

உண்மையில் ரவி டாக்ஸிக் ஆண்களின் சிம்பாலிஸம். நீங்கள் ஓர் உறவில் இருந்து அந்த ஆணிடம் இந்த பிஹேவியர் இருந்தால் உங்கள் உறவை பரிசோதனைக்கு உட்படுத்தி தப்பித்துக் கொள்ளுங்கள்.

விஜய் சேதுபதி - ரம்யா நம்பீசன் நடித்த ‘சேதுபதி’ படத்தில் வேலையிழந்த நெருக்கடியில் ரம்யாவை கண்ணத்தில் அறைவான் சேதுபதி. அவள் அம்மா கேட்கையில், “இப்ப அடிப்பாரு, அப்புறம் வந்து கொஞ்சுவாரு” என்பாள் ரம்யா. வன்முறைகளை இயல்பெனக் கருதும் பெண்கள் சேதுபதிகளை ஊக்குவிக்கிறார்கள். அம்மா மவுனியாகிவிடுவாள்.

ஆனால் அம்முவின் அம்மா மாறுபட்டவள். தன்னை கணவன் அடித்தான் என அம்மு சொல்லும்போது, “உன் அப்பா என்னை ஒரே ஒரு முறை அடித்தார். நான் என் அம்மாவிடம் சொன்னேன். ஆண்கள் வெளியில் சம்பாதிக்கச் செல்கிறார்கள். அங்கே ஏற்படும் அழுத்தத்தை நம்மிடம் தான் காட்டுவார்கள். அவன் அன்பைப் பெறும்போது அவன் அடியையும் பெறத் தயாராக இருக்க வேண்டும் என்று என்னிடம் சொன்னாள். ஆனால், நீ அப்படியிருக்க வேண்டாம். உன் முதல் அடியை வாங்கியபோதே நீ என்ன செய்ய வேண்டும் என்று நீயே முடிவு செய்து கொள்ளலாம்” என்பாள்.

முதல் அறை அது எந்தச் சூழலிலும் நடந்திருந்தாலும், அது எந்த நியாயத்துக்காக நடந்திருந்தாலும், அதைச் செய்தவன் வருந்திக் கெஞ்சினாலும் கூட அவனுடன் வாழ மறுப்பாள் ‘Thappad’ அம்ரிதா. அவளுக்கு அவளது அம்மா புத்திமதி என்ற பெயரில் பழமைவாதங்களைத் திணிக்கும்போது, அவளது தந்தை அவள் விரும்பும் விஸ்தாரமான வானத்தை மதித்து ஊக்குவிப்பார். ‘தப்பட்’ பெண்ணியம் பேசும் படங்களில் மிக முக்கியமானது என்று பேட்ஜ் கொடுக்கலாம்.

விடுதலை என்பது ஒருவருக்கு யாரும் தரும் யாசகம் அல்ல. அவரே சுதந்திரமாக இயங்கும்போது அவரது சுதந்திரப் பார்வையை, அவரின் தனித்த முடிவை ஏற்றுக் கொள்வதே விடுதலை.

‘தப்பட்’ அதை மிகவும் நேர்த்தியாக நிறுவியிருக்கும்.

அம்முவும் விடுதலை பெற முயற்சிக்கிறாள். அவளது முதல் முயற்சி தெளிவின்மையால் தோற்றுவிடுகிறது. காயங்களுடன் ரயில் நிலையத்துக்கு வரும் அவளிடம் அங்கே யாசகராக இருக்கும் நபர் பேசும் காட்சி மிகவும் முக்கியமானது.

முடிவெடுக்க முடியாமல் வீடு திரும்பும் அம்மு, அன்பால் அரவணைப்பால் ரவியை திருத்தலாம் என நினைக்கிறாள். ஆனால், அது முட்டாள்தனம் என உணர்வதற்குள் மீண்டும் பலமுறை ரணமாக்கப் படுகிறாள். அந்த ரணம் அவள் மீது அவளுக்கே அவநம்பிக்கையை தருகிறது. ரவியின் இறுக்கமான பிடியில் இருந்து இருந்து அவனது டூவீலர் கூட அவளை அச்சுறுத்தும் வலிமை கொண்டுவிடுகிறது.

குடும்ப வன்முறை ஒரு பெண் மனதை எத்தனை ஆழமாகக் காயப்படுத்தும் என்பதை அழுத்தமாக அம்மு வெளிப்படுத்துவாள்.

குடும்ப வன்முறைக்குள் ஒரு பேட்டர்ன் இருக்கும். உடலளவில், மனதளவில் நொறுங்கும் வன்முறையை நிகழ்த்துவது, மன்னிப்பு கோரி சமாதானம் செய்ய முயற்சிப்பது, பாதிக்கப்பட்டவர் தன்னைவிட்டு விலகிச் சென்றுவிடாமல் உறுதி செய்வதற்காக சிறு சிறு நம்பிக்கைகளை கொடுத்து பின்னர் மீண்டும் பெண்ணை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வது, அதற்காக இமோஷனல் ஆயுதங்களை கையில் எடுப்பது.

அம்முவுக்கு ரவி நிகழ்த்தும் வன்கொடுமைகள் திகில் அனுபவத்தை எனக்குக் கடத்தின. என் முதுகெலும்பு சில்லிட்டது. எனக்குத் தெரிந்த ஒரு பெண் வெளிநாட்டில் கணவனால் வன்கொடுமைக்கு உள்ளாகி மீட்கப்பட்டார். விவாகரத்து பெற்ற பின்னரும்கூட அந்தப் பெண்ணுக்கு அந்தக் காயம் மனதிலிருந்து நீங்கவில்லை. கணவர் வேலை விட்டு வீடு வரும் 7 மணி அவருக்கு உடலில் நடுக்கங்கள் ஏற்படும். வியர்த்துக் கொட்டும். ஓடோடி கட்டிலுக்குக் கீழ் ஒளிந்து கொள்வார். இத்தனைக்கு அவளுடன் அவள் அம்மா, அப்பா, உடன் பிறந்தவர்கள் இருப்பார்கள். நானே அதைப் பார்த்திருக்கிறேன். பின்னர் மனநல மருத்துவ சிகிச்சை உதவியுடன் அவர் மீண்டார்.

புருஷன் அடிக்கிறான். பெண்டாட்டி மன உளைச்சலைத் தருகிறாள். கணவன் - மனைவி பிரச்சினை அவர்களுக்குள்ளேயே தீர்ந்துவிடும் என்று பொதுமைப் படுத்துவது முட்டாள்தனம்.

உறவுச் சிக்கல்களுக்கு சிகிச்சை தேவை. அது சார்ந்தோர் இருவர் பேசி, பரஸ்பரம் புரிந்து, சரி செய்யக் கூடியதாக, மன்னிப்பும் சமரசமும் அங்கு ஏற்புடையதுதாக இருந்தால் அதை பகுப்பாய்வு செய்யலாம். முன்னேறலாம். இல்லையெனில் சட்ட உதவிகள் மூலம் தீர்வு எட்டப்படலாம்.

கண்ணீர் எதற்கும் தீர்வாகாது. ஒன்று துணிந்து நின்று பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் துன்பத்திலேயே உழன்று கிடக்க வேண்டும்.

அம்முவுக்கு ரயில் நிலையத்தில் இவ்வாறு யாசகர் ஒருவர் சொல்லும் அறிவுரை அவள் வாழ்வை திருப்பிப் போடும். அதன்பின்னர் தான் அவள், ரவிக்கு எதிரான ஆட்டத்தைத் தொடங்குவாள். போலீஸ் வாலன்டீர்களிடம் தன் நிலைமையைச் சொல்வாள். அவளைத் தடுத்த அதே ரணம் தந்த பயமே அவளுக்கு துணிவையும் தரும். என்னைக் காப்பாற்ற வெளியில் இருந்து யாரும் வருவார்கள் என்று காத்திருக்காமல், என்னை நான் தான் காப்பாற்ற வேண்டும் என்று துணிவால்.

ஆம், நமக்கு நம்மைவிட சிறந்த ரட்சகர் இருக்க இயலாது. துயரங்கள் எதுவாயினும், சவால்களின் எந்தத் தன்மையானதாயினும் அது நம்மை ஆட்கொள்ள அனுமதிக்காமல், மவுனித்து இருக்காமல், வெடித்துப் புறப்பட வேண்டும். சரியோ, தவறோ முடிவு உங்களுடையதாக இருக்க வேண்டும். துணிவே துணை.

ஒவ்வொரு நெருக்கடியின் ஆழத்திலும் அழகான ஒன்றுக்கான வாய்ப்புள்ளது.

துணிந்த அம்மு நிகழ்த்தும் சம்பவங்கள் ரவியின் அத்தனை நரித்தனங்களையும் தவிடுபொடியாக்கும். அவனை அம்மு வெற்றி கொள்ளும் மீதிக் கதை சுவாரஸ்யங்களுக்கு குறைவில்லாமல் நகரும். குறிப்பாக பாபி சிம்ஹாவின் வருகை படத்துக்கு திருப்புமுனை.

‘அம்மு’ திரைப்படம் நிச்சயம் பெண்களுக்கு நல்ல பாடம். திரை தேவதைகள் வாசகர்கள் ‘அம்மு’ உடன் 'Thappad'(2020), ‘jaya jaya jaya jaya hey' (2022), 'Darlings' (2022) போன்ற படங்களையும் பார்க்க பரிந்துரைக்கிறேன்.

குடும்ப வன்முறைகள் தொடர்பாக காமடி த்ரில்லர் தொடங்கி சீரியஸ் கதைக்களம் வரை படங்கள் வெளியாகிக் கொண்டே இருப்பதே அது நம் சமூகத்தில் எத்தனை ஆழமாகப் புரையோடிப் போயிருக்கிறது என்பதற்கு ஒரு சாட்சி.

குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டிருந்தால் 1800 102 7282 ஹெல்ப்லைன் எண்ணில் ஆலோசனைகள் பெறலாம்.

| தேவதைகள் இன்னும் வலம் வருவர் |

தொடர்புக்கு: bharathi.p@hindutamil.co.in

Ammu: காயங்களை கூர்தீட்டி ஆயுதம் செய்த அம்மு | திரை தேவதைகள் 16
Lubber Pandhu: யசோதா, துர்கா காட்டும் ‘கெத்து’ம் அன்பும் | திரை தேவதைகள் 16

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in