Published : 26 Aug 2017 02:07 PM
Last Updated : 26 Aug 2017 02:07 PM

யானைகளின் வருகை 20: கோயில் யானைகளை முன்வைத்து நடந்த அடேங்கப்பா அரசியல்

முதன்முறை தமிழக அரசின் கோயில் யானைகள் சிறப்பு நல முகாம் என்பது 16.11.2003 ஞாயிற்றுக்கிழமையன்று முதுமலையில் தொடங்கியது. அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் சிறப்பு திட்டம் என்பதால் அரசு நிர்வாகம் முக்கியத்துவம் கொடுத்திருக்க, அறநிலையத்துறை, வனத்துறை அமைச்சர்கள் பல்வேறு துறை அதிகாரிகள் என அத்தனைபேரும் அதில் ஆஜராகிவிட்டனர்.

அதேசமயம் யானைகள் முகாமிற்கு வந்த கோயில் யானைகள் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல. கோவையில் தனியார் கோயிலுக்கு சொந்தமான ராமர் கோயில் குட்டி யானை லாரியில் ஏற்றப்பட்டது. வாகனம் சென்ற வழியில் ஒரு வளைவில் திரும்ப, அது நிலைதடுமாறி விழுந்தது. அதில் லாரியின் மரத்தடுப்புகள் உடைபட, மணிக்கணக்கில் அந்த யானை அச்சத்தால் பிளிறித் தீர்த்துவிட்டது. அதன் வயிற்றிலும் நெற்றியிலும் பலத்த அடி. கடைசியில் அதன் முதுமலை முகாம் வாசம் ரத்து செய்யப்பட்டது.

அதேபோல் சேலம் சுகவனேஷ்வரர் கோயில் யானை ராஜேஸ்வரி லாரியில் ஏறவே அடம்பிடித்து அழிச்சாட்டியம் செய்தது. அதன் தொடையிலும், தலையிலும் பாகன்கள் அங்குசத்தால் குத்திக் காயப்படுத்தியும் அது அவர்களுக்கு இணங்கவில்லை. எனவே அதன் முதுமலை டிரிப்பும் கேன்சல் ஆனது. இப்படியாக முகாம் நாளில் சில கோயில் யானைகள் தவிர்க்கப்பட்டு மொத்தம் ஐம்பத்தைந்து யானைகள் (தனியார் கோயில் மற்றும் மடங்கள் சார்ந்தவை 18, அறநிலையத்துறைக்கு சொந்தமானது 37) முதுமலை வந்து சேர்ந்தன.

திமுகவினரின் சாதுர்ய செயல்!
  • இவற்றில் பல யானைகள் பீதிக்குள்ளாகியும், சில யானைகள் பல்வேறு காயங்கள் பட்டும் வந்திடவே இயற்கை ஆர்வலர்கள் கொந்தளிப்பில் ஆழ்ந்தனர். அவர்களில் சிலர் உள்ளூர் திமுகவினரை உசுப்பிவிட, கூடலூரைச் சேர்ந்த திமுகவினர் சாதுர்யமாக அப்போதைய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த டிஆர்.பாலுவுக்கு மனு அனுப்பியிருந்தனர்.

அதன் மூலம் மத்திய அரசு தமிழக அரசின் கோயில் யானைகள் நல வாழ்வு முகாமிற்கு தடைபோடும் என்றும் எதிர்பார்த்தனர். அந்த மனுவில் இருந்த விஷயம் சுவாரஸ்யமானது மட்டுமல்ல; வனஉயிரினங்களின் இயல்பு வாழ்வு இந்த நலவாழ்வு முகாமின் மூலம் எப்படியெல்லாம் மாறுபாடுக்குள்ளாகி எதிர்காலத்தில் சிக்கல்களை ஏற்படுத்தப்போகிறது என்பதையும் குறிப்பிட்டிருந்தது.

அதாவது, 'தமிழகம் முழுவதிலும் இருந்து கோயில் யானைகள் கொண்டு வந்து தங்கவைக்கப்படம் இடம் முதுமலை சரணாலயம் மற்றும் தேசிய வனப்பூங்காவில் உள்ள மூலாதாரமான பகுதியாகும். 1972 ஆம் ஆண்டின் வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டம் மற்றும் 1980 ஆம் ஆண்டு போடப்பட்ட வனப்பாதுகாப்பு சட்டப்படி இந்த குறிப்பிட்ட (முதுமலை) வனப்பகுதிக்குள் வனம் சாரா எந்தப் பணியும் நடைபெறக்கூடாது. காட்டை அழிப்பது. புதிய குடில்களை அமைப்பது, மரங்களை அதற்காக வெட்டுவது. இவையெல்லாம் குற்றங்கள் ஆகும். இப்படி தமிழக அரசே செய்தாலும் அதற்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சக ஒப்புதல் பெறுவது அவசியம். ஆனால் இங்கே சுமார் பன்னிரெண்டு ஏக்கர் சரணாலய வனப்பகுதியில் அவசர கோலத்தில் கோயில் யானைகள் தங்க வைக்கப்பட்டுள்ளன.

பாகன்கள் தங்குவதற்கும் சமைப்பதற்கும் வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளன. போதாக்குறைக்கு மின்வேலிகள் (சோலார்) வேறு போடப்பட்டுள்ளது. இதற்கு இடம் தந்தது வனத்துறை. செலவு செய்வது அறநிலையத்துறை. பராமரித்து கவனிப்பது கால்நடைத்துறை. ஒன்றுக்கொன்று முரண்பட்ட அதிகாரிகளின் செயல்பாட்டினால் வெவ்வேறு ஊர்களை சேர்ந்த யானைப் பாகன்களாலும் இவர்கள் முகாமிட்டுள்ள முதுமலைப் பகுதி என்ன சோதனைக்குள்ளாகுமோ என்று உண்மையிலேயே வன உயிரின ஆர்வலர்கள் கவலைக்குள்ளாகி இருக்கிறார்கள். இந்த கட்டுமானப்பணிகளுக்கு மத்திய அரசின் அனுமதி வாங்கப்பட்டுள்ளதா என்றும் தெரியவில்லை. எனவே இவ்விஷயத்தில் மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும். நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றும் அதில் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

'முதுமலை வனச் சரணாயலத்திற்குள் ஆடு, மாடு, கோழி போன்றவற்றை ஏற்றி வந்தால் கூட அவற்றுக்கு மருத்துவ பரிசோதனைகள் சரணாலயத்திற்கு வெளியேவே செய்யப்பட வேண்டும். வனத்துறை, கால்நடைத்துறை மருத்துவர்களும் இதற்கு சான்றிதழ் வழங்க வேண்டும். ஏனென்றால் சரணாலயத்திற்குள் வந்து போகும் சுமார் 20 கிலோமீட்டர் தூரப்பகுதியும் வெளியூர் கால்நடைகளால் வனவிலங்குகளுக்கு தொற்றுநோய்கள் பரவ வாய்ப்புண்டு. அதனால் முதுமலை, முத்தங்கா, பந்திப்பூர் என ஒட்டுமொத்த உயிர்ச்சூழல் மண்டலமே பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. கோயில் யானைகள் பிறந்தது என்னவோ காடுகளி்ல்தான் என்றாலும் அவை வளர்ந்து பழகியதெல்லாம் நாட்டுக்குள்.

அதன் மூலம் அவை நாட்டு விலங்குகள் ஆகிவிட்டன. அவற்றுக்கு மனிதனை போலவே டி.பி (காசநோய்), பி.பி, கொலஸ்ட்ரால் எல்லாம் இருக்கும். அவற்றை மருத்துவர்கள் பரிசோதித்துத்தான் முதுமலைக்குள் அனுமதிக்கிறார்கள். ஆனாலும் இந்த கோயில் யானைகள் சாப்பிடும் உணவுப்பொருட்களின் மிச்சங்கள், அவற்றுக்கு பயன்படுத்தப்படும் மருந்து பொருட்களின் கழிவுகள் எல்லாமே சரணாலயப் பகுதிகளில்தான் கொட்டப்படுகின்றன. குறிப்பாக யானைகள் லாரிகளில் வந்தபோது சாப்பிட்ட கரும்புக் கழிவுகளை, தென்னை ஓலைகளை லாரிகளின் டிரைவர்கள் சரணாலயப்பகுதிகளின் சாலையோரங்களிலேயே கொட்டி விட்டுச் சென்றுள்ளனர். இதனை சரணாலயத்தில் வலம் வரும் வனவிலங்குகள் சாப்பிடும் வாய்ப்புகள் அதிகம். இதனால் நாட்டு யானைகள் மூலம் காட்டு யானைகளுக்கும், இதர வனவிலங்குகளுக்கும் கூட நோய்கள் பரவும். அதனால்தான் டி.ஆர்.பாலுவுக்கு இப்படியொரு புகார் அனுப்பியுள்ளோம்!' என்பதையும் விரிவாக நம்மிடம் தெரிவித்தார் அப்போது நம்மை சந்தித்த கூடலூர் திமுக பிரமுகர் ஒருவர்.

சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கருத்தும் அதுவாகவே இருந்தது. ஏற்கெனவே மக்னாவிற்கும், காந்தி குட்டி யானைக்கும் சிகிச்சையளித்த இபான் அமைப்பின் தன்னார்வலர் நைஜில் ஓட்டர் கூறும்போது, 'கோயில் யானைகளுக்கு ஓய்வு கொடுப்பது அவசியம்தான். அதற்கு சிகிச்சைகளும் தரவேண்டும்தான். அதற்காக நோய் எதிர்ப்பு சக்தி மிகக் குறைவாகவே உள்ள வனவிலங்குகள் அதிகம் வசிக்கும் இந்த பகுதியில்தானா அதை செய்ய வேண்டும்?இது கோயில் யானைகளும் வருந்தி, வனவிலங்குகளையும் துன்பப்படுத்தும் சமாச்சாரமாகவே அமையும்' என குறிப்பிட்டார்.

அதே சமயம் தமிழக பசுமை இயக்கத்தின் மாநில இணைச்செயலாளரான ஜெயச்சந்திரன் என்னிடம் பேசும் போது, '1980 வனப்பாதுகாப்புச் சட்டப்படி வனம் சாராத பராமரிப்புப் பணிகள் சரணாலயப்பகுதிக்குள் நடக்கக்கூடாது. அந்த சட்டம் இந்த முகாமிற்கு பொருந்துமா என எங்களுக்கு இன்னமும் புரியவில்லை. அதை புரிய வைக்கும் கடமை மாநில மத்திய அரசுகளுக்கு இருக்கிறது. அதேசமயம் இங்குள்ள வனவிலங்குகளுக்கு ஏற்கெனவே பல தொந்தரவுகள் உள்ளன. சரணாலயப்பகுதி சாலைகளை கடக்கும் விலங்கினங்கள் சாலைகளில் விரையும் வாகனங்களில் சிக்கி உயிரிழக்கின்றன. இதை தடுக்கவும், ஒழுங்குபடுத்தவும் இன்னமும் அரசு முயற்சியே எடுக்கவில்லை. ஆனால் இப்போது கோயில் யானைகளை கொண்டு வந்து குவித்துள்ளது. இது வேண்டாத வேலை. இது வன உயிரினங்களுக்கு இடையூறுகளையே ஏற்படுத்தும்!' என தெரிவித்தார்.

இந்த விவகாரங்களுடன் அப்போது இந்த யானைகள் முகாம் எதற்காக என்பதற்கு பேசப்பட்ட விஷயம் முக்கியமானது. அதாவது முதுமலை வனத்துறையினரின் வளர்ப்பு யானைகள் முகாமில் இருபத்தியாறு யானைகள் இருந்தன. கோயில் யானைகள் முகாமிற்காக வந்திருப்பவை ஐம்பத்தைந்து யானைகள். மொத்த எண்ணிக்கை எண்பத்தியொன்று. முதல்வருக்கு ராசியான எண் ஒன்பது என்பதால் இதன் மூலம் கஜமேளா என்ற விசேஷ பூஜையை முதல்வருக்காக செய்ய அதிகாரிகள் தயாராகி விட்டனர் என்பதுதான். இதைச் செய்தால் விக்னேஷ்வர புண்ணியம் வந்து சேரும் என்பது கேரள ஜோதிடரின் ஆலோசனை என்றும் சொல்லப்பட்டது.

ஜெயலலிதா, சசிகலா அந்த பூஜையில் கலந்து கொள்ள இருப்பதாகவும் அதில் தகவல்கள் கனன்றன. அதைத் தடுத்து நிறுத்தவே திமுக தரப்பு புகார் மேல் புகாரை மத்தியஅரசுக்கு அனுப்பிக் கொண்டிருந்ததாகவும் பேச்சு அடிபட்டது. இந்த விழாவின்போதே வனத்துறை உயரஅதிகாரி ஒருவரிடம், 'வனப்பகுதிகளில் வனம் சாராத பராமரிப்பு பணிகள் செய்யப்பட்டுள்ளனவே. இது சரிதானா?' என கேட்டேன். அவர் உடனே மனம் மாறி ஏதும் பேசாமல் சென்றுவிட்டார். ஆனால் பதிலுக்கு என்னிடம் ஒரு இயற்கை ஆர்வலர் சண்டைக்கே வந்தார்.

மீண்டும் பேசலாம்...

கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in   

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x