Published : 14 Mar 2023 03:56 PM
Last Updated : 14 Mar 2023 03:56 PM

ஓடிடி திரை அலசல் | Rekha - காதல் மொழி, பழிவாங்கல் படலம், சில நெருடல்கள்!

இயக்குநர் ஜித்தின் ஐசக் தாமஸ் எழுதி இயக்கியிருக்கும் மலையாள திரைப்படம் 'ரேகா'. கண்ணை மறைக்கும் காதலால் ஏற்பட்ட வலிகளுக்கு பழி தீர்க்கும் வகையிலான கதையாடலைக் கொண்டுள்ளது இத்திரைப்படம். காதல் சார்ந்த காட்சிகளை இயக்குநர் காட்சிப்படுத்தியிருக்கும் விதம் படம் பார்க்கும் பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்திருக்கிறது. அதுவும் காதல் என்பது செல்போனின் ஓர் அங்கம் என்றாகிவிட்ட நிலையை இப்படத்தில் வரும் காட்சிகள் மிக அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறது.

காதலன் - காதலிக்கு இடையிலான சின்ன ஒரு ஸ்பேஸ் பார் அளவு இடைவெளி இல்லாமல் இணைத்திருப்பது செல்போன்கள்தான். காதலில் மூழ்கியிருக்கும் காதலர்களுக்கு, நாட்கள், கிழமை, மாதம், நேரம், காலம், நிமிடம், நொடியென எல்லாமே மறந்துபோகிறது. அவனுக்கு அவள் பற்றிய நினைவுகளும், அவளுக்கு அவன் பற்றிய நினைவுகளும் போதுமானதாக இருந்துவிடுகிறது.

முற்றுப்புள்ளி வைத்து முடிக்க வேண்டிய உரையாடலை கமா, செமிக்கோலன், அடைப்புக்குறி போட்டு தொடரும் இரவுநேர காதல் பேச்சுக்களும் எதிர்பார்ப்புகளும் அவர்களது கண்களை மறைத்து எந்த எல்லைக்கும் சென்றுவர செய்கிறது. இந்தத் திரைப்படம் காதலர்கள் இடையே பரவலாக காணப்படும் நுட்பமான இந்த விஷயங்களை விரிவாக பேசியிருக்கிறது.

குறிப்பாக, இப்படத்தில் காதல் மொழியை (காதலர்கள் இடையே நடக்கும் உரையாடல்) இயக்குநர் கையாண்டிருக்கும் விதம் ரசிக்கும்படியாக இருக்கிறது. படத்தின் முதல்பாதி காதல், காதல் சார்ந்த காட்சிகளென பயணிக்கிறது. படத்தை வேகமெடுக்க வைக்கும் திருப்புமுனை காட்சிக்குப் பிறகு தொடரும் கதை நம்பும்படியானதாக இல்லை. பழிவாங்கும் படலமாக மாறிவிடும் இரண்டாம் பாதியில் வரும் சாத்தியமற்ற காட்சிகள் நெருடலைத் தருகிறது.

பெற்றோருடன் வசிக்கும் இளம்பெண் ரேகா (வின்சி அலோசியஸ்). டாம்பாய் போல் இருக்கும் ரேகா உயர்கல்வி படிக்க விரும்புகிறார். அவள் திருமண வயதை எட்டிவிட்டதாக அந்த ஊரில் பலரும் பேசுகின்றனர். இந்த நிலையில் ரேகாவுக்கும் அதே ஊரைச் சேர்ந்த அர்ஜுனுக்கும் (உன்னி லாலு) இடையே அபரிமிதமான காதல் இருந்து வருகிறது. இந்த வீடியோ கால் காதல் ஒருநாள் அர்ஜுனையும் ரேகாவையும் இணைசேர வைக்கிறது. இந்த இணைசேரல் ரேகாவின் வீட்டில் நடக்கிறது. அன்றையதினம் வழக்கம்போல் வீட்டு வாசலில் படுத்துறங்கும் தந்தை விடிகாலையில் மர்மமான முறையில் இறந்துபோகிறார். இதன்பிறகு அர்ஜுனின் செல்போன் ஸ்விட்ச் ஆஃப் ஆகிவிடுகிறது.

ரேகாவின் தந்தைக்கு என்ன ஆனது? அது கொலையா? ரேகா - அர்ஜுன் காதல் என்னவானது? அர்ஜுனுக்கும் ரேகாவின் தந்தையின் இந்த மர்ம மரணத்துக்கும் தொடர்பு இருக்கிறதா? இதில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா? அர்ஜுன் எங்கு போனார்? ரேகா என்ன செய்கிறார்? எப்படி துயரத்திலிருந்து மீள்கிறார்? அர்ஜுனுடன் சேர்ந்தாரா? இல்லையா? - இந்தக் கேள்விகளுக்கான பதில்தான் திரைக்கதை.

இப்படத்தின் நாயகி வின்சி அலோசியஸ், ரேகா கதாப்பாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார். வீட்டிற்கு தெரியாமல் காதலுனுடன் தனிமையில் பேசும் காட்சிகள், இரண்டாம் பாதியில் வரும் காட்சிகள், காதல், தவிப்பு, ஏக்கம் என தனது நடிப்பில் பார்வையாளர்களை கவனிக்க வைக்கிறார். அர்ஜுன் பாத்திரத்தில் வரும் உன்னி லால், ரேகாவின் பெற்றோர், அர்ஜுனின் நண்பர்கள் என படத்தில் மிக குறைவான எண்ணிக்கையில் வரும் அனைவரும் தங்களது பணியை சிறப்பாக செய்துள்ளனர்.

இந்தப் படத்தில் வரும் பாடல்கள் ரசிக்கும்படியாக உள்ளது. படத்திற்கு மிலன், நிகில் இசையமைத்துள்ளனர். நம்பகத்தன்மையற்ற இரண்டாம் பாதி கதை நகர்வு பின்னணி இசையை கவனிக்கவிடாமல், மறந்து போகச் செய்துவிடுகிறது. இப்படத்தின் ஒளிப்பதிவாளர் ஆபிரகாம் ஜோசப். காதலர்களின் செல்போன் கதையாடல்களையும், அவர்களது உணர்வுகளின் வெளிப்பாட்டையும் ஒருசேர திரைவழியே கண்முன் கொண்டுவந்திருக்கிறார். படத்தின் திருப்புமுனை காட்சிக்கு முன்னிரவு காட்சிகளை ஆபிரகாம் ஜோசப்பின் கேமரா கவிதையாகப் பதிவு செய்திருக்கிறது.

படம் தொடங்கி வெகுநேரம் பார்வையாளர்களை எங்கேஜிங்காக வைத்திருக்கும் திரைக்கதை ஒருகட்டத்தில் அது பயணிக்கும் திசையில் இருந்து விலகிச் செல்கிறது. இது பார்வையாளர்களுக்கு அயற்சியைத் தருகிறது. பழிவாங்கும் காட்சிகளில் வரும் லாஜிக் மீறல்கள் ஏற்றுக்கொள்ளும்படியாக இருக்கவில்லை. புலனாய்வு கதைகளில் தொடர்ந்து பிரமிக்க வைக்கும் மலையாளத்தில் இருந்து இப்படியான ஒரு திரைப்படம் வருவதை படத்தில் நடிக்கும் போலீஸ் அதிகாரிகளே விரும்பமாட்டார்கள்.

16 வயதுக்கும் மேற்பட்டவர்கள் பார்க்கலாம் என சான்றளிக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தில், காதல் சார்ந்த நெருக்கமான காட்சிகளும், ரத்தம் தெறிக்கும் மிக கொடூரமான வன்முறை காட்சிகளும் உள்ளன. எனவே குழந்தைகளுடன் பார்க்க வேண்டாம். கடந்த பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம், தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x