Published : 18 Mar 2024 02:30 PM
Last Updated : 18 Mar 2024 02:30 PM

Bramayugam: மம்மூட்டி மிரட்டலும், திகில் அனுபவமும் | ஓடிடி விரைவுப் பார்வை

17-ம் நூற்றாண்டில் தெற்கு மலபார் வனப் பகுதிக்குள் வழித்தவறி செல்லும் பாணர் குலத்தைச் சேர்ந்த தேவன் (அர்ஜுன் அசோகன் ). அங்குள்ள சிதிலமடைந்த வீடொன்றில் தஞ்சம் புகுகிறார். அங்கி மணக்கால் கொடுமன் பொட்டி (மம்மூட்டி) என்பவரும் அவரது சமையல்காரரும் (சித்தார்த் பரதன்) வசித்து வருகின்றனர். பாணர் குலத்தைச் சேர்ந்த தேவனின் பாடல் பிடித்துப்போக அந்த வீட்டில் தங்கிக் கொள்ள அனுமதிக்கிறார் கொடுமன் பொட்டி.

வீட்டுக்குள் நுழைந்த நாள் முதலே மர்மங்களை உணரத் தொடங்கும் தேவன், கொடுமன் பொட்டியின் சுயரூபம் அறிந்து அங்கிருந்து வெளியேற முடிவு செய்கிறார். வீட்டைவிட்டு தப்பிச்செல்லும் முயற்சியில் தோல்வி அடையும் தேவன், அந்த வீட்டிலுள்ள மர்மங்களையும் அங்கிருந்து தப்பிச் செல்வதற்கான வழிகளையும் தேடுகிறார். அதன்பின் என்ன நடக்கிறது? வீட்டிலுள்ள மர்மம் என்ன? தேவன் அங்கிருந்து தப்பித்தானா? இல்லையா? என்பதே 'பிரமயுகம்' சொல்லும் கதை.

ரொம்பவே எளிமையான ஒரு கதை. மலையாளம் தெரியாதவர்கள் பார்த்தால்கூட எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் இப்படத்தை இயக்கியிருக்கிறார் ராகுல் சதாசிவன். முழுக்க முழுக்க கருப்பு - வெள்ளையில் படமாக்கப்பட்டுள்ள இப்படம், ஒவ்வொரு காட்சியிலும் மர்மங்கள் நிறைந்த சூழலை உருவாக்கி, பார்வையாளர்களை பதைபதைக்க வைக்கிறது.

கண்ணூர் ஸ்குவாட், காதல் தி கோர், இப்போது 'பிரம்மயுகம்' என மம்மூட்டி தொட்டதெல்லாம் துலங்குகிறது. படத்துக்குப் படம் தன்னை புதுப்பித்துக் கொள்ளும் ஆற்றலைக் கொண்டது அவரது நடிப்பு. மெகா ஸ்டார் அந்தஸ்தை எல்லாம் தூக்கி தூரவைத்து விட்டு கதாப்பாத்திரத்துக்கான அர்ப்பணிப்புடன் கூடிய அவரது நடிப்பாற்றலை எவ்வளவு பாராட்டினாலும் தகும். எதிர்மறை நிழலாடும் கதாப்பாத்திரத்தை சிரமமின்றி வெகு இயல்பாக கையாளும் அவரது நடிப்பு இப்படத்தில் ஆதிக்கம் செய்திருக்கிறது.

பாணனாக வரும் அர்ஜுன் அசோகன் அச்சம், கையறு நிலை என ஒவ்வொரு உணர்வையும் வெளிப்படுத்தும் விதம் ஈர்க்கிறது. படத்தின் ஒளிப்பதிவாளர் ஷென்னத் ஜலாலின் கேமிரா படம் முழுவதும் திகிலின் நிழலாடச் செய்திருக்கிறது. இவரது சிறப்பான லைட்டிங்ஸ் கதாப்பாத்திரங்களின் உணர்வுப்பூர்வமான வெளிப்பாடுகளை துல்லியமாக்கி இருக்கிறது. இசையமைப்பாளர் கிறிஸ்டோ சேவியர் பின்னணி இசையும், காட்சிக்கு காட்சி விறுவிறுப்பைக் கூட்டுகிறது. கலை இயக்குநர் ஜோதீஷ் சங்கரின் பணி வியக்க வைக்கிறது.

திகிலூட்டும், மர்மங்கள் நிறைந்த நாட்டுப்புறக் கதைகளில் ஆர்வம் கொண்டவர்கள் மிஸ் பண்ணாமல் காண வேண்டிய திரைப்படம் இந்த 'பிரமயுகம்'. தற்போது சோனி லிவ் ஓடிடியில் தமிழிலும் காணக் கிடைக்கிறது. | விரிவான அலசல்: பிரமயுகம் | கறுப்பு - வெள்ளை அரசியல் சதுரங்கம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x