Published : 24 Feb 2023 03:56 PM
Last Updated : 24 Feb 2023 03:56 PM

ஓடிடி திரை அலசல் | Thankam - ஒரு புலனாய்வு த்ரில்லருக்குள் உணர்வுபூர்வ பதிவுகள்

மலையாள திரை உலகின் பிரபல கதாசிரியர் ஷ்யாம் புஷ்கரன் எழுதி, ஷாகித் அராஃபத் இயக்கியிருக்கும் மலையாளத் திரைப்படம் தங்கம் (Thankam). ஒரு குறிப்பிட்ட சமூகம் அல்லது குழு ஈடுபட்டிருக்கும் ஆபத்து நிறைந்த தொழில் குறித்த வெளி நபர்களின் பார்வையை பேசியிருக்கிறது இந்த திரைப்படம். குறிப்பாக, ஒரு கொலை வழக்கை துப்பறியும் கதையில், படம் பார்க்கும் பார்வையாளர்களையும் சேர்த்து துப்பறியச் செய்திருக்கிறது இத்திரைப்படம்.

திரைப்படத்தின் தொடக்க பாடல் காட்சியில் வரும் தங்கம் தொழில் சார்ந்த காட்சிகளும், படத்தில் வரும் கதாப்பாத்திரங்களின் குணாதிசயங்களையும் விளக்கப்படுகிறது. அதேநேரத்தில் இந்தத் தொழிலில் இருக்கும் ஆபத்துக்களும், ஓரிடத்தில் இருந்து தங்கத்தை பாதுகாப்பாக எப்படி எடுத்துச் செல்லப்படுகிறது என்ற மிக நுட்பமான டீட்டெயிலிங் பார்வையாளர்களுக்கு புதுமையான அனுபவங்களாக இருக்கும்.

மகாராஷ்டிரா போலீஸ் தமிழ்நாட்டில் விசாரிக்கும் மலையாளி கொலை வழக்கின் கதை, இதுவே பார்வையாளர்களுக்கு புதுமையான அனுபவமாக இருக்கும். அண்மைக் காலமாக கோடிகளை செலவழித்து பான் இந்தியா திரைப்படம் என்ற பெயரில் ஏதேதோ படங்கள் வலிய திணிக்கப்பட்டு வரும் சூழலில், அன்றாட வாழ்வில் இத்தனை ஆபத்துமிக்க தொழிலில் ஈடுபட்டுள்ள சாதாரண மனிதர்களின் வாழ்வியலை விவரிக்கிறது இந்தத் திரைப்படம். மலையாளம், தமிழ், இந்தி, மராத்தி என படத்தில் அத்தனை மொழிகளும் அவசியம் கருதி பயன்படுத்தியிருக்கும் விதம் அருமையாக உள்ளது.

முத்துவும் (பிஜுமேனன்) கண்ணனும் (வினீத் சீனிவாசன்) நண்பர்கள். தங்க நகைகள் செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ள முத்துவின் நகைகளை மும்பை உள்ளிட்ட கடைகளுக்கு கொண்டு சேர்க்கும் வேலைகளை செய்து வருகிறார் கண்ணன். இதுபோன்ற ஒரு சூழலில் தங்கத்துடன் மும்பை சென்ற கண்ணன் தங்கியிருக்கும் அறையில் மர்மான முறையில் இறந்து கிடக்கிறார். இந்த வழக்கை மும்பை காவல் அதிகாரி (கிரிஷ் குல்கர்னி) விசாரிக்கிறார்.

இது கொலையா? இந்த மரணத்துக்கு காரணம் என்ன? கண்ணணோடு தொடர்பில் இருந்தவர்கள் யார் யார்? மரணம் அடைவதற்கு முன்பு கண்ணன் எங்கே சென்றார்? யாருடன் சென்றார்? அங்கு நடந்த பிரச்சினை என்ன? அந்தப் பிரச்சினையிலிருந்து எப்படி வெளியே வந்தார்? - இப்படி அடுக்கடுக்காக எழும் கேள்விகளுக்கான பதில்தான் படத்தின் திரைக்கதை.

இந்த திரைப்படத்தின் கதாப்பாத்திரங்களின் தேர்வுக்காகவே இயக்குநருக்கு ஒரு பெரிய அப்ளாஸ் கொடுக்கலாம். படத்தில் ஒரேயொரு காட்சியில் வரும் கதாப்பாத்திரங்கள்கூட அத்தனை திருப்திகரமாக உள்ளன. அப்பாஸின் மனைவி கதாப்பாத்திரம், சிறை கைதியாக வரும் விக்கி கதாப்பாத்திரங்கள் இதற்கு சிறந்த உதாரணங்கள்.

முத்து கதாப்பாத்திரத்தில் வரும் பிஜு மேனன் ஒட்டுமொத்த ஆடியன்ஸையும் தனது அசாத்தியமான நடிப்பில் கட்டிப்போட்டு விடுகிறார். இத்தனைக்கும் படத்தில் அவர் அழும் காட்சிகள் கூட கிடையாது. வெள்ளந்தியான கதாப்பாத்திரத்துக்கான நடிப்பை தனது பாவங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார். கிளாஸ் ஆன ஆக்டிங்கை வெளிப்படுத்திக் கொண்டே வரும் சூழலில், கலையரசன் உடனான தியேட்டர் சண்டைக்காட்சியில் பிஜு மேனன் என்ட்ரி கூஸ்பம்ப் மொமன்ட் என்றால், அது மிகையல்ல. அதேபோல் க்ளைமேக்ஸ் காட்சியில் பிஜு மேனன் வசனத்தாலும், நடிப்பாலும் பார்வையாளர்களை ஈர்த்திருக்கிறார்.

படத்தின் மையக் கதாப்பாத்திரத்தில் வினீத் சீனிவாசன் முதல் பாடல் தொடங்கி பார்வையாளர்களை வியக்க வைக்கிறார். தங்க வளையல்களை கயிற்றில் கோர்த்து நியூஸ் பேப்பரிலும், லேசான துணியிலும் சுற்றி இடுப்பில் கட்டிக் கொண்டு வேறொரு மாநிலத்துக்கு கொண்டு சேர்க்கும் ஆபத்து நிறைந்த பணியின் சவால்களை விளக்கியிருக்கும் கதாப்பாத்திரம். இதுபோன்ற சிக்கலான வேலை செய்பவர்கள் எப்போதும் கூலாக இருக்க வேண்டும். பதற்றம் அடையக் கூடாது என்பதை தனது இயல்பான நடிப்பால் உணர்த்துகிறார். அப்பாஸாக வரும் கலையரசனும் கவனம் ஈர்க்கிறார்.

இந்தப் படத்தின் ரியல் ஹீரோ கிரீஷ் குல்கர்னிதான். மும்பையில் நடந்த ஒரு மலையாளியின் கொலை வழக்கின் விசாரணையை தமிழ்நாட்டில் நடத்தும் மகாராஷ்டிரா காவல் துறை அதிகாரியாக கலக்கியிருக்கிறார். கிரீஷ் குல்கர்னி விசாரிக்கும் விதம், விசாரணைகளின்போது, உள்ளூர் மொழிக்கு அவர் கொடுக்கும் முக்கியத்துவம் என பார்வையாளர்களை பரவசப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக, அப்பாஸ் மனைவியிடம் விசாரணை மேற்கொள்ளும் காட்சி, விக்கியிடம் விசாரிக்கும் காட்சி, முத்துப்பேட்டை போலீஸாரிடம் உதவி கேட்கும் காட்சி, முத்துப்பேட்டை காவல் அதிகாரிக்கு செக் வைக்கும் காட்சிகளில் மனுஷன் பின்னியெடுத்திருக்கிறார். எல்லாவற்றுக்கும் மேலாக, க்ளைமாக்ஸ் காட்சியில் தன்னை உதாசீனப்படுத்தும் பிஜு மேனனிடம் வசனம் பேசிவிட்டு செல்லும் காட்சி அபாரம்.

கண்ணனின் மனைவியாக வரும் கதாப்பாத்திரத்தில் அபர்ணா பாலமுரளி. கணவன் இழந்த சோகத்தை அடக்கி தவிக்கும் கதாப்பாத்திரம் என்பதை தவிர இந்த திரைப்படத்தில் அவருடைய நடிப்பிற்கு பெரிதாக ஸ்கோப் எதுவும் இல்லை. இருந்தாலும் தனது பாத்திரத்துக்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தியிரு்க்கிறார். இவர்கள் தவிர, இந்தக் கதைக்குள் வரும் அத்தனை கதாப்பாத்திரங்களும் மிகச் சிறப்பாக அமைக்கப்பட்டிருப்பது படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது.

தங்கத்தை மையமாக கொண்டது இந்தத் திரைப்படம். படத்தின் ஒளிப்பதிவாளர் கவுதம் ஷங்கர் இதனை உள்வாங்கிக் கொண்டு, காட்சிகளாக விவரித்திருக்கும் விதம் பார்வையாளர்களை ஈர்த்திருக்கிறது. படம் முழுவதுமே ஒரு மஞ்சள் நிற டோனைப் பயன்படுத்தி பார்வையாளர்களை கதைக்குள் ஈர்த்திருக்கிறார். பெரும்பாலான காட்சிகள், இரவு நேரங்களில் நடப்பதாக வருவதால், அமைதியும் ஆபத்தும் அழகும் நிறைந்த இரவுகளை கவுதம் ஷங்கரின் கேமிரா கவனமாக பின்தொடர்ந்திருக்கிறது. அதேபோல், படத்தின் இசையமைப்பாளர் பிஜிபாலும் தனது பணியை கச்சிதமாக செய்திருக்கிறார். ஒரு க்ரைம் இன்வெஸ்டிகேஷன் டிராமாவுக்கு தேவையான பதற்றமும், பரபரப்பும் இசையில் வெளிப்படுகிறது.

வழக்கமாக தமிழ்நாட்டையும், தமிழர்களையும் ஏதாவது ஒருவகையில் பகடி செய்யும் சேட்டன்கள், இந்தத் திரைப்படத்தில் தமிழக காவல் துறையை காட்சிப்படுத்தியிருக்கும் விதம் சற்று வருத்தமாகத்தான் இருக்கிறது. படத்தில் 3 மாநில காவல் நிலையங்கள் வருகின்றன. அதில், ரொம்ப கடினமாக அருவெறுப்பாக நடந்துகொள்ளும் வகையில் தமிழக காவல் துறை காட்டப்பட்டிருப்பது, பாலியல் தொழிலாளிகளாக வரும் பெண்கள் பர்தா அணிந்து வருவது போன்ற காட்சிகளைத் தவிர்த்திருக்கலாம்.

தங்கம் எப்போதுமே விலை உயர்ந்தது. அதன் நிலை எப்போது என்னவாக இருக்கும் என்பதை அவ்வளவு எளிதில் கணித்துவிட முடியாது. அதேபோலத்தான், நம் கூடவே இருக்கும் மனிதர்களின் மனதுக்குள் என்ன இருக்கிறது? அவர்களது மண்டைக்குள் என்ன ஓடிக்கொண்டிருக்கிறது என்பதையும் அவ்வளவு எளிதாக கணித்துவிட முடியாது.

ஒரு விபரீத முடிவுக்கு பின்னர், என்னிடம் ஒரு வார்த்தை சொல்லாமல் இப்படி செய்துவிட்டானே என நொந்துபோகும் சம்பவங்களைத்தான் இந்தப் படம் பார்வையாளர்களுக்கு கடத்தியிருக்கிறது. கடந்த ஜனவரி 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம், பிப்ரவரி 20 முதல் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x