Published : 04 May 2023 05:04 PM
Last Updated : 04 May 2023 05:04 PM

ஓடிடி திரை அலசல் | துறைமுகம் - வாழ்வியல் போராட்டத்துக்கான ரணங்களின் அனுபவம்!

கேரள மாநிலத்தின் கொச்சின் துறைமுகத்தில் சுமைதூக்கும் தொழிலாளர்ளுக்கு அன்றாட வேலை கொடுக்க 'சாப்பா' என்றழைக்கப்படும் டோக்கன் வழங்கும் முறையை எதிர்த்து தொழிற்சங்கம் அமைத்து அத்தொழிலாளர்கள் நடத்திய போராட்டங்களும், அதனால் ஏற்படும் பாதிப்புகளும்தான் இத்திரைப்படத்தின் ஒன்லைன்.

கே.எம்.சிதம்பரம் எழுதிய 'துறமுகம்' எனும் நாடகத்தைத் தழுவி, அவரது மகன் கோபன் சிதம்பரம் எழுதி, இயக்குநகர் ராஜீவ் ரவி அதே பெயரில் இயக்கியிருக்கும் திரைப்படம் 'துறமுகம்'. 1940-களிலும் 1950-களிலும் துறைமுகத் தொழிலாளர்களுக்கு தினசரி பணி வழங்க பின்பற்றப்பட்டு வந்த 'சாப்பா' எனும் டோக்கன் வழங்கும் முறையையும், அதனை எதிர்த்து தொழிற்சங்கங்கள் நடத்திய போராட்டங்களையும் இத்திரைப்படம் மூலம் பேசியிருக்கிறார் இயக்குநர். குறிப்பாக 1953-ல் மட்டஞ்சேரியில் துறைமுகத் தொழிலாளர்கள் நடத்திய போராட்டங்களையும், அப்போது காவல் துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 தொழிலாளர் பலியான உண்மைச் சம்பவத்தையும் இத்திரைப்படம் விரிவாக பேசுகிறது.

துறைமுகத்துக்கு வரும் கப்பல்களில் இருந்து சரக்குகளை ஏற்றி இறக்க தொழிலாளர்கள் தேவை. இந்த வேலைக்காக வரும் தொழிலாளர்களுக்கு மனிதாபிமானமே இல்லாமல் வேலை வழங்க பயன்படுத்தப்பட்ட நடைமுறைதான் 'சாப்பா'. அதாவது வேலைக்காக வரும் தொழிலாளர்கள் கூட்டத்தை நோக்கி, உலோகத்தால் ஆன டோக்கன்கள் தூக்கி வீசப்படும். கூட்டத்தில் அடி உதை மிதிப்பட்டு யார் டோக்கனை எடுக்கிறார்களோ அவர்களுக்கு வேலை கொடுக்கப்படும். டோக்கன் எடுக்க முடியாதவர்களுக்கு வேலை கிடையாது.

வீட்டில் பசி பட்டினியுடன் கிடக்கும் தங்களது குடும்பத்துக்காக, எப்படியாவது டோக்கனை எடுக்க வேண்டும் என முண்டியடித்துக் கொள்ளும் தொழிலாளர்கள் ஒருவருக்கொருவர் ரத்தம் சொட்ட சண்டையிட்டுக் கொள்கின்றனர். இதுதவிர டோக்கன் விநியோகிக்கும் முதலாளி கும்பலின் அடியாட்களும் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பெயரில் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். இந்த வதைகளை எல்லாம் தாண்டி டோக்கனை எடுத்தவர்களுக்கு வேலை கொடுக்கப்படும். டோக்கன் கிடைக்காதவர்களுக்கு வேலை கொடுக்கப்படாது. இதான் 'சாப்பா' எனும் முறை.

இத்தனை கொடுமைகளையும் மீறி டோக்கனை எடுத்து வேலை செய்து திரும்பும் தொழிலாளர்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படாது. யாராவது தட்டிக்கேட்டால் அடி உதைதான். இரக்கமற்ற இந்த நடைமுறைக்கு எதிராக தொழிற்சங்கம் கட்டி தொழிலாளர்களின் வேலை உரிமைக்காக நடந்த உண்மையான போராட்டத்தின் வரலாற்றுச் சுவடுகளைப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் ராஜீவ் ரவி.

'சாப்பா' முறையை பின்பற்றி தொழிலாளர்களை அடக்கி ஒடுக்குகிறது துறைமுக முதலாளி வர்க்கம். இந்த ஒடுக்குமுறைக்கு அதே ஊரைச் சேர்ந்த சில தொழிலாளிகளும், காவல் துறையும் அடியாட்களாக செயல்படுகின்றன. இந்த அடியாள் பட்டாளத்தில் மொய்துவும் (நிவின் பாலி), ஒருவர். முதலாளிக்கு விசுவாசமாக இருப்பதால் கிடைக்கும் பலன்களை அனுபவித்து உல்லாசமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். மொய்துவின் தாய் (பூர்ணிமா இந்திரஜித்), தம்பி ஹம்சா (அசோக் செல்வன்), தங்கை கதீஜா (தர்ஷணா ராஜேந்திரன்), மொய்துவிடம் அடைக்கலம் தேடிவரும் உம்மானி (நிமிஷா சஜயன்).

இவர்கள் அத்தனை பேருமே மொய்துவை ஏதாவது ஒருவகையில் நம்பியிருக்க அவர் தனக்குப் பிடித்த மாதிரி வாழ்க்கையை அனுபவித்து சுற்றித் திரிகிறார். பசி, பஞ்சம், நோய், வறுமை சூழும் அந்த வீட்டின் அனைத்துப் பாரங்களையும் சுமக்கத் தொடங்குகிறார் மொய்துவின் தம்பி ஹம்சா. அதேநேரத்தில் டோக்கன் முறையை எதிர்த்து தொழிலாளர்களின் போராட்டமும் தீவிரமடைகிறது. தொழிலாளர்கள் பக்கம் ஹம்சாவும், முதலாளியின் பக்கம் மொய்துவும் நிற்க வேண்டிய சூழல் உருவாகிறது. இறுதியில் எந்தப் பக்கத்தின் போராட்டம் வெற்றி கண்டது என்பதுதான் துறமுகம் படத்தின் திரைக்கதை. இதுதவிர மொய்துவின் அப்பா மொய்மு (ஜோஜூ ஜார்ஜ்) கால வாழ்க்கை முறை குறித்த பிளாஷ்பேக் காட்சிகளும் படத்தில் இடம்பெற்றுள்ளது.

இது வெவ்வேறு காலக்கட்டங்களில் நடக்கும் ஒரு பீரியட் பொலிடிக்கல் மெலோ டிராமா. படம் மெதுவாகத்தான் நகர்கிறது. உண்மைச் சம்பவங்களைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் நடித்துள்ள அனைவரும் தங்களது பாத்திரத்தின் வலியை உணர்ந்து நடித்துள்ளனர். குறிப்பாக நிவின் பாலியின் தாயாக வரும் பூர்ணிமா இந்திரஜித். மனைவியாக, தாயாக படம் முழுக்க ஸ்கோர் செய்திருக்கிறார். பல காட்சிகளில் தனது பார்வையால் துயரத்தையும், சோகத்தையும், கையறு நிலையையும் பார்வையாளர்களுக்கு கடத்தியிருக்கிறார்.

அதேபோல், நிவின் பாலியின் நடிப்பும் பாராட்டுக்குரியது. நல்லவனாகவும் கெட்டவனாகவும் மாறிமாறி வரும் தனது கதாப்பாத்திரத்துக்கு அவரது நடிப்பு கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறது. ஒவ்வொரு அரை மணி நேரத்துக்கும் ஒரு நிவின் பாலியை பார்க்கும் வண்ணம் படம் முழுக்க அவரது பங்களிப்பு அமைந்திருக்கிறது. அதேபோல் அவரது தம்பியாக வரும் அசோக் செல்வனும், தனக்கான இடத்தில் எல்லாம் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

பீரியட் சினிமாவுக்கான காட்சி அமைப்புகளும், இசையும், ஒளிப்பதிவும் பார்வையாளர்களுக்கான விஷுவல் ட்ரீட்டாக அமைத்திருக்கிறார் இயக்குநர். கருப்பு வெள்ளை காலம் தொடங்கி தொடர்ந்து நீடிக்கும் குடிசை வீடுகளின் ஓட்டைகளின் வழியே நிரம்பிக்கிடக்கும் சோகங்களையும், துறைமுகத் தொழிலாளர்களின் ரத்தம் சேர்ந்து சுமக்கப்படும் பொதிகளின் வலிகளின் சுமையையும், தொழிலாளர் வர்க்க குடும்பங்களின் கண்ணீர் கலந்து கனமாகிக்கிப்போன உப்புக்காற்று வீசும் கடலையும், உழைப்புச் சுரண்டலை மூலதனமாகக் கொண்ட இரக்கமற்ற முதலாளி வர்க்கத்தையும், வெளிநாட்டு கப்பலையும், முதலாளிகளின் விசுவாசிகளையும், உண்மையான பணியாளர்களையும், தொழிற்சங்க வளர்ச்சியையும், அதற்காக பலி கொடுக்கப்பட்ட மூன்று உயிர்களையும் ஆவணப்படுத்துகிறது இந்தப் படம்.

இந்தத் திரைப்படம் கிட்டத்தட்ட 3 மணி நேரம் மெதுவாகவே நகர்கிறது. படத்தின் மையக்கருவான 'சாப்பா' டோக்கன் வழங்கும் முறையை இன்னும் அழுத்தமாக பதிவு செய்திருக்கலாம். அதேபோல் துப்பாக்ச்சூடு சம்பவமும் காத்திரமாக இல்லாதது போல தோன்றுகிறது. படத்தின் நீளும் டியுரேசன், கதாப்பாத்திரங்களின் மீது ஈர்ப்பைக் கொடுக்க தவறியது போல உணரவைக்கிறது. இதையெல்லாம் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், துறமுகம் Port Cochin Labour Union (PCLU) தொழிற்சங்கப் போராட்டத்தின் மிக முக்கியமான ஆவணப்பதிவாக வெளிவந்திருக்கிறது. கடந்த மார்ச் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம் ஏப்ரல் 28ம் தேதி முதல் சோனி லிவ் ஓடிடி தளத்தில் காணக்கிடைக்கிறது. தமிழ் டப்பிங் வெர்ஷனும் இருக்கிறது. டிரைலர் வீடியோ:

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x