Last Updated : 11 Apr, 2023 05:12 PM

 

Published : 11 Apr 2023 05:12 PM
Last Updated : 11 Apr 2023 05:12 PM

ஓடிடி திரை அலசல் | Against the Ice - ‘சர்வைவல்’ த்ரில்லர் ஆக ஒரு மீட்புப் போராட்டம்!

தனது நாட்டுக்காக ஒரு வரலாற்று உண்மையைக் கண்டறிய அல்லது உண்மையை நிலைநாட்ட மேற்கொள்ளும் ஒரு பயணம் பற்றியதுதான் ‘எகெய்ஸ்ட் தி ஐஸ்’ (Against the Ice) திரைப்படம். ஆர்க்ட்டிக் எனும் வடதுருவப் பிரதேசத்தின் பனிபடர்ந்த பீரே ஆற்றுப்படுகை கொண்ட கிரீன்லாந்து அமெரிக்காவுக்கு சொந்தமில்லை என்ற புவியியல் உரிமையை நிலைநாட்ட எஜ்னார் மிக்கெல்சன் மேற்கொண்ட ஆபத்தான பயணத்தைப் பற்றித்தான் இப்படம் பேசுகிறது.

கிடந்து உழலும் மனதிற்கு புத்துணர்ச்சி தருவது பயணங்கள்தான். மாறுபட்ட திசைகளை நோக்கி எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் வாழ்வின் புதிய லட்சியங்ளை இனங்காட்டும். எதிர்பாராத இத்தகைய தருணங்களை விரும்பி ஏற்றுக் கொள்வது என்பது வாழ்க்கைக்கான நல்வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொள்வதற்கு சமம் என்பதை உணரும் ஓர் இளைஞனைப் பற்றிய கதையாகவும் விரிகிறது ‘எகெய்ன்ஸ்ட் தி ஐஸ்’ திரைப்படம்.

டென்மார்க்கின் அலாபாமா கடற்படைத் தளத்தில், கேப்டன் எஜ்னார் மிக்கெல்சன் ஒரு புதிய பயணத்தை தொடங்க முடிவு செய்து தனக்கு உடன் வர ஒரு தன்னார்வலர் வேண்டும் என கோரிக்கை விடுக்க வடதுருவப் பயணத்தில் உள்ள சிக்கல்களை எண்ணி பலரும் பின்வாங்குகிறர்கள். அதே கடற்படைத் தளத்தின் ஒரு மெக்கானிக்கான இவர்சென் தனது தற்போதைய வேலையில்லாத தருணத்தை இதற்காக பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறான். மேலும், அவனுக்கு இதில் மிகவும் ஆர்வம் உண்டு. இவர்சென் எஜ்னாரிடம் தன் வருகையை தெரிவிக்கையில் அங்கிருக்கும் பலரும் அச்சமூட்டுகிறார்கள். ஏற்கெனவே இதே நோக்கத்திற்காக சென்ற பலர் திரும்பிவரவேயில்லை. பட்டினியால் செத்திருக்கிறார்கள். காலநிலை மாற்றத்தினால் சேதாரமாகியிருக்கிறார்கள். துருவக் கரடிகள், பனிப்புயல், ஆள்நடமாட்டமில்லாத வனாந்தரத் தனிமை என்றெல்லாம் சொல்லி பலரும் பயமுறுத்துகிறார்கள்.

கடற்கரையில் குழுமியிருந்த கடலோடிகள் மத்தியில் பலரும் அதையெல்லாம் நினைத்து பலரும் விருப்பம் சொல்லாமல் விலகிச் செல்ல ''நானும் தங்களுடன் வருகிறேன்'' என்று ஆரம்பித்தான் இவர்சன் எனும் இளைஞன். கப்பல் கேப்டன் எஜ்னார் மிக்கெல்சென் செல்லும் இடம் கிட்டத்தட்ட 3000 கி.மீ தொலைவு. அதாவது அங்கிருந்து அதன் தொலைவு மாஸ்கோவிலிருந்து ரோமுக்கு நடந்து செல்லும் தொலைவு என்கிறார்கள். அவர் ஒன்றும் கப்பலில் செல்லவில்லை. நாய்கள் இழுத்துச் செல்லும் ஸ்லெட் வண்டியில்தான் பயணம் செய்யவேண்டும். அதுகூட காலநிலை நிலப்பரப்பு ஒத்துழைக்கும்வரையில்தான். எதற்கும் உத்தரவாமில்லாத பயணம் அது. எதிர்வரும் ஆபத்துகள் என்ன வடிவத்தில் இருக்கும் என்பதுகூட முன்னரே கணித்துவிடமுடியாது.

அமெரிக்க சொந்தம் கொண்டாடிக்கொண்டிருந்த ஓர் இடம் எப்படி டென்மார்க்கிற்கு உரிமையானது என்பதை விளக்குவதற்காக மேற்கொள்ளப்படும் இந்தப் பயணத்தை இடம் சுட்டி பொருள் என்றெல்லாம் விளக்கிக் கொண்டிராமல் ஆபத்தான ஆர்க்ட்டிக் துருவப் பயணத்தில் ஈடுபட்ட துருவப் பிரதேசத்தில் சிக்கிய இருவரின் பரவசம்மிக்க வாழ்க்கை அனுபவங்களாக எடுத்துக் காட்டியிருக்கிறார்கள்.

நூற்றுக்ககணக்கான மைல்களாக பாய்ந்து செல்லும் நாய்கள் சில நாட்களில் பள்ளத்தாக்குகளில் விழுந்துவிடுகின்றன.. சில நாய்கள் சோர்வடைந்துவிடுகின்றன. சில இறந்துவிடுன்றன. முடியாத நாய்களை சுட்டுக் கொல்லவேண்டிய கட்டாயம். வெகு சீக்கிரத்திலேயே ஸ்லெட் வண்டிப் பயணம் நடைப் பயணமாக மாறிவிடுகிறது. அதன்பிறகு அவர்களது பயணம் நீண்டு செல்கிறது. ஒரு கட்டத்தில் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள கிரீன்லேந்து பியரி பனி ஆற்றுப் பிரதேச கல்லடுக்குகளுக்குள் மறைத்து வைக்கப்பட்ட மூங்கில் குழாய் போன்ற ஒன்றை எடுத்து அதில்உள்ள டென்மார்க்கு சொந்தமான ஆவணக் குறிப்பை கண்டெடுக்கிறர்கள்.

இதற்கிடையில் போலார் கரடிகளுடன் உயிர்ப் போராட்டத்திலிருந்து அவர்கள் மீண்டது எப்படி, பட்டினிப் போராட்டத்தை எதிர்கொண்டது எப்படி, பனிப்புயலிலிருந்து தப்பித்தது எப்படி என்பதையெல்லாம் ஒன்றே முக்கால் மணிநேரத்தில் இரண்டே முக்கால் ஆண்டுகளின் முக்கியமான காட்சிகள் வழியே சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார்கள். உரிய இடத்தில உரிய நேரத்தில் இவர்கள் திரும்பிவராததால் அவர்கள் வீடு திரும்பிவிட்டதாக நினைத்து இவர்களை மீட்க டென்மார்க் அரசால் அனுப்பிவைக்கப்பட்ட மீட்புப் பணியாளர்களும் சென்றுவிடுகிறார்கள். இதனால் 85 நாட்களில் முடியவேண்டிய பயணம் என்பது 850 நாள் பயணமாக மாறுகிறது.

பனிமண்டிய நிலப்பரப்புகளின் வழியே அகலவிரியும் நமது கண்கள் டோர்பென் ஃபோர்ஸ்பென்னின் ஒளிப்பதிவு சாகசாத்தால் வானமும் பூமியும் மட்டுமின்றி உறைந்த பனி மலைகள், சலசலக்கும் ஆறுகள், கடற்காக்கைகள், கடல்நாய்கள் என நமக்கு கிடைக்கும் பல்வேறு அனுபவங்களின் ஊடே படம் முடியும் வரை இமைக்கவே மறந்துவிடுகின்றன.

அதுமட்டுமின்றி, திரையில் குறைந்த நடிகர்களைக் கொண்டு விரிந்த பனிப்பரப்பின் ஊடாக வாழ்வா சாவா போராட்டத்தை நம்பும்படியாக சொல்லியுளள விதம். எஜ்நார் மிக்கெல்சன் என்பவரின் வரலாற்று பயண அனுபவங்கள் பார்வையாளனுக்கு எளிதாக சென்றடையும் விதமாக நிகோலஜ் கோஸ்டர்-வால்டா மற்றும் ஜோடெரிக் ஆகியோர் தந்துள்ள திரைக்கதை, எஜ்னார் மில்கின்சனாக தோன்றி ஒரு கடலோடிக்கான தோற்றத்தையும் செயலையும் ஆபத்தைக் கடக்கும் வலிமைக்க உணர்வு வெளிப்படுத்தி பிரமிக்க வைத்துள்ளார் நிகோலஜ் கோஸ்டர்-வால்டா. அவரது இயல்பும் தீவிரமும் மிக்க நடிப்பு நம்மை ஆட்கொண்டுவிடுகிறது.

அவருக்கு உதவியாக செல்லும் தன்னார்வலர் இவர்சன் பாத்திரம் ஏற்ற ஜோ கோலேவின் எளிய பாங்கும் மிகவும் நல்லவரான கேப்டன் மிக்கெல்செனின் சிலநேரத்தின் கோபத்தையும் பொறுத்துக்கொள்வது போன்ற பங்களிப்பும் இப்படத்திற்கு கச்சிதமாக பொருந்தியுள்ளது.

ஒரு மெக்கானிக்காக இருந்தும் வேலையின்றி உழன்றுகொண்டிருந்த இவர்சனும் தன்னார்வலராக சென்ற எதிர்பாராத பயணம் ஒன்றினால் இன்று வரலாறாகிவிட்டார். அவரைப் பற்றிய குறிப்புகள் யாவும் எஜ்னார் மிக்கெல்சென் எழுதிய 'Two against the Ice' நூலில் காணக் கிடைத்ததுதான். ஒரு டேனிஷ் கடற்படை வீரரான எஜ்னார் மிக்கெல்சென் எழுதிய சுயசரிதையை மிகத் துல்லியமாக ஆய்வு செய்து அதன் அடிப்படையில் ஒரு நல்ல படத்தைக் கொடுத்து அதற்கு அங்குலம் அங்குலமாக நியாயம் செய்திருக்கிறார் இயக்குநர் பீட்டர் பிலிந்த்.

ஒரு சர்வைவல் த்ரில்லர் படமாக 850 நாட்கள் உறைபனியைக் கடந்து வாழ்ந்த இரு மனிதர்களின் போராட்ட வாழ்க்கையை சலிப்புத் தட்டாத வண்ணம் நேர்த்தியாக சொல்லியிருப்பதுதான் மிகச் சிறந்த படமாக மாறியுள்ளதற்கான சவால். இப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x