Last Updated : 20 Jan, 2022 12:18 PM

Published : 20 Jan 2022 12:18 PM
Last Updated : 20 Jan 2022 12:18 PM

முதல் பார்வை: ஸ்கைலேப் - மசாலா நெடிக்கு நடுவே ஒரு குறிஞ்சிப் பூ!

1979ஆம் ஆண்டு. தொழில்நுட்பக் கோளாறால் நாசாவின் ஸ்கைலேப் என்ற விண்வெளி ஆய்வு மையம் பூமியை நோக்கி விழுந்து கொண்டிருக்கிறது. அது தென்னிந்தியாவின் சில பகுதிகளில் விழலாம் என்று நாசா அறிவிக்கிறது. ஒரு பிரபல வார இதழில் எழுத்தாளராக இருப்பவர் கௌரி (நித்யா மேனன்). தனது சொந்த கிராமமான பண்டிலிங்கம் பள்ளிக்கு வருகிறார். கௌரியின் மோசமான எழுத்தால் அவரை வேலையை விட்டுத் தூக்குவதாக அவரது வீட்டுக்குக் கடிதம் அனுப்புகிறது அந்த வார இதழின் நிர்வாகம்.

எப்படியாவது தன்னுடைய எழுத்து மக்களிடையே கவனம் பெற வேண்டும் என்று சபதம் ஏற்கிறார் கௌரி. இன்னொரு பக்கம் தன்னுடைய உரிமத்தை இழந்த மருத்துவர் ஆனந்த் (சத்ய தேவ்) அதே கிராமத்தில் க்ளினிக் தொடங்கி பணம் ஈட்டி மீண்டும் உரிமத்தை மீட்க விரும்புகிறார். ஊர் முழுக்க கடன் இருந்தாலும் தன் வெற்று குடும்ப கவுரவத்துக்காக எந்த வேலைக்கும் செல்லாமல் இருக்கிறார் ராமாராவ் (ராகுல் ராமகிருஷ்ணன்). ஆனந்த் மற்றும் ராமாராவ் இருவரும் இணைந்து க்ளினிக் தொடங்கி, கிடைக்கும் பணத்தை ஆளுக்குப் பாதியாகப் பிரித்துக் கொள்ள முடிவு செய்கின்றனர். இந்தச் சூழலில்தான் நாசாவின் அந்த அறிவிப்பு வருகிறது. அடுத்த 50 நாட்களில் ஸ்கைலேப் தங்கள் கிராமத்தின் மீதுதான் விழப் போகிறது என்பதைத் தெரிந்துகொள்ளும் அந்த கிராம மக்கள் என்ன செய்தனர்? இறுதியில் என்னவானது என்பதே ‘ஸ்கைலேப்’ படத்தின் கதை.

மறுநாள் உலகம் அழியப் போகிறது, நாளை நாம் யாரும் உயிருடன் இருக்கப் போவதில்லை என்று தெரிந்தால் நாம் என்னவெல்லாம் செய்வோம் என்பதை சோகத்தைப் பிழியாமல், தேவையான இடங்களில் எமோஷனலாக, நகைச்சுவை வசனங்கள் சேர்த்து ஃபேன்டஸியாக ஒரு தரமான சினிமாவை வழங்கியுள்ளார் இயக்குநர் விஷ்வக் கண்டேராவ். 1979ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி ஸ்கைலேப் ஸ்பேஸ் ஸ்டேஷன் விழுந்தது. அதற்கு முந்தைய சில நாட்கள் ஸ்கைலேப் குறித்த வதந்திகள் ஆந்திர கிராமங்களில் மிக பிரபலம். அப்போது நடந்ததாக பத்திரிகைகளில் வந்த சம்பவங்களைக் கோத்து அதற்கு ஒரு வலுவான திரைக்கதையை அமைத்த வகையில் இயக்குநர் ஜெயித்துள்ளார்.

முதல் பாதி முழுக்கவே கிராம மக்களின் குணாதிசயங்கள் பார்வையாளர்களுக்குப் புரிய வைக்கப்படுகின்றன. சத்யதேவின் தாத்தாவாக வரும் தனிகில்லா பரணி, கோயில் குளங்களில் வீசப்படும் நாணயங்களைத் திருடும் சிறுவன், கோயிலுக்குள் நுழைய முடியாமல் வெளியே இருந்தபடியே ராமர் சிலையை வடிக்கும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த முதியவர், அவருக்கு உதவும் சிறுவன், நித்யா மேனன் வீட்டு வேலையாளாக வருபவர், ராகுல் ராமகிருஷ்ணனின் குடும்பம் எனப் படம் முழுக்க சின்ன சின்ன கதாபாத்திரங்கள் கூட கதையின் போக்குக்குப் பெரும் உறுதுணையாக வருகின்றன. அவை எழுதப்பட்ட விதமும் சிறப்பு. படம் முழுக்க ஒரு மெல்லிய நகைச்சுவை இழையோடுவது மெதுவாக நகரும் காட்சிகளைக் கூட சுவாரஸ்யமாக்குகிறது. உதாரணமாக பஞ்சாயத்தில் யாருக்காவது தண்டனை கொடுத்து அவர்களைத் தன்னுடைய எருமை மாட்டின் மீது ஏற்றிவிடக் காத்திருக்கும் ஒரு கதாபாத்திரம். இப்படி ஒரு சிறந்த நாவலில் வருவது போல ஏகப்பட்ட சுவாரஸ்யமான கதாபாத்திரங்கள். அவற்றைப் பார்ப்பவர்களுக்குச் சலிப்பை ஏற்படுத்திவிடாதவாறு காட்சிப்படுத்திய இயக்குநர் பாராட்டப்பட வேண்டியவர்.

படத்தில் நாயகனோ, நாயகியோ யாரும் கிடையாது. கதைதான் இப்படத்தின் நாயகன். மற்ற அனைவருமே சந்தர்ப்பங்களுக்கு ஏற்பச் செயல்படும் சராசரி மனிதர்களே. சத்யதேவ், நித்யா மேனன், ராகுல் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட படத்தின் கதாபாத்திரங்கள் அனைவருமே தங்கள் சொந்த லாபத்தைக் கருத்தில் கொண்டு செயல்படும் சாதாரண மனிதர்களாகவே வருகின்றனர். இத்தனைக்கும் சத்யதேவும், நித்யா மேனனும் ஒரு காட்சியில் கூட சந்தித்துக் கொள்வதில்லை.

ஸ்கைலேப் தொடர்பான கிராம மக்களின் அச்சம்தான் படத்தின் மையக்கரு என்றாலும் கூட அதைப் பற்றி மட்டுமே பேசாமல் கிராமங்களில் இருக்கும் மருத்துவ வசதி பற்றாக்குறை, சாதிக் கொடுமை, தீண்டாமை, வறுமை எனப் பல விஷயங்களையும் போகிற போக்கில் படம் பேசிச் செல்கிறது. முதல் பாதி முழுக்கவே நகைச்சுவையுடன் நகரும் படம் க்ளைமாக்ஸ் நெருங்க நெருங்க பார்ப்பவர்களை எமோஷனலாக்குகிறது. முடிவு இதுதான் என்று முன்னரே தெரிந்தாலும் படம் முடியும்போது நம் முகத்தில் ஏற்படும் அந்தச் சிறு புன்னைகையே இப்படத்தின் வெற்றி.

பிரசாந்த் விஹாரியின் இசை, ஆதித்யா ஜவ்வாதியின் ஒளிப்பதிவு, ரவிதேஜா கிரிஜாலாவின் எடிட்டிங் எனத் தொழில்நுட்ப அம்சங்கள் அனைத்திலும் படம் பாஸ் மார்க் பெறுகிறது.

படத்தின் குறையென்று பார்த்தால் முதல் பாதியில் மெதுவாக நகரும் காட்சிகள். அதிலும் முன்னரே குறிப்பிட்டதுபோல ஆங்காங்கே தூவப்பட்டுள்ள நகைச்சுவை வசனங்களால் அவை காப்பாற்றப்பட்டுவிடுகின்றன.

மசாலா நெடியும், அதிரடி ஆக்‌ஷனும் நிறைந்த தெலுங்கு சினிமாவில் அவ்வப்போது அத்திபூத்தாற்போல சில குறிஞ்சிப் பூக்கள் பூப்பதுண்டு. அப்படியான தரமான சினிமாக்களில் ஒரு சினிமா இந்த ‘ஸ்கைலேப்’.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x