Last Updated : 22 Jan, 2022 10:05 AM

 

Published : 22 Jan 2022 10:05 AM
Last Updated : 22 Jan 2022 10:05 AM

முதல் பார்வை - முதல் நீ முடிவும் நீ | நினைவுகளைக் கிளறும் நாஸ்டால்ஜியா பயணம்

வினோத் (கிஷன் தாஸ்), சைனீஸ் (ஹரீஷ்), சுரேந்தர் (கவுதம் ராஜ்), துரை (சரண் குமார்) நால்வரும் 80களில் பிறந்து 90களில் வளரும் பதின்பருவ பள்ளி மாணவர்கள்.

வினோத்தும் அவரோடு பள்ளியில் படிக்கும் ரேகாவும் (மீதா ரகுநாத்) சிறு வயது முதலே காதலித்து வருகின்றனர். படிப்பை விட இசையில் அதிக நாட்டத்துடன் இருக்கும் வினோத்தின் கனவுக்கு ஊக்கம் கொடுக்கும் வகையில் அவரது பிறந்தாளன்று ஒரு கிதாரை பரிசளிக்கிறார்.

நண்பர்கள், காதலி என்று தனது பதின்பருவத்தை மகிழ்ச்சியாக கழிக்கும் வினோத்தின் வாழ்க்கை அவருடன் படிக்கும் சக மாணவியான விக்டோரியா என்ற பெண்ணால் மாறுகிறது. இதன் பிறகு என்னவானது என்பதே ‘முதல் நீ முடிவும் நீ’ சொல்லும் கதை.

நீங்கள் 90களில் வளர்ந்தவர் என்றால், சமீப காலமாக சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகிக் கொண்டிருக்கும் 90ஸ் கிட்ஸ் தொடர்பான மீம்களை கொண்டாடுபவர் என்றால் இப்படம் முழுக்க முழுக்க உங்களுக்கானதே.

தமிழ் ரசிகர்களுக்கு இசையமைப்பாளராக பரிச்சயமான தர்புகா சிவா இயக்குநராக களம் கண்டிருக்கும் முதல் படம். தான் என்ன சொல்லப் போகிறோம், எங்கு தொடங்கி எங்கு முடிக்கப் போகிறோம் என்பதை நன்கு உணர்ந்து அதற்கேற்ப ஒரு கதையை படமாக்கியுள்ளார்.

விமர்சனத்தின் முதல் பாராவில் கூறப்பட்டுள்ள கதை படத்தின் ஒரு பகுதி தான். இதைத் தாண்டி ஏராளமான விஷயங்களை படத்தில் தொட்டுச் சென்றிருக்கிறார் இயக்குநர் தர்புகா சிவா. படத்தின் முதல் பாதி முழுக்க 90ஸ் கிட்ஸ்களுக்கான நாஸ்டால்ஜியா கொண்டாட்டமாக இருக்கும் என்பது உறுதி. தொளதொள சட்டை, முக்கால் ஸ்லீவ் சுடிதார், விசிஆர், யமஹா ஆர்எக்ஸ் 100, பாட்டு கேசட், வாக்மேன், ஆடியோ ரெக்கார்டிங் கடை, ஏ.ஆர்.ரஹ்மான் என முதல் பாதி முழுவதும் ஏகப்பட்ட 90களின் குறியீடுகள்.

சென்னையின் நடுத்தர வர்க்க இளைஞர்களின் வாழ்க்கை மிக இயல்பாக காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக சைனீஸ் கதாபாத்திரம் எழுதப்பட்ட விதம் அருமை. அந்த கதாபாத்திரத்தில் நடித்த ஹரீஷின் நடிப்பும் அபாரம். அவர் பேசும் வசனங்களும், அவரது உடல்மொழியும் பார்க்க படுஜாலியாக இருக்கின்றன. கேத்தரின் என்ற பெண்ணை ப்ரொபோஸ் செய்ய கெமிஸ்ட்ரி லேபில் இருக்கும் ஆசிட்டை எடுத்து கையில் ‘சி’ என்று போட்டுக் கொள்வதும், அந்த பெண் மறுத்ததும் அதை ‘ஜி’ ஆக மாற்றி காயத்ரி என்ற பெண்ணுக்கு ப்ரொபோஸ் செய்வது அப்ளாஸ் ரக காட்சிகள்.

வினோத் ஆக நடித்திருக்கும் கிஷன் தாஸ், மீதா ரகுநாத், கவுதம் ராஜ் ஆகியோரது நடிப்பும் அருமை. கிஷன் தாஸ் - மீதா காதல் காட்சிகள் க்யூட். முதல் பாதியில் பதின்பருவ மாணவர்களுக்கே உள்ள குறும்புத்தனங்களுடன் இருப்பதும், இரண்டாம் பாதியில் அப்படியே நேரெதிராக முதிர்ச்சி காட்டுவதும் வியக்கவைக்கின்றன.

முதல் பாதி முழுக்க பார்வையாளர்களின் நினைவுகளைக் கிளறி ஜாலியாக செல்லும் படம் இரண்டாம் பாதி தடுமாறுகிறது. நண்பர்களின் ரீ-யுனியன் காட்சிகள் ஒரு கட்டத்துக்கு மேல் சலிப்பை ஏற்படுத்துகின்றன. இரண்டாம் பாதியில் தேவையில்லாத பல காட்சிகளை கத்தரித்திருக்கலாம். தன்பாலின ஈர்ப்பாளராக நண்பன் மாறியதை ரிச்சர்டால் ஏற்றுக் கொள்ளமுடியாததைப் போலவும், பின்னர் உணர்ந்து மாறுவது போலவும் படத்தில் ஒரு காட்சி வருகிறது.

முதல் பாதியிலேயே இதைப் பற்றி கொஞ்சம் ஆழமாக பேசியிருந்தால் அந்த காட்சி பார்ப்பவர்களுக்கு இன்னும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். ஆனால் இரண்டாம் பாதியில் திடீரென வரும்போது வலிந்து அது திணிக்கப்பட்டதாகவே தோன்றுகிறது. க்ளைமாக்ஸ் காட்சி நெஞ்சைப் பிழியும் ரகம். க்யுபிட் ஆக வரும் தர்புகா சிவா வரும் காட்சி சிறப்பாக எழுதப்பட்டிருக்கிறது.

சுஜித் சாரங்கின் ஒளிப்பதிவு கதைக்கு தேவையான ரிச் லுக்கை கொடுக்கிறது. தர்புகா சிவாவின் பின்னணி இசை மனதை வருடுகிறது. பாடல்கள் கவரவில்லை.

படத்தின் நீளம் ஒரு மிகப்பெரிய பிரச்சினை. இப்போது யூடியூப் சேனல்களே ஹைஸ்கூல் டிராமா கான்செப்ட்டில் கலக்கி வருகின்றன. இத்தகைய சூழலில் இரண்டாம் பாதியில் இருக்கும் தொய்வு முதல் பாதியில் இருந்த அந்த நாஸ்டால்ஜியா அம்சங்களை நீர்த்துப் போகச் செய்கிறது.

இரண்டாம் பாதியில் இருக்கும் பல காட்சிகளை தாராளமாக கத்தரி போட்டிருந்தால் ஒரு க்ரிஸ்ப் ஆன நாஸ்டால்ஜியா திரைப்படமாக ‘முதல் நீ முடிவும் நீ’ இருந்திருக்கும்.

90களில் வளர்ந்தவர்கள் தங்கள் கடந்த கால நினைவுகளை ஒருமுறை திரும்பிப் பார்க்க விரும்பினால் தாராளமான ஒருமுறை பார்க்கலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x